Tuesday 27 March 2012

பரீட்சித்மன்னன் அடைந்த மோட்சம் தொடர்ச்சி 2

அதன் பின் எழு நாட்கள் பத்து அவதார்க்கதைகள் அடங்கிய பாகவத புராண கதையைகூறினார்.அதில் வான் புகழ் கொண்ட புண்ணிய கீர்த்தி படைத்த அரசர்களின் வரலாறுகளும் கூறப்பட்டிருக்கின்றன.
            ஏழு நாட்கள் பாகவத புராணத்தை கூறி முடித்த பின் பரீட்சித் மன்னனை நோக்கி சுக தேவர் மேலும் கூறினார்;"பரீட்சித்மகாராஜா!நான் பாகவத புராணத்தில் எல்லாவற்றையும் கூறிவிட்டேன்.ஒவ்வொரு இடத்திலும் ஸ்ரீஹரியின் மகிமைகளும் திருவிளையாடல்களும் நிறைந்து இருக்கின்றன.நான் இறந்துவிடுவேன் அல்லது மீண்டும் பிறப்பெடுப்பேன் என்ற சிந்தனையை நீங்கள் விட்டு விட வேண்டும்.நீங்கள் பரமாத்மா ஜோதியில் கலந்து பிரம்ம சொரூபமாகிவிட்டீர்கள்.
           ஆயிரம் மரணங்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள்.ஏனென்றால் ஆத்மா அப்பாலுக்கு அப்பாலாக நித்யமாக தன்னோளியுடன் இருக்கிறது.நீங்கள் அதுவாகவே அதாவது ஆத்மா சொரூபகாகிவிட்டால் எத்தனை தக்ஷகன்கள் வந்தால் என்ன எந்த துன்பமும் இருக்காது. சுக தேவர் இவ்வாறு கூறி முடித்தார்.
           பரீட்சித்மன்னன் கூறினான்:"ஸ்ரீ வேத வியாசரின் புதல்வரான தாங்கள் அகில உலகையும் ஆத்மா ரூபமாக காணும் ஞானியாக இருக்கிறீர்கள்.கருணைக்கடலான நீங்கள் என் மீது அருள் புரிந்து ஆதி அந்தமில்லாத சத்திய சொரூபன் ஸ்ரீ ஹரியின் சொரூபத்தையும் திருவிளையாடல்களையும் ஒன்று விடாமல் கூறி விட்டீர்கள்.இனி எனக்கு எந்த பயமும் இல்லை.தாங்கள் செய்த உபதேசத்தால் எனது அறியாமையும்  
அஞானமும் ஒழிந்தன.நான் பரிபூரண ஞானம் பெற்று விட்டேன்.தாங்கள் எனக்கு அனுமதி தர வேண்டும்.எல்லா சிந்தனைகளையும் துறந்து விட்டு என் வாக்கை கட்டுப்படுத்தி பரமாத்ம சொரூபத்தில் ஒன்றி விட போகிறேன்.என்று கூறி மன்னன் புலன்களையும் மனதையும் அடக்கி சமாதியில் ஆழ்ந்தான்.தன் அந்தராத்மாவை பரம் பிரம்மாத்மாவில் நிலை நிறுத்தி இரண்டறக்கலந்து விட்டான்.பிரம்ம சொரூபமாக சமாதியில் ஆழ்ந்த போது முனி குமாரன் சிருங்கியின் சாபத்தின் ஏவல் சக்தியால் தக்ஷகன் வந்து கொண்டிருந்த போது வழியில் மந்திரத்தால் விஷத்தை நீக்கும் விஷ வைத்திய பிராமணனை கண்டான்.அரசனுக்கு வைத்தியம் செய்து பிழைக்க வைக்கும் நோக்கத்துடன் வந்துகொண்டிருந்த அவனுக்கு ரத்தினச்செல்வங்களை கொடுத்து திரும்பி போகச்செய்து விட்டு பிராமண வடிவம் எடுத்து சமாதியில் இருந்த பரீட்சித் மன்னனை விஷ பற்களால் கடித்து விட்டு மாயமாய் மறைந்தான்.ராஜ நாகம் தக்ஷகனின் பயங்கர விஷ அக்னியால் தாக்கப்பட்ட பரீட்சித் மன்னனின் உடல் எரிந்து சாம்பலாகிவிட்டது.
            பூலோகத்தில் ராஜவிசுவாசிகளும்,மகன்களும் மன்னன் உடல் எரிந்து விட்டதை கண்டு ஹா ஹா என்று அழுது ஓலமிட்டனர்.ஆனால் பர லோகத்தில் தேவ அசுரர்கள் பரீட்சித் பரமகதி அடைந்ததை கண்டு வியப்படைந்தனர்.தேவ துந்துபி முழங்க கந்தர்வர்கள் இசை பாட அப்சரஸ்கள் நாட்டியமாட தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். பரீட்சித்திர்க்கு நான்கு மகன்கள் ஜனமேஜயன்,சுருதசேணன்,பீமசேனன்,உக்கிரசேனன் என்று பெயர் கொண்டு இருந்தனர்.இவர்களில் மூத்த மகன் ஜனமேஜயன் தக்ஷகனால் தன் தந்தை இறந்ததை அறிந்து மிகவும் வருத்தமும் ஆத்திரமும் அடைந்தான்.பிராமணர்களை அழைத்து உடனே சர்ப்ப யாகம் தொடங்கினான்.யாகத்தில் அக்னி குண்டத்தில் தக்ஷகன் தானாக வந்து விழும் வரை யாகத்தை தொடர சொன்னான்.
           மாபெரும் அக்னி குண்டத்தில் பூமியிலும் பூமிக்கடியிலும் திரியும் வித விதமான சர்பங்களும் மலை பாம்புகளும் வந்து அக்னியில் விழுந்து மடிவதை கண்டு தக்ஷகன் பயந்தான்.பல யோசனை தூரம் சர்ப்பங்கள் மடிந்து கருகிய நாற்றம் பரவிக்கொண்டு இருந்தது. பரீட்சித் மகன் ஜனமேஜயன் கூறினான்:"பிராமணர்களே அந்த நீசன் தக்ஷகன் ஏன் இன்னமும் அக்னி குண்டத்தில் விழுந்து சாம்பலாக வில்லை? " அதற்க்கு பிராமணர்கள் கூறினார்கள் "ராஜேந்திரனே இச்சமயம் தக்ஷகன் இந்திரனை சரண் அடைந்து இருக்கிறான்.தேவராஜன் தன் சிம்மாசனத்தில் சுற்றி இருக்கும் தக்ஷகனை ஸ்தம்பிக்க செய்து இருக்கிறான்.அதனால் அவன் இன்னமும் அக்னியில் விழாமல் இருக்கிறான்.இதை கேட்டு ஜனமேஜயன் கூறினான்."அப்படிஎன்றால் பிராமணர்களே இந்திரனோடு சேர்த்து தக்ஷகனை அக்னி குண்டத்தில் விழச் செய்யுங்கள்."ஜனமேஜயன் இவ்வாறு கூறியதும் பிராமணர்கள் இந்திரனை குறித்து ஆகர்ஷன மந்திரத்தை பிரயோகித்து தக்ஷகனை இந்திரனோடு சேர்த்து அக்னியில் விழுவாயாக என்றனர்.சொர்கத்தில் இந்திரன் விமானம் வட்டமிட்டு சுற்றி வர அதில் இந்திரனோடு தக்ஷகனும் வேகமாக வந்தனர்.இதை அறிந்த தேவகுரு பிரகஸ்பதி,"மன்னா யாகத்தை நிறுத்தச்சொல்லுங்கள். எய்தவன் இருக்க அம்பு மேல் ஆத்திரம் கொள்வது சரியல்ல.மேலும் தக்ஷகன் அமுதம் குடித்து சாகா வரம் பெற்றவன்.ராஜா!ஜகத்தில் உயிர்வர்கங்கள் தம்தம் கர்ம வினைப்பயன்களை அனுசரித்து வாழ்ந்து சாகிறார்கள்.இறப்புக்கு பின் அவர்களுக்கு தகுந்தபடி நற்கதி அல்லது துர்கதி கிடைக்கிறது.ஜனமேஜய ராஜா மக்களுக்கு மரணம் பல ரூபத்தில் வருகிறது.சர்ப்பம்,தீ விபத்து,வெள்ளம்,இடி மின்னல்,பசிதாகம், வியாதி,கொள்ளையர் ஆகியவற்றால் மரணம் சம்பவிக்கிறது.பகவானின் மாயையால் நாம் மதியிழந்து விடுகிறோம்.ராஜனே,நீங்கள் நடத்திய சர்ப்ப யாகத்தால் எண்ணிலடங்கா அப்பாவி சர்ப்பங்கள் தீயில் கருகி விட்டன.உயிர் கொலை செய்யும் இந்த  யாகத்தை  நிறுத்துங்கள்.உலகில் அவரவர் செய்யும் கர்மவினைகளை அவர்களே அனுபவிப்பார்கள்.
           பிரகஸ்பதியின் சொல் கேட்ட ஜனமேஜயன் சர்ப்ப யாகத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டான்.தேவரிஷி பிரகஸ்பதியையை முறைப்படி பூஜித்தான்.
            

No comments:

Post a Comment