Wednesday 28 March 2012

பக்தன் அம்பரீஷ மன்னன்

           எழுதீவுகளும், ஏழு கடல்களும் கொண்ட மேதினியை ஆண்டு வந்த அம்பரீஷ மன்னன் விஷ்ணு பக்தியால் சிறந்து விளங்கினான்.உலகில் உள்ள சுகம் தரும் விசயங்களும் செல்வங்களும் நிலையற்றவை என்று நினைத்து பற்றற்று வாழ்ந்து அரசனுக்குரிய கடமைகளை செய்வான்.சாதுக்களையும் பக்தர்களையும் பெரிதும் மதிப்பான்.பல கோயில்களை எழுப்பி திருப்பணிகளை செய்வான்.தன்னையே ஸ்ரீ விஷ்ணு பகவானின் சேவையில் அர்பணித்து விட்டான்.மனதால் பகவானை தியானிப்பான்.கைகளால் அர்ச்சித்து,காதுகளால் பகவானின் திருவிளையாடல்களை கேட்டு, வாக்கால் அவர் திருநாமத்தை ஜபித்து பகவான் திரு நைவேத்தியத்தை புசித்து,ரசித்து கால்களால் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு நடை பயணம் சென்று வணங்கினான்.
            சரஸ்வதி நதிக்கரையில் புகழ் பெற்ற கௌதமர்,அஸிதர் முதலிய மகரிஷிகளை வைத்து செல்வச்சிறப்புடன் பெரும் தக்ஷனைகள் கொண்ட பல அச்வமேத யாகங்களை செய்தான்.அவனது நல்லாட்சியில் சொர்கத்தையும் விரும்பாத பிரஜைகளும் குறையாத செல்வங்களை பெற்று விஷ்ணு பக்தர்களாக சந்தோசத்துடன் வாழ்ந்தனர்.இவ்வாறு அம்பரீஷ ராஜாபக்தியோகத்துடன் தவ வாழ்கையை மேற்கொண்டு மக்களை காக்கும் அரசனுக்குரிய கடமைகளை செய்து கொண்டு ஆட்சி புரிந்தான்.
            ஒரு நாள் அரண்மனையில் ஸ்ரீ விஷ்ணு பகவானை அம்பரீஷன் மெய்மறந்து பூஜை செய்துகொண்டிருந்த போது ஸ்ரீ விஷ்ணு பகவான் அவன் மீது பேரன்பு கொண்டு பக்தியில் மகிழ்ந்து தன சுதர்சன சக்கரத்தை பரிசாக அளித்தார்.அது விரோதிகளை வீழ்த்தக்கூடியதாகவும் , பக்தர்களை ரட்சிப்பதர்காகவும் அவனிடம் வந்து  இருந்தது.அதனை பக்தியுடன் பெற்றுக்கொண்ட அரசன் அதை தன அரண்மனை பூஜை மாளிகையில் வைத்து பூஜை செய்து வந்தான்.
           அம்பரீஷன் மனைவியும் அவனை போலவே பக்தியில் சிறந்தவளாக அவனுடன் சேர்ந்து ஸ்ரீ விஷ்ணுபகவானை ஆராதித்து வந்தாள்.தன் மனைவியுடன் ஒரு முறை ஒரு வருடம் வரை பூர்த்தியாகும் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தான்.விரதம் முடியும் போது அவன் கார்த்திகை மாதம் மூன்று நாள் உபவாசம் இருந்தான்.யமுனையில் நீராடி மது வனத்தில் நாள் முழுவதும் விஷ்ணு பகவானுக்கு சந்தன மாலை, ஆபரணம் ஆகிய செல்வங்களுடன் சிறப்பாக அபிஷேகம் செய்து பூஜை செய்தான்.அரசனால் எல்லா செல்வங்களும் பெற்று நிறைவாக வாழ்ந்த பிராமணர்களுக்கும் மற்றவர்களுக்கும் அறுசுவை விருந்து படைத்தான்.பசுக்களை தானம் செய்தான்.ஏகாதேசி விரதத்தை முடிப்பதற்கு பாரணை (புசிப்பதற்கு)செய்ய தயாராகும்போது சாபமும் வரமும் கொடுக்கும் வல்லமை படைத்த மகாரிஷி துர்வாசர் அதிதியாக அங்கு வந்து சேர்ந்தார்.
            துர்வாசர் வருகை தந்தவுடன் அரசன் அம்பரீஷன் அவருக்கு ஆசனமளித்து பாத பூஜை செய்தான்.விலைஉயர்ந்த பொருட்களை கொண்டு பூஜித்தான்.அதன் பின் ஏகாதசி விரதம் முடிக்கும் போஜனம் செய்ய வேண்டினான்.துர்வாசர் அவன் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நதியில் நீராட சென்றார்.துவாதசி நேரம் கழிந்து கொண்டு இருந்தது.அரசன் தர்ம சங்கடத்தில் வீழ்ந்தவன் பிராமண குருமார்களிடம் யோசனை கேட்டான்.--- பிராமணர்களே நான் துவாதசி விரத போஜனம் செய்தால் துர்வாசரை விட்டு விட்டு போஜனம் செய்த பாவியாவேன்.ஆனால் துவாதசி திதியில் விரதத்தை முடித்துக்கொள்ள போஜனம் செய்யாமல் இருந்தால் ஏகாதசி விரதம் இருந்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.இப்போது நான் என்ன செய்வது?அரசன் இவ்வாறு கூறியதும் பிராமணர்கள் கூறினார்கள். அரசே இதற்க்கு ஒரு வழி இருக்கிறது.அதாவது துவாதசி நேரம் கழியும் முன்பு நீங்கள் துளசி தீர்த்தத்தை மட்டும் பருகுங்கள். அது போஜனம் செய்வதற்கு சமமாகவும் இருக்கும். அல்லது போஜனம் செய்யாமல் இருப்பதற்கும் சமமாகும் வேத சாஸ்த்திரங்கள் இவ்வாறு தான் கூறுகின்றன.
           பிராமணர்கள் இவ்வாறு கூறிய பின் அம்பரீஷன் அவர்கள் சொற்படி தீர்த்தத்தை மட்டும் பருகி துவாதசி பாரணையை முடித்துக்கொண்டான்.துர்வாசமுனிவரை எதிர்பார்த்து காத்திருந்தபோது துர்வாசர் யமுனையில் நீராடிவிட்டு வழிபாட்டு கடமைகளை முடித்துக்கொண்டு வந்து சேர்ந்தார்.அரசன் கைகள் கூப்பியபடி நின்றான்.துர்வாசர் தன் ஞானதிருஷ்டியால் அரசன் விரதத்தை முடித்துக்கொண்டதை அறிந்து கொண்டார்.மிகுந்த கோபம் கொண்டு அங்கிருந்த பிராமணர்களை நோக்கி கூறினார். இதோ பார்த்தீர்களா மரியாதை துறந்த அரசன் இவன் செல்வ செருக்கு மிகுதியால் என்னை அவமதித்து நான் வருவதற்குள் போஜனம செய்து விரதத்தை முடித்துக்கொண்டான்.அதிதியாக வந்த என்னை விருந்து சாப்பிட அழைத்து விட்டு நான் உண்ணும் முன் இவன் விரதத்தை முடித்துக்கொண்டான்.இப்போது இவனுக்கு பாடம் புகட்ட போகிறேன் பாருங்கள். என்று கூறி ஆத்திரம் மேலிட்டு தன் ஜடையிலிருந்து ஒன்றை பிடுங்கி பூமியில் போட்டார்.அதிலிருந்து கிருத்யா என்ற பேய் உருவாகியது.அது பிரளய கால அக்னி போல தகித்துக்கொண்டு இருந்தது.நெருப்பே உருவானது போல இருந்தது.கையில் வாள் பிடித்து பூமி நடுங்க ஓடிப்போய் அம்பரீஷனை  தாக்க பாய்ந்தது.தன்னை தாக்க வந்த  கிருத்யா பேயை கண்டதும் தன்னை காத்துக்கொள்ள அம்பரீஷன் சுதர்சன சக்ரத்தை தியானம் செய்தான்.அக்கணமே விஷ்ணு பகவானின் பக்தனை காக்க சுதர்சன சக்கரம் எதிரில் தோன்றியது.மாபெரும் நெருப்பு சர்பத்தை சுட்டு சாம்பலாக்குவது போல தீ ஜுவாலையுடன் சுதர்சனம், கிருத்யா பேயை நொடியில் எரித்து சாம்பலாக்கி விட்டது


.சுதர்சன சக்கரம் அத்துடன் சாந்தமாகாமல் துர்வாசரை நோக்கி பாய்ந்தது.துர்வாசர் தாம் ஏவிவிட்ட பேய் எரிந்து போனதை கண்டார்.மேலும் சுதர்சனம் தன்னை நோக்கி வருவதையும் கண்டார்.அவர் பீதியடைந்து தன் உயிரை காத்துக்கொள்ள ஓடினார்.ஆனால் காட்டு தீ காட்டில் இருக்கும் பாம்புகளையும் மிருகங்களையும் எரிப்பதற்கு வேகமாக ஜுவாலையுடன் வருவது போல சுதர்சனம் தீ ஜுவாலையுடன் துர்வாசரை துரத்த ஆரம்பித்தது..துர்வாசர் தீ ஜுவாலை வெப்பத்தால் சரீரமெல்லாம் தகிக்க தீர்வு காண முடியாமல் ஓடிக்கொண்டே இருந்தார்.அவர் இமயமலைக்குகைக்குள் போய் ஒளிந்தார்.ஆனால் சுதர்சனம் எங்கும் தடையின்றி அவரை பின் தொடர்ந்தது.அவர் பூமியில் மலை காடு முதலிய இடங்களிலும் அதள விதள பாதாள லோகங்களிலும் கடலுக்குள்ளும் ஓடி ஒளிந்தார்.ஆனால் சுதர்சனம் அவரை விட வில்லை.திசைகளை காக்கும் தெய்வங்களின் சொர்கத்திற்கும் சென்றார்.தேவர்களால் ஏதும் செய்ய முடிய வில்லை.
            இறுதியில் பிரம்ம லோகத்தில் பிரம்மாவை தன்னை காக்கும்படி சரண் அடைந்தார்.ஆனால் பிரம்மா கூறினார்--எனது ஆயுள் இரண்டு பாரர்த்த காலம் தான்.அதன் பின் கால சொரூபனான பரம்பொருள் ஸ்ரீ விஷ்ணு பகவான் தான் படைத்த சிருஷ்டிகளை அழித்து ஒடுக்கி விடுவார்.அவர் கண் அசைவினால் அகில புவனங்களும் எரிந்து சாம்பலாகி விடும்.பிரளய காலத்தில் உயிர்களை தன்னுள் ஒடுக்கி விடுவார்.அவ்வாறு இருக்க நான்,பூதேஸ்வரன் சிவபெருமான், தேவர்கள் அனைவரும் அவருக்கு கட்டுப்பட்டவர்கள்.அவர் விருப்பப்படியே நாங்கள் மூவுலகங்களையும் இயக்குகிறோம்.(தொடரும்)

Tuesday 27 March 2012

பரீட்சித்மன்னன் அடைந்த மோட்சம் தொடர்ச்சி 2

அதன் பின் எழு நாட்கள் பத்து அவதார்க்கதைகள் அடங்கிய பாகவத புராண கதையைகூறினார்.அதில் வான் புகழ் கொண்ட புண்ணிய கீர்த்தி படைத்த அரசர்களின் வரலாறுகளும் கூறப்பட்டிருக்கின்றன.
            ஏழு நாட்கள் பாகவத புராணத்தை கூறி முடித்த பின் பரீட்சித் மன்னனை நோக்கி சுக தேவர் மேலும் கூறினார்;"பரீட்சித்மகாராஜா!நான் பாகவத புராணத்தில் எல்லாவற்றையும் கூறிவிட்டேன்.ஒவ்வொரு இடத்திலும் ஸ்ரீஹரியின் மகிமைகளும் திருவிளையாடல்களும் நிறைந்து இருக்கின்றன.நான் இறந்துவிடுவேன் அல்லது மீண்டும் பிறப்பெடுப்பேன் என்ற சிந்தனையை நீங்கள் விட்டு விட வேண்டும்.நீங்கள் பரமாத்மா ஜோதியில் கலந்து பிரம்ம சொரூபமாகிவிட்டீர்கள்.
           ஆயிரம் மரணங்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள்.ஏனென்றால் ஆத்மா அப்பாலுக்கு அப்பாலாக நித்யமாக தன்னோளியுடன் இருக்கிறது.நீங்கள் அதுவாகவே அதாவது ஆத்மா சொரூபகாகிவிட்டால் எத்தனை தக்ஷகன்கள் வந்தால் என்ன எந்த துன்பமும் இருக்காது. சுக தேவர் இவ்வாறு கூறி முடித்தார்.
           பரீட்சித்மன்னன் கூறினான்:"ஸ்ரீ வேத வியாசரின் புதல்வரான தாங்கள் அகில உலகையும் ஆத்மா ரூபமாக காணும் ஞானியாக இருக்கிறீர்கள்.கருணைக்கடலான நீங்கள் என் மீது அருள் புரிந்து ஆதி அந்தமில்லாத சத்திய சொரூபன் ஸ்ரீ ஹரியின் சொரூபத்தையும் திருவிளையாடல்களையும் ஒன்று விடாமல் கூறி விட்டீர்கள்.இனி எனக்கு எந்த பயமும் இல்லை.தாங்கள் செய்த உபதேசத்தால் எனது அறியாமையும்  
அஞானமும் ஒழிந்தன.நான் பரிபூரண ஞானம் பெற்று விட்டேன்.தாங்கள் எனக்கு அனுமதி தர வேண்டும்.எல்லா சிந்தனைகளையும் துறந்து விட்டு என் வாக்கை கட்டுப்படுத்தி பரமாத்ம சொரூபத்தில் ஒன்றி விட போகிறேன்.என்று கூறி மன்னன் புலன்களையும் மனதையும் அடக்கி சமாதியில் ஆழ்ந்தான்.தன் அந்தராத்மாவை பரம் பிரம்மாத்மாவில் நிலை நிறுத்தி இரண்டறக்கலந்து விட்டான்.பிரம்ம சொரூபமாக சமாதியில் ஆழ்ந்த போது முனி குமாரன் சிருங்கியின் சாபத்தின் ஏவல் சக்தியால் தக்ஷகன் வந்து கொண்டிருந்த போது வழியில் மந்திரத்தால் விஷத்தை நீக்கும் விஷ வைத்திய பிராமணனை கண்டான்.அரசனுக்கு வைத்தியம் செய்து பிழைக்க வைக்கும் நோக்கத்துடன் வந்துகொண்டிருந்த அவனுக்கு ரத்தினச்செல்வங்களை கொடுத்து திரும்பி போகச்செய்து விட்டு பிராமண வடிவம் எடுத்து சமாதியில் இருந்த பரீட்சித் மன்னனை விஷ பற்களால் கடித்து விட்டு மாயமாய் மறைந்தான்.ராஜ நாகம் தக்ஷகனின் பயங்கர விஷ அக்னியால் தாக்கப்பட்ட பரீட்சித் மன்னனின் உடல் எரிந்து சாம்பலாகிவிட்டது.
            பூலோகத்தில் ராஜவிசுவாசிகளும்,மகன்களும் மன்னன் உடல் எரிந்து விட்டதை கண்டு ஹா ஹா என்று அழுது ஓலமிட்டனர்.ஆனால் பர லோகத்தில் தேவ அசுரர்கள் பரீட்சித் பரமகதி அடைந்ததை கண்டு வியப்படைந்தனர்.தேவ துந்துபி முழங்க கந்தர்வர்கள் இசை பாட அப்சரஸ்கள் நாட்டியமாட தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். பரீட்சித்திர்க்கு நான்கு மகன்கள் ஜனமேஜயன்,சுருதசேணன்,பீமசேனன்,உக்கிரசேனன் என்று பெயர் கொண்டு இருந்தனர்.இவர்களில் மூத்த மகன் ஜனமேஜயன் தக்ஷகனால் தன் தந்தை இறந்ததை அறிந்து மிகவும் வருத்தமும் ஆத்திரமும் அடைந்தான்.பிராமணர்களை அழைத்து உடனே சர்ப்ப யாகம் தொடங்கினான்.யாகத்தில் அக்னி குண்டத்தில் தக்ஷகன் தானாக வந்து விழும் வரை யாகத்தை தொடர சொன்னான்.
           மாபெரும் அக்னி குண்டத்தில் பூமியிலும் பூமிக்கடியிலும் திரியும் வித விதமான சர்பங்களும் மலை பாம்புகளும் வந்து அக்னியில் விழுந்து மடிவதை கண்டு தக்ஷகன் பயந்தான்.பல யோசனை தூரம் சர்ப்பங்கள் மடிந்து கருகிய நாற்றம் பரவிக்கொண்டு இருந்தது. பரீட்சித் மகன் ஜனமேஜயன் கூறினான்:"பிராமணர்களே அந்த நீசன் தக்ஷகன் ஏன் இன்னமும் அக்னி குண்டத்தில் விழுந்து சாம்பலாக வில்லை? " அதற்க்கு பிராமணர்கள் கூறினார்கள் "ராஜேந்திரனே இச்சமயம் தக்ஷகன் இந்திரனை சரண் அடைந்து இருக்கிறான்.தேவராஜன் தன் சிம்மாசனத்தில் சுற்றி இருக்கும் தக்ஷகனை ஸ்தம்பிக்க செய்து இருக்கிறான்.அதனால் அவன் இன்னமும் அக்னியில் விழாமல் இருக்கிறான்.இதை கேட்டு ஜனமேஜயன் கூறினான்."அப்படிஎன்றால் பிராமணர்களே இந்திரனோடு சேர்த்து தக்ஷகனை அக்னி குண்டத்தில் விழச் செய்யுங்கள்."ஜனமேஜயன் இவ்வாறு கூறியதும் பிராமணர்கள் இந்திரனை குறித்து ஆகர்ஷன மந்திரத்தை பிரயோகித்து தக்ஷகனை இந்திரனோடு சேர்த்து அக்னியில் விழுவாயாக என்றனர்.சொர்கத்தில் இந்திரன் விமானம் வட்டமிட்டு சுற்றி வர அதில் இந்திரனோடு தக்ஷகனும் வேகமாக வந்தனர்.இதை அறிந்த தேவகுரு பிரகஸ்பதி,"மன்னா யாகத்தை நிறுத்தச்சொல்லுங்கள். எய்தவன் இருக்க அம்பு மேல் ஆத்திரம் கொள்வது சரியல்ல.மேலும் தக்ஷகன் அமுதம் குடித்து சாகா வரம் பெற்றவன்.ராஜா!ஜகத்தில் உயிர்வர்கங்கள் தம்தம் கர்ம வினைப்பயன்களை அனுசரித்து வாழ்ந்து சாகிறார்கள்.இறப்புக்கு பின் அவர்களுக்கு தகுந்தபடி நற்கதி அல்லது துர்கதி கிடைக்கிறது.ஜனமேஜய ராஜா மக்களுக்கு மரணம் பல ரூபத்தில் வருகிறது.சர்ப்பம்,தீ விபத்து,வெள்ளம்,இடி மின்னல்,பசிதாகம், வியாதி,கொள்ளையர் ஆகியவற்றால் மரணம் சம்பவிக்கிறது.பகவானின் மாயையால் நாம் மதியிழந்து விடுகிறோம்.ராஜனே,நீங்கள் நடத்திய சர்ப்ப யாகத்தால் எண்ணிலடங்கா அப்பாவி சர்ப்பங்கள் தீயில் கருகி விட்டன.உயிர் கொலை செய்யும் இந்த  யாகத்தை  நிறுத்துங்கள்.உலகில் அவரவர் செய்யும் கர்மவினைகளை அவர்களே அனுபவிப்பார்கள்.
           பிரகஸ்பதியின் சொல் கேட்ட ஜனமேஜயன் சர்ப்ப யாகத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டான்.தேவரிஷி பிரகஸ்பதியையை முறைப்படி பூஜித்தான்.
            

Sunday 18 March 2012

பரீட்சித்மன்னன் அடைந்த மோட்சம் தொடர்ச்சி

பரீட்சித்மன்னனை அங்கு கூடி இருந்த ரிஷிகள் அனைவரும் புகழ்ந்தனர்.
           ராஜரிஷிசிரோமணி!பாண்டவ வம்சத்தில் உதித்த நீங்கள் பகவத் சேவையை பெரிதாக கருதி அரச சிம்மாசனத்தை ஒரு நொடியில் துறந்து விட்டீர்கள்.இதில் ஒன்றும் வியப்பு இல்லை.உங்கள் தந்தையும் தாதயர்களும் ஸ்ரீ கிருஷ்ணபகவான் மீது அன்பும் பக்தியும் கொண்டிருந்தவர்கள்.நீங்கள் சரீரம் துறந்து மோட்ச கதி அடையும் வரை நாங்கள் இங்கு ஆத்ம தத்துவங்களை பேசிக்கொண்டு கூடவே இருக்கிறோம்.என்றனர்.
           அச்சமயம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.---- அதிரூப அழகு சுந்தரரான பதினாறு வயது நிரம்பிய பரம ஞானி சுக தேவர் அங்கு தோன்றினார்.ஐந்து வயதிலேயே ஞானியாகிவிட்டவர் மகரிஷ்களாலும் தெய்வ ரிஷிகளாலும் வணங்கப்படுபவர். சுக தேவர் வருகை தந்ததை கண்டு மேலும் தன்னை பாக்யவானாக நினைத்த பரீட்சித் அவரை வரவேற்று பூஜை செய்து உயர்ந்த ஆசனத்தில் அமரச்செய்தார்.சாஷ்டாங்கமாக தண்டனிட்டு வணங்கி கூறினார்.
           நட்சத்திர தாரகைகள் நடுவில் சந்திரன் பிரகாசிப்பதை போல மகாரிஷி கணங்களுக்கு மத்தியில் சோபை தரும் பெருமானே குற்றம் புரிந்த க்ஷத்ரிய அரசன் என்னை தேடி என்னிடம் அதிதியாக வந்துள்ளீர்கள்.இது நான் செய்த தவப்பயன் தான்.தங்களை நினைத்த மாத்திரத்தில் மனிதன் தூயவனாகிவிடுவானே அப்படிப்பட்டவர் என்னை காண வந்திருப்பது ஸ்ரீ ஹரியின் கிருபையை தவிர வேறென்ன சொல்ல முடியும்?தாங்கள் பசுவிடம் பால் கறக்கும் நேரம் வரை தான் ஒரு இடத்தில தங்குவீர்கள்.அவ்வாறு இருக்க நான் நற்கதியடைய என் மீது அருளை பொழிவதற்காக எழு நாட்கள் என்னுடன் இருந்து பிறவாமை அருளும் பகவத்கதைகளையும் ஆன்மீக தத்துவங்களையும் உபதேசிக்க வந்துள்ளீர்கள். என்றால் நான் எப்படி தங்களுக்கு நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை.
           தங்களிடம் இரண்டு விஷயங்கள் கேட்டுக்கொள்கிறேன்.சுவாமி!யோகியர்களுக்கும் பரம குருவே மரணத்தை நெருங்கும் மனிதன் எதை செய்தால் அவன் நற்கதி யடைய முடியும்?எந்த மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்?எந்த தெய்வத்தை நினைக்க வேண்டும்?இரண்டாவது உலகில் வாழும் போது எந்த கடமைகளை செய்து அவன் தன் ஆத்மாவை மேம்படச்செய்து மோட்சகதியடைவான்? 
           ஸ்ரீ சுகதேவர் கூறினார்.--- மன்னரே இந்த ஏழு நாட்களும் ஆத்ம தத்துவ போதனைகள் கலந்து பக்திரசம் நிறைந்த பகவத் கதைகளை கூறுகிறேன்.அது பிற்காலத்தில் பாகவத புராணம் என்று பெயரிட்டு ஞானிகள் குறிப்பிடுவார்கள்.உன் கேள்விகளுக்கு விடை அதிலிருக்கும்.வேதத்திற்கு நிகரான இந்த பாகவத புராணம் என் தந்தை வேத வியாசரால் எனக்கு அருளப்பட்டது.ராஜேந்திரனே மனிதன் உலகில் ஆரோக்யமாக வாழும்போதே பெரியவர்களை சேவித்து பகவான் நாம ஜபம் செய்து பகவானை நினைத்துக்கொண்டே அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணம் செய்து தன்னலமற்று கடமைகளை செய்ய வேண்டும்.ஆனால் மனிதர்கள் மனதில் நினைக்காமல் தன் குடும்பத்தில் பற்று கொண்டு வேலைகள் செய்கிறார்கள்.மனைவி மக்கள் மீது அதீத பாசம் கொண்டு பாடுபட்டு உழைத்து உழைத்து அவனது நீண்ட ஆயுள் நொடியில் கழிந்து விடுகிறது.பரீட்சித்மன்னரே அபயமளிக்கும் பரமபதம் அடைய விரும்புகிறவன் சர்வாத்மாவாக,சர்வசக்திமானாக விளங்கும் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் தெய்வீக கதைகளை கேட்டு அவர் திருநாம பஜனை செய்து பூஜனை செய்ய வேண்டும்.மரணம் நெருங்கும்போது பகவானின் நினைவு அவசியம் வர வேண்டும்.அதற்க்கு தகுந்தபடி ஞானம்,பக்தி,தர்மம்,ஆகியவற்றை வாழ்க்கையில் என்றென்றும் கடைப்பிடிக்க வேண்டும்.இதுவே ஜன்மம் எடுத்ததற்கு பலன் என்று கருதப்படுகிறது.
           பரீட்சித் மகாராஜா மோட்சம் அடையும் வழியை பற்றி சிந்திக்காமல் மனிதன் தன் ஆயுளை வீணாக கழித்து விடுகிறான்.பகவானின் சிந்தனையில் ஒரு பொழுது அல்லது ஒரு நிமிடம் கழிந்தாலும் அது மோட்சத்தை தரக்கூடியதாக இருக்கும்.ராஜரிஷி கட்வாங்கன் இறப்பதற்கு சில நிமிடங்களே இருக்கும்போது அனைத்துவிசயங்களையும் மனதிலிருந்து நீக்கி விட்டு இறைவனடி சேர தயாராகிவிட்டார்.அந்த நொடிபொழுதில் பரம பதம் அடைந்து விட்டார்.மன்னரே தங்களுக்கு கிடைத்திருக்கும் அவகாசமோ ஏழு நாட்கள் இன்னமும் இருக்கின்றன.அதற்குள் தன் ஆத்மாவை மேம்படுத்த எவ்வளவோ சாதிக்கலாம்.ஆதலால் கவலைப்படாதீர்கள்.என்று சுகதேவர் ஆறுதல் அளித்து விட்டு கங்கையில் மூழ்கி எழுந்து தர்பாசனத்தில் அமரச்சொன்னார்.ஓம் என்ற பிரணவத்தை தியானம் செய்யும் முறையையும் பிராணவாயுவை அடக்கி பரம்பொருளை பாதாதி கேசம் வரை தியானிக்கும் முறையையும் கூறினார்.ஞான வைராக்யத்தை உண்டாக்கும் விசயங்களையும் கூறினார்.
                                                                                                   (தொடரும்)

Tuesday 13 March 2012

பரீட்சித்மன்னன் அடைந்த மோட்சம்

           பரிட்சித் மன்னன் கலியுக புருஷனை தன் ஆட்சியில் வரவிடாமல் தடுத்திருந்தான்.அதன் விளைவால் பொய்,சூது,களவு,கொலை,இம்சை ஆகிய கலியுக தோஷங்கள் அவன் ஆட்சியில் இல்லாமல் போயிருந்தன.இவ்வாறு நல்லாட்சி புரிந்து கொண்டு இருக்கும் போது ஒரு நாள் பரீட்சித்மன்னன் காட்டிற்கு வேட்டையாட சென்றிருந்தான்.
           நாள் முழுவதும் காட்டில் மிருகங்களை அடித்து விரட்டி அலைந்து திரிந்து மன்னன் மிகவும் சோர்வடைந்தான்.பசி தாகத்தால் வாடினான்.தாகத்தை தணிக்க பக்கத்தில் நீர் நிலை எதுவும் இல்லாததால் ஓர் ஆசிரமத்தை நோக்கி போனான்.அங்கு சமிக முனிவர் கண்களை மூடி தவத்தால் ஆழ்ந்து இருந்தார்.
தியான யோகத்தில் புலன்களால் வெளி உலக தொடர்பு இல்லாமல் பிராண வாயுவை அடக்கி மனதையும் அறிவையும் நிறுத்தி விழிப்பு, சொப்பனம்,ஆழ நித்திரை அனைத்தையும் துறந்து பிரம்ம ரூப இறை நிலையில் ஒன்றி போயிருந்தார்.மொத்தத்தில் இவ்வுலக நினைவை துறந்திருந்தார்.இந்த நிலையில் மன்னன் நாவரட்சியில் துன்புற்று தாகத்திற்கு தண்ணீர் கேட்டான்.முனிவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை."வாருங்கள்" என்று வரவேற்று ஆசனம் அளித்து அமரச்செய்து பசியாற பழம் தந்து தாகத்திற்கு தண்ணீர் தந்து உபசரிக்க அங்கு வேறு யாரும் இல்லை.தாகத்தால் சோர்வுற்ற மன்னன் தான் அவமானப்பட்டு விட்டவன் போல உணர்ந்து மிகவும் கோபம் அடைந்தான்.இப்படிப்பட்ட அவமானத்தை இதுவரை அடைந்ததில்லை என்று மனதில் நினைத்தான்.முனிவர் நம்மை பார்த்தவுடன் கண்களை மூடிக்கொண்டு பாசாங்கு செய்கிறாரா?அல்லது இந்த மன்னர்களால் நமக்கு ஆவது என்ன என்று நினைக்கிறாரா? என்று அறியாது கோபம் மேலிட்டு அங்கு இறந்து கிடந்த ஒரு பாம்பை வில் முனையால் எடுத்து அவர் கழுத்தில் போட்டு விட்டு நகரை நோக்கி பயணப்பட்டான்.
           
  சமிக முனிவரின் புதல்வன் சிருங்கி என்பவன் சிறுவனாக இருந்தும் மிகுந்த ஆற்றல் படைத்தவனாக இருந்தான்.அவன் சற்று தொலைவில் சக முனி குமாரர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.பரீட்சித்மன்னன் செத்த பாம்பை தந்தை மீது போட்ட சேதியை அறிந்தவன் ஆத்திரமடைந்து கூறினான்.--- நாட்டையும் தர்மத்தையும் காக்கும் அரங்க்காவலர்கலான அரசர்கள் தவ சீலர்களான பிராமணர்கள் மீது கோபம் கொள்வதா?உலக நன்மைக்காக தவமும் யாகமும் செய்யும் பிராமணர்களின் பாதுகாப்பாக இருக்க வேண்டிய மன்னர்கள் அவர்களை அடக்கி ஆள முற்படுவது அநியாயத்திலும் அநியாயம்.இவர்களுக்கு நல்ல பாடம் புகட்ட போகிறேன் என்று கூறிவிட்டு கெளசிகி நதி நீரை அருந்திவிட்டு பயங்கர சாபமிட்டான்.--
"இன்றிலிருந்து ஏழாவது நாள் என் தந்தையை அவமானப்படுத்திய பரீட்சித்மன்னனை பயங்கர விஷமுள்ள தக்ஷன் என்ற ராஜநாகம் கடித்து சாம்பலாகட்டும்." 
           இவ்வாறு சபித்து விட்டு அவன் ஆசிரமம் வந்தான்.தந்தை கழுத்தில் இறந்த பாம்பை தரித்திருப்பதை பார்த்து துக்கம் மேலிட்டு சப்தமிட்டு அழுதான்.
சமிக முனிவர் திடீரென சுய நினைவு அடைந்தார்.தன் மீது இருந்த இறந்த பாம்பை அப்புறப்படுத்திவிட்டு கூறினார்--- "மகனே ஏன் அழுகிறாய்? உனக்கு யார் தீங்கு இழைத்தார்கள்?என்று வினவினார்.மகன் அதற்க்கு பரீட்சித்மன்னன் செய்த செயலை விரிவாக கூறினான்.முனிவர் அதற்க்கு "மகனே நீ பாவம் செய்துவிட்டாய்!சிறிய தவறுக்கு பெரிய தண்டனை கொடுத்து விட்டாய்.நாட்டை காக்கும் அரசன் சாதாரண மனிதன் அல்ல.அவன் இறைவனுக்கு சமமானவன்.அரசனின் அடக்கு முறை இல்லையெனில் கொள்ளையர்கள் பெருகி போவார்கள்.நாட்டு மக்களை அடித்துக்கொன்று செல்வங்களை சூறையாடுவார்கள்.வேத தர்மங்கள் சீரழிந்து விடும்.மனிதர்கள் கட்டுப்பாடின்றி வாழ்வார்கள்.குரங்குகள் போல நாய்கள் போல தம் இஷ்டப்படி திரிவார்கள்.பரீட்சித் சக்கரவர்த்தி பல அஸ்வமேத யாகங்கள் செய்தவர்.தர்மத்தின் தலைவர் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் பக்தர்.பசி தாகத்தால் துன்புற்று நமது ஆசிரமத்திற்கு வந்திருந்தார்.நீ அவரை சபித்திருக்க கூடாது.அறியாமையால் நீ செய்த குற்றத்தை அந்த சர்வாத்மாவான பகவான் உன்னை மன்னிக்க வேண்டும்.பரீட்சித் போன்ற பகவானின் பக்தர்கள் என்றும் பழி வாங்க மாட்டார்கள்.
           அவர் தம் மகன் செய்த குற்றத்தை நினைத்து மிகவும் வருந்தினான்.சமிக ரிஷி போன்ற மகாத்மாக்கள் பிறர் செய்த தீங்குகளை பெரிதாக நினைக்க மாட்டார்கள்.உலகில் பிறர் அவர்களை சுக துக்கங்களில் வீழ்த்தினாலும் எதையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்கள்.
             பரீட்சித்மன்னன் தன் தலை நகரம் திரும்பி அரண்மனைக்கு சென்ற பின் தான் செய்த காரியத்தை நினைத்து மிகவும் வருத்தமுற்றான்.குற்றமற்ற சமிக முனிவர் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது நான் அநாகரீகமாக நீசர்கள் போல நடந்து கொண்டேன்.தவ சீலரின் கோபாக்னி இன்றே என் ராஜ்யத்தையும் படைகளையும் அரசாங்க கருவூலத்தையும் எரித்து சாம்பலாக்க போகிறது.எனக்கு தக்க தண்டனை கிடைத்தால் தான் எனக்கு நல்லறிவு வரும். என்று வருந்தினான்.அச்சமயம் ரிஷி குமாரன் சிருங்கி, சாபமிட்ட செய்தியை கேள்வியுற்றான்.அதை அவன் பகவானின் அனுக்கிரகமாக கருதி சிந்தித்தான்.நான் வாழ்நாள் முழுவதும் உலக இன்ப விசயங்களிலேயே பற்று கொண்டிருந்தேன்.அந்த பற்றுக்களை அறுத்து வைராக்கியம் அடைய ஒரு வழிபிறந்து விட்டது.இந்த ஏழு நாட்களை பொன்னான நாட்களாக கழிக்க போகிறேன்.மரணம் வரை உண்ணா நோன்பு ஏற்று ஸ்ரீ ஹரியின் கதையா கேட்க போகிறேன் என்று முடிவெடுத்தான்.பரீட்சித் மன்னன் சிறு பிராயத்திலிருந்தே ஸ்ரீ ஹரியின் மீது மிகுந்த பக்தியும் அன்பும் கொண்டு பகவத் சேவையில் ஈடுபாட்டுடன் இருப்பான்.அக்கணமே ராஜ்யத்தையும் அரண்மனையையும் துறந்து கங்கை நதிக்கரையில் உண்ணா நோன்பு ஏற்று அமர்ந்து கொண்டான்.
            பரீட்சித் மன்னன் கங்கை கரையில் வந்து அமர்ந்தவுடன் அவன் மோட்ச கதி அடைவதற்கு துணை புரிய அநேக பிரம்ம ரிஷிகளும் ,தேவரிஷிகளும்,புகழ் பெற்ற சப்தரிஷிகளும் அங்கு வந்து கூடினர்.மன்னன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பூசித்தான்.மகாத்மாக்களே தங்கள் தரிசனம் கண்டு இன்று நான் பெரும் பேரு பெற்றேன்.எந்நேரமும் சுக போகங்களில் திளைத்திருக்கும் ராஜாக்களுக்கு இறைவனடி சேர வழிகாட்டும் மகா புருசர்கள் தரிசனம் கிடைப்பது அரிதிலும் அரிது.நான் பாக்யவான் ஆனேன். பிராமணரிஷியின் சாபம் நான் இறைவனடி சேர ஒரு காரணமாகி விட்டது.நான் என் மனதை ஸ்ரீ ஹரியின் திருவடி மலர்களில் சமர்ப்பித்து விட்டேன்.இனி தக்ஷகன் வந்து தீண்டினாலும் கவலைப்பட மாட்டேன்.மகாரிஷிகளே நான் அனைத்துயிர்களிலும் பரமாத்மாவை காண வேண்டும்.அதற்க்கு அருள் புரிய வேண்டும்.என்று வணங்கினான்.அச்சமயம் தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்.(தொடரும்)

Sunday 4 March 2012

தக்ஷன் செய்த யாகம் தொடர்ச்சி 4

பிரம்மதேவரே விஷ்ணு பகவானின் அஞ்ஞான மாயையால் அறிவு மயக்கம் ஏற்பட்டு குற்றம் செய்தவர்களை பற்றி நான் பேசுவதுமில்லை.நினைத்துக்கொண்டிருப்பதுமில்லை.அவர்கள் குற்றத்தை உணர்வதற்காக சிறிய தண்டனை கொடுத்தேன்.அஸ்வினி குமாரர்கள் அருள்பெற்று தேவர்களும் மற்ற ப்ருகு முதலியவர்களும் முன்பு போல் நலமாகட்டும்.தக்ஷன் ஆட்டுத்தலை பெற்று உயிருடன் எழட்டும்.சிவபெருமான் இவ்வாறு அருளுரை கூறியதும் அனைவரும் சிவபெருமானை அழைத்துக்கொண்டு யாகம் செய்த இடத்திற்கு சென்றனர்.சிவபெருமான் கூறியது போல யாக பலி கொடுத்த ஆட்டுத்தலையை தக்ஷன் கழுத்தில் பொருத்தினார்கள்.அக்கணமே தக்ஷன் ஆட்டுத்தலையுடன் உயிர் பெற்று எழுந்தான்.சிவபெருமானுக்கு செய்த துரோகத்தை எண்ணி கண்ணீர் வடித்தான்.சதி தேவியை நினைத்து வருந்தினான்.அவனால் பேச முடிய வில்லை.சிவபெருமானை அருளால் பக்தி பெருக்கெடுத்து அன்புடன் தொழுதான்.---நான் குற்றம் செய்து விட்டேன்.பிரபுவே தாங்களே பிரம்மாவாக இருந்து அறத்தை காப்பாற்றுவதற்காக வேத வித்தை, தவம்,விரதம் ஆகியவற்றை அனுஷ்டிக்கும் பிராமணர்களை படைத்தீர்கள்.ஸ்ரீ ஹரிக்கும் தங்களுக்கும் அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் கருணை இருக்கிறது.மாடு மேய்ப்பவன் பசுக்களை சரியான பாதையில் கொண்டு போவது போல எங்களை நேர்படுத்தி நல் வழி காட்டி விட்டீர்கள்.நான் தங்களை தூற்றி விட்டு நரகத்திற்கு போக இருந்தேன்.தாங்கள் கருணை காட்டி எம்மை காப்பாற்றி விட்டீர்கள்.தங்களை மகிழ்விக்க என்னிடம் ஒரு நல்ல குணம் கூட இல்லை.ஆதலால் எம்மை காத்தருள வேண்டும்.என்று தக்ஷன் வேண்டிக்கொண்டான்.
          ஆஷுதோஷ சங்கர பகவானிடம் இவ்வாறு மன்னிப்பு கேட்டுக்கொண்டதும் பிரம்மா முதலிய தேவர்களும், உபாத்யாயர்களும், ஆச்சார்யர்களும் துணையாக இருக்க தக்ஷன் யாகத்தை மீண்டும் தொடங்கினான்.பூத பேய்களால் வந்த அசுப தோஷத்தை சாந்தி செய்வதற்கு விஷ்ணு பகவானை நினைத்து பாயச புரோடாசத்தை ஹோமம் செய்தனர்.தக்ஷன் விஷ்ணு பகவானை தியானம் செய்தான்.அக்கணமே பகவான் கருடன் மீதேறி வந்து 10  திசைகளையும் பிரகாசித்துக்கொண்டு எதிரில் தரிசனம் தந்தார்.அனைவரும் விஷ்ணு பகவானை பூஜித்தனர்.தனித்தனியாக துதி செய்தனர்.
           விஷ்ணு பகவான் தக்ஷனை நோக்கி கூறினார்.----- "தக்ஷ பிரஜாபதி!ஜகத்தின் காரண கர்த்தாவாக யாமே பிரம்மாவாக, சிவபெருமானாக இருக்கிறோம்.தூய பர பிரம்ம சொரூபத்தை சான்றோர்கள் பிரம்மா,விஷ்ணு,சிவன் என்று பிரித்து ஆராதிக்கும் முறையை எளிமையாக்கி உபதேசித்துள்ளார்கள்.ஒரே பிரம்ம சொரூபத்தில் ஏற்றத்தாழ்வு இருக்க வாய்ப்பு இல்லை.மும் மூர்த்திகளில் பேதம் காண்பவர் சாந்தி யடைய மாட்டார்கள்.நானே பிரம்மாவாக இருந்து படைக்கிறேன்,விஷ்ணுவாக இவ்வுலகை ரட்சிக்கிறேன்,சிவசொரூபம் எடுத்து உலகங்களை அழிக்கிறேன்"
விஷ்ணு பகவான் இவ்வாறு கூறியதும் தக்ஷன் தெளிவடைந்தான்.தான் செய்த யாகத்தில் பிரம்மா,விஷ்ணு,ருத்திரன் மூவருக்கும் அவிர்பாகம் கொடுத்து ஹோமம் செய்து யாகத்தை பூர்த்தி செய்தான்.
          இந்தக்கதையை படித்தவர்களுக்கு நீண்ட ஆயுள் பெற்று உலகில் பெயரும் புகழும் அடைவார்கள் என்பது புராண வாக்கு.

Sunday 26 February 2012

தக்ஷன் செய்த யாகம் தொடர்ச்சி 3

       

                                 


 சம்ஹார மூர்த்தி ருத்திர பகவான் ஊழிக்காலத்தில் சடைகள் விரித்து த்வஜச்தம்பங்கள் போலிருக்கும் நீட்டிய கரங்களில் ஆயுதங்கள் தரித்து உக்கிர தாண்டவ நடனம் புரிந்து கொண்டு சூலாயுதத்தை சுழற்றும் போது திசை காக்கும் கஜங்கள் பயந்து ஓடுகின்றன.மின்னல் இடி போல பயங்கர சிரிப்பொலி திசைகளில் மோதி அவற்றை பிளந்து விடுவது போல அதிர்கின்றன.அதே சமயம்
அவரது தேஜசை எவராலும் தாங்க முடியாது.புருவம் நெளிந்து தாடை பற்கள் பட்டு நட்சத்திர தாரகைகளில் தீ பொறி கிளம்பும்.சங்கர பகவானை கோபப்படச் செய்து எவரும் நலம் அடைய மாட்டார்கள்.சாக்ஷாத் பிரம்மாவாக இருந்தாலும் என்ன? அவர்கள் நாசப்பட்டு போவார்கள்.
          அங்கு யாக மண்டபத்தில் அமர்ந்திருந்து யாகம் செய்து கொண்டிருந்தவர்கள் பயந்து ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு இருந்தனர்.ஓடி வந்த ருத்ர சேனைகள் யாக மண்டபத்தை சுற்றி வளைத்துக்கொண்டனர்.பூதகணங்கள் சில குட்டையாகவும் பழுப்பு மஞ்சள் நிறம் கொண்டவர்களாகவும் முதலை முகம் படைத்தவர்களாக பயங்கரமாக இருந்தனர்.வந்த க்ஷணத்தில் கொடிமரத்தை தகர்த்தெறிந்தனர்.மேற்கில் உள்ள யாக சாலையின் பெண்கள் தங்குமிடத்தை உடைத்தனர்.எதிரில் இருக்கும் சபா மண்டபத்தையும் துவம்சம் செய்தனர்.யாக சாலையில் இருக்கும் பாக சாலையை (சமையல் சாலையை ) நாசப்படுத்தினர்.அக்னித்திரசாலையை உடைத்து விட்டு யாக குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைத்தனர்.முனிவர்களின் மனைவிகளை பயமுறுத்தினர்.சிங்கம் இரையை பிடிப்பது போல வீரபத்திரன் தகஷனை பிடித்துக்கொண்டார்.மணிமான் என்ற சிவா கணம் ப்ருகுவையும் சண்டீசர் பூசாவையும் நந்தீஸ்வரர் பகனையும் பிடித்துக்கொண்டனர்.
           பூத கணங்கள் யாக சாலையின் இருப்பிடங்களையும் பொருள்களையும் அடித்து நொறுக்கி நாசம் செய்து விட்டு ரித் விஜர்களையும்,சபா நாயகரையும், தேவர்களையும் அடித்து துன்புறுத்தினார்கள்.அனைவரும் ஓடி ஒளிந்தனர்.கரண்டியுடன் நின்றிருந்த ப்ருகுவை பிடித்த வீரபத்திரன் தாடியையும் மீசையையும் பிடுங்கி எடுத்தார்.இந்த ப்ருகு தான் அன்று தக்ஷன் சிவபெருமானை ஏசிக்கொண்டு இருந்த போது மீசையை முறுக்கினான்.கண்களால் பார்த்து ஏசுகிறவனை தூண்டிவிட்ட பகனை கீழே கிடத்தி கண்களை பிடுங்கினார்.  பூஷா என்பவனின் பற்களை தட்டி உடைத்தார்.இந்த பூஷா தான் தக்ஷன் சிவபெருமானை அவமானப்படுத்தி பேசும்போது சிரித்துக்கொண்டு இருந்தான்.இறுதியில் வீரபத்திரன் தக்ஷனை தரையில் கிடத்தி அவன் நெஞ்சில் ஏறி அமர்ந்து கழுத்தை வாளால் வெட்டினார்.கழுத்து வெட்டுப்படாமல் போகவே சற்று நேரம் யோசித்து இறுதியில் யாகத்தில் உயிர் பலியிடும் முறையை பின்பற்றி தக்ஷனின் தலையை துண்டாக்கி விட்டார்.இதை கண்டு பூத பேய்,பிசாசு கணங்கள் வீரபத்திரனை நோக்கி சபாஷ்,சபாஷ் என்று புகழ்ந்தனர்.தக்ஷன் தரப்பினர் ஹா,ஹா இனி நாம் செத்தோம் என்றனர்.வீரபத்திரன் தக்ஷன் தலையை யாக குண்டத்தின் தக்ஷினாக்னியில் போட்டு விட்டார்.சிவகணங்கள் யாக சாலைக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து கைலாயம் நோக்கி சென்றனர்.
           ருத்ர கணங்களால் திரிசூலம், பட்டீசம்,வாள், கதை,பரிகாயுதம் முதலிய ஆயுதங்களால் அங்கங்கள் சின்னா பின்னமாக்கப்பட்டு தேவர்களும் ,ரிஷி முனிவர்களும் சபாநாயகர்களும் துன்புற்று வருந்தி பயந்து பிரம்மாவை சரண் புகுந்தனர்.பிரம்மா கூறினார்.----- " தேவர்களே மிகுந்த ஆற்றல் படைத்தவர்களுக்கு சிறிய  குற்றமிழைத்தாலும் அதன் முடிவு நன்மை தராது.நீங்களோ யாகத்தில் ருத்திர கடவுளுக்காக அவிர்பாகம் வைக்காமல் 
குற்றம் செய்து விட்டீர்கள்.சிவ நிந்தை வேறு செய்தீர்கள்.சீக்கிரம் கைலாய மலை சென்று அவர் திருவடிகளில் வீழ்ந்து மன்னிக்கும்படி கேளுங்கள்.சதி தேவியின் பிரிவால் மனம் வெறுத்து போயிருப்பார்.இருப்பினும் அவர் ஆஷு தோஷாக அதாவது சீக்கிரம் மகிழ்ந்து அருள் புரிபவராக சுபாவமுடயவராக இருக்கிறார்.அவரை சமாதானப்படுத்தவில்லை என்றால் இக்கணமே அனைத்து உலகங்களையும் எரித்து சாம்பலாக்கி விடுவார்.ருத்திர பகவானின் சிவ தத்துவத்தையும் ஆற்றலையும் யார் தான் அறிவார்?தேவர்களும் ரிஷி முனிவர்களும் இந்திரனும் அறிய மாட்டார்கள்.ஏன் நானும் அந்த இறைவனின் ஆற்றலை அறிய முடியாமல் இருக்கிறேன்.இதை கேட்டு தேவர்களும் ரிஷிமுனிவர்களும் பிரம்மாவுடன் சேர்ந்து கைலாயம் நோக்கி புறப்பட்டனர்.
           இமயமலை இயற்கை காட்சிகள் சொர்க்கபுரி போல இருந்தன.மலர்களின் வாசமுள்ள பூஞ்சோலைகள் அருவிகள்,நந்தா,அலக்நந்தா நதிகள் வனப்பு மிக்க பூ வனங்கள், கற்பக விருக்ஷங்கள் அடங்கிய அழகிய காடுகள் கண்களுக்கு இனிய அழகிய காட்சிகளை கண்டுகொண்டே தேவர்கள் சென்றனர்.குபேர புரியான அழகாபுரியை கடந்து சென்றனர்.
           அங்கு வனப்பு மிக்க ஒரு பிரதேசத்தில் ஓர் ஆலமரம் சோபித்துக்கொண்டு இருந்தது.அதன் அடியில் குசான விரிப்பில் சாந்தமே உருவமாக தக்ஷின திசை நோக்கி தக்ஷினாமூர்த்தியாக சிவபெருமான் அமர்ந்திருந்தார்.யட்ச ராட்சச தலைவன் குபேரன் அவருக்கு சேவை சாதித்துக்கொண்டிருக்க சித்தர்களும் சனந்தனாதி முனிவர்களும் அவரிடம் ஞானோபதேசம் பெற்றுக்கொண்டிருந்தனர்.ஜகத்தின் நாயகன் ஜகத்குரு மகேஸ்வரன் லோகத்தில் இருக்கும் ஜீவா ராசிகளின் அன்பராவார்.
            சந்தியா கால மேகம் போல சிவந்த மேனியுடையவர், இடது பாதத்தை வலது தொடையில் வைத்து திரு நீறு தரித்து, ருத்ராக்ஷை அணிந்து கரத்தில் ஞானமுத்திரை பிடித்து தவக்கோலம் பூண்டு நாரத முனிவருக்கு ஞானோபதேசம் செய்து கொண்டிருந்தார்.பிரம்ம தேவரும் மற்ற ரிஷிகளும் சிவபெருமானை தண்டனிட்டு வணங்கினர்.பிரம்மா சிவபெருமானை நோக்கி துதி செய்தார்.பகவானே தாங்களே சிவனாக,சக்தியாக உலகங்களை படைத்து,காத்து,ஊழிக்காலத்தில் அழித்து விடுகிறீர்கள்.வேதங்களை ரட்சிப்பதற்காக யாகம் செய்வதற்கு அருள் செய்து சுப கர்மங்களுக்கு அறங்காவலர்களாக பிறப்பெடுத்த பிராமணர்களை ரட்சிக்கிறீர்கள். நற் பலனை தந்து மோட்சமும் அளிக்கிறீர்கள்.தீயவர்களை தண்டித்து திருத்தி அவர்களையும் கடைத்தேற்றுகிறீர்கள். பெரியோர்கள் மீதும் மகான்கள் மீதும் கோபமும் பொறாமையும் கொண்டவர்கள் ஒரு காலமும் மேன்மை அடைய மாட்டார்கள்.அவர்கள் செய்த தீ வினையே அவர்களை கொன்று விடும்.ஆனால் உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் அத்தீயவர்கள் மீது இரக்கம் காட்டுவார்கள்.
            எங்கும் நிறைந்த பரம்பொருளே எல்லாம் அறிந்தவரே கர்ம மார்கத்தில்  சிக்குண்டு சொர்கத்தையே பெரிதாக நினைக்கும் தக்ஷன் போன்றவர்கள் மீது மனமிரங்கி அருள் புரியுங்கள்.இவர்கள் மோட்சத்தை பற்றி அறிய மாட்டார்கள்.தேவர்கள் சொஸ்தமாக வேண்டும்.தக்ஷன் மீண்டும் உயிர் பெற்று தங்களுக்கு தவறாது ருத்திர பாகம் அர்பணித்து யாகத்தை பூர்த்தி செய்யட்டும்.யாகம் செய்த பிராமணர்கள் தங்களை பூசிக்காமல் அறிவிழந்து விட்டனர்.பகன் மீண்டும் கண்களை பெறட்டும்.ப்ருகு வின் காயம் பட்ட முகம் மீசை தாடியுடன் நலமாகி விட வேண்டும்.பூஷா பற்களுடன் சேர்த்து மற்ற அங்க ஹீனமான தேவர்களும் நலமாகி விட வேண்டும்.பிரம்ம இவ்வாறு பிரார்த்தனை செய்துகொண்ட பின் மகாதேவர் கூறினார்.   (  தொடரும்)      

Sunday 19 February 2012

தக்ஷன் செய்த யாகம் தொடர்ச்சி 2

சசி தேவி இவ்வாறு தக்ஷன் செய்த யாக சாலை சென்றடைந்தாள். மந்திரோட்சாடனம் செய்யும் பிராமணர்களின் வேத கோஷங்கள் வானை பிளப்பது போல கேட்டன.அங்கு சதி தேவியை தாய் வழி சொந்தங்களும் சகோதரிகளும் அன்புடன் அரவனைத்துக்கொண்டனர்.தக்ஷனுக்கு பயந்து வேறு எவரும் சதி தேவியை வரவேற்கவில்லை.தாயின் சகோதரிகளும் ,தாயும்,உடன் பிறந்த சகோதரிகளும் பொன் இருக்கையில் அமரச்செய்து குசலம் விசாரித்து அன்புடன் பேசுவதை கேட்காமல் கோபம் மேலிட்டு அழுதாள். .
                                 



 யாக மண்டபம் சென்று அங்கு ருத்ரபகவானுக்கு அவிர் பாகம் அளிக்காததை பார்த்தாள். தந்தையோ இவளை கண்டும் காணாமல் இருந்தார்.
          சசி தேவி தந்தை தக்ஷனை நோக்கி கோபமாக பேசினாள்.-- சர்வ சக்திமானாகிய சிவபெருமானுக்கு சமமானவரே இல்லாதிருக்கும் போது அவரை விட பெரியவர் எவ்வுலகிலும் இல்லை.அவர் உயிர்களில் பரமாத்மாவாக இருக்கிறார்.அவருக்கு எவரும் பகைவரும் இல்லை ,பிரியமானவரும் இல்லை.அவ்வாறு இருந்தும் நாடி வந்த பக்தர்களுக்கு அன்பர்.அவரிடம் உங்களை தவிர யார் தான் விரோதம் கொள்வார்? தன்னுள் இருக்கும் இறைவனின் அருட்பெரும் ஜோதியை அறிந்து கொள்ளாதவர் தான் இந்த சடலம் என்று கூறப்படும் ஜட சரீரத்தை ஆத்மாவாக எண்ணுபவர்கள் பரம புருஷனை அல்லாது மகா புருஷனை நிந்திக்கிறார்கள்.அப்பெரியோனின் ஆற்றலே அவர்களை கூடிய விரைவில் வீழ்த்தி விடும்.
           சிவ என்ற இரண்டு அட்சரத்தை உச்சரித்த கணமே பாவங்கள் அழிந்து பட்டு போகும்.அந்த சங்கரர் மீது துவேசம் கொண்டு நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்.அவர் திருவடிகளை தொழுத பக்தர்கள் வேண்டிய வரங்களை பெற்று பெரிய பதவிகளை அடைந்திருக்கிறார்கள்.சிவபெருமானை நீங்கள் அமங்கலமாக நினைக்கிறீர்கள்.ஜடை விரித்து பூத பேய்களுடன் சிதை சாம்பல் பூசி திரிவதாக கூறுகிறீர்களே.அவர் திருவடிகளில் இருந்து விழுந்த மலர்களையும் திரு நீற்றையும் பிரம்மா,விஷ்ணு முதலான தேவர்களும் தலையிலும் நெற்றியிலும் சூடி அவர் அருளை பெறுகின்றனர்.
           அன்று நீங்கள் சிவ நிந்தை செய்து கொண்டு இருந்தபோது எவரும் சபையை விட்டு வெளியேறவில்லை.பெரியோர்களை அல்லது இறைவனை அவதூறாக சபையில் பேசும்போது சக்தி இருந்தால் அவர்களை தண்டிக்க வேண்டும்.அந்த துஷ்டன் நாவை இழுத்து அறுத்து விட வேண்டும்.அது இயலாது போனால் சபையை விட்டு வெளியேற வேண்டும்.உங்களை சேர்ந்த பிராமணர்களை எதுவும் செய்ய வில்லை.இதற்க்கெல்லாம் தண்டனை கிடைக்கத்தான் போகிறது.அறியாமல் நஞ்சை உண்டு விட்டால் அதை வாந்தி எடுத்து விட்டால் தான் க்ஷேமமாக இருக்க முடியும்.அது போல நான் தாட்சாயணி உங்கள் மகள் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை,
இந்த உயிரை மாய்த்துக்கொண்டு தந்தை என்ற உறவை அழித்துக்கொள்கிறேன் .என்று கூறிவிட்டு சதி தேவி தியானத்தில் அமர்ந்தாள். பத்மாசனத்தில் ஸ்திரமாக அமர்ந்து இமைகளை மூடி பிராணாயாமம் செய்தாள். பிராண அபான வாயுக்களை ஒன்றாக சேர்த்தாள். அதை நாபியில் நிலை நிறுத்தி உதான வாயுவை கிளப்பி அறிவுடன் சேர்த்து இதயத்திற்கு கொண்டு போனாள். இதயத்தில் இருந்த வாயுவை கழுத்து வழியாக புருவ மையத்தில் நிறுத்தினாள்.அதன் பின் அவள் வாயுவையும் அக்னியையும் சகல அங்கங்களில் தாரணை செய்தாள்.அதன் விளைவாக அவள் திருமேனியில் யோக அக்னி பற்றிக்கொண்டது.ஜகத்குரு சங்கர பகவானின் திருவடிகளை தியானம் செய்துகொண்டே எரிந்து போனாள்.தேவர்களும் ரிஷி முனிவர்களும்  சற்றும் எதிர்பாராத இந்த துக்க நிகழ்ச்சியை கண்டு ஹா ஹா என்று ஸ்தம்பித்து நின்றனர்.ஐயோ தக்ஷனால் அவமானப்பட்ட சதிதேவி இவ்வாறு உயிர் துறந்து விட்டாளே. மக்களை பெற்ற தக்ஷப்பிரஜாபதிக்கு இது தகுமா?தூயவளான சதிதேவி மரியாதைக்கு உரியவள்.தக்ஷன் தன் மகளை சாகப்போகும் முன் தடுத்திருக்க கூடாதா?இதெல்லாம் நல்லதற்கு இல்லை.இவ்வாறு கூறிக்கொண்டு இருக்கும் போதே சிவ கணங்கள் ஆத்திரம் பொறுக்காமல் ஆயுதங்கள் ஏவி அனைவரையும் தாக்க முற்ப்பட்டனர்.இதைக்கண்டு பிருகு முதலிய பிராமணர்கள் யக்ஞா விக்னங்களை அழிப்பதற்கு மந்திரோச்சாடனம் செய்து தக்ஷாக்னியில் ஆஹூதி இட்டனர்.அதன் விளைவாக யாகவிக்னங்களை,தீயசக்திகளை அழிப்பதற்கு யக்ஞா குண்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான ரிபு என்றழைக்கப்படும் தேவர்கள் தோன்றினர்.பிரம்ம தேஜசுடன் தேவர்கள் கொள்ளிக்கட்டையால் பிரமத பூத கணங்களை தாக்கி விரட்டி அடித்தனர்.
           சதிதேவி எரிந்து விட்டதையும் பூத கணங்கள் விரட்டியடிக்கப்பட்டத்தையும் அறிந்த மகாதேவர் ஆத்திரமடைந்து வெகுண்டெழுந்தார். உக்கிரமாக தோன்றியவர் தன் ஜடா முடியிலிருந்து ஒரு ஜடையை பிடுங்கினார்.அது மின்னல் போல எரியும் நெருப்பு போல பிரகாசித்துக்கொண்டு இருந்தது.வெறிச்சிரிப்பு சிரித்து அதை கீழே போட்டார்.அதிலிருந்து வானகத்தை தொடுமளவு பெரிய பயங்கர ஆகிருதி படைத்த ஒருவன் தோன்றினான்.மேகம் போல கருத்த நிறம் கொண்டு ஆயுதங்களுடன் ஆயிரம் கைகள் படைத்திருந்தான். சூரியனை போல மூன்று கண்கள் பிரகாசித்தன.அக்னி ஜுவாலைகள் ஜடாமுடி தரித்து மண்டை ஓடு மாலை அணிந்திருந்தான்.அவன் சிவபெருமானை நோக்கி கரங்கள் கூப்பி பகவானே நான் என்ன செய்ய வேண்டும், ஆணையிடுங்கள் என்றான்.சிவபெருமான் கூறினார்- "வீரபத்திரன் என்ற பெயர் கொண்டவன் நீ.என் ருத்திர அம்சத்தில் தோன்றியவன்.இப்போதே நீ சென்று தக்ஷனையும் அவனை சார்ந்தவர்களையும் யாகத்தையும் அழித்துவிட்டு வா.நீ என் பூத,பிரமத கணங்களின் தலைவனாக இருப்பாய் என்று ஆணையிட்டார்.வீரபத்திரன் சிவபெருமானை வலம் வந்து வணங்கி புறப்பட்டான்.சத்ருக்களின் தாக்குதலை முறியடிக்க சக்தி பெற்றிருப்பதாக உணர்ந்தான்.பயங்கர சிம்ம கர்ஜனை செய்துகொண்டு திரிசூலம் எடுத்து தக்ஷ யாகமண்டபத்தை நோக்கி விரைந்தான்.அவன் திரிசூலம் அகில உலகையும் சம்ஹாரம் செய்துவிடும் போல் தோன்றியது.பூத பிரமத கணங்கள் அவன் பின்னால ஓடினர்.வீரபத்திரன் கால் சலங்கை ஜல் ஜல் என பயங்கரமாக ஒலித்தது.
           யாகத்தில் அமர்ந்திருந்த ரித்விஜர்கள்,சதஸ்யர்களும் மற்ற பிராமணர்களும் வடதிசையில் இருள்கவிந்து புகைமூட்டம் போல வருவதை பார்த்து பயந்தனர்.இது என்ன புயல் போல தூசி எழும்புகிறது?கொள்ளையர்கள் வருகிறார்களா?அப்படி இருக்காது.ஏனெனில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும் அரசன் பிராசீன பர்ஹீ அரசாண்டு கொண்டிருக்கிறான் என்றார்கள்.தக்ஷனின் மனைவியும் மகள்களும் மற்ற பெண்களும் அஞ்சி நடுங்கி கூறினர். இது நிச்சயம் சதிதேவியை அனைவர் முன் அவமானப்படுத்திய தக்ஷன் செய்த கர்மவினைப்பயன் தான்.(தொடரும்)