Sunday 4 March 2012

தக்ஷன் செய்த யாகம் தொடர்ச்சி 4

பிரம்மதேவரே விஷ்ணு பகவானின் அஞ்ஞான மாயையால் அறிவு மயக்கம் ஏற்பட்டு குற்றம் செய்தவர்களை பற்றி நான் பேசுவதுமில்லை.நினைத்துக்கொண்டிருப்பதுமில்லை.அவர்கள் குற்றத்தை உணர்வதற்காக சிறிய தண்டனை கொடுத்தேன்.அஸ்வினி குமாரர்கள் அருள்பெற்று தேவர்களும் மற்ற ப்ருகு முதலியவர்களும் முன்பு போல் நலமாகட்டும்.தக்ஷன் ஆட்டுத்தலை பெற்று உயிருடன் எழட்டும்.சிவபெருமான் இவ்வாறு அருளுரை கூறியதும் அனைவரும் சிவபெருமானை அழைத்துக்கொண்டு யாகம் செய்த இடத்திற்கு சென்றனர்.சிவபெருமான் கூறியது போல யாக பலி கொடுத்த ஆட்டுத்தலையை தக்ஷன் கழுத்தில் பொருத்தினார்கள்.அக்கணமே தக்ஷன் ஆட்டுத்தலையுடன் உயிர் பெற்று எழுந்தான்.சிவபெருமானுக்கு செய்த துரோகத்தை எண்ணி கண்ணீர் வடித்தான்.சதி தேவியை நினைத்து வருந்தினான்.அவனால் பேச முடிய வில்லை.சிவபெருமானை அருளால் பக்தி பெருக்கெடுத்து அன்புடன் தொழுதான்.---நான் குற்றம் செய்து விட்டேன்.பிரபுவே தாங்களே பிரம்மாவாக இருந்து அறத்தை காப்பாற்றுவதற்காக வேத வித்தை, தவம்,விரதம் ஆகியவற்றை அனுஷ்டிக்கும் பிராமணர்களை படைத்தீர்கள்.ஸ்ரீ ஹரிக்கும் தங்களுக்கும் அவர்கள் மீது தனிப்பட்ட முறையில் கருணை இருக்கிறது.மாடு மேய்ப்பவன் பசுக்களை சரியான பாதையில் கொண்டு போவது போல எங்களை நேர்படுத்தி நல் வழி காட்டி விட்டீர்கள்.நான் தங்களை தூற்றி விட்டு நரகத்திற்கு போக இருந்தேன்.தாங்கள் கருணை காட்டி எம்மை காப்பாற்றி விட்டீர்கள்.தங்களை மகிழ்விக்க என்னிடம் ஒரு நல்ல குணம் கூட இல்லை.ஆதலால் எம்மை காத்தருள வேண்டும்.என்று தக்ஷன் வேண்டிக்கொண்டான்.
          ஆஷுதோஷ சங்கர பகவானிடம் இவ்வாறு மன்னிப்பு கேட்டுக்கொண்டதும் பிரம்மா முதலிய தேவர்களும், உபாத்யாயர்களும், ஆச்சார்யர்களும் துணையாக இருக்க தக்ஷன் யாகத்தை மீண்டும் தொடங்கினான்.பூத பேய்களால் வந்த அசுப தோஷத்தை சாந்தி செய்வதற்கு விஷ்ணு பகவானை நினைத்து பாயச புரோடாசத்தை ஹோமம் செய்தனர்.தக்ஷன் விஷ்ணு பகவானை தியானம் செய்தான்.அக்கணமே பகவான் கருடன் மீதேறி வந்து 10  திசைகளையும் பிரகாசித்துக்கொண்டு எதிரில் தரிசனம் தந்தார்.அனைவரும் விஷ்ணு பகவானை பூஜித்தனர்.தனித்தனியாக துதி செய்தனர்.
           விஷ்ணு பகவான் தக்ஷனை நோக்கி கூறினார்.----- "தக்ஷ பிரஜாபதி!ஜகத்தின் காரண கர்த்தாவாக யாமே பிரம்மாவாக, சிவபெருமானாக இருக்கிறோம்.தூய பர பிரம்ம சொரூபத்தை சான்றோர்கள் பிரம்மா,விஷ்ணு,சிவன் என்று பிரித்து ஆராதிக்கும் முறையை எளிமையாக்கி உபதேசித்துள்ளார்கள்.ஒரே பிரம்ம சொரூபத்தில் ஏற்றத்தாழ்வு இருக்க வாய்ப்பு இல்லை.மும் மூர்த்திகளில் பேதம் காண்பவர் சாந்தி யடைய மாட்டார்கள்.நானே பிரம்மாவாக இருந்து படைக்கிறேன்,விஷ்ணுவாக இவ்வுலகை ரட்சிக்கிறேன்,சிவசொரூபம் எடுத்து உலகங்களை அழிக்கிறேன்"
விஷ்ணு பகவான் இவ்வாறு கூறியதும் தக்ஷன் தெளிவடைந்தான்.தான் செய்த யாகத்தில் பிரம்மா,விஷ்ணு,ருத்திரன் மூவருக்கும் அவிர்பாகம் கொடுத்து ஹோமம் செய்து யாகத்தை பூர்த்தி செய்தான்.
          இந்தக்கதையை படித்தவர்களுக்கு நீண்ட ஆயுள் பெற்று உலகில் பெயரும் புகழும் அடைவார்கள் என்பது புராண வாக்கு.

Sunday 26 February 2012

தக்ஷன் செய்த யாகம் தொடர்ச்சி 3

       

                                 


 சம்ஹார மூர்த்தி ருத்திர பகவான் ஊழிக்காலத்தில் சடைகள் விரித்து த்வஜச்தம்பங்கள் போலிருக்கும் நீட்டிய கரங்களில் ஆயுதங்கள் தரித்து உக்கிர தாண்டவ நடனம் புரிந்து கொண்டு சூலாயுதத்தை சுழற்றும் போது திசை காக்கும் கஜங்கள் பயந்து ஓடுகின்றன.மின்னல் இடி போல பயங்கர சிரிப்பொலி திசைகளில் மோதி அவற்றை பிளந்து விடுவது போல அதிர்கின்றன.அதே சமயம்
அவரது தேஜசை எவராலும் தாங்க முடியாது.புருவம் நெளிந்து தாடை பற்கள் பட்டு நட்சத்திர தாரகைகளில் தீ பொறி கிளம்பும்.சங்கர பகவானை கோபப்படச் செய்து எவரும் நலம் அடைய மாட்டார்கள்.சாக்ஷாத் பிரம்மாவாக இருந்தாலும் என்ன? அவர்கள் நாசப்பட்டு போவார்கள்.
          அங்கு யாக மண்டபத்தில் அமர்ந்திருந்து யாகம் செய்து கொண்டிருந்தவர்கள் பயந்து ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு இருந்தனர்.ஓடி வந்த ருத்ர சேனைகள் யாக மண்டபத்தை சுற்றி வளைத்துக்கொண்டனர்.பூதகணங்கள் சில குட்டையாகவும் பழுப்பு மஞ்சள் நிறம் கொண்டவர்களாகவும் முதலை முகம் படைத்தவர்களாக பயங்கரமாக இருந்தனர்.வந்த க்ஷணத்தில் கொடிமரத்தை தகர்த்தெறிந்தனர்.மேற்கில் உள்ள யாக சாலையின் பெண்கள் தங்குமிடத்தை உடைத்தனர்.எதிரில் இருக்கும் சபா மண்டபத்தையும் துவம்சம் செய்தனர்.யாக சாலையில் இருக்கும் பாக சாலையை (சமையல் சாலையை ) நாசப்படுத்தினர்.அக்னித்திரசாலையை உடைத்து விட்டு யாக குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைத்தனர்.முனிவர்களின் மனைவிகளை பயமுறுத்தினர்.சிங்கம் இரையை பிடிப்பது போல வீரபத்திரன் தகஷனை பிடித்துக்கொண்டார்.மணிமான் என்ற சிவா கணம் ப்ருகுவையும் சண்டீசர் பூசாவையும் நந்தீஸ்வரர் பகனையும் பிடித்துக்கொண்டனர்.
           பூத கணங்கள் யாக சாலையின் இருப்பிடங்களையும் பொருள்களையும் அடித்து நொறுக்கி நாசம் செய்து விட்டு ரித் விஜர்களையும்,சபா நாயகரையும், தேவர்களையும் அடித்து துன்புறுத்தினார்கள்.அனைவரும் ஓடி ஒளிந்தனர்.கரண்டியுடன் நின்றிருந்த ப்ருகுவை பிடித்த வீரபத்திரன் தாடியையும் மீசையையும் பிடுங்கி எடுத்தார்.இந்த ப்ருகு தான் அன்று தக்ஷன் சிவபெருமானை ஏசிக்கொண்டு இருந்த போது மீசையை முறுக்கினான்.கண்களால் பார்த்து ஏசுகிறவனை தூண்டிவிட்ட பகனை கீழே கிடத்தி கண்களை பிடுங்கினார்.  பூஷா என்பவனின் பற்களை தட்டி உடைத்தார்.இந்த பூஷா தான் தக்ஷன் சிவபெருமானை அவமானப்படுத்தி பேசும்போது சிரித்துக்கொண்டு இருந்தான்.இறுதியில் வீரபத்திரன் தக்ஷனை தரையில் கிடத்தி அவன் நெஞ்சில் ஏறி அமர்ந்து கழுத்தை வாளால் வெட்டினார்.கழுத்து வெட்டுப்படாமல் போகவே சற்று நேரம் யோசித்து இறுதியில் யாகத்தில் உயிர் பலியிடும் முறையை பின்பற்றி தக்ஷனின் தலையை துண்டாக்கி விட்டார்.இதை கண்டு பூத பேய்,பிசாசு கணங்கள் வீரபத்திரனை நோக்கி சபாஷ்,சபாஷ் என்று புகழ்ந்தனர்.தக்ஷன் தரப்பினர் ஹா,ஹா இனி நாம் செத்தோம் என்றனர்.வீரபத்திரன் தக்ஷன் தலையை யாக குண்டத்தின் தக்ஷினாக்னியில் போட்டு விட்டார்.சிவகணங்கள் யாக சாலைக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து கைலாயம் நோக்கி சென்றனர்.
           ருத்ர கணங்களால் திரிசூலம், பட்டீசம்,வாள், கதை,பரிகாயுதம் முதலிய ஆயுதங்களால் அங்கங்கள் சின்னா பின்னமாக்கப்பட்டு தேவர்களும் ,ரிஷி முனிவர்களும் சபாநாயகர்களும் துன்புற்று வருந்தி பயந்து பிரம்மாவை சரண் புகுந்தனர்.பிரம்மா கூறினார்.----- " தேவர்களே மிகுந்த ஆற்றல் படைத்தவர்களுக்கு சிறிய  குற்றமிழைத்தாலும் அதன் முடிவு நன்மை தராது.நீங்களோ யாகத்தில் ருத்திர கடவுளுக்காக அவிர்பாகம் வைக்காமல் 
குற்றம் செய்து விட்டீர்கள்.சிவ நிந்தை வேறு செய்தீர்கள்.சீக்கிரம் கைலாய மலை சென்று அவர் திருவடிகளில் வீழ்ந்து மன்னிக்கும்படி கேளுங்கள்.சதி தேவியின் பிரிவால் மனம் வெறுத்து போயிருப்பார்.இருப்பினும் அவர் ஆஷு தோஷாக அதாவது சீக்கிரம் மகிழ்ந்து அருள் புரிபவராக சுபாவமுடயவராக இருக்கிறார்.அவரை சமாதானப்படுத்தவில்லை என்றால் இக்கணமே அனைத்து உலகங்களையும் எரித்து சாம்பலாக்கி விடுவார்.ருத்திர பகவானின் சிவ தத்துவத்தையும் ஆற்றலையும் யார் தான் அறிவார்?தேவர்களும் ரிஷி முனிவர்களும் இந்திரனும் அறிய மாட்டார்கள்.ஏன் நானும் அந்த இறைவனின் ஆற்றலை அறிய முடியாமல் இருக்கிறேன்.இதை கேட்டு தேவர்களும் ரிஷிமுனிவர்களும் பிரம்மாவுடன் சேர்ந்து கைலாயம் நோக்கி புறப்பட்டனர்.
           இமயமலை இயற்கை காட்சிகள் சொர்க்கபுரி போல இருந்தன.மலர்களின் வாசமுள்ள பூஞ்சோலைகள் அருவிகள்,நந்தா,அலக்நந்தா நதிகள் வனப்பு மிக்க பூ வனங்கள், கற்பக விருக்ஷங்கள் அடங்கிய அழகிய காடுகள் கண்களுக்கு இனிய அழகிய காட்சிகளை கண்டுகொண்டே தேவர்கள் சென்றனர்.குபேர புரியான அழகாபுரியை கடந்து சென்றனர்.
           அங்கு வனப்பு மிக்க ஒரு பிரதேசத்தில் ஓர் ஆலமரம் சோபித்துக்கொண்டு இருந்தது.அதன் அடியில் குசான விரிப்பில் சாந்தமே உருவமாக தக்ஷின திசை நோக்கி தக்ஷினாமூர்த்தியாக சிவபெருமான் அமர்ந்திருந்தார்.யட்ச ராட்சச தலைவன் குபேரன் அவருக்கு சேவை சாதித்துக்கொண்டிருக்க சித்தர்களும் சனந்தனாதி முனிவர்களும் அவரிடம் ஞானோபதேசம் பெற்றுக்கொண்டிருந்தனர்.ஜகத்தின் நாயகன் ஜகத்குரு மகேஸ்வரன் லோகத்தில் இருக்கும் ஜீவா ராசிகளின் அன்பராவார்.
            சந்தியா கால மேகம் போல சிவந்த மேனியுடையவர், இடது பாதத்தை வலது தொடையில் வைத்து திரு நீறு தரித்து, ருத்ராக்ஷை அணிந்து கரத்தில் ஞானமுத்திரை பிடித்து தவக்கோலம் பூண்டு நாரத முனிவருக்கு ஞானோபதேசம் செய்து கொண்டிருந்தார்.பிரம்ம தேவரும் மற்ற ரிஷிகளும் சிவபெருமானை தண்டனிட்டு வணங்கினர்.பிரம்மா சிவபெருமானை நோக்கி துதி செய்தார்.பகவானே தாங்களே சிவனாக,சக்தியாக உலகங்களை படைத்து,காத்து,ஊழிக்காலத்தில் அழித்து விடுகிறீர்கள்.வேதங்களை ரட்சிப்பதற்காக யாகம் செய்வதற்கு அருள் செய்து சுப கர்மங்களுக்கு அறங்காவலர்களாக பிறப்பெடுத்த பிராமணர்களை ரட்சிக்கிறீர்கள். நற் பலனை தந்து மோட்சமும் அளிக்கிறீர்கள்.தீயவர்களை தண்டித்து திருத்தி அவர்களையும் கடைத்தேற்றுகிறீர்கள். பெரியோர்கள் மீதும் மகான்கள் மீதும் கோபமும் பொறாமையும் கொண்டவர்கள் ஒரு காலமும் மேன்மை அடைய மாட்டார்கள்.அவர்கள் செய்த தீ வினையே அவர்களை கொன்று விடும்.ஆனால் உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் அத்தீயவர்கள் மீது இரக்கம் காட்டுவார்கள்.
            எங்கும் நிறைந்த பரம்பொருளே எல்லாம் அறிந்தவரே கர்ம மார்கத்தில்  சிக்குண்டு சொர்கத்தையே பெரிதாக நினைக்கும் தக்ஷன் போன்றவர்கள் மீது மனமிரங்கி அருள் புரியுங்கள்.இவர்கள் மோட்சத்தை பற்றி அறிய மாட்டார்கள்.தேவர்கள் சொஸ்தமாக வேண்டும்.தக்ஷன் மீண்டும் உயிர் பெற்று தங்களுக்கு தவறாது ருத்திர பாகம் அர்பணித்து யாகத்தை பூர்த்தி செய்யட்டும்.யாகம் செய்த பிராமணர்கள் தங்களை பூசிக்காமல் அறிவிழந்து விட்டனர்.பகன் மீண்டும் கண்களை பெறட்டும்.ப்ருகு வின் காயம் பட்ட முகம் மீசை தாடியுடன் நலமாகி விட வேண்டும்.பூஷா பற்களுடன் சேர்த்து மற்ற அங்க ஹீனமான தேவர்களும் நலமாகி விட வேண்டும்.பிரம்ம இவ்வாறு பிரார்த்தனை செய்துகொண்ட பின் மகாதேவர் கூறினார்.   (  தொடரும்)      

Sunday 19 February 2012

தக்ஷன் செய்த யாகம் தொடர்ச்சி 2

சசி தேவி இவ்வாறு தக்ஷன் செய்த யாக சாலை சென்றடைந்தாள். மந்திரோட்சாடனம் செய்யும் பிராமணர்களின் வேத கோஷங்கள் வானை பிளப்பது போல கேட்டன.அங்கு சதி தேவியை தாய் வழி சொந்தங்களும் சகோதரிகளும் அன்புடன் அரவனைத்துக்கொண்டனர்.தக்ஷனுக்கு பயந்து வேறு எவரும் சதி தேவியை வரவேற்கவில்லை.தாயின் சகோதரிகளும் ,தாயும்,உடன் பிறந்த சகோதரிகளும் பொன் இருக்கையில் அமரச்செய்து குசலம் விசாரித்து அன்புடன் பேசுவதை கேட்காமல் கோபம் மேலிட்டு அழுதாள். .
                                 



 யாக மண்டபம் சென்று அங்கு ருத்ரபகவானுக்கு அவிர் பாகம் அளிக்காததை பார்த்தாள். தந்தையோ இவளை கண்டும் காணாமல் இருந்தார்.
          சசி தேவி தந்தை தக்ஷனை நோக்கி கோபமாக பேசினாள்.-- சர்வ சக்திமானாகிய சிவபெருமானுக்கு சமமானவரே இல்லாதிருக்கும் போது அவரை விட பெரியவர் எவ்வுலகிலும் இல்லை.அவர் உயிர்களில் பரமாத்மாவாக இருக்கிறார்.அவருக்கு எவரும் பகைவரும் இல்லை ,பிரியமானவரும் இல்லை.அவ்வாறு இருந்தும் நாடி வந்த பக்தர்களுக்கு அன்பர்.அவரிடம் உங்களை தவிர யார் தான் விரோதம் கொள்வார்? தன்னுள் இருக்கும் இறைவனின் அருட்பெரும் ஜோதியை அறிந்து கொள்ளாதவர் தான் இந்த சடலம் என்று கூறப்படும் ஜட சரீரத்தை ஆத்மாவாக எண்ணுபவர்கள் பரம புருஷனை அல்லாது மகா புருஷனை நிந்திக்கிறார்கள்.அப்பெரியோனின் ஆற்றலே அவர்களை கூடிய விரைவில் வீழ்த்தி விடும்.
           சிவ என்ற இரண்டு அட்சரத்தை உச்சரித்த கணமே பாவங்கள் அழிந்து பட்டு போகும்.அந்த சங்கரர் மீது துவேசம் கொண்டு நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்.அவர் திருவடிகளை தொழுத பக்தர்கள் வேண்டிய வரங்களை பெற்று பெரிய பதவிகளை அடைந்திருக்கிறார்கள்.சிவபெருமானை நீங்கள் அமங்கலமாக நினைக்கிறீர்கள்.ஜடை விரித்து பூத பேய்களுடன் சிதை சாம்பல் பூசி திரிவதாக கூறுகிறீர்களே.அவர் திருவடிகளில் இருந்து விழுந்த மலர்களையும் திரு நீற்றையும் பிரம்மா,விஷ்ணு முதலான தேவர்களும் தலையிலும் நெற்றியிலும் சூடி அவர் அருளை பெறுகின்றனர்.
           அன்று நீங்கள் சிவ நிந்தை செய்து கொண்டு இருந்தபோது எவரும் சபையை விட்டு வெளியேறவில்லை.பெரியோர்களை அல்லது இறைவனை அவதூறாக சபையில் பேசும்போது சக்தி இருந்தால் அவர்களை தண்டிக்க வேண்டும்.அந்த துஷ்டன் நாவை இழுத்து அறுத்து விட வேண்டும்.அது இயலாது போனால் சபையை விட்டு வெளியேற வேண்டும்.உங்களை சேர்ந்த பிராமணர்களை எதுவும் செய்ய வில்லை.இதற்க்கெல்லாம் தண்டனை கிடைக்கத்தான் போகிறது.அறியாமல் நஞ்சை உண்டு விட்டால் அதை வாந்தி எடுத்து விட்டால் தான் க்ஷேமமாக இருக்க முடியும்.அது போல நான் தாட்சாயணி உங்கள் மகள் என்று சொல்லிக்கொள்ள விரும்பவில்லை,
இந்த உயிரை மாய்த்துக்கொண்டு தந்தை என்ற உறவை அழித்துக்கொள்கிறேன் .என்று கூறிவிட்டு சதி தேவி தியானத்தில் அமர்ந்தாள். பத்மாசனத்தில் ஸ்திரமாக அமர்ந்து இமைகளை மூடி பிராணாயாமம் செய்தாள். பிராண அபான வாயுக்களை ஒன்றாக சேர்த்தாள். அதை நாபியில் நிலை நிறுத்தி உதான வாயுவை கிளப்பி அறிவுடன் சேர்த்து இதயத்திற்கு கொண்டு போனாள். இதயத்தில் இருந்த வாயுவை கழுத்து வழியாக புருவ மையத்தில் நிறுத்தினாள்.அதன் பின் அவள் வாயுவையும் அக்னியையும் சகல அங்கங்களில் தாரணை செய்தாள்.அதன் விளைவாக அவள் திருமேனியில் யோக அக்னி பற்றிக்கொண்டது.ஜகத்குரு சங்கர பகவானின் திருவடிகளை தியானம் செய்துகொண்டே எரிந்து போனாள்.தேவர்களும் ரிஷி முனிவர்களும்  சற்றும் எதிர்பாராத இந்த துக்க நிகழ்ச்சியை கண்டு ஹா ஹா என்று ஸ்தம்பித்து நின்றனர்.ஐயோ தக்ஷனால் அவமானப்பட்ட சதிதேவி இவ்வாறு உயிர் துறந்து விட்டாளே. மக்களை பெற்ற தக்ஷப்பிரஜாபதிக்கு இது தகுமா?தூயவளான சதிதேவி மரியாதைக்கு உரியவள்.தக்ஷன் தன் மகளை சாகப்போகும் முன் தடுத்திருக்க கூடாதா?இதெல்லாம் நல்லதற்கு இல்லை.இவ்வாறு கூறிக்கொண்டு இருக்கும் போதே சிவ கணங்கள் ஆத்திரம் பொறுக்காமல் ஆயுதங்கள் ஏவி அனைவரையும் தாக்க முற்ப்பட்டனர்.இதைக்கண்டு பிருகு முதலிய பிராமணர்கள் யக்ஞா விக்னங்களை அழிப்பதற்கு மந்திரோச்சாடனம் செய்து தக்ஷாக்னியில் ஆஹூதி இட்டனர்.அதன் விளைவாக யாகவிக்னங்களை,தீயசக்திகளை அழிப்பதற்கு யக்ஞா குண்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான ரிபு என்றழைக்கப்படும் தேவர்கள் தோன்றினர்.பிரம்ம தேஜசுடன் தேவர்கள் கொள்ளிக்கட்டையால் பிரமத பூத கணங்களை தாக்கி விரட்டி அடித்தனர்.
           சதிதேவி எரிந்து விட்டதையும் பூத கணங்கள் விரட்டியடிக்கப்பட்டத்தையும் அறிந்த மகாதேவர் ஆத்திரமடைந்து வெகுண்டெழுந்தார். உக்கிரமாக தோன்றியவர் தன் ஜடா முடியிலிருந்து ஒரு ஜடையை பிடுங்கினார்.அது மின்னல் போல எரியும் நெருப்பு போல பிரகாசித்துக்கொண்டு இருந்தது.வெறிச்சிரிப்பு சிரித்து அதை கீழே போட்டார்.அதிலிருந்து வானகத்தை தொடுமளவு பெரிய பயங்கர ஆகிருதி படைத்த ஒருவன் தோன்றினான்.மேகம் போல கருத்த நிறம் கொண்டு ஆயுதங்களுடன் ஆயிரம் கைகள் படைத்திருந்தான். சூரியனை போல மூன்று கண்கள் பிரகாசித்தன.அக்னி ஜுவாலைகள் ஜடாமுடி தரித்து மண்டை ஓடு மாலை அணிந்திருந்தான்.அவன் சிவபெருமானை நோக்கி கரங்கள் கூப்பி பகவானே நான் என்ன செய்ய வேண்டும், ஆணையிடுங்கள் என்றான்.சிவபெருமான் கூறினார்- "வீரபத்திரன் என்ற பெயர் கொண்டவன் நீ.என் ருத்திர அம்சத்தில் தோன்றியவன்.இப்போதே நீ சென்று தக்ஷனையும் அவனை சார்ந்தவர்களையும் யாகத்தையும் அழித்துவிட்டு வா.நீ என் பூத,பிரமத கணங்களின் தலைவனாக இருப்பாய் என்று ஆணையிட்டார்.வீரபத்திரன் சிவபெருமானை வலம் வந்து வணங்கி புறப்பட்டான்.சத்ருக்களின் தாக்குதலை முறியடிக்க சக்தி பெற்றிருப்பதாக உணர்ந்தான்.பயங்கர சிம்ம கர்ஜனை செய்துகொண்டு திரிசூலம் எடுத்து தக்ஷ யாகமண்டபத்தை நோக்கி விரைந்தான்.அவன் திரிசூலம் அகில உலகையும் சம்ஹாரம் செய்துவிடும் போல் தோன்றியது.பூத பிரமத கணங்கள் அவன் பின்னால ஓடினர்.வீரபத்திரன் கால் சலங்கை ஜல் ஜல் என பயங்கரமாக ஒலித்தது.
           யாகத்தில் அமர்ந்திருந்த ரித்விஜர்கள்,சதஸ்யர்களும் மற்ற பிராமணர்களும் வடதிசையில் இருள்கவிந்து புகைமூட்டம் போல வருவதை பார்த்து பயந்தனர்.இது என்ன புயல் போல தூசி எழும்புகிறது?கொள்ளையர்கள் வருகிறார்களா?அப்படி இருக்காது.ஏனெனில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கும் அரசன் பிராசீன பர்ஹீ அரசாண்டு கொண்டிருக்கிறான் என்றார்கள்.தக்ஷனின் மனைவியும் மகள்களும் மற்ற பெண்களும் அஞ்சி நடுங்கி கூறினர். இது நிச்சயம் சதிதேவியை அனைவர் முன் அவமானப்படுத்திய தக்ஷன் செய்த கர்மவினைப்பயன் தான்.(தொடரும்)

Friday 17 February 2012

தக்ஷன் செய்த யாகம் தொடர்ச்சி

தந்தை தக்ஷன் செய்த அவமரியாதையால் தன் மணாளன் மனம் வெறுத்துப்போய் இருப்பதை அறிந்தும் பழைய பகையை விட்டொழிப்பதற்கு சமாதானமாக பேசினாள். பிரபுவே தாங்கள் மாமனார் தக்ஷபிரஜாபதி சிறப்பு வாய்ந்த மாபெரும் யாகம் செய்கிறார்.தேவர்கள் அனைவரும் யாகத்தை காண அங்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.என் சகோதரிகள் அனைவரும் தம் கணவன்மார்களோடு வருகை தந்திருப்பார்கள்.என் தாய் தந்தையரையும், சகோதரிகளையும் காண வேண்டுமென ஆவல் கொண்டுள்ளேன்.நான் அங்கு சென்றால் என்னை அன்போடு உபசரித்து பட்டாடை ஆபரணங்களையும் வேறு பல வெகுமதிகளையும் தந்து கொண்டாடுவார்கள்.என் தாயின் பாசமுள்ள சகோதரிகள் என்னைக்கண்டால் மிகவும் சந்தோசம் அடைவார்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு என் தந்தை நடத்தும் யாக வைபவத்தை காணும் பாக்கியம் கிட்டும்.பிறப்பற்ற பரம்பொருளே, உலகை சிருஷ்டித்த இறைவா, முக்குணம் படைத்த மூவுலகம் எல்லாம் உங்கள் சகதிக்குள் அடக்கம்.இந்த தத்துவமெல்லாம் அறியாத பெண் நான்.அந்த பெண் இயல்பு என்னை பேச வைக்கிறது.நீலகண்ட நாயகரே இதோபாருங்கள்.என் தந்தை தக்ஷ பிரஜாபதியுடன் எந்த சம்பந்தமும் இல்லாத பெண்கள் தன்னை நன்கு அலங்கரித்துக்கொண்டு தத்தம் கணவன் மார்களோடு சந்தோசம் போங்க கூட்டம் கூட்டமாக போகிறார்கள்.பெருமானே தாய்,தந்தை,கணவர்,குரு,நண்பர்கள் ஆகியோர் நடத்தும் விழாக்களுக்கு அழைக்காமல் போனால் அதில் தவறு என்ன இருக்கிறது?தன்மானத்திற்கு குறைவு ஏதும் ஏற்படாது.பகவானே, கருணைக்கடலே என் விருப்பத்தை தாங்கள் நிறைவேற்றி வைக்கவேண்டும்.நீங்களும் என்னுடன் வர வேண்டும்.நீங்கள் பரம ஞானியாக இருந்தும் எனக்காக தன்னில் ஒரு பாகத்தை தந்து என் மீது அருள் புரிந்திருக்கிறீர்கள்.
            சசிதேவி இவ்வாறு சிவபெருமானை நோக்கி இவ்வாறு கேட்டுக்கொண்டதும் சிவபெருமான் தக்ஷனை பற்றி நன்கு அறிந்தவர். முன்பு சபிக்கப்பட்ட அவச்சொற்க்களை நினைத்து கூறலானார்.
பிரியே நீ சொன்னது போல அழைப்பு இல்லாமல் பந்துக்கள் விழாக்களில் பங்கேற்பது ஒன்றும் குற்றம் இல்லை தான்.அது பந்துக்களின் மனதில் பகையும் துவேசமும் இல்லாதிருந்தால் தான் அப்படி இருக்கவேண்டும்.ஆனால் ஆணவம் மிகுந்த தக்ஷன் என் மீது தீராத கோபமும் துவேசமும் கொண்டுள்ளான்.கல்வி,தவம்,செல்வம்,திடமான தேகம்,இளமை,உயர்குடிப்பிறப்பு இவையெல்லாம் நல்லவர்களுக்கு நற்குணங்களாக   இருப்பவை.ஆனால் பண்பற்ற நீசர்களுக்கு மேற்சொன்ன குணங்களே தீய குனங்கலாகிவிடுகின்றன.ஏனென்றால் அவற்றால் அவர்கள் ஆணவம் பெருகுகிறது.நல்லறிவும் நாசமடைகிறது.இதன் காரணமாகவே உயர்ந்த மனிதர்களின் நல்ல குணங்களையும் ஆற்றல்களையும் மதிக்கமாட்டார்கள்.வீட்டிற்க்கு வந்த பந்துக்களை அலட்சியப்படுத்தி அல்லது கோபப்பார்வையில் நோக்கி அவமானப்படுத்தும் சொந்த உறவினர்களிடம் போகாமல் இருப்பதே நல்லது.
           ஆயுதங்கள் கொண்டு பகைவர்களால் அடிபட்டாலும் வலி நீங்கிய பின் துக்கம் வரும்.ஆனால் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேட்டு காயம்பட்ட மனதுடன் இருந்தால் நெடுநாள் வரை தூக்கம் வராது.தேவ தக்ஷன் தான் பெற்ற மற்ற பெண்களை விட உன் மீது அதிக பாசமும் அன்பும் வைத்திருப்பவன் என்று நான் அறிவேன்.இருந்தாலும் நீ என்னை சார்ந்திருந்தால் உன்னை அன்புடன் வரவேற்க மாட்டான்.நாம் ஏன் சமாதானமாக போகக்கூடாது என்று நீ கேட்பாய்.அதற்க்கு வாய்ப்பே இல்லை.ஏனெனில் உன் தந்தை மனதில் துவேசம் என்ற தீ எரிந்து கொண்டு இருக்கிறது என்பதை நான் அறிவேன்.உண்மையில் பணிவன்புடன் நடந்துகொள்வது வணங்குவது எல்லாம் அனைத்துயிர்களுகுள் அந்தராத்மாவில் இருக்கும் பரம்பொருளை வணங்குவதற்காக செய்யப்படும் செயல்களாகும்.
           பிரஜாபதி யாகத்தில் எந்த குற்றமும் செய்யாதிருந்த போது உன் தந்தை வார்த்தைகளால் ஏசினான்.உனக்கு தந்தையானாலும் எனக்கு சத்ருவாகி விட்டான்.ஆதலால் நீ அங்கு போவது சரியல்ல.அங்கு சென்றால் நீ அவமானப்பட போகிறாய்.மான மரியாதையை இழப்பது நன்மையை தராது.
           சிவபெருமான் இவ்வாறு கூறிவிட்டு மௌனமானார்.சதி தேவி போகலாமா,வேண்டாமா என்று ஒரு முடிவுக்கு வராமல் தவித்தாள்.மனநிம்மதி இழந்தாள். பாசத்திற்கு அடிமையாகி தன் சொந்தபந்தங்களை காண துடித்தாள்.போகவேண்டாம் என்று தடுத்த சிவபெருமானை கோபமாக நோக்கினாள். சதி தேவிக்காக தன் இடப்பாகத்தை கொடுத்த சிவபெருமானிடம் ஏதும் சொல்லிக்கொள்ளாமல் தனியாக அங்கிருந்து புறப்பட்டாள்.
           தேவியார் தனியாக புறப்பட்டதை கண்டு மணிமான் முதலிய ஆயிரக்கணக்கான சிவனின் சேவகர்களும் சிவகணங்களும் அவளை பின்தொடர்ந்தனர்.அவளை நந்திகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் அமரச்செய்து அனைவரும் தக்ஷ யாகஸ்தலத்தை நோக்கி விரைந்தனர்.கொடை பிடித்து சாமரம் வீசினர்.சதி தேவி மைனாவும் கிளியும் தோளில் அமர கண்ணாடி,தாமரை மலர்களுடன் வைர ஆபரணங்கள் அணிந்து செல்வச்சிறப்புடன் பயணமானாள்.சிவகணங்கள் துந்துபி முழங்கி புல்லாங்குழல் முதலிய வாத்தியங்கள் முழங்க தாரை தப்பட்டையுடன் தேவியை பின் தொடர்ந்தனர்.(தொடரும்)

Sunday 12 February 2012

தக்ஷன் செய்த யாகம்

பிரம்மதேவரின் புதல்வன் தக்ஷ பிரஜாபதி ,பதினாறு பெண்களை பெற்று இருந்தான்.அக்னி தேவனுக்கும் ,பித்ரு தேவகணங்களுக்கும்,தர்ம தேவனுக்கும் தன் பெண்களை மணம் முடித்து கொடுத்தான்.தன் மகள் சதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து முடித்து பெயரும் புகழும் அடைந்தான்.
           தக்ஷன் ஒருமுறை பிரஜாபதி என்ற ஒரு யாகத்தை துவக்கினான்.அந்த யாக வைபவத்தில் ரிஷிகளும், தேவர்களும்,முனிவர்களும்,அக்னி தேவர்களும் தம் தம் பரிவாரங்களுடன் வந்திருந்தனர்.சிவபெருமானும்,பிரம்மாவும் திருச்சபையில் ஒளிவீசிக்கொண்டு அமர்ந்து இருக்கையில் தக்ஷ பிரஜாபதி சபையில் நுழைந்த போது அக்னி முதலான தேவர்கள் அவன் தேஜசை கண்டு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.அச்சமயம் சிவபெருமான் எழுந்து நின்று மரியாதை செலுத்தாததை கண்டு மனதில் ஆத்திரம் அடைந்தான்.பிரம்மாவை மட்டும் வணங்கிவிட்டு கண்களால் சிவபெருமானை சுட்டெரிப்பது போல நோக்கி விட்டு மனக்குமுறலுடன் பேசினான்.சபையில் அமர்ந்திருக்கும் அக்னி முதலான தேவர்களே, ரிஷிகளே, கேளுங்கள்.நான் இதை அறியாமையாலோ அல்லது துவேசத்தினாலோ கூறவில்லை.நற்பண்பை அறிய வைப்பதற்கு கூறுகிறேன்.
            இதோ இங்கே அமர்ந்திருப்பவன் பாருங்கள்,திசை தெய்வங்களின் புனித புகழையும் தேவர்களின் கீர்த்தியையும் பண்பில்லாதவன், கர்வம் பிடித்தவன் இவன் அழித்துக்கொண்டு இருக்கிறான்.மிக நல்லவன் போல் சாவித்திரி தேவி போல இருந்த என் மகளை பிராமணர்கள் முன்னிலையில் அக்னி சாட்சியாக மணந்து கொண்டான்.எனக்கு மருமகனாக இருந்தும் என்னை கண்டவுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை,வணங்கவில்லை.ஒரு பேச்சுக்கு கூட வார்த்தையால் வரவேற்கவில்லை.தலை கனம் பிடித்தவன்.தர்மத்தை கடைப்பிடிப்பதில்லை.பிரேதங்கள் குடியிருக்கும் பயங்கரமான மயான பூமியில் பேய் பிசாசுகளுடன் திரிந்து கொண்டிருப்பவன்.தூய்மை அற்றவனாக பித்தன் போல கேசத்தை விரித்துக்கொண்டு ஆடையின்றி புலித்தோல் உடுத்தி சுடுகாட்டில் சிரித்துக்கொண்டு திரிகிறான்.சிதை சாம்பல் பூசி பேய்களுடன் மண்டை ஒட்டு மாலை அணிந்து கூத்தாடுகிறான்.பெயரளவில் தான் இவன் சிவன்.ஆனால் உண்மையில் அமங்கலமானவன்.(பக்தி என்ற )பித்தம் தலைக்கேறிய பித்தர்களின் இறைவன்.தமோ குணங்கள் நிறைந்த பூத பேய்களின் தலைவன்.அந்த பிரம்மாவின் சொல் கேட்டு இவனுக்கு போய் என் பெண்ணை மணம் முடித்து கொடுத்தேன்.என் மகள் பாவம் ஏதும் அறியாத அப்பாவி பெண்.அவளை இந்த பைத்தியக்காரனுக்கு கொடுத்து விட்டேன்.மாபெரும் தவறு செய்து விட்டேன்.
           இவ்வாறு தக்ஷன் சிவ நிந்தனை செய்தான்.அவன் கோபம் மேலும் தலைக்கேறியது.கையில் நீர் எடுத்து மகாதேவனை நோக்கி சாபமிட்டான்.--தேவர்களின் கீழானவன் இவனுக்கு இன்று முதல் செய்யப்படும் யாகங்களில் இந்திர உபோந்திர முதலிய தேவர்களுக்கு கொடுப்பது போல அவிர்பாகம் கிடைக்காமல் போகட்டும்.சபையில் இருந்த தேவர்கள் தக்ஷனை சமாதனப்படுத்தினார்கள்.ஆனால் தக்ஷன் மிகவும் கோபத்துடன் சபையை விட்டு வெளியேறினான்.
           சிவபெருமானின் அடியார் நந்தீஸ்வரர் தக்ஷனை நோக்கி பதிலுக்கு சாபமிட்டார்.-சரீராபிமானம் துறந்த சிவயோகி எவரிடமும் பற்று பகை அற்றவர் அவரை நோக்கி சாபமிட்ட தக்ஷன் ஞானசூன்யமாக இருக்கட்டும்.சாத்தூர் மாச யாகத்தில் அட்சய புண்ணியம் கிடைக்கும் இந்த வேத வாக்யத்தில் மயங்கி புண்ணிய சுகங்களின் மீது ஆசை வைத்து அந்த ஆசைக்கு அடிமையாகி மோட்ச ஞானம் கிடைக்காமல் போகட்டும்.இல்லறமே நல்லறம் என்று நினைத்து இறை ஞானத்தை மறந்து போகட்டும்.இவனுக்கு அறிவில்லா ஆட்டுத்தலை தான் பொருந்தும்.தக்ஷனின் கர்ம காண்ட வழியில் செல்பவர்கள் அனைவரும் ஜன்ம மரண சுழற்சியில் சிக்கி துக்கங்களை அனுபவிக்கட்டும்.பிராமணர்கள் கல்வி,விதை,தவம் அனைத்தையும் விற்று விட்டு பிச்சை எடுத்து திரியட்டும்.நந்தீஸ்வரர் இவ்வாறு சாபமிட்டதை கேட்டு தக்ஷன் தரப்பில் ப்ருகு என்பவர் பதிலுக்கு சாபம் கொடுத்தார்.
           சைவ சமயத்தை பின் பற்றுபவர் அனைவரும் காபாளிகர்களாக திரியட்டும்.மண்டை ஓடு மாலை அணிந்து மது,மாமிசம் அனாசாரமாக திரியட்டும்.சாத்வீக தெய்வ வழிபாடுகளை துறந்து தாமச வழிபாடு நடத்தட்டும்.சைவ சன்னியாசிகளுடன் ஜடாமுடி தரித்து சிதை சாம்பல் பூசிக்கொண்டு பூத பேய்கள் போல திரியட்டும்.சனாதன சாத்வீக அற வழியை துறந்து காபாளிகர்களாக திரியட்டும்.எங்கள் விஷ்ணு பகவான் தூய வேதமார்கத்தை பின்பற்றி ரிஷிகளாலும் தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர்.நாங்கள் அந்த அற வழி செல்பவர்கள்.உங்கள் இறைவன் பேய்கள் வழிபடும் தலைவன்.என்று கூறிமுடித்தார்.அதன் பின் தேவர்களும் ரிஷிகளும் தொடங்கிய யாகத்தை ஒருவாறு பூர்த்தி செய்து தம் தம் இருப்பிடங்களுக்கு சென்றனர்.
இவ்வாறு நெடுங்காலம் கடந்த பின்பும் தக்ஷனுக்கும் சிவபெருமானுக்கும் இடையில் பகை தீ அணையாமல் புகைந்து கொண்டே இருந்தது.
           பிரம்மதேவர் தக்ஷனை அழைத்து பிரஜாபதிகளுக்கெல்லாம் அதிபதியாக்கினார்.அவன் கர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது.சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காமல் சிவனை அலட்சியம் செய்து ஒரு பெரிய வாஜபேய யாகம் நடத்தினான்.அவன் புகழ் எங்கும் பரவியது.அதன் பின் எவராலும் செய்ய முடியாத பிரகஸ்பதி என்ற மாபெரும் யாகத்தை தொடங்கினான்.அது சீரும் சிறப்பும் செல்வாக்கும் மிகுந்ததாக இருந்தது.அந்த வைபவத்தில் தேவரிஷிகளும் பிரம்மரிஷிகளும் பித்ருக்களும் பங்கேற்று சிறப்பித்துக்கொண்டு இருந்தனர்.தம் தம் இல்லத்தரசிகளோடு வந்த தேவர்களையும் மகாரிஷிகளையும் தக்ஷன் செய்ய வேண்டிய மரியாதைகளை செய்து வரவேற்றான்.
           அச்சமயம் ஆகாய மார்க்கத்தில் அழகாக அணிவகுத்த தேவர்களின் விமானங்கள் தக்ஷன் யாகசாலையை நோக்கி சென்றன.அதில் தேவ மாதர்கள் தம் நாயகனோடு சிரித்து பேசிக்கொண்டு சந்தோசமாக சென்றனர்.
           இமயமலை மார்க்கமாக விமானங்கள் சென்று கொண்டிருந்த போது சதிதேவி கண்ட காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.விமானங்களில் தேவகந்தர்வ யட்ச பெண்மணிகள் காதுகளில் ஜிமிக்கி குண்டலங்கள் பளபளக்க பகட்டாக ஆடை அலங்காரங்களுடன் தம் நாயகர்களிடம் யாகத்தின் பெருமைகளை பேசிக்கொண்டு செல்வதை பார்த்தாள். அவளுக்கு யாக வைபவத்தை காண ஆசை உதித்தது. 

Monday 6 February 2012

மச்சாவதாரம் தொடர்ச்சி

பகவான் இவ்வாறு சத்தியவிரதனிடம் கூறிவிட்டு மறைந்து போனார்.அரசன் சத்தியவிரதன் அந்த 7 நாட்கள் வரை காத்திருந்து தர்பை புல் நுனி கிழக்கு முகமாக வைத்து அதில் அமர்ந்து மச்சாவதார மூர்த்தியை தியானம் செய்தார்.பகவான் கூறியபடி கடலின் சீற்றம் அதிகரித்து கரை கடந்து பேரலைகள் பூமியை ஆக்கிரமித்து எல்லாவற்றையும் மூழ்கடித்தன.பிரளயகால மேகங்கள் பயங்கரமாக பெருமழையை பொழிந்தன.பகவான் கிருபையால் ஒரு பெரிய படகு அரசனிடம் வந்தது.முன் கூட்டியே திட்டமிட்டபடி தானியம் மற்றும் தாவர விதைகளுடன் மற்ற ஜீவராசிகள் மனிதர்கள் ஆகியவற்றின் சூட்சும சரீரங்களை எடுத்துக்கொண்டு சப்தரிஷிகளோடு சேர்ந்து அரசன் படகில் ஏறினான்.
         
                                                     

சப்தரிஷிகள், சங்கடங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக அரசனை நோக்கி தியானம் செய்யுமாறு கூறினார்கள்.சத்தியவிரதன் தியானம் செய்தவுடன் பகவான் மச்சவதாரமாக (மிகப்பெரிய மீனாக)பிரத்யட்சமானார்.அந்த மீன் தங்கநிறத்தில் பிரகாசமாக ஜோளிதுக்கொண்டு இருந்தது.அதன் நீளம் அளவிடமுடியாததாக மிகவும் பெரியதாக இருந்தது.பகவானின் ஆணைப்படி அதன் பெரிய கொம்பில் அரசன் வாசுகி நாகத்தை வைத்து படகோடு சேர்த்து கட்டினான்.அதன் பின் பகவானை துதி செய்தான்.---பிரபுவே ஜீவராசிகள் மற்றும் மனிதர்கள் பெறவேண்டிய ஆத்ம ஞானம் அஞ்ஞான மாயையால் மறைக்கப்பட்டிருக்கிறது.அதன் காரணமாக தான் மனிதர்கள் கிலேசங்களை சுமந்துகொண்டு அல்லல் படுகின்றனர்.தங்கள் பேரருள் எளிதாக கிடைத்து விட்டால் அவர்கள் தங்களை சரண் அடைந்து விடுவார்கள்.தங்கள் திருவடியை பற்றி கொள்வார்கள்.அப்போது எந்த பயமும் இருக்காது.கர்மபலன்களோடு கட்டப்பட்ட ஜீவன்களுக்கு பிறவாமை அளிக்கும் பரமகுரு நீங்கள்.எங்கள் மீது கருணை காட்ட வேண்டும்.நெருப்பிலிட்ட தங்கமும் வெள்ளியும் அழுக்கு நீங்கி பளபளக்கின்றன.அதுபோல பகவானே தங்கள் நினைவை தொட்டதும் இந்த மனிதர்கள் மனம் மாசற்றதாகிவிடுகிறது.சர்வசக்தி படைத்த தாங்களே குருவுக்கும் குருவாக இருக்கிறீர்கள்.நீங்களே எமக்கு உபதேசம் செய்தருள வேண்டும்.என்று சத்திய விரதன் கேட்டுக்கொண்டபின் மீன் வடிவம் எடுத்த புருஷோத்தமபகவான் படகை இழுத்துக்கொண்டு பிரளய கடலில் திரிந்துகொண்டே ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்தார்.தன் சொரூப ரகசியத்தை வெளியிட்டார்.ஞானம்,பக்தி,கர்மயோகம் இவற்றுடன் கூடிய தெய்வீக புராணத்தை உபதேசித்தார்.அதுவே பிற்காலத்தில் மத்ஸ்ய புராணமானது.
           சப்தரிஷிகளோடு சேர்ந்த சத்தியவிரதன் மிக தெளிவாக எந்த சந்தேகமுமின்றி சனாதன பிரம்ம ரூபமாக உள்ள ஆத்ம தத்துவ உபதேசத்தை பகவான் அருள பெற்றான்.அதன் பின் பிரளய இரவு காலம் முடிந்த பின் பிரம்மா மீண்டும் உலகங்களை சிருஷ்டிக்க முற்பட்டார்.ஸ்ரீ நாராயண பகவான் வேதங்களை அபகரித்து பாதாளத்திற்க்கும் கொண்டுபோன அசுரனை கொன்று வேதங்களை பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.அந்த வேத ஞானம் மூலம் பிரம்மா மீண்டும் சிருஷ்டி காரியத்தை துவக்கினார்.கடல் உள்வாங்கி நீரெல்லாம் வடிந்து பூமி வெளிப்பட்டது.
               தன்யோக மாயையால் மீன் வடிவம் எடுத்த விஷ்ணு பகவானுக்கும் சத்தியவிரதனுக்கும் இடையில் நடந்த வியாக்யானத்தை படித்தால் பாவங்கள் தொலையும்.பிரதி தினமும் இந்த அவதாரக்கதையை படித்தால் நினைத்தது நடக்கும்.சுக வாழ்வு கிடைக்கும்.
   

Wednesday 1 February 2012

மச்சாவதாரம்

                     சுகதேவர் பரீட்சீத் மகா ராஜாவிடம் மச்சாவதாரகதையை கூறினார்.
எல்லாம் வல்ல இறைவன் நாராயணன் நல்லவர்களையும் வேதங்களையும் தர்மத்தையும் காக்க பல அவதாரங்களை எடுக்கிறார்.அச்சமயம் உயிர் காற்று போல உயர்ந்த தாழ்ந்த பிரானிகளுக்குள் அல்லது பெரிய சிறிய ஜீவராசிகளுக்குள் அந்தர்யாமியாக இருந்து அவதார திருவிளையாடல்களை நிகழ்த்துகிறார்.ஒரு சமயம் கல்ப கால முடிவில் பிரம்மாவின் ஒரு பகல் பொழுது கழிந்த பின் (பகல் பொழுது என்பது ஆயிரம் நான்கு யுகங்களை கொண்டது)இரவு காலத்தில் மகா பிரளயம் ஏற்பட்டது.அப்போது உலகமெல்லாம் நீரில் மூழ்கி விட்டது.பிரம்மாவின் திருமுகத்திலிருந்து தோன்றிய வேதங்களை ஹயக்கிரீவன் என்ற அசுரன் திருடி சென்று கடலுக்குள் போட்டு விட்டான்.பகவான் மச்சாவதாரம் எடுத்து ஹயக்கிரீவனை கொன்று வேதங்களை மீட்டு கொண்டு வந்தார்.தாமே ஹயக்க்ரீவன் என்ற பெயரை பெற்றார்.
          உலகம் அழிவதற்கு முன்னதாக இதே  நேரத்தில்  திராவிட அரசன் சத்தியவிரதன் தவம் இயற்றிக்கொண்டு இருந்தான்.ஒருநாள் கிருதமாலா நதியில் ஜலதர்ப்பணம் செய்துகொண்டு இருக்கையில் அவன் கைக்குள் எதேச்சையாக ஒரு மீன் வந்தது.அதைக்கண்டு அரசன் மீனை மீண்டும் நதியில் விட்டான்.அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.அந்த மீன் மனிதகுரலில் பேசியது.அரசே தாங்கள் மிகவும் கருணை உள்ளம் படைத்தவர்.என்னை நதிநீரில் விடாதீர்கள்.பெரியமீன்கள் என்னை தின்றுவிடும்,எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.வேறு ஏதாவது ஏற்பாடு செய்து என்னை காப்பாற்றுங்கள் என்றது.பரம புருஷனே மீனாக வந்து தம்மிடம் பேசுவதை அறியாத மன்னர் சத்தியவிரதன் அதை காப்பாற்ற நினைத்து தன கமண்டலத்தில் போட்டு தன ஆசிரமத்திற்கு எடுத்து வந்தான்.அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.ஓர் இரவில் அந்த மீன் கமண்டலம் கொள்ளாமல் வளர்ந்து விட்டது.அரசே என்னை கமண்டலத்தில் இருந்து எடுத்து வேறு இடத்தில விட்டு விடுங்கள் என்றது.
அதை கேட்டு சத்திய விரதன் ஓர் அண்டாவில் மீனை போட்டு வைத்தான்.ஆனால் ஓர் இரவில் அது அண்டாவை அடைத்துக்கொண்டு வளர்ந்து விட்டது.எனக்கு இது போதவில்லை என்றது.அரசன் அதை கிணற்றில் தூக்கி போட்டான்.ஆனால் ஓர் இரவுக்குள் கிணறு சுற்றளவு வளர்ந்து இனி கிணற்றில் என்னால் வாழ முடியாது என்றது.சத்திய விரதன் மீனை ஏரியிலும் குளத்திலும் மாற்றிக்கொண்டே இருந்தான்.மீன் நீர்நிலைகளில் மிகப்பெரிய அளவில் வளர்ந்துகொண்டே இருந்தது.இறுதியில் அரசன் மீனை கடலில் போடபோனார்.அச்சமயம் மீன் அதிசயதக்கவகையில் பேசியது."அரசே என்னை கடலில் விட்டால் பெரிய மீன்கள் அல்லது திமிங்கலங்கள் என்னை விழுங்கி விடுமே என்னை கடலில் விடாதீர்கள்"என்றது.குழம்பிபோன அரசன் கூறினான்.இவ்வாறு அசுர வளர்ச்சியடையும் நீங்கள் ஒரு சாதாரண மீன் அல்ல.தாங்கள் யார்?இதுவரை ஒருமணிக்கு காததூரம் வளரும் மீனை நான் கண்டதுமில்லை கேட்டதும் இல்லை.நிச்சயம் நீங்கள் சர்வசக்திமானாகிய இறைவன் உயிருக்குள் உறைபவர் அவினாசி ஸ்ரீ ஹரியாகதான் இருக்க வேண்டும் .
          உயிரினங்கள் மீது கருணை கொண்டு அனுக்கிரகம் செய்வதற்காக மீன் உருவம் எடுத்தீரோ?புருசோத்தமரே ஆக்கம்,காப்பது,அழிவு அனைத்தையும் நிகழ்த்தும் வேத நாயகனே சரண் அடைந்தவர்களை காப்பவரே உம்மை வணங்குகிறேன்.தங்கள் திருஅவதாரம் யாவரும் நலம் பெற்று உயர்வடைவதர்க்காக நிகழ்கிறது.இருப்பினும் நான் கேட்கிறேன்.தாங்கள் எந்த உத்தேசத்திர்க்காக மீன் அவதாரம் எடுத்தீர்கள்?இதை அறிய விரும்புகிறேன்.என்றான்.தங்களை சரண் அடைந்தவர்கள் எவராயினும் கீழ் நிலை அடைய மாட்டார்கள். ஏனெனில் தாங்கள் காரணமில்லாமல் அனைவருக்கும் அன்பராக இருப்பீர்கள்.இப்போது எடுத்த மீன் அவதாரம் மிக அற்புதமாக உள்ளது.ராஜரிஷி சத்தியவிரதன் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் பிரளயகால கடல்நீரில் திருவிளையாடல் புரிய திருவுள்ளம் கொண்டு அரசனை நோக்கி கூறினார்.- "சத்தியவிரதா இன்றிலிருந்து ஏழாவது நாள் கடல் பொங்கி பூலோகமனைத்தும் நீரில் மூழ்கிவிடும்.கடல் பொங்கி வரும்போது என் அருளால் ஒரு படகு உன்னைநோக்கி வரும்.அதில் சப்தரிஷிகள் இருப்பார்கள். நீ தாவர விதைகளை சேகரித்து அனைத்துயிர்களின் சூட்சும சரீரங்களுடன் சேர்ந்து நீ படகில் ஏறிக்கொள்வாய்.பெருங்கடலான பேரலைகளால் படகு தத்தளித்துக்கொண்டு இருக்கும் போது நான் காப்பாற்ற வருவேன்.பிரளய காலத்தில் இருள் சூழ்ந்த நிலையிலும் சப்தரிஷிகளின் தெய்வீக ஜோதியால் வெளிச்சம் பரவ நீ அச்சமின்றி படகில் அமர்ந்து கடலில் சஞ்சரித்துக்கொண்டு இருப்பாய்.அச்சமயம் கடல் புயலால் படகு நிலைகொள்ளாமல் தத்தளிக்கும்போது இந்த மீன் வடிவில் நான் அங்கு வருவேன்.என் மூக்கின் மேல் ஒரு கொம்பு இருக்கும் நீ வாசுகி நாகம் கொண்டு அந்த கொம்புடன் படகை கட்டிவிடு.பேரலைகளால் அடிக்கப்பட்டு படகை கவிழாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்.பிரம்மாவின் இரவுக்காலம் முடியும் வரை நீ படகில் இருந்து கொண்டு கடலில் திரிந்து கொண்டு இருக்க வேண்டும்.அச்சமயம் ஆன்மீகத்தை பற்றி நீ கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்து அறத்தை பற்றி உபதேசம் செய்துகொண்டு இருப்பேன்.பரப்ரம்மம் எனப்படும் பரம்பொருள் உன் ஆத்மாவில் பிரகாசிப்பதை நீ உணர்வாய். (தொடரும் )