Monday 6 February 2012

மச்சாவதாரம் தொடர்ச்சி

பகவான் இவ்வாறு சத்தியவிரதனிடம் கூறிவிட்டு மறைந்து போனார்.அரசன் சத்தியவிரதன் அந்த 7 நாட்கள் வரை காத்திருந்து தர்பை புல் நுனி கிழக்கு முகமாக வைத்து அதில் அமர்ந்து மச்சாவதார மூர்த்தியை தியானம் செய்தார்.பகவான் கூறியபடி கடலின் சீற்றம் அதிகரித்து கரை கடந்து பேரலைகள் பூமியை ஆக்கிரமித்து எல்லாவற்றையும் மூழ்கடித்தன.பிரளயகால மேகங்கள் பயங்கரமாக பெருமழையை பொழிந்தன.பகவான் கிருபையால் ஒரு பெரிய படகு அரசனிடம் வந்தது.முன் கூட்டியே திட்டமிட்டபடி தானியம் மற்றும் தாவர விதைகளுடன் மற்ற ஜீவராசிகள் மனிதர்கள் ஆகியவற்றின் சூட்சும சரீரங்களை எடுத்துக்கொண்டு சப்தரிஷிகளோடு சேர்ந்து அரசன் படகில் ஏறினான்.
         
                                                     

சப்தரிஷிகள், சங்கடங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக அரசனை நோக்கி தியானம் செய்யுமாறு கூறினார்கள்.சத்தியவிரதன் தியானம் செய்தவுடன் பகவான் மச்சவதாரமாக (மிகப்பெரிய மீனாக)பிரத்யட்சமானார்.அந்த மீன் தங்கநிறத்தில் பிரகாசமாக ஜோளிதுக்கொண்டு இருந்தது.அதன் நீளம் அளவிடமுடியாததாக மிகவும் பெரியதாக இருந்தது.பகவானின் ஆணைப்படி அதன் பெரிய கொம்பில் அரசன் வாசுகி நாகத்தை வைத்து படகோடு சேர்த்து கட்டினான்.அதன் பின் பகவானை துதி செய்தான்.---பிரபுவே ஜீவராசிகள் மற்றும் மனிதர்கள் பெறவேண்டிய ஆத்ம ஞானம் அஞ்ஞான மாயையால் மறைக்கப்பட்டிருக்கிறது.அதன் காரணமாக தான் மனிதர்கள் கிலேசங்களை சுமந்துகொண்டு அல்லல் படுகின்றனர்.தங்கள் பேரருள் எளிதாக கிடைத்து விட்டால் அவர்கள் தங்களை சரண் அடைந்து விடுவார்கள்.தங்கள் திருவடியை பற்றி கொள்வார்கள்.அப்போது எந்த பயமும் இருக்காது.கர்மபலன்களோடு கட்டப்பட்ட ஜீவன்களுக்கு பிறவாமை அளிக்கும் பரமகுரு நீங்கள்.எங்கள் மீது கருணை காட்ட வேண்டும்.நெருப்பிலிட்ட தங்கமும் வெள்ளியும் அழுக்கு நீங்கி பளபளக்கின்றன.அதுபோல பகவானே தங்கள் நினைவை தொட்டதும் இந்த மனிதர்கள் மனம் மாசற்றதாகிவிடுகிறது.சர்வசக்தி படைத்த தாங்களே குருவுக்கும் குருவாக இருக்கிறீர்கள்.நீங்களே எமக்கு உபதேசம் செய்தருள வேண்டும்.என்று சத்திய விரதன் கேட்டுக்கொண்டபின் மீன் வடிவம் எடுத்த புருஷோத்தமபகவான் படகை இழுத்துக்கொண்டு பிரளய கடலில் திரிந்துகொண்டே ஆத்ம தத்துவத்தை உபதேசம் செய்தார்.தன் சொரூப ரகசியத்தை வெளியிட்டார்.ஞானம்,பக்தி,கர்மயோகம் இவற்றுடன் கூடிய தெய்வீக புராணத்தை உபதேசித்தார்.அதுவே பிற்காலத்தில் மத்ஸ்ய புராணமானது.
           சப்தரிஷிகளோடு சேர்ந்த சத்தியவிரதன் மிக தெளிவாக எந்த சந்தேகமுமின்றி சனாதன பிரம்ம ரூபமாக உள்ள ஆத்ம தத்துவ உபதேசத்தை பகவான் அருள பெற்றான்.அதன் பின் பிரளய இரவு காலம் முடிந்த பின் பிரம்மா மீண்டும் உலகங்களை சிருஷ்டிக்க முற்பட்டார்.ஸ்ரீ நாராயண பகவான் வேதங்களை அபகரித்து பாதாளத்திற்க்கும் கொண்டுபோன அசுரனை கொன்று வேதங்களை பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.அந்த வேத ஞானம் மூலம் பிரம்மா மீண்டும் சிருஷ்டி காரியத்தை துவக்கினார்.கடல் உள்வாங்கி நீரெல்லாம் வடிந்து பூமி வெளிப்பட்டது.
               தன்யோக மாயையால் மீன் வடிவம் எடுத்த விஷ்ணு பகவானுக்கும் சத்தியவிரதனுக்கும் இடையில் நடந்த வியாக்யானத்தை படித்தால் பாவங்கள் தொலையும்.பிரதி தினமும் இந்த அவதாரக்கதையை படித்தால் நினைத்தது நடக்கும்.சுக வாழ்வு கிடைக்கும்.
   

No comments:

Post a Comment