பிரம்மதேவரின் புதல்வன் தக்ஷ பிரஜாபதி ,பதினாறு பெண்களை பெற்று இருந்தான்.அக்னி தேவனுக்கும் ,பித்ரு தேவகணங்களுக்கும்,தர்ம தேவனுக்கும் தன் பெண்களை மணம் முடித்து கொடுத்தான்.தன் மகள் சதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் செய்து முடித்து பெயரும் புகழும் அடைந்தான்.
தக்ஷன் ஒருமுறை பிரஜாபதி என்ற ஒரு யாகத்தை துவக்கினான்.அந்த யாக வைபவத்தில் ரிஷிகளும், தேவர்களும்,முனிவர்களும்,அக்னி தேவர்களும் தம் தம் பரிவாரங்களுடன் வந்திருந்தனர்.சிவபெருமானும்,பிரம்மாவும் திருச்சபையில் ஒளிவீசிக்கொண்டு அமர்ந்து இருக்கையில் தக்ஷ பிரஜாபதி சபையில் நுழைந்த போது அக்னி முதலான தேவர்கள் அவன் தேஜசை கண்டு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.அச்சமயம் சிவபெருமான் எழுந்து நின்று மரியாதை செலுத்தாததை கண்டு மனதில் ஆத்திரம் அடைந்தான்.பிரம்மாவை மட்டும் வணங்கிவிட்டு கண்களால் சிவபெருமானை சுட்டெரிப்பது போல நோக்கி விட்டு மனக்குமுறலுடன் பேசினான்.சபையில் அமர்ந்திருக்கும் அக்னி முதலான தேவர்களே, ரிஷிகளே, கேளுங்கள்.நான் இதை அறியாமையாலோ அல்லது துவேசத்தினாலோ கூறவில்லை.நற்பண்பை அறிய வைப்பதற்கு கூறுகிறேன்.
இதோ இங்கே அமர்ந்திருப்பவன் பாருங்கள்,திசை தெய்வங்களின் புனித புகழையும் தேவர்களின் கீர்த்தியையும் பண்பில்லாதவன், கர்வம் பிடித்தவன் இவன் அழித்துக்கொண்டு இருக்கிறான்.மிக நல்லவன் போல் சாவித்திரி தேவி போல இருந்த என் மகளை பிராமணர்கள் முன்னிலையில் அக்னி சாட்சியாக மணந்து கொண்டான்.எனக்கு மருமகனாக இருந்தும் என்னை கண்டவுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை,வணங்கவில்லை.ஒரு பேச்சுக்கு கூட வார்த்தையால் வரவேற்கவில்லை.தலை கனம் பிடித்தவன்.தர்மத்தை கடைப்பிடிப்பதில்லை.பிரேதங்கள் குடியிருக்கும் பயங்கரமான மயான பூமியில் பேய் பிசாசுகளுடன் திரிந்து கொண்டிருப்பவன்.தூய்மை அற்றவனாக பித்தன் போல கேசத்தை விரித்துக்கொண்டு ஆடையின்றி புலித்தோல் உடுத்தி சுடுகாட்டில் சிரித்துக்கொண்டு திரிகிறான்.சிதை சாம்பல் பூசி பேய்களுடன் மண்டை ஒட்டு மாலை அணிந்து கூத்தாடுகிறான்.பெயரளவில் தான் இவன் சிவன்.ஆனால் உண்மையில் அமங்கலமானவன்.(பக்தி என்ற )பித்தம் தலைக்கேறிய பித்தர்களின் இறைவன்.தமோ குணங்கள் நிறைந்த பூத பேய்களின் தலைவன்.அந்த பிரம்மாவின் சொல் கேட்டு இவனுக்கு போய் என் பெண்ணை மணம் முடித்து கொடுத்தேன்.என் மகள் பாவம் ஏதும் அறியாத அப்பாவி பெண்.அவளை இந்த பைத்தியக்காரனுக்கு கொடுத்து விட்டேன்.மாபெரும் தவறு செய்து விட்டேன்.
இவ்வாறு தக்ஷன் சிவ நிந்தனை செய்தான்.அவன் கோபம் மேலும் தலைக்கேறியது.கையில் நீர் எடுத்து மகாதேவனை நோக்கி சாபமிட்டான்.--தேவர்களின் கீழானவன் இவனுக்கு இன்று முதல் செய்யப்படும் யாகங்களில் இந்திர உபோந்திர முதலிய தேவர்களுக்கு கொடுப்பது போல அவிர்பாகம் கிடைக்காமல் போகட்டும்.சபையில் இருந்த தேவர்கள் தக்ஷனை சமாதனப்படுத்தினார்கள்.ஆனால் தக்ஷன் மிகவும் கோபத்துடன் சபையை விட்டு வெளியேறினான்.
சிவபெருமானின் அடியார் நந்தீஸ்வரர் தக்ஷனை நோக்கி பதிலுக்கு சாபமிட்டார்.-சரீராபிமானம் துறந்த சிவயோகி எவரிடமும் பற்று பகை அற்றவர் அவரை நோக்கி சாபமிட்ட தக்ஷன் ஞானசூன்யமாக இருக்கட்டும்.சாத்தூர் மாச யாகத்தில் அட்சய புண்ணியம் கிடைக்கும் இந்த வேத வாக்யத்தில் மயங்கி புண்ணிய சுகங்களின் மீது ஆசை வைத்து அந்த ஆசைக்கு அடிமையாகி மோட்ச ஞானம் கிடைக்காமல் போகட்டும்.இல்லறமே நல்லறம் என்று நினைத்து இறை ஞானத்தை மறந்து போகட்டும்.இவனுக்கு அறிவில்லா ஆட்டுத்தலை தான் பொருந்தும்.தக்ஷனின் கர்ம காண்ட வழியில் செல்பவர்கள் அனைவரும் ஜன்ம மரண சுழற்சியில் சிக்கி துக்கங்களை அனுபவிக்கட்டும்.பிராமணர்கள் கல்வி,விதை,தவம் அனைத்தையும் விற்று விட்டு பிச்சை எடுத்து திரியட்டும்.நந்தீஸ்வரர் இவ்வாறு சாபமிட்டதை கேட்டு தக்ஷன் தரப்பில் ப்ருகு என்பவர் பதிலுக்கு சாபம் கொடுத்தார்.
சைவ சமயத்தை பின் பற்றுபவர் அனைவரும் காபாளிகர்களாக திரியட்டும்.மண்டை ஓடு மாலை அணிந்து மது,மாமிசம் அனாசாரமாக திரியட்டும்.சாத்வீக தெய்வ வழிபாடுகளை துறந்து தாமச வழிபாடு நடத்தட்டும்.சைவ சன்னியாசிகளுடன் ஜடாமுடி தரித்து சிதை சாம்பல் பூசிக்கொண்டு பூத பேய்கள் போல திரியட்டும்.சனாதன சாத்வீக அற வழியை துறந்து காபாளிகர்களாக திரியட்டும்.எங்கள் விஷ்ணு பகவான் தூய வேதமார்கத்தை பின்பற்றி ரிஷிகளாலும் தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர்.நாங்கள் அந்த அற வழி செல்பவர்கள்.உங்கள் இறைவன் பேய்கள் வழிபடும் தலைவன்.என்று கூறிமுடித்தார்.அதன் பின் தேவர்களும் ரிஷிகளும் தொடங்கிய யாகத்தை ஒருவாறு பூர்த்தி செய்து தம் தம் இருப்பிடங்களுக்கு சென்றனர்.
இவ்வாறு நெடுங்காலம் கடந்த பின்பும் தக்ஷனுக்கும் சிவபெருமானுக்கும் இடையில் பகை தீ அணையாமல் புகைந்து கொண்டே இருந்தது.
பிரம்மதேவர் தக்ஷனை அழைத்து பிரஜாபதிகளுக்கெல்லாம் அதிபதியாக்கினார்.அவன் கர்வம் நாளுக்கு நாள் அதிகரித்தது.சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காமல் சிவனை அலட்சியம் செய்து ஒரு பெரிய வாஜபேய யாகம் நடத்தினான்.அவன் புகழ் எங்கும் பரவியது.அதன் பின் எவராலும் செய்ய முடியாத பிரகஸ்பதி என்ற மாபெரும் யாகத்தை தொடங்கினான்.அது சீரும் சிறப்பும் செல்வாக்கும் மிகுந்ததாக இருந்தது.அந்த வைபவத்தில் தேவரிஷிகளும் பிரம்மரிஷிகளும் பித்ருக்களும் பங்கேற்று சிறப்பித்துக்கொண்டு இருந்தனர்.தம் தம் இல்லத்தரசிகளோடு வந்த தேவர்களையும் மகாரிஷிகளையும் தக்ஷன் செய்ய வேண்டிய மரியாதைகளை செய்து வரவேற்றான்.
அச்சமயம் ஆகாய மார்க்கத்தில் அழகாக அணிவகுத்த தேவர்களின் விமானங்கள் தக்ஷன் யாகசாலையை நோக்கி சென்றன.அதில் தேவ மாதர்கள் தம் நாயகனோடு சிரித்து பேசிக்கொண்டு சந்தோசமாக சென்றனர்.
இமயமலை மார்க்கமாக விமானங்கள் சென்று கொண்டிருந்த போது சதிதேவி கண்ட காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.விமானங்களில் தேவகந்தர்வ யட்ச பெண்மணிகள் காதுகளில் ஜிமிக்கி குண்டலங்கள் பளபளக்க பகட்டாக ஆடை அலங்காரங்களுடன் தம் நாயகர்களிடம் யாகத்தின் பெருமைகளை பேசிக்கொண்டு செல்வதை பார்த்தாள். அவளுக்கு யாக வைபவத்தை காண ஆசை உதித்தது.
No comments:
Post a Comment