Sunday 11 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 29

விஷ வேகம் என் தலைக்கு ஏறி என்னை சாய்த்து விடுமே ! அதற்க்குள்ளாக நான் கொய்த இந்த வாளைக்குருத்தை வேகமாக கொண்டு போய் கொடுப்பேன்.நிகழ்ந்ததை ஒருவரிடமும் சொல்ல மாட்டேன்.பெரியவர் போஜனம் செய்தருளல் வேண்டும்.என்று நினைத்து வீட்டினுள் புகுந்து தன தாயிடம் வாழை குருத்தை கொடுத்து மயங்கி சுருண்டு விழுந்தான்.மகனின் கையில் உதிரம் வடிவத்தையும் உடலின் குறிகளையும் கண்டு விஷம் தீண்டியதால் மாண்டுவிட்டான் என்று உணர்ந்து கொண்டு விட்டார்கள்.ஆனாலும் அவர்கள் சிறிதும் மனம் கலங்காமல் திருநாவுக்கரசர் போஜனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்தார்கள்.அருமை புதல்வனின் சவத்தை ஒரு பாயில் வைத்து சுற்றி மூடி வீட்டின் ஒரு புறத்தில் மறைத்து வைத்தார்கள்.பின்பு பெரியவர் அமுது செய்ய காலதாமதம் ஆகிறதே என்று பரபரப்போடு இல்லை விரித்து சோறு காய்கறிகளெல்லாம் அழகுற வைத்து விட்டு திருநாவுக்கரசர் சுவாமிகளிடம் வந்து வணங்கி எழுந்து நாங்கள் பகவான் அருள் பெற்று பாக்கியசாலி யாக திருவமுது செய்து எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார்கள்.
           திருநாவுக்கரசர் எழுந்து கை கால்களை கழுவி வேறொரு ஆசனத்தில் அமர்ந்து இலையில் உணவிற்கு முன் வெந்திருநீறு பூசிக்கொண்டார்.பிறகு அவர் அப்பூதியடிகளுக்கும் அவரது மனைவியாருக்கும் திருநீறு வழங்கினார்.அவர் புதல்வர்களுக்கும் திருநீறு கொடுக்கும் போது உங்கள் மூத்த மகனையும் அழையுங்கள் விபூதி சாத்த வேண்டும்.என்றார்.அப்பூதியடிகள் நிகழ்ந்ததை ஒன்றும் சொல்லாமல் "இப்போது இங்கு அவன் வரமாட்டான் என்றார்." இதை கேட்டதும் அப்பர் சுவாமிகளுக்கு இறைவன் அருளால் ஒருவித தடுமாற்றம் உண்டாகியது.அவர் அப்பூதியடிகலாறை பார்த்து இவ்வார்த்தையை எம் உள்ளம் தாங்காது.அவன் என்ன செய்தான் நீங்கள் உண்மையை சொலுங்கள்.என்றார்.உடனே அப்பூதியடிகள் உடல் நடுங்கி பயந்தார்.உண்மையை சொன்னால் பெரியவர் அமுது செய்வதற்கு இடையுறு நேரிட்டு அப்பாக்கியத்தை இழக்க நேரிடும் .ஆனால் மாதவர் கேட்கும் போது உண்மையை மறைக்காமல் சொல்லவும் வேண்டியிருக்கிறதே என்று சிந்தை நொந்து சுவாமிகளை பரிவோடு வணங்கி தம் மைந்தனுக்கு நிகழ்ந்ததை கூறினார். அதை கேட்டதும் திருநாவுக்கரசர் நீர் செய்தது  நன்றாக இருக்கிறது , யார் தான் இப்படி செய்வார்? என்று சொல்லி எழுந்தார்.ஆவி நீங்கிய பிள்ளையின் சவத்தை பார்த்தார்.இறைவன் திருவருள் புரியும் வண்ணம் "ஒன்று கொலாம் " என்னும் திருப்பதிகத்தை பாடி பாம்பின் விஷத்தை போக்கலானார்.தீய விஷம் நீங்கியது.மூத்த புதல்வரான திருநாவுக்கரசு ,சுவாமிகளின்சிவந்த  திருவடிகளை வணங்கினார்.   அவனுக்கு அவர் தூய வெண்ணீறு அளித்தார்.அப்பூதியடிகளும் அவர் மனைவியாரும் ஸ்வாமிகள் உணவு உண்ண இவன் சிறிது இடையூறு செய்தானே என்று மனம் வருந்தினார்கள்.
          மற்ற விசயங்களில் ஆசையை துறந்து பற்றற்ற நிலை வந்து அகண்ட பஜனை செய்த பின் பக்தி மேலும் எப்படி உறுதியாகிறது என்பதை கூறுகிறார்கள்.அந்த மேலான பக்தி மகான்களின் கருணை பார்வையால் வருகிறது.பகவானின் அருளால் கூட வரலாம்.
         மகா புருஷர்கள் என்றும் கருணையுள்ளவர்கள் அவர்கள் அருளுக்கு பாதிரமாகிவிட்டாலே போதும்.அவர்களுடன் பொழுதை கடத்த வேண்டும்.
அவர்களை உதாரணமாக வைத்துக்கொண்டால் தாமாக உலக பற்றுகள் விலகி விடும்.பகவானை மறக்காத பாக்கியம் கிட்டும்.மகா புருஷர்கள் சாஸ்திர ஞானம் உள்ளவர்களாக ஒழுக்க சீலர்களாக இருப்பதுடன் பகவானின் தத்துவங்களை உணர்ந்து பக்தயுள்ளவர்கலாகவும் இருப்பார்கள்.இவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள்.
        பாகவத புராணத்தில் சூத ரிஷி கூறுகிறார்:
        அடியார்களான மகான்களின் நட்பு கிடைத்தால் போதும் அதற்க்கு இணையாக சொர்க்கத்தில் கிடைக்கும் மேன்மையும் ஈடாகாது.பிறவாமை என்ற மோட்சமும் பெரிதல்ல.மற்ற ஐஸ்வர்யங்களை கேட்கவா வேண்டும்.மகான்களின் அருகாமையில் வரும் சாந்தியும் சுகமும் வேறு எந்த சாதனத்திலும் வராது.(தொடரும்)

Saturday 10 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 28

அறியாது தன்னிச்சையால் பகவான் நாமம் உச்சரிக்கப்படும் போதே இவ்வளவு பலன்கள் கிடைகின்றதேன்றால் பிரியமுடன் அன்பு மேலிட உள்ளம் உருகி உச்சரிக்கும் போது அதன் பலனை கேட்கவா வேண்டும்.பல ஜென்மங்கள் செய்த பாவங்கள் ஒழியும். பிறவி பெருங்கடலில் இருந்து விடுபட்டு இறுதியில் இறைவனிடம் சேர்ந்து விடலாம்.
"முகயதஸ்து மஹத்க்ருபையைவ பகவத்க்ருபாலேசாத்வா " 
அவன் தாள் பணிய அவன் அருள் வேண்டும்.என்று கூறியிருக்கிறார்.மாணிக்கவாசகர்.
          பிரேமை பக்தி கை கூட வேண்டுமானால் சிறிதளவாவது பகவான் அருள் வேண்டும்.மகான்களின் அனுக்கிரகம்மிகவும் அவசியம்.
         மகான்களின் கருணையால் அடியார்களும் இறைவன் அருளை எளிதில் பெற்று விடுகிறார்கள்.திருநாவுக்கரசர் என்ற மகான் அன்பான கருணையால் அப்பூதி அடிகளாரினை கடைதேற்றினார்.இதற்க்கு உதாரணமாக இந்த கதையை கூறலாம்.
 சோழ நாட்டில் திங்களூரில் அந்தன குலத்தில் அப்பூதியடிகள் என்ற பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.அவர் ஆனந்த தாண்டவம் புரியும் சிவபெருமானுக்கு அன்பர்.திருநாவுக்கரசு சுவாமிகளை கண்டறியும் முன்பே அவருடைய திருத்தொண்டின் பெருமைகளையும் அதற்க்கு இறைவன் அருளிய திருவருட்பன்பையும் பற்றி கேள்விப்பட்டு திருநாவுக்கரசர் மீது மானசீகமாக பேரன்பு கொண்டார்.
          தமது வீட்டிலுள்ள அளவுக்கருவிகளுக்கும் மக்கள்களுக்கும் பசுக்களுக்கும் மற்ற பொருள் எல்லாவற்றிற்கும் திருநாவுக்கரசர் என்ற திருப்பெயரை வைத்து அன்புடன் அழைத்து வந்தார்.தாம் அமைத்த திருமடம்,தண்ணீர்பந்தல் முதலியவற்றிற்கும் திருநாவுக்கரசர் பெயரையே வைத்து அளவிலா அற செயல்கள் புரிந்து வந்தார்.
         அவ்வாறு அப்பூதியடிகள் தர்மங்கள் புரிந்து வாழ்ந்து வரும் காலத்தில் திருநாவுக்கரசர் ஸ்வாமிகள் பல சிவஸ்தலங்களை தரிசிக்க வேண்டி திங்களூர் வழியாக வந்தார். அங்கு தமது பெயர் சூட்டிய ஒரு தண்ணீர் பந்தலை கண்டார்.திருநாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு அப்பூதியடிகளின் வீட்டு வாசலை அடைந்தார்.திருநாவுக்கரசருடைய திருவடிகளை அப்பூதியார் வணங்கினார்.கருணை வடிவானவரே தாங்கள் என் வீட்டிக்கு வந்தருளினீர்கள்.இது நான் செய்த தவம் என்றார்.திருநாவுக்கரசர் அதற்க்கு "திருபுவனத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானை வணங்கிவிட்டு வரும்போது வழியில் நீர் வைத்துள்ள நிழல் நிறைந்த தண்ணீர் பந்தலை கண்டோம்.அவ்வாறே நீர் செய்து வரும் மற்ற அறங்களை பற்றியும் கேள்விப்பட்டோம்.அதனால் உம்மை காண விரும்பி இங்கு வந்தோம்.என்று கூறினார்.அப்பூதியடிகளே நீங்கள் தண்ணீர் பந்தலுக்கு தம்முடைய பெயரை எழுதாமல் வேறொரு பெயரை எழுத வேண்டிய காரணம் என்ன ? அதை கூறுங்கள் என்று கேட்டார்.
          இதை கேட்டதும் அப்பூதியடிகள் சற்று கோபமாக கூறினார்."சிவனடியாரே நீங்கள் இப்படி சொல்லகூடாது.சமணர்களுடன் சேர்ந்து கொண்டு பல்லவ மன்னர் இழைத்த கொடுமைகளையும் சூழ்ச்சிகளையும் திருநாவுக்கரசர் தமது திருத்தொண்டின் வலிமையினாலே வென்றார்.அத்தகையவரின் திருபெயரயா வேறொரு பெயர் என்று சொல்கிறீர்கள்? சிவபெருமானின் திருவடியின் கீழ் அன்புடன் செய்யும் திருத்தொண்டின் மூலமாக இப்பிறவியிலும் நாம் கடைத்தேறலாம் என்று நினைத்து திருநாவுக்கரசர் என்று பெயர் எழுதினேன்" என்றார்.
           அவருடைய அன்பின் பெருமையை திருநாவுக்கரசர் உணர்ந்து "புறச்சமயமான சமணத்துறையில் நான் முன்பு பிரவேசித்து விட்டேன்.அதை தடுப்பதற்காக சிவபெருமானால் பெருஞ்சுலை நோய் தரப்பட்டு அவரருளால் ஆட்கொள்ளப்பட்டு பாக்கியம் பெற்றிருந்தாலும் சிறு தொண்டன் நான் என்றார்.
         அவருடைய வார்த்தைகளை கேட்டு அவர் தாம் திருநாவுக்கரசர் என்பதை அப்பூதியடிகள் அறிந்து கொண்டார்.தம் இரு கைகளையும்   தலைமேல் குவித்து ஆனந்த கண்ணீர் அருவியாக பெருகி வழிய வாய் குழற உடம்பெல்லாம் புல்லரிக்க தரையில் அப்படியே விழுந்து திருநாவுக்கரசரின் திருவடிகளை தம் தலை மீது வைத்தார்.
          அதன் பின் அப்பூதியடிகளார் திருநாவுக்கரசரை தம் வீட்டிற்க்கு அழைத்து சென்று அவர் தம் திருவடிகளை தமது மனைவி மக்களுடன் வாசனை நீரால் சுத்தம் செய்து அந்நீரை அவர்கள் எல்லோர்க்கும் தங்கள் தலை மீது தெளித்துக்கொண்டு மகிழ்ந்தார்கள்.சுவாமிகளை ஒரு பீடத்தில் அமர செய்து அன்னம் ஏற்கவேண்டும் என்று அப்பூதியடிகள் வேண்டினார். தம் மனைவியாரை பார்த்து ஆண்டவன் அருளால் பெறுவதற்கரிய பேரு பெற்றோம்.என்று கூறி மிகவும் மகிழ்ந்து சமைக்க புகுந்தார்.அறுசுவை கறிகளாக்கி இனிய அன்னம் வடித்து அமுதமாக்கினார். உணவு பரிமாற இலை விரிப்பதர்க்காக தம் பிள்ளைகளில் மூத்த திருநாவுக்கரசரை கூப்பிட்டு வாழை இலை அரிந்து கொண்டு ஓடி வா என்று சொல்லி அனுப்பினார்.
         பெற்றோர் சொல்படி திருநாவுக்கரசு என்ற பெயர் கொண்ட மூத்த மகன் கொல்லைப்புற தோட்டத்திற்கு விரைந்து ஒரு பெரிய வாழை குருத்தை அரிந்தான். அப்போது ஒரு பாம்பு அவன் கையை தீண்டி சுற்றிக்கொண்டு கண்ணில் கனல் எரிய படமெடுத்தபடி இருந்தது.(தொடரும்)

Friday 9 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 27

இந்த புராணத்தில் விஷ்ணுவின் அவதாரங்களும் மகிமைகளும் வர்ணிக்கப்பட்டுள்ளன. இவை உலக தாபங்களையும் துக்கங்களையும் தணிக்ககூடியவை.இதை கேட்பவர்களும் சொல்பவர்களும் புனிதமாகி விடுவார்கள்.
          எல்லையற்ற இறைவன் உவமை அற்றவர், தெவிட்டாத பேரின்பமானவர். அவரிடம் பக்தி கொண்டு விட்டால் இப்பிறவி எடுத்த பலனை அடைந்து விட்டோம் என்பதை அறிய வேண்டும்.உலகியல் சந்தோசங்கள் இதற்க்கு முன் தூசி பெறாதவை.இதை விட மேலானது எதுவும் இல்லாததால் இனி எதையும் அடைய தேவையில்லை.
         ஒரு வீட்டில் அல்லது ஓர் இடத்தில பகவானின் திருநாம குணங்களை பாடி ஒலிக்கசெய்யும்   போது அங்குள்ள சூழ்நிலையே மாறிவிடும்.தீமைகளும் தீய எண்ணங்களும் அங்கிருந்து ஓடி விடும்.
        பகவான் நாமங்களை உச்சரித்தால் பாவங்கள் நாசப்பட்டு போகின்றன.மரண காலத்திலோ எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.நிச்சயம் அந்த ஆத்மா நற்கதி அடையும்.பகவானை ஆராதிக்கும் பொது பத்து குற்றங்களை செய்ய கூடாது.
  1. சான்றோர்களை நிந்திப்பது,
  2. பகவான் நாமங்களை தரக்குறைவாக பேசுவது அல்லது அவமதிப்பது,
  3. குருவை அவமதிப்பது,
  4. சாஸ்திரங்களை நம்பாமல் குற்றம் காண்பது,
  5. பகவான் நாமங்களின் மகிமையை நம்பாமல் இருப்பது,
  6. பக்தி  இல்லாத  தானம்,விரதம்,யாகம் எல்லாம் பகவான் நாமங்களுக்கு ஈடாகாது என்று சொல்வது,
  7. பகவான் நாமங்களை பஜனை செய்ய பிடிக்காதவர்களிடம் பக்தியை பற்றி பேசுவது,உபதேசிப்பது,
  8. இறைவனை நினைத்து உருகாத மனம் படைத்தவரை நிர்பந்திப்பது.
  9. பகவானின் பூஜைக்காக பணம் வசூலித்து அதை கொள்ளை அடிப்பது,
  10. அகந்தை கொண்டு பணியாமல் இருப்பது. 
ஸ்ரீ பாகவத புராணம் கூறுகிறது:
          பகவான் நாமத்தை எப்படி நினைத்தாலும் அது தன சக்தியை அவசியம் வெளிப்படுத்தி விடும்.நெருப்பின் சக்தியை தெரியாமலும் அதை தொட்டால் அதன் சக்தியை காட்டி விடும்.
         அது போல பகவானின் பெயரால் வேறு ஒருவரை அழைத்தாலும் அல்லது கேலி செய்தாலும் அல்லது வேறு விஷயங்கள் பேசும்போது நடுவில் அறியாமையில் பகவானின் பெயரை உச்சரிக்கபடுவதாலும் அந்த திரு நாமத்திற்கு சக்தி குறையாது.அதாவது எந்த சூழலிலும் மனிதர்கள் பாவம் அழியும்.
          பகவானின் மகிமையை புகழ்பாடும் அனைத்து புராணங்களும் திருநாமங்களை பற்றி பெருமை பேசுகின்றன.எல்லா தெய்வங்களுக்கும் ஆயிரம் திருநாமங்கள் உள்ளன.பாகவத புராணத்தில் தன தாயிடம் கபில முனிவர் கூறுகிறார்: 
" பகவான் நாமங்களை உச்சரிப்பவன் புலயனாக இருந்தாலும் அவன் மேன்மை அடைகிறான்.அவன் தவங்களை செய்து விட்டான்.கங்கை முதலிய ஆறுகளில் நீராடிவிட்டான்,யாகங்கள் செய்து விட்டான்,வேதங்களை ஓதி விட்டான்,இதை அறிந்து கொள்க,அவர் மேலும் கூறுகிறார்:
         மனிதன் நடந்து கொண்டிருக்கும் போது தடுக்கி விழுந்தால் ஹரி,ஹரி,என்று ஹரே நமஹா என்று சொல்ல வேண்டும்.அல்லது ராம,ராமா என்று உச்சரிக்கவேண்டும்.வலியால் துடிக்கும் போதும் ஹரி ஹரி அல்லது இஷ்ட தெய்வங்களான சிவா சிவா என்றோ கூற வேண்டும். இவ்வாறு பழகி விட்டால் பழக்கம் காரணமாக தன்னை அறியாமல் பகவான் நாமம் வாயிலிருந்து வந்தால் எல்லா பாவங்களும் கழுவப்படும்.
          பகவான் நாமங்களை உச்சரிக்கும் போது முடிவில்லா பரம்பொருளான இறைவன் நிச்சயமாக  செவிமடுக்கிறார்.ஆபத்து காலத்திலோ அல்லது தேவைப்படும் போதோ பக்தர்கள் ஹரி நாமத்தை உச்சரித்து அழைத்தால் இறைவன் நிச்சயம் அங்கு வருவார்.பிரத்யட்சமாக தெரியாவிட்டாலும் அவர் அருளை நிச்சயமாக அங்கு உணர முடியும்.ஆபத்துகள் விலகும்.துன்பத்தில் மாட்டிக்கொள்பவர்கள் நிச்சயம் அதிலிருந்து விடுபடுவார்கள்.இது சத்தியம்.
மேலும் பகவான் திருநாமங்களை உச்சரிக்கும் போது பகவான் அவர் சித்தத்தில் அமர்ந்து பாவங்களையும் அஞ்ஞான இருளையும் அழித்து விடுகிறார்.சூரிய ஒளி பரவும் போது இருள் காணாமல் போகிறதல்லவா?
                                                                                     (தொடரும்)
        

Thursday 8 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 26

"லோகே அபி பகவத்குணச்ரவண கீர்தனம்" 
உலகில் மனித சமுதாயத்தின் நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது மனதில் இறைவனை சுமந்து கொண்டே இருக்கவேண்டும்.அவனுக்காக எல்லா பணிகளையும் செய்ய வேண்டும்.காதால் அவன் புகழ் கேட்கவும் வாக்கால் அவன் புகழ் பாடவும் அதிகநேரம் செலவிடவேண்டும்.அவ்வாறு செய்யும் போது வெட்டிபேச்சுகளிலும் வீண் விவகாரங்களிலும் ஈடுபட வாய்ப்பிருக்காது.
         சுயநலத்திற்காக பொருளீட்டுவதற்காக பணத்திற்கு பின்னால் போகும்  
மனிதர்கள் சொந்த சுகத்திற்காக உயிர் வாழ்ந்து இறக்கும் மனிதர்கள் சாரமில்லாத உலகில் எதை சாதித்தார்கள்.இவர்கள் ஐந்து அறிவு இரண்டறிவு ஓரறிவு படைத்த மிருக பட்சி ஜீவா ஜந்துக்களை விட கீழானவர்கள்.ஏனெனில் மிருக பட்சிகளுக்கு சூதும் பொய்யும் தெரியாது.பிறரை வஞ்சிக்க தெரியாது.
        பகவான் சம்பந்தப்பட்ட இல்லாத கதைகளும் பேச்சுக்களும் உலகவாழ்க்கைக்கு தேவையாக இருக்கலாம்.ஆனால் இறைவனை நெருங்க வேண்டும் என்று பக்தி செய்பவர்களுக்கு அவை வீணானவையே.பகவானின் திருநாமங்களும் குணங்களும் அடங்கிய பாட்டு அதுவே புண்ணியமும் மங்களமும் தரும்.இதுவே சாத்தியமானது.அந்த மகிமையை அறிந்தவர்களுக்கு ரம்யமாகவும் சலிக்காமலும் நித்தமும் புத்தம் புதிதாகவும் இருக்கும்.மனதிற்கு இன்பம் தரும்.அதை மனதில் பக்தியுள்ளவர்களே அனுபவிக்க முடியும்.ஆனந்தமாக அதை ஏற்றுக்கொள்பவர்களுக்கு துக்ககடலில் இருந்து கரை சேரும் உணர்வு ஏற்படும்.
       பகவானின் பஜனையில் கலந்து கொள்பவர்கள் சிரத்தையுடன் திருவிளையாடல் புராண கதைகளை கேட்பவர்கள் நிச்சயம் பக்தர்களாகி விடுவார்கள்.பாகவத புராண முடிவில் சுகதேவர் கூறுகிறார்.(தொடரும்)

Wednesday 7 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 25

திருநாவுக்கரசர் முன் அலங்காரமாக வந்து நின்றார்கள்.வில் போன்ற நெற்றி விளைநதிழுக்க கான அமுதம் பொங்கும் கொல்வய் கனிவாய் ஒளிவீச கவர்ந்திழுக்கும் கண்கள் மின்னலிட அப்பெண்கள் இன்னிசை பாடினார்கள்.கற்பக பூந்தளிர் போன்ற காலடிகளால் மோக நடிப்புடன் அவர்கள் நடனமாடவும் தொடங்கினார்கள்.அப்சரசுகள் அப்பரின் முன் நடனமாடி பூமாரியை அவர் மீது அள்ளி பொழிந்தார்கள்.அரம்பையர்கள் பலவிததாலும் அப்பரின் மனநிலையை கவர்ந்திழுக்கவும் குலைக்கவும் முயன்றார்கள்.ஆனால் சிவபெருமானின் திருவடிகளில் சிறிதும் அகலாத அன்பு செலுத்தும் பெருந்துரவியாரான அப்பரோ அந்த பேரின்ப நிலையிலேயே நினைவெல்லாம் நிலைத்திருக்க தமது சித்த நிலை சிறிதும் மாறுபடாமல் தம் திருதொன்டிலேயே நிலையாக நின்றார்.அவருக்கு மங்கையரும் சிவமாகவே தென்பட்டார்கள்.

          மனதில் வேறு ஆசைகளை வைத்துக்கொண்டு வெளிப்பார்வைக்கு கோவிலுக்கு சென்று பக்தி கொள்வது போல இருப்பது வெளிவேசமாகும்.பகவான் மீது அன்பு இதயத்தில் இருந்து வரவேண்டும்.உள்ளம் உருகி பாட வேண்டும்.உலக விசயங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் இறைவன் பக்தியார் உருவாகும் பரமானந்தத்தை அறிய மாட்டார்கள்.அது போல இறைவன் பக்தி என்ற தேனை குடித்த பக்தர்கள் உலகியல் விஷயங்கள் என்ற கரும்பு சாற்றை நோக்கி போக மாட்டார்கள்.
         "அவ்யாவ்ருத பஜனாத் "
          பக்தி பகவத் பிரேமையினால் வருகிறது என்பது உண்மை தான்.அது மாறாத பக்தியாக உருவாக வேண்டுமானால் அகண்ட பஜனை அதாவது இடைவிடாத பஜனை செய்ய வேண்டும்.
          இந்த மனம் மிக மோசமானது.இதில் மிருககுணமும் உண்டு.தேவ குணமும் உண்டு.இதை இழுத்து பிடித்து பகவான் திருவடிகளில் பதிய வைக்க வேண்டும்.இல்லையேல் நொடியில் அது வேறு விசயங்களை நோக்கி ஓடி விடும்.அதற்க்கு மனம் வைராக்கியம் அடைந்து பக்குவப்படவேண்டும்.
         தியானம்,பஜனை இன்று செய்தோம்,நாளை செய்யவில்லை என்று இருக்ககூடாது.அது தொடர்ச்சியாக நடைபெறவேண்டும்.
         கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் இதையே கூறுகிறார்.
        அனன்ய பக்தி கொண்டு என்னை என்றும் நினைப்பவர்களுக்கு நான் சுலபமாகிவிடுகிறேன்.ஏனெனில் அவர்கள் மிக உறுதியாக இருக்கிறார்கள்.
இறைவனை நினைத்து நினைத்து அகண்ட பஜனை செய்வார்கள்.
         அன்றாட வேலைகள் செய்யும் போதும் (ஸ்நானம்,போஜனம்)வேறு பல கடமைகள் செய்யும் போதும் பகவானின் திருநாமங்களை ஜபித்துக்கொண்டே இருப்பார்கள்.உயிர் மூச்சில் நாம ஜபம் கலந்து விடும்.(தொடரும்)

Tuesday 6 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 24

ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் ஆத்மா ஆனந்த ரூபமானது.அது அன்பு மயமானது.ஏனெனில் ஆத்மா,பரமாத்மா இறைவனின் அம்சம் தான்.இறைவன் பரமானந்த சொரூபமானவர்.பரம பிரேமை என்ற அன்புமயமானவர்.
         ஜீவனில் சித்தம் ஆசை,துக்கம்,கிலேசம் முதலிய வற்றை பற்றிக்கொள்ளும் போது அது கலங்கி போகிறது.அதில் தெளிவு ஏற்படாது.ஆதலால் துக்கத்தை தரும் ஆசைக்கு அடிமையாகி விடுகிறது.ஆதலால் சித்தத்தில் பரமாத்மனின் தெய்வீக சொரூபத்தின் ஒளி பிரதிபலிக்காமல் இருக்கிறது.அந்த ஆத்ம ஜோதி தெரிய வேண்டுமென்றால் விசயங்களை நோக்கி ஓடும் எண்ணங்களை இறைவன் பால் திருப்ப வேண்டும்.அதற்க்கு இரண்டு உபாயங்கள் இருக்கின்றன.மற்ற உலக விஷய ஆசைகளை துறக்க வேண்டும்.உலக விஷய சுகங்களில் ஈடுபட்டுக்கொண்டே பக்தி செலுத்த முடியாது.பற்றில்லாமல் உலகில் கடமைகளை செய்துகொண்டு பக்தி செய்ய  முடியும். ஏனெனில் இறைவன் ஒருவரே அன்புக்கும் ஆசைக்கும் உரியவர்.அவரிடம் மட்டும் பிரியம் வைக்க வேண்டும்.ஏனெனில் நான்,எனது என்று நினைக்கும் போது தான் அங்கு ஆசை உண்டாகிறது.பகவானின் பக்திக்கு முன் நான் என்பது எங்கே வரும்?நான் பகவானுக்கு சொந்தமாகிவிட்டேன் அல்லவா,எனது என்பதும் இல்லை,ஏனெனில் எனது என்பது உலகில் எதுவும் இல்லை.எனக்கு சொந்தமானது அனைத்தையும் அவர்க்கு அர்ப்பணித்து விட்டேன் அல்லவா.
          புலன் வழி சுகங்களில் மனதை செலுத்தினால் அவற்றில் மனம் சிக்கிக்கொள்ளும்.விசயதியாகம் என்ற சூத்திரத்தில் சொல்லப்பட்டது.பகவான் சம்பந்தமான விசயங்களை நாம சங்கீர்த்தன பஜனை வழிபாடு ஆகியவற்றிற்கு எதிரான விஷயங்கள்.
         மின்னுவதெல்லாம் பொன்னென்று எண்ணிப்பார்க்கும்போது மனதை பிரவிபெருங்கடலில் வீழ்த்திவிடும். ஆதலால் சான்றோர்களை சேவிக்கவேண்டும்.பக்தர்களோடும் நல்லவர்களோடும் நட்பு கொண்டு வாழவேண்டும்.முடிந்தவரை இது பகவானின் கட்டளை என்று நினைத்து பலனை கருதாமல் கடமைகளை செய்யலாம், அது தியாக வாழ்க்கைக்கு சமமாகும்.
            ஒரு சமயம் திருநாவுக்கரசர் மதுரையிலிருந்து புறப்பட்டு திருப்புவனம் ராமேஸ்வரம்,திருநெல்வேலி, திருகாளாப்பெர் முதலிய திருப்பதிகளை கண்டு வணங்கி ஆங்காங்கே திருப்பதிகங்களை பாடித்தந்து பாண்டியநாட்டை விட்டு சோழநாட்டை அடைந்து திருப்புகலூர்க்கு வந்து சேர்ந்தார்.. அங்கேயே தங்கி இருந்து பல திருப்பதிகங்களை பாடியவண்ணம் வழிபாடு செய்தார்.
          அவருடைய பற்றற்ற நிலையினை உலகுக்கு எடுத்துக்காட்ட சிவபெருமான் விரும்பினார்.அதனால் திருநாவுக்கரசர் உலவாரதிருப்பணி செய்யும் இடங்களில் எல்லாம் பரர்கற்களோடு   செம்பொன்னும் நவமணிகளும் தோன்றி விளங்கும்படி சிவபெருமான் அருள் செய்தார்.அப்பர் அவற்றை எல்லாம் பருக்கை கற்களோடு சேர்த்து கூட்டி உலவாரத்தில் ஏந்தி தடாகத்தில் வீசி எறிவார்.புல்லுக்கும்,கல்லுக்கும், பொன்னுக்கும் மணிக்கும் சொல்லை தவிர எவ்வித வேறுபாடும் இல்லை என்னும் பற்றுஅற்று நிலையில் இருந்தார்.அப்பரின் இந்த தூய துறவு நிலையை மென்மேலும் விளங்கசெய்ய பூம்புகலூர் புண்ணியனார் விரும்பினார்.
          அவருடைய திருவருளினால் விண்ணுலகத்து தேவதாசிகள் வானகத்தில் இருந்து இறங்கும் மின்னல் கொடிகள் போல மன்னுலகத்திர்க்கு   வந்தார்கள்.
                                                                                                               (தொடரும்)
                                                                

Monday 5 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி23

          இவர்கள் பக்திக்கு இருப்பிடமான இறைவனுடன் இரண்டற கலந்து விடுகிறார்கள்.மற்ற ஞானம் முதலிய விஷயங்கள் முக்கியமில்லாமல் போய்விடுகின்றன என்று நாரதர் கூறுகிறார்.
        "ஸ்வயம் பலரூபதேதி ப்ரஹ்ம குமாரா:"  
          சனகாதி முனிவர்களும் ஸ்ரீ தேவரிஷி நாரதரும் பக்தியால் தான் பக்தியின் உயர்ந்த நிலைக்கு போக முடியும் என்கிறார்கள்.பக்தியே சிறந்த பக்தி என்ற பலனை தருகிறது.ஆதலால் (அதுவே)பக்தி தாமே பலனாக இருக்கிறது.பக்தர்கள் பக்தியை வளைக்கவே மேலும் பக்தி செய்கிறார்கள்.அதாவது இறைவனை நேசிக்கிறார்கள்.பக்தி இயற்கையாகவே தாமாக வருகிறது.அதை விட சிறந்தது எதுவும் இல்லை.அது ஆண்டவனையும் வசப்படுத்தி விடுகிறது.
       "  ராஜ க்ருஹ போஜனாதிஷு ததைவ த்ருஷ்டத்வாத் 
ந தேன ராஜ பரிதோஷ: க்ஷ்தாசாந்திர்வா "
          அரசனின் அரண்மனையும் ராஜ போக உணவும் நன்கு அறிந்து கொள்ளும் போது அதை பற்றி முழு ஞானம் தான் ஏற்படுகிறது.ஆனால் அனுபவ பூர்வமாக உணர முடியாது.அதாவது அரசனின் அரண்மனை பற்றியும் அரசனை பற்றியும் அறிந்து கொண்டால் அரசனை மகிழ்விக்க முடியுமா?
          அரசன் அறங்காவலன் மிகுந்த படை பலம் பெற்று வலிமையானவன்.குடிமக்களுக்கு நன்மை செய்பவன் என்று தெரிந்து கொண்டால் அரசனிடம் நட்பு கொண்டாட முடியாது, அல்லது அரச போக உணவை அறிந்து கொண்டால் பசி தீராது.அது போல வேத சாஸ்திரங்களை படித்து இறைவனை தத்துவார்த்தமாக அறிந்து ஞானம் பெற்றாலும் அந்த இறை அனுபவம் கிட்டாது. இறை அனுபவம் தியானத்தாலும் யோகத்தாலும் மட்டுமே கைகூடும்.இறைவனை தியானித்துக்கொண்டு இருந்தால் பிரேமை பக்தி முற்றிய நிலை அடையும்.அதனால் உள்ளம் கரைந்து இறை அனுபவம் உண்டாகும்.
         பகவத் கீதையில் பகவான் கூறுகிறார்:
பக்தி மிக கொண்டு என்னை தொழுதால் நான் அவர்கள் உள்ளத்தில் குடியிருப்பேன்.அவர்களும் என்னுள் இருப்பார்கள்.
 "தஸ் மாத் சை(सै )வ க்ராஹ்யா முமு க்ஷூ பி " 
          பிறப்பு இறப்புகளில் இருந்து பற்று என்ற பந்தத்திலிருந்து விடுபட் வேண்டுமானால் பக்தியை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
         பிரேமை பக்தியோடு தன வாழ்க்கை யை இணைத்து கொண்டால் பகவானின் தெய்வீகத்தை பிரத்யட்சமாக உணரலாம்.மேலான பக்தியில் ஈடுபட தியாகராஜ சுவாமிகளும் புரந்தர தாசரும் ஆண்டவனை பிரத்யட்சமாக கண்டார்கள்.அவர் அருளை பெற்று சித்தி அடைந்தார்கள்.யோகிகளும் முனிவர்களும் சிரமப்பட்டு கிடைக்கும் முக்தி பக்தர்கள் முன் அடிமை போல வந்து விடுகிறது.ஆனால் பக்தர்களோ முக்தியை விரும்ப மாட்டார்கள்.பகவானை தான் விரும்புவார்கள்.இப்படிப்பட்ட உயர்ந்த நிலைக்கு கொண்டு போகும் பக்தி மார்க்கத்தை விட்டு வேறு மார்க்கத்தை ஏன் பின்பற்ற வேண்டும்?
      "தஸ்யா ஸாதனானி காயன்த்யா சார்யா:"  
கர்மயோகத்தையும் ஞானத்தையும் விட பக்தியே சிறந்தது என்று கூறிவிட்டு பக்தி யோகத்தை கூறும் நாரதர் பக்தி மார்க்கத்தை பின் பற்றும் ஆச்சாரியர்கள் உபதேசிக்கும் உபாயங்களை கூறுகிறார்.
       " தத்து விஷயத்யாகாத் ஸ ங்கத்யாகாச்ச"
பக்தியோக வழியில் செல்ல வேண்டுமானால் ஆசைகளை தூண்டும் விசயங்களை துறக்க வேண்டும்.அந்த இன்பம் என்று கருதப்படும் விசயங்களில் ஒட்டுதல் இல்லாமல் இருக்க வேண்டும்.(தொடரும்)