யோகனுஷ்டானம் செய்து மோட்சம் கிடைக்கும் தருவாயில் இப்படி ஒரு தடை வந்ததை அவர் உணரவில்லை.மாபெரும் சாம்ராஜ்யம், அரண்மனை,மனைவி,மக்களையும் துறந்து மோட்சம் அடைந்து இறைவனடி சேர யோக தவம் செய்வதற்காக அல்லவா காட்டிற்கு வந்தார்.வேறு ஜாதியில் பிறந்த இந்த மான்குட்டி பாசத்தில் ஏன் சிக்கவேண்டும்.இதை வினைப்பயன் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?தவிர்க்க முடியாத மரண காலம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை.வியாதியும் மரணமும் சொல்லிக்கொண்டு வருவதில்லை.சர்பம், எலி வலைக்குள் நுழைவது போல அது எங்கும் வந்து விடும்.அந்த மரணத்தருவாயில் பரதன் படுத்துக்கிடந்தார்.அந்த மான், தான் பெற்ற மகன் போல பக்கத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தது.பரதன் பாசத்துடன்அந்த மானை பார்த்துக்கொண்டேஉயிர் துறந்தார்.
அந்திம காலத்தில் வரும் நினைவுகளின் பலனால் அடுத்த ஜென்மத்தில் சாதாரண மனிதர்களுக்கு கிடைக்கும் கதி போல மானாகவே பிறந்தார்.ஆனால் தான் செய்த தவப்பயனால் அவருக்கு போன ஜென்மத்தின் நினைவுகள் மறையவில்லை.அவர் மிகவும் வருந்தினார்.மனதையும் புலன்களையும் தன் வசம் கட்டுப்படுத்திய மகான்களின் பாதையில் போய் கொண்டு இருந்தேன்.ஆசைகளை துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டேன்.சகல உயிர்களுக்கும் ஆத்மாவாக இருக்கும் பரம்பொருளை நோக்கி எனது மனம் அறிவு புலன்கள் அனைத்தயும் செலுத்தினேன்.அதில் உறுதியாக நின்று தவமியற்றி கொண்டிருந்த நேரத்தில் திடீரென என் மனம் ஒரு மான்குட்டியை நோக்கிச்சென்று பாதை மாறிப்போய்விட்டது.என்று நினைத்து வருந்தினார்.
மானாக பிறந்தவுடன் தன் தாயை விட்டு பிரிந்து முன்பு இருந்த அதே புலஹாசிரமத்திற்க்கு வந்தார்.சாலக்கிராம நதி தீர்த்தக்கரையில் சிலகாலம் காய்ந்த புல்,இலை சருகுகளை உண்டு விதிவசத்தால் வரும் மரணத்தை நோக்கி காத்திருந்தார்.இனி எதிலும் பற்று வைக்ககூடாது என்று மிக எச்சரிக்கையுடன் இருந்தார்.பின்பு எதையும் உண்ணாமல் கண்டகி நதியில் பாதி தேகம் வரை மூழ்கி இருந்தார்.சிலநாட்களுக்கு பின் முழுவதும் மூழ்கி மான்தேகத்தை துறந்தார்.
ஆங்கிரஸ கோத்திரத்தில் ஒரு பிராமணர் வேதங்களை கற்றுணர்ந்து தவமும் ஒழுக்கமும்,நற்குணங்களும் நிறைந்து இருந்தார்.அவரது மனைவி ஒரு பெண்ணையும், ஒரு ஆண் குழந்தையையும் இரட்டையர்களாக பெற்றாள். அந்த ஆண்குழந்தை தான் பரதன் என்று ஞானிகள் கூறினார்கள்.பரதன் செய்த தவப்பலனால் முன் ஜன்ம நினைவுகள் மறையாமல் இருந்தது.இந்த ஜன்மத்தில் எந்த பற்றிலும் சிக்கிக்கொள்ளகூடாது என்று நினைத்து பரதன் எவர் குணங்களை தியானித்து துதி செய்தால் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்குமோ அந்த பகவானின் திருவடிகளை மனதில் பதிய வைத்து எப்போதும் திக் பிரமை பிடித்தது போல தனித்து இருப்பார்.
அவர் தந்தை மகனுக்கு வேதங்களை கற்பித்து அவரை வித்தகனாக ஆக்க வேண்டும் என்று பெரிதும் முயன்றார்.ஆனால் அவர் அறிவில்லா மந்த புத்தி உள்ளவர் போல காட்டிக்கொள்வார்.எதையும் மனப்பாடம் பண்ண முடியாதவர் போல கல்வியில் நாட்டம் இல்லாதவர் போல இருந்தார்.தன்மகனை நல்ல கல்விமானாக்க விரும்பிய தந்தை காலப்போக்கில் தான் விரும்பியது நிறைவேறாமல் மரணமடைந்து விட்டார்.இனி பாடங்களை படி என்று எவரும் சொல்லவில்லை.சுற்றத்தாரும் அவர் மூத்த அண்ணன் மார்களும் ஞானமார்கத்தை அறியாத காரணத்தால் இவரை புத்திசுவாதீனம் இல்லாதவர்,காது கேட்காதவர் என்று ஒதுக்கினார்கள்.
பயிர் செய்யும் நிலத்தின் சொந்தக்காரர்கள் இவரை அழைத்து வயலில் வேலைசெய்யச்சொன்னார்கள். அதற்க்கு கூலியாக உணவு அளித்தார்கள்.எவர்
எப்படிப்பட்ட உணவை கொடுத்தாலும் ருசி பார்க்காமல் பரதன் சாப்பிட்டு விடுவார்.இதை பார்த்து அண்ணன் மார்கள் தன் சொந்த வயலில் ஜடமாக தோற்றமளித்த ஞானி பரதனை அழைத்து வேலை செய்ய சொன்னார்கள்.அவர் கண்மூடித்தனமாக வேலை செய்தார்.வெயிலோ மழையோ எந்த இடத்திலும் படுத்து உறங்குவார்.
ஒரு சமயம் கொள்ளைகாரர்கள் தலைவன் தமக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு காளி தேவி கோவிலுக்கு சென்று நரபலி கொடுப்பதாக வேண்டிக்கொண்டான்.பலி கொடுப்பதற்காக ஒரு மனிதனை பிடித்து அடைத்து வைத்திருந்தனர்.அந்த பலியிடவேண்டிய மனிதன் உயிரை காப்பாற்றிக்கொள்ள எப்படியோ தப்பி ஓடி விட்டான்.தலைவனின் சேவகர்கள் அவனை தேடினார்கள்.அவன் எங்கும் கிடைக்காமல் போகவே அவர்கள் கண்களில் பரதன் தென்பட்டார்.அவரை மான்கள்,காட்டுப்பன்றிகள் முதலிய மிருகங்கள் வராமல் இருக்க காவலுக்கு வைத்தார்கள்.அவர் எதையும் கவனிக்காமல் அமர்ந்திருந்தார்.கொள்ளையர்கள் நீர் பிராமணரா?என்று எதையும் விசாரிக்காமல் நரபலிக்கு ஏற்ற சர்வ லக்ஷணங்களும் பொருந்திய ஒரு மனிதன் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து அவரை பிடித்துக்கொண்டு வந்தனர்.
அவர்கள் நரபலி கொடுக்கும் முறைப்படி பரதனை மஞ்சள் நீராட்டி சந்தனம்,மாலை,புதுவஸ்திரம்,தூபதீபங்கள் காட்டி,தாரை,தப்பட்டைகள் முழங்க கோவிலுக்கு அழைத்து வந்தார்கள்.பரதனை பலிபீடத்தில் கிடத்தி காளியம்மனை துதித்து ரத்தத்தால் திருப்திப்படுத்த மந்திரம் ஜபித்து பூசாரி கூறிய அரிவாள் எடுத்து வெட்டப்போனார்.தெய்வங்களுக்கு பிராமணரை பலியிடுவதை சாஸ்த்திரங்கள் தடைவிதிக்கின்றன.சாதாரணமாக ஆபத்து காலத்திலும் பிராமணர்களை கொலை செய்வது பெரும்பாவம் என்று இருக்கும்போது போனஜன்மத்திளிருந்தே தவமும் யோகமும் செய்து பரமாத்மாவுடன் ஒன்றிய நிலை அடைந்தவர் பரதன்.எந்த பாவமும் அறியாத நல்லவர்.இந்த ஜென்மத்தில் பிராமணராக பிறந்து பகவத் சிந்தனையில் மூழ்கி இருப்பவர்.அப்படிப்பட்டவரை பலியிட போகும்போது காளிதேவிக்கு திருமேனிஎங்கும் நெருப்பு பட்டு பற்றிஎரிவது போல இருந்தது.அந்த பிரம்ம தேஜசை பொறுக்காமல் விக்கிரகத்தை உடைத்து காளிதேவி ஆத்திரம் கொண்டு வெளிப்பட்டாள். கோபத்தில் கண்கள் சிவந்து தாடை பற்கள் தெரிய பயங்கரமாக இருந்தாள்.
மேலும் தன் கணங்களோடு பாய்ந்து வர உலகையே சம்ஹாரம் செய்யப்போவது போல வந்தாள். அட்டகாசமாக சிரித்து குதித்தாள்.வெட்டப்போன அரிவாளை பிடுங்கி அந்த அரிவாளை கொண்டு அங்கு கூடியிருந்த கொள்ளையர்கள் தலைகளை தன் கணங்களோடு சேர்ந்து வேட்டித்தள்ளினாள்.காளிதேவியும் கணங்களும் சேர்ந்து தலைகளை பந்தாடினார்கள்.அவர்கள் ரத்தத்தை குடித்தார்கள்.(தொடரும்)
மேலும் தன் கணங்களோடு பாய்ந்து வர உலகையே சம்ஹாரம் செய்யப்போவது போல வந்தாள். அட்டகாசமாக சிரித்து குதித்தாள்.வெட்டப்போன அரிவாளை பிடுங்கி அந்த அரிவாளை கொண்டு அங்கு கூடியிருந்த கொள்ளையர்கள் தலைகளை தன் கணங்களோடு சேர்ந்து வேட்டித்தள்ளினாள்.காளிதேவியும் கணங்களும் சேர்ந்து தலைகளை பந்தாடினார்கள்.அவர்கள் ரத்தத்தை குடித்தார்கள்.(தொடரும்)