ஆனால் என்னை போன்ற ஆசாபாசங்களிலும் அறியாமையிலும் கிடந்தது அவதியுறும் பாலகனுக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது பெரியம்மாவின் கடுஞ்சொற்கள் இப்போதும் என் இதயத்தை துளைக்கின்றன.மகரிஷியே இதுவரை என் தந்தையும் மூதாதையரும்,வேறு எவரும் அடைந்திராத பெரிய பதவியை பிடிக்க ஆசை படுகிறேன்.அது மூவுலகிலும் சிறந்ததாக இருக்க வேண்டும்.அதற்க்கு ஒரு வழி சொல்லுங்கள். தாங்கள் உலக நன்மைக்காக அனைவரையும் நல்வழிப்படுத்தும் தேவரிஷியாக சஞ்சரிகிரீர்கள் என்றான்.
நாரதர் கூறினார்.நீ உறுதியாக இருப்பதை அறிந்து கூறுகிறேன்.உன் தாய் சொன்னது போல நாராயணன் அருளை பெறுவதற்காக நீ தவம் செய்ய வேண்டும்.இங்கிருந்து யமுனைகரையில் இருக்கும் மது வனம் செல்வாய்.அங்கு நீராடிவிட்டு யோக முறைப்படி பிரணாயாமம் செய்வாயாக.புலன்களையும் மனதையும் எங்கும் செல்ல விடாமல் இதயத்தில் நாராயணனை தியானம் செய்ய வேண்டும்.பகவானை பாதாதி கேசம் வரை ஒவ்வொரு அங்கங்களையும் அவருடைய ஒளி வீசும் தெய்வீக திரு மேனியையும் நான்கு கரங்களில் இருக்கும் ஆயுதங்களையும் தியானம் செய்ய வேண்டும்.என்று கூறி நாரதர் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தை துருவனுக்கு உபதேசம் செய்தார்.காட்டில் கிடைக்கும் பழங்களாலும் மலர்களாலும் பகவானை பூஜிக்கும் முறையையும் சொன்னார்.
துருவன் அவரை வலம் வந்து வணங்கி நின்றான்.நாரதர் அவன் முயற்சி வெற்றி பெற வாழ்த்து கூறி மறைந்தார்.
நாரதர் அங்கிருந்து அரசன் உத்தான பாதரிடம் வந்து கூறினார்.:"தங்கள் முகம் கவலையுடன் தென்படுகிறதே ஆட்சியில் அல்லது நாட்டில் ஏதாவது பிரச்சனையா?" என்று வினவினார்.
அரசன் கூறினான்."மகரிஷியே என் மகனை காணவில்லை.அவன் எங்கு சென்றான் என்று ஆட்களை விட்டு தேடியும் கிடைக்கவில்லை.நான் தவறு செய்து விட்டேனே மகரிஷி. என் மனைவியின் பேச்சை கேட்டு அவனிடம் என் அன்பை காட்ட வில்லை.ஆறு வயது பாலகனை காட்டில் விலங்குகள் கொன்று விடாமல் இருக்க வேண்டும்.பசி தாகத்தால் வாடி எந்த நிலையில் இருக்கிறானோ ? "என்றார்.நாரதர் கூறினார்:"அரசே தாங்கள் கவலை பட வேண்டாம்.அவனுடைய ஆற்றல் உமக்கு தெரியாது.அவன் தேவர்களாலும் ரிஷி முனிவர்களாலும் சாதிக்க முடியாததை சாதித்து வர போகிறான்." என்றார்.
நாரதர் சென்றவுடன் அவர் கூறியபடி துருவன் மதுவனம் சென்று நீராடிவிட்டு நாராயணனை பூஜித்தான்.ஏகாக்கிர மனதுடன் தியானம் செய்தான்.முதல் மாதம் மூன்று நாட்களுக்கு ஒரு முறை காட்டில் கிடைத்த இலந்தை முதலிய பழங்களை சாப்பிட்டு பகவானை வழிபட்டான்.இரண்டாவது மாதம் ஆறு நாட்களுக்கு ஒருமுறை உலர்ந்த புற்களையும் காய்ந்த இலைகளையும் தின்று பகவானை உபாசித்து தவம் செய்தான்.மூன்றாவது மாதம் ஒன்பது நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை பருகி தவம் செய்து சமாதியில் ஆழ்ந்தான். நான்காவது மாதம் 12 நாட்களுக்கு ஒரு முறை காற்றை புசித்து பிராணாயாம முறையில் மூச்சை அடக்கினான்.ஐந்தாவது மாதம் சுவாசத்தை முற்றிலும் வென்று விட்டான்.அச்சமயம் ஒரு பாதத்தை மட்டும் பூமியில் பதித்து தூண் போல உறுதியாக நின்று பரம்பொருளில் கலந்து தவம் செய்தான்.வானகத்திலும் வையகத்திலும் வியாபித்து சிருஷ்டி சக்தியாக இயக்கும் தேவன் பர பிரம்ம பரமாத்மாவை இதயத்தில் நிறுத்தினான்.
அச்சமயம் மூவுலகங்களும் நடுங்க ஆரம்பித்தன.எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவாக இருக்கும் பரம்பொருள் பரமாத்மா பரிபூரணமாக அவனுள் நிறுத்தப்பட்டதால் அவன் பாரத்தை தாங்காமல் பூமி ஒரு பக்கம் சாய்ந்தது.ஒரு படகில் யானை ஏறிவிட்டால் அந்த படகு எப்படி சாய்ந்து விடுமோ அப்படி சாய்ந்தது.விசுவாத்மாவின் பிராணசக்தி அவன் பிராண சக்தியில் கலந்து விட்டதால் தேவர்கள்,ஜீவராசிகள் முதலிய அனைத்து உயிர்களின் சுவாசமும் நின்று விட்ட நிலையில் தேவர்கள் ஸ்ரீஹரியை சரணடைந்தனர்.பகவானே தாவர ஜங்கம பிராணிகளுடன் தேவ மனித இன பிராணவாயு நின்று விட்டது.இதற்க்கு முன் நாங்கள் இவ்வாறு அனுபவித்ததில்லை.இந்த சங்கடத்தில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். பகவான் அவர்களை நோக்கி கூறினார்.துருவன் விசுவாத்மாவான என்னை தன் சித்தத்தில் நிறுத்தி தன்னில் என்னை கலந்து விட்டான்.அதனால் இந்த நிலை ஏற்பட்டுவிட்டது.நீங்கள் கவலையின்றி செல்லுங்கள்.அவன் தவத்தை நான் முடித்து விடுகிறேன்.என்று கூறிவிட்டு துருவன் தவம் செய்யும் இடத்திற்கு வந்தார்.
துருவன் தியானம் செய்துகொண்டிருந்த மின்னல் போல பிரகாசிக்கும் திருஉருவம் அவன் மனதில் இருந்து திடீரென மறைந்தது.அவன் படபடப்புடன் கண்களை திறந்தான்.அவன் முன் பேரொளியுடன் பகவான் நின்றிருப்பதை கண்டான்.உடனே பூமியில் தண்டனிட்டு கும்பிட்டான்.எல்லாம் வல்ல இறைவன் விஷ்ணு துருவனை கண்களால் பருகுவது போல கண்டார்.முத்தமிட்டு கட்டியனைப்பது போல நின்றிருந்த விஷ்ணுவை தரிசனம் செய்த துருவன் பகவானை எப்படி வர்ணிப்பது,எப்படி துதிப்பது என்று விழித்தான்.அதை அறிந்த பகவான் வேத சொரூபமாக இருக்கும் தன் வலம்புரி சங்கை கொண்டு துருவன் வாயில் தொட்டார்.உடனே துருவனுக்கு வேதங்களில் இருக்கும் சகல ஞானமும் வந்தது.உலக விஷய ஞானமும் தெய்வீக ஞானமும் இருப்பதால் எல்லாம் அறிந்த அறிஞன் ஆனான்.அவன் பகவானை துதி பாடினான்.பகவானே சர்வ சக்திமானான நீங்கள் என் உள்ளத்துனுள் பிரவேசித்து என் பேச்சின் ஆற்றலை உயிர்ப்பித்து விட்டீர்கள்.ஐம்புலன்களுக்கும் பிராணன்களுக்கும் உயிர் தந்து எனக்கு சக்தி அளித்து என்னை மாமனிதனாக்கி அருள் புரிந்த பகவானை வணங்குகிறேன்.என்று வித்தகர்கள் பாடும் துதியை பாடினான்.பகவான் மொழிந்தார்:உத்த விரதம் ஏற்று என்னை மகிழ்வித்த ராஜகுமாரா துருவனே உன் மனதில் உள்ள விருப்பத்தை அறிவேன்.உன் மேலான தவத்தின் பலனால்
இதுவரை எவரும் அடைந்திராத பெரிய துருவ லோக பதவியை அளிக்கிறேன்.அதனை சுற்றி தனி பேரொளியுடன் கிரக நட்சத்திர தாரகைகள் வலம் வரும்.கல்பகோடி காலத்திற்கு பிறகு மற்ற லோகங்கள் நாசமானாலும் இந்த துருவ நட்சத்திரம் நாசமாகாது.நெற்கதிர்களை அடித்து வைக்கோலை பிரிக்கும் காளை மாடுகளை போல அந்த நட்சத்திரத்தை தாரகை கணங்களுடன் தர்மம்,அக்னி,கச்யபர்,சுக்கிரன் நட்சத்திரங்கள் சப்தரிஷி கணங்கள் துருவ நட்சத்திரத்தை வலம் வந்து கொண்டிருக்கும்.உன் தந்தைக்கு பின் நீ அரசனாகி பல்லாண்டு காலம் ஆட்சி புரிவாய்.அதிக தக்ஷனைகள் கொண்ட பல யாகங்கள் செய்வாய்.இறுதியில் சப்தரிஷி மண்டலத்திற்கும் மேல் உள்ள எனது பரம பதத்தை அடைவாய்.என் பரமபதத்தில் வந்து சேர்ந்தவர்கள் மீண்டும் பிறக்க மாட்டார்கள்.இவ்வாறு ஸ்ரீ விஷ்ணு பகவான் கூறிவிட்டு துருவனால் பூஜிக்கப்பட்டு வைகுண்டம் சென்றடைந்தார்.ஸ்ரீ நாரதமுனிவரால் அனைத்து விசயங்களையும் அறிந்த துருவனின் தந்தை மிகவும் மகிழ்ந்தார்.யானை, குதிரை,தேர் படைகளுடன் காட்டிற்கு சென்று துருவனை பட்டத்து யானை மீது அமர செய்து ராஜ்யத்திற்கு அழைத்து வந்தார்.தாய்மார்கள் இருவரும் மகிழ்ந்து ஆசிர்வதித்தனர்.ஆறுமாதத்தில் எவரும் செய்ய முடியாததை செய்து விட்டான்.துருவன் பல்லாண்டு காலம் நல்லாட்சி செய்து அநேக சுகபோகங்களை அனுபவித்தான்.இரண்டு ராஜகுமாரிகளை மணந்து கொண்டான்.இறுதியில் தன் மகனுக்கு முடியாட்சியை தந்து விட்டு பூவுலக வாழ்கையை துறக்க எண்ணினான்.அப்போது துருவலோகம் அழைத்து செல்ல விமானம் வந்திறங்கியது.தன் தாயையும் உடன் அழைத்துக்கொண்டு விமானத்தில் ஏறினான்.தான் செய்த தவத்தால் விஷ்ணுவை மகிழ்வித்த துருவன் என்றும் அமரத்துவம் பெற்று துருவலோகம் சென்றடைந்தான்.