Wednesday 21 August 2013

நரசிம்மாவதாரம்8

  
 
    
அகத்தூய்மை, புறத்தூய்மை இல்லாவிட்டாலும் அன்பு கலந்த பக்தி செய்தால் தாமாக அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஏற்படும். பகவானை தரிசனம் செய்வதற்க்கும் அவர் திருவடிகளை அடைவதற்க்கும் பல வழிகள் இருக்கின்றன. அவர் திருநாமங்களை ஜபித்து, அவர் திருவிளையாடல்களை கேட்டு பக்தி செய்வது, யாக கர்மங்கள் மூலமாக ஆராதனை செய்வது, அல்லது கர்மங்களை அவருக்கே அர்ப்பணம் செய்வது, பூஜை செய்வது, பிராணாயாமம்,தியானம் ஆகிய யோக முறையில் பரமாத்மா சொரூபத்தை அறிவது முதலிய ஞான, கர்ம,பக்தி, யோக வழிகளில் அவரை அறியலாம்.
          பிரகலாதன் இவ்வாறு பாகவத விஷயங்களை சொல்லிக்கொண்டிருந்த போது அசுர மாணவர்கள் பிரகலாதனிடம் கேட்டனர். –“பிரகலாதா இந்த விஷயமெல்லாம் உனக்கு எப்படி தெரிந்தது? நீ பிறந்ததிலிருந்து அரசரின் அரண்மனையில் தானே இருக்கிறாய். அங்கு தாய் தந்தையரை தவிர எவரையும் அறியமாட்டாய். இங்கு குருகுலத்தில் ஆசிரியர்கள் குரு ஸ்வாமிகளை அறிவாய்.எங்களையும் அறிவாய். ஆனால் ஸ்ரீநாரதர் உனக்கு உபதேசம் செய்ததாக கூறுகிறாய். நாரதர் எப்போது உனக்கு பரமாத்ம ஞான உபதேசம் செய்தார்?”
          பிரகலாதன் கூறினான்: “நர நாராயணர்களிடம் பாகவத தர்மங்களை ஸ்ரீ நாரதர் உபதேசம் பெற்றார்.வேறு இடத்தில் பிரியம் செலுத்தாத பகவானையே சொத்தாக நினைக்கும் அடியார்களின் பாதகமலங்களை சேவித்தவருக்கே பகவானின் ஞானோபதேசம் கிடைக்கும்.
          தோழர்களே நாரதரிடம் நான் எப்படி உபதேசம் பெற்றேன் என்பதை கூறுகிறேன் கேளுங்கள். என் தந்தை தவம் செய்வதற்காக மந்திராசலம் சென்றிருந்தபோது தேவர்கள் அசுரர்களோடு போர் செய்தனர்.பாம்பை எறும்புகள் சேர்ந்து தின்று விடுவது போல ஹிரணியகசிபு செய்த பாவங்களே அவனை தின்று விட்டன. அவன் ஒழிந்தான். இனி இருக்கிற அசுரர்களையும் ஒழித்து விடுவோம். என்று கூறிக்கொண்டு அசுரர்களை நாசம் செய்தனர். ராஜ அரண்மனைக்குள் வந்து அனைவரையும் விரட்டி அடித்தனர். அவர்களை எதிர்க்க முடியாமல் பந்துக்களையும் நண்பர்களையும் குருமார்களையும் பற்றி கவலைப்படாமல் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள நான்கு திசைகளிலும் ஓடி ஒளிந்தனர். அச்சமயம் கதறிக்கொண்டிருந்த என் தாயை இந்திரன் பிடித்துக்கொண்டான். அப்போது நான் தாயின் கர்பத்தில் இருந்தேன். என் தாயை பிடித்துக்கொண்டு எங்கோ சென்று கொண்டிருந்தான். அச்சமயம் நாரதர் எதிரில் வந்தார். “இந்திரா இதென்ன செய்கை பிறன் மனைவியை பிடித்துக்கொண்டு போகிறாய்?இவள் என்ன தவறு செய்தாள்?” என்று நாரதர்  கேட்டார்.
          இந்திரன் கூறினான் நாரதரே உமக்கு தெரியாதா இவள் ஹிரணியகசிபுவின் மகனை கர்பத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறாள். ஹிரணியகசிபுவின் மகன் ஆபத்தானவன். அவன் பிறந்ததும் தந்தையை விட பலசாலியாக இருப்பான். அவ்வளவு தான் தேவர்கள் நாம் ஒழிந்தோம். என்றே நினைக்க வேண்டும். இவளை  கொண்டு போய் ஓர் மாளிகையில் வைத்து அசுர குழந்தை பிறந்தவுடன் அதை கொன்று விட்டு இவளை விடுவித்து விடுவேன் என்றான். அதற்கு நாரதர் சொன்னார். இந்திரா நீ தவறாக திட்டம் போடுகிறாய். நீ நினைப்பது போல பிறக்க போகிற பிள்ளை தீயவனாக இருக்க மாட்டான். இவன் ஸ்ரீ நாராயணனின் பரம பக்தனாக இருப்பான். தேவர்களுக்கு எதிரியாக மாட்டான். பகவானின் பக்தர்களுக்கே எடுத்துக்காட்டாக விளங்குவான். நாரதர் இவ்வாறு கூறியதும் தான் செய்த தவறை உணர்ந்து அவளை விமானத்தில் இருந்து இறக்கி விட்டான். என் மாதாவை வலம் வந்து வணங்கி விட்டு சென்று விட்டான். அநாதை போல் நின்ற என் தாயை ஆசுவாசப்படுத்தி நாரதர் தன் ஆசிரமத்திற்க்கு அழைத்துச்சென்றார். குழந்தை பிறக்கும் வரை அங்கேயே இருக்கச்சொன்னார்.
என் தாய் நாரதர் ஆசிரமத்தில் தங்கினாள். அங்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையாக இருந்தது. ஆசிரமத்தில் இருந்த தவசீலர்களும் பணிப்பெண்களும் நாராயணனை தொழுது கொண்டிருந்தனர். பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். ஆசிரமம் முழுவதும் தெய்வீகமும் அற்புத சாந்திமயமாக இருந்த சூழலில் என் தாய் மிகவும் மன அமைதி பெற்று சந்தோஷமாக இருந்தாள்.
          எனது தாய் என்னை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த காலத்தில் விஷ்ணு பகவானின் மகிமைகளையும் பாகவத தர்மங்களையும் பரமாத்ம ஞானத்தையும் உபதேசம் செய்தார். அந்த உபதேசங்கள் என் மனதில் இருந்து இப்போதும் நீங்கவில்லை. சிரத்தையுடன் கேட்பவர்கள் அதை மனதில் நிறுத்திக்கொள்ள முடியும். நீங்களும் சிரத்தையுடன் கேட்டால் மறக்க மாட்டீர்கள்.  
 (தொடரும்)
 
 
    
 
 
        
            
 

Monday 19 August 2013

நரசிம்மாவதாரம்7

 
ஹிரணியகசிபு கூறினான்.நீங்கள் இவனை மீண்டும் குருகுலம் அழைத்துச்சென்று துறவறம் விஷயத்தை தவிர்த்து செல்வச்சிறப்பு பெற்று இல்லறத்தில் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். அறம் பொருள் இன்பம் இவற்றின் நன்மைகளை எடுத்துரைத்து பாடம் எடுங்கள்.” அப்படியே ஆகட்டும் என்று பிரகலாதனை குருகுலத்திற்க்கு அழைத்து வந்தனர். மீண்டும் கணிதம் அரசியல் சட்டம் பற்றி பாடம் கற்று தந்தனர்.
          ஒரு வேலை நிமித்தமாக குருமார்கள் வெளிதேசம் சென்றிருந்தபோது மாணவர்கள் அனைவரும் பிரகலாதனை விளையாட அழைத்தனர். ஆனால் பிரகலாதன் அவர்களை அமரச்செய்து ஆன்மீக சொற்பொழிவு நடத்தினான்.ஜனன மரண துக்கங்களை எடுத்து சொல்லி உபதேசம் செய்தான். நன்மை தீமை அறியாத பாலகர்களாக இருந்ததால் அவன் உபதேசங்களை சிரத்தையுடன் கேட்டனர்.
          பிரகலாதன் கூறினான்.-அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது.
பிறவாமை என்ற மோட்சத்தை அடைவதற்காகவே மானிடபிறவி கிடைக்கிறது. பகவான் அனைத்து பிராணிகளுக்குள் ஆத்மாவாக, நண்பனாக, அன்பனாக இருக்கிறார். மரணமும் நோயும் எப்போது வரும் என்று யாருக்கு தெரியும்? ஆதலால் சிறுவயதிலிருந்தே ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொண்டு ஹரியின் திருநாமங்களை ஜபித்து வழிபட வேண்டும். இகலோக சுகக்ஷேமங்கள் அடைவதற்க்கு தனியாக சிரமமேடுத்து ஏன் முயல வேண்டும்? அவையெல்லாம் தாமாகவே வந்து சேரும். மனிதன் வீணாக ஏன் தன்னை பற்றி கவலை படவேண்டும்? தன்னை அறியாமல் கணப்பொழுதில் ஆயுள் முடிந்து விடுகிறது. அதற்கு நமது ஆத்மாவை உயர் நிலைக்கு கொண்டு போகவேண்டாமா?
          குழந்தை பருவத்தில் ஓடி ஆடி விளையாடுவதில் நாட்கள் கழிந்து விடுகின்றன. வாலிப வயதில் செல்வம் திரட்டுவதில் மனைவிமக்களை பேணுவதில் காலம் கழிந்து விடுகிறது. அதிலும் இரவுப்பொழுது வீணாக கழிந்து விடுகிறது. வயோதிகம் வந்தவுடன் உடல் தளர்வடைந்து விடுகிறது. நோய்வாய்ப்பட்டு விடுகிறது. அந்த நிலையில் எந்த காரியமும் சாதிக்கமுடியாது. பகவானை வழிபட முடியாது. வாலிப வயதில் அனைவரும் செல்வத்திற்கு பின்னால் ஓடுகிறார்கள். பெரிய பெரிய ஆசைகளையும் லட்சியங்களையும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். தன் மகள்,சகோதரி திருமணவாழ்வு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற கவலையில் தன்னை பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
          பகவானை மகிழ்விக்க பக்தி செய்வது பெரிய கடினமான காரியமல்ல. தான் செய்த கர்மங்கள் அனைத்தையும் பகவானுக்கு சமர்ப்பணம் செய்து விட்டால் போதும். கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்து போகும்.அசுரர்களாகிய நீங்கள் அசுர குணங்களை விட்டோழித்து இரக்கம்,அன்பு முதலிய தெய்வ குணங்களுடன் இருங்கள். தேவர்கள் விஷ்ணுவை ஆராதித்து அமரர்கள் ஆகிவிட்டார்கள். அவ்வாறு நாமும் ஆராதித்தால் எல்லா மேன்மைகளும் அடைவோம். அவரை ஆராதிக்க மகிழ்விக்க யக்ஞம்,தானம் தவம் விரதங்கள் எல்லாம் போதுமானதல்ல. பக்தி இருந்தால் மட்டும் போதும்.  
  
 (தொடரும்)
       
        
            
 

Sunday 4 August 2013

நரசிம்மாவதாரம்6

 
            
நரசிம்மாவதாரம்
ஹிரணியகசிபுசொன்னான்.-“பிரகலாதாகுருமார்கள்சொல்லிக்கொடுக்காத விஷயம் உன் மதியில் எங்கிருந்து யார் தூண்டுதலினால் வந்தது?
              பிரகலாதன் பதில் உரைத்தான்.” தந்தையே புலன்கள் வழியாக போகங்களை எவ்வளவு அனுபவித்தாலும் அவை அடங்காமல் மேலும் மேலும் ஆசையை தூண்டிக்கொண்டே இருக்கும். அடங்காத ஆசைகளை மனதில் வளர்த்துக்கொண்டு வாழும் மனிதர்களின் மனம் விஷ்ணு பக்தியை அறியாது. மனதின் அடித்தளத்தில் விருப்பு வெறுப்புகள் என்ற கர்மா வாசனை அழிந்த பின் விஷ்ணு பகவானின் பக்தர்களான சாது மகாத்மாக்களை சேவித்தால் எவர் தூண்டுதலும் இல்லாது விஷ்ணு பக்தி தாமாக தோன்றும். என்று கூறி முடித்தான்.
ஹிரணியகசிபுவின் ஆத்திரம் எல்லை மீறியது. அவன் மடியிலிருந்த பிரகலாதனை பூமியில் தள்ளி விட்டான். ஆத்திரம் மேலிட்டு  கண்கள் சிவக்க உதடு துடிக்க ஆணையிட்டான். இங்கிருத்து இவனை வெளியேற்றி கொன்று விடுங்கள். இப்படிப்பட்ட பிள்ளை இல்லாமல் போனாலே எமக்கு நல்லது. இவன் சிற்றப்பனையும் நமது அசுர குலத்தவரையும் கொன்ற விஷ்ணுவுக்கு தாசன் போல பாத பூஜை செய்கிறான். இவனை நம்பக்கூடாது. இவன் தாய் தந்தை பாசத்தை புரிந்து கொள்ள வில்லை.
          நலம் தரும் மருந்தாக இருப்பவனே புத்திரன் ஆவான். கை,கால் போன்ற அங்கங்களில் புண் வந்து விட்டால் அது புரை ஓடுவதற்கு முன் நமது அங்கமாக இருந்தாலும் அதை வெட்டிவிடவேண்டும். அப்போது தான் நாம் நலம் பெறுவோம். இவன் எனக்கே யமனாக உருவாக்கிறான். இவனை கொன்று விடுவது தான் நல்லது.
          ஹிரணியகசிபுவின் அரக்க சேவகர்கள் ஆணையை சிரமேற்கொண்டு திரி சூலங்களை எடுத்து குத்துங்கள், கொல்லுங்கள் என்று கத்திக்கொண்டு பிரகலாதனின் மர்மஸ்தானத்தில் நெஞ்சில் குத்தினர். பிரகலாதானோ பகவத் தியானத்தில் மனம்,வாக்கு, புல ன்
களால் சர்வாத்மா ஹரியோடு ஒன்றிபோய் இருந்தான். சூலாயுதங்களின் தாக்குதல்களால் அவனை ஏதும் செய்ய முடியவில்லை. துரதிஷ்டம் பிடித்த மனிதனின் எல்லா முயற்சிகளும் வீணாவது போல எல்லாம் வீணாகி விட்டன.
          யானைகளை பிரகலாதன் மீது ஏவினார்கள்,விஷ நாகங்களை கடிக்க வைத்தார்கள்.மாந்திரீகம் செய்தும் பிராமனார்களால் பேய் பிசாசுகளை ஏவினார்கள்.மாயங்கள் செய்து பார்த்தார்கள். மலை உச்சியில் இருந்து தள்ளினார்கள். இருட்டறையில் அடைத்து வைத்தார்கள். அன்னத்தில் விஷம் கலந்து கொடுத்தார்கள். உணவின்றி நீரின்றி அறையில் பூட்டி வைத்தார்கள். பனி மலையில் விட்டு வந்தார்கள். நெருப்பில் தூக்கி போட்டார்கள். பெரும் பாறாங்கல்லை கட்டி சமுத்திரத்தில் போட்டார்கள். ஆனால் அவன் மூழ்கவில்லை. பாலைவன புயலில் விட்டார்கள். பாரங்கல்லில் போட்டு அமுக்கினார்கள். பிரகலாதன் எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருள் ஜீவாத்மாக்களின் தலைவன் அளவற்ற அருளாளர் ஆதி அந்தமில்லாதவர் இப்படிப்பட்ட இயல்புகள் கொண்டு இருந்த பரமாத்மா விஷ்ணுவுடன் இரண்டரறக்கலந்திருந்த நிலையில் அவன் எந்த தீயசக்தியாலும் பாதிக்கப்படவில்லை. அவன் மிகவும் நலமாக இருந்தான். ஹிரணியகசிபு வியந்தான். எந்த உபாயத்தாலும் இவன் கொல்லப்படவில்லையே! நலமாக அல்லவா இருக்கிறான். இறுதியில் நான் இவனை திட்டினேன், கருணையின்றி கொலை செய்ய பல தீங்குகள் செய்தேன். அதையெல்லாம் நினைத்து என்னை பழிவாங்கி விடுவானோ? என அஞ்சினான். இவனை விரோதித்துக்கொண்டு நான் தான் சாகப்போகிறேனோ?இவன் எதற்க்கும் பயப்படுவது போல தெரியவில்லையே?
          ஹிரணியகசிபு கவலை தோய்ந்த  முகத்துடன் அமர்ந்திருப்பதை கண்டு பிரகலாதனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சுக்கிராசாரியாரின் புதல்வர்கள் தனிமையில் சந்தித்து கூறினார்கள். அசுர குல வேந்தே நீங்கள் மூவுலகையும் வென்றிருக்கிறீர்கள். தங்கள் புருவ அசைப்பின் குறிப்பால் இந்திரன் முதலிய லோக பாலர்களும் அஞ்சி நடுங்கி தங்கள் ஆணையை நிறைவேற்றுகிறார்கள். நீங்கள் கவலைபட வேண்டாம். விளயாடும் பருவம் கொண்ட ஐந்து வயது பாலகன் தீமை,பகையை பற்றி அறியாத வயதுடையவன். கூடிய விரைவில் குரு ஸ்வாமிகளுக்கு சேவை செய்து திருந்தி விடுவான்.   
 
(தொடரும்)       
        
            
 

Thursday 1 August 2013

நரசிம்மாவதாரம்5


இதை கேட்டு ஆசிரியர்கள், ஹிரணியகசிபுவின் கோபத்திற்க்கு ஆளாக போகிறோம் என்று பயந்தனர். அசுர குரு சுக்கிராசரியாரின் மகன்கள் மிகுந்த கோபமடைந்து கூறினார்கள். யாரங்கே? பிரம்பை எடுத்துக்கொண்டு வாருங்கள் இவன் இப்படி சரிப்பட்டு வர மாட்டான். சாம,தான,பேதம் முடிந்து நான்காவது உபாயமான தண்டத்தினால் தான் நமக்கு கீழ்படிவான். என்று பிரகலாதனை நோக்கி கூறினார்கள். நமது கீர்த்திக்கு களங்கம் உண்டாக்கும்படி செய்வான் போலிருக்கிறது.அசுரவம்ஸம்  என்ற சந்தனவனத்தில் இந்த கருவேலமுள்செடி எப்படி முளைத்தது என்று தெரியவில்லை. அசுரவம்ஸ சந்தனமரத்தை வெட்ட வந்த கோடாரியாக இருக்கிறானே!
இவ்வாறு கடிந்துவிட்டு அசுர பாலகர்களோடு சேர்ந்து அமரச்செய்து அரசியல் சட்ட திட்ட பாடங்களை கற்பிக்க ஆரம்பித்தார்கள்.  வீடுபேற்றிணை விடுத்து அறம்,பொருள்,இன்பம் இம்மூன்றையும் கற்பித்தார்கள். பிரகலாதன் அனைத்தையும் கற்றுக்கொண்டான் என்று தெரிந்தவுடன் பிரகலாதனை அழைத்துச்சென்று அவன் தாய் மகாராணியிடம் சென்றனர். அவன் தாய் மிகுந்த பாசமுடன் மகனே தந்தை மனம் கோணாமல்நடந்து கொள்ளவேண்டும் என்று கூறி அவனுக்கு பட்டாடை ஆபரணங்கள் அணிவித்து தந்தையிடம் அனுப்பினாள். பிரகலாதன் தன் தந்தையின் தாள் தொட்டு வணங்கினான்.அவனை அவர் தந்தை ஆசீர்வதித்து இரு கைகளாலும் தூக்கி நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். அவன் இதயம் மகிழ்ச்சியால் நிரம்ப மடியில் வைத்து உச்சி முகர்ந்ததால் பாசமிகுதியால் கண்களில் நீர் நிரம்பியது.
ஹிரணியகசிபு கூறினான். அப்பா பிரகலாதா எத்தனை நாட்கள் கழித்து வந்திருக்கிறாய். இப்போது சொல் குருஸ்வாமிகளிடம் என்ன கற்று வந்திருக்கிறாய்? பிரகலாதன் கூறினான். சிறந்த கல்வி எதுவென்று நான் கூறுகிறேன் கேளுங்கள். ஒன்பது வித பக்தியால் ஸ்ரீ விஷ்ணு பகவானை தொழலாம். அவர் திருவிளையாடல்களை காதால் கேட்பது, அவர் திருநாமங்களை பஜனை செய்து பாடி மகிழ்வது,அவர் திருஉருவத்தை தியானம் செய்து மகிழ்வது,அவர் திருப்பணிகள் மூலமாக சேவை செய்வது,அவர் திரு உருவை வைத்து பூஜை அர்ச்சனை செய்வது,அவரை சாஷ்டாங்கமாக வணங்குவது,நான் உனது தாசன் என்று தாச பாவத்தில் தொழுவது,நான் உனது நண்பன் என்ற பாவத்தில் கொண்டாடுவது,தன்னையும் தன் சொத்து சுகங்களையும் அவருக்கே அற்பணித்து வழிபாடுகள் நடத்துவது.இதை கேட்டதும் ஹிரணியகசிபு பயங்கர கோபமடைந்தான்.அறிவு கெட்ட பிராமணனே எல்லாம் நீ தான் கற்றுக்கொடுத்ததா?பகைவர்கள் (தேவர்கள்,விஷ்ணுபகவான்)பக்கம் இருந்துகொண்டு மறைந்திருந்து எமக்கு துரோகம் செய்கிறாயா? ஏதும் அறியாத குழந்தை மனதை கலைத்து பகைவனுக்காக வேலை செய்யும் உங்களை பற்றி தெரிந்து விட்டது. இவ்வாறு கூறிக்கொண்டிருந்தபோது குரு ஸ்வாமி கூறினார். இந்திரனை ஜெயித்தவரே உங்கள் மகனுக்கு நாங்கள் அப்படிபட்ட பாடத்தை போதிக்கவில்லை. அல்லது எவரிடமும் போதனை பெற்று ராஜகுமாரர் அப்படி பேசவில்லை. சாந்தமடையுங்கள். எங்களை குற்றம் சொல்லாதீர்கள். உங்கள் புதல்வருக்கு பிறவியிலேயே இந்த அறிவு வந்திருக்கிறது.     
(தொடரும்)       
        
            


Thursday 18 July 2013

நரசிம்மாவதாரம் 4

 
ஹிரணியகசிபுவுக்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர்.சம்ஹ்லாது,அனுஹலாது,ஹிலாது,பிரகலாது என்ற பெயர் பெற்றிருந்தனர்.பிரகலாது நான்காவது மகனாக இருந்தான்.பிரகலாது தான் அண்ணன்களைவிட முற்றிலும் குணங்கள் மாறுபட்டவனாக இருந்தான்.அண்ணன்கள் மிகவும் சுயநலவாதிகளாக இருந்தனர்.பிரகலாதன் பாலகனாக இருந்தாலும் பக்குவப்பட்ட பெரியோர் போல பெருந்தன்மையுடன் இருப்பான்.பிராமணர்களை மதிப்பான். புலனடக்கம் பெற்று சத்தியத்தை கடைபிடிப்பான். பிராணிகளிடம் அன்பு காட்டுவான்.பரோபகாரியாக இருப்பான். தன்னை விட அந்தஸ்து குறைந்தவர்களிடம் நட்பாக நடந்து கொள்வான். பெரியோர்களின் பாதங்களை தொட்டு வணங்குவான்.ராஜகுமாரனாக இருந்தும் பிறர் துன்பத்தை தன் துன்பம் போல நினைப்பான்.மனிதர்களுக்கோ அரக்கர்களுக்கோ இயல்பாக ஆசைப்படும் வாஸ்துக்கள் மீது ஆசைப்பட மாட்டான்.
          ஐந்து வயது பாலகனாக இருந்தும் தன் சகத்தோழர்களுடன் விளையாடாமல் விஷ்ணு பகவானை நினைத்து  தியானத்தில் ஆழ்ந்து இருப்பான்.சில சமயம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருப்பான். மொத்தத்தில் அவன் பகவானை நினைக்காத கணமே இருக்காது.பகவான் தன்னை மடியில் வைத்து ஆலிங்கனம் செய்வது போல உணர்வான். சில சமயம் எனக்கு தரிசனம் தராமல் எங்கே போனீர்கள் ஸ்வாமி? என்று கதறி அழுவான்.அல்லது தியான நிலையில் பகவானின் பரமானந்தத்தை  அனுபவிப்பான்.
          ராஜகுமாரர்களுக்கு கல்வி புகட்டுவதற்காக குருகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. சுக்கிராசாரியாரின் இரண்டு புத்திரர்கள் சண்டா,அமர்கா,என்ற பெயர் பெற்றவர்கள் அசுர புத்திரர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.அச்சமயம்ஹிரணியகசிபுவின் நான்கு ராஜகுமாரர்களும் குருகுலத்தில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு அரசியல்,நீதி,அர்த்தசாஸ்திரம்(பொருளாதாரம்)போர்க்கலை எல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டன. பகவத் விஷயங்களிலும் ஆத்மஞானம் பெரும் யோகத்திலும் நாட்டம் கொண்ட பிரகலாதனுக்கோ அதிகார பதவி,பெயர்,புகழ் ஐசுவர்யம் இவற்றுக்கு வழி வகுக்கும் உலகியல் விஷயங்கள், கற்றுத்தரும் பாடங்கள் பிடிக்கவில்லை.அவ்வாறு இருந்தும் குரு சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை கிரகித்துக்கொண்டான்.அவற்றில் தேர்ச்சியும் பெற்றான்.ஆனால் முழுமனதுடன் அதை விரும்பவில்லை.ஆசிரியர்கள் இவன் மிகவும் புத்திசாலியாக இருக்கிறான்.பாடங்களை கணப்பொழுதில் கற்று தேர்ச்சி பெற்று விடுகிறான்.என்று பாராட்டினார்கள்.ஹிரணியகசிபுவுக்கு இதை தெரிவித்தார்கள். 
          ஒரு நாள் ஹிரணியகசிபு பிரகலாதனை குருகுலத்தில் இருந்து வரவழைத்து அவனை தன் மடியில் வைத்து அப்பனே பிரகலாதா நீ கற்ற கல்வியில் எதை மேன்மையாக நினைக்கிறாயோ அதை எனக்கு எடுத்து உரைப்பாய்.என்றான். பிரகலாதன் கூறினான். இவ்வுலகில் உள்ள மனிதர்கள் நான் எனது என்று பற்றுக்களை விட்டோழித்து புற்களால் மூடப்பட்ட இருள் அடைந்த பாழும் கிணறு போலிருக்கும் உலக வாழ்க்கையை விட்டு துறந்து வனம் சென்று ஸ்ரீஹரியை சரண் அடைவதே சிறந்தது என்று கருதுகிறேன்.
          ஹிரணியகசிபு பயங்கரமாக சிரித்தான். இந்த சிறிய பாலகனுக்கு துறவறம் யார் சொல்லிக்கொடுத்தது. குருவின் ஆசிரமத்தில் யாரோ பிராமண வேடத்தில் நம் எதிரிகளுக்கு துணையாக செயல்படுகிறார்கள். ஆசிரியர்களை கூப்பிட்டு இவ்வாறு பாடம் புகட்டியவனை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கச்சொன்னான்.
          பிரகலாதனை குருகுலத்திற்க்கு அழைத்துச்சென்று குருமார்கள் பிரகலாதனை அன்புடன் பேசி விசாரித்தார்கள். அப்பனே பிரகலாதா உனக்கு மங்களம் உண்டாகட்டும். இங்கு நாங்கள் உனக்கு நன்றாக தானே பாடம் நடத்துகிறோம். நாங்கள் சொல்லித்தராத பாடத்தை நீ ஏன் உன் தந்தையிடம் வேறு ஏதோ விஷயங்களை சொல்கிறாய்.புத்தி கெட்டு போய் விட்டதா? குளவிளக்கே நாங்கள் சொல்லித்தராத பகவத் விஷயங்களை யார் உனக்கு உபதேசித்தது?அல்லது யாரும் உபதேசிக்காமல் அவ்வாறு உளறுகிறாயா?
          பிரகலாதன் கூறினான்: “நமது, பிறரது என்ற வேற்றுமை அறிவு பகவானின் மாயையால் ஏற்படுகிறது. நம்மிடம் இருக்கும் பரமாத்மாவை உணர்ந்து கொண்டால் பகை உணர்வு எங்கிருந்து வரும்? உங்கள் பாஷையில் அந்த பரம்பொருள் ஸ்ரீ நாராயணரே என் மதியை கெடுத்து விட்டார்.அதாவது ஆட்கொண்டு விட்டார். குருஸ்வாமி காந்தம் இரும்பை இழுப்பது போல சக்கரபாணி விஷ்ணுவின் இச்சா சக்தியால் என் மனம் தானாக இழுக்கப்படுகிறது. அவரை நினைத்தவுடன் தன்வசம் இழந்து விடுகிறேன்.”
                                                       .(தொடரும்)        
        
            

Tuesday 9 July 2013

நரசிம்மாவதாரம் 3

 
அஞ்சலி செய்து மிகப்பணிவாக அன்பு கலந்த பக்தியுடன் மனமுருகி கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக துதி பாடினான்.சுவாமி யுகங்கள் முடிந்து கல்ப கால இறுதியில் சிருஷ்டிக்கு முன் காலத்தின் சக்தியில் எல்லா இருளால் சூழப்பட்டிருக்க தன்னொளி பெற்ற தங்கள் தேஜசால் வெளிச்சம் ஏற்பட்டு சிருஷ்டி ஆரம்பமானது. தாங்களே ஜகத்தின் மூல காரணமாக இருக்கிறீர்கள்.பிராணன்,புலன்கள்,மனம்,புத்தி ஆகியவற்றால் தாங்களே தன்னை தோற்றுவித்துக்கொண்டீர்கள். ஜகத்தில் ஜீவன்களுக்கு உயிர் கொடுத்து அவர்களை ரட்சித்து வாழ வைக்கிறீர்கள்.வேதங்களும்,யாகங்களும் உங்களிடத்து தோன்றின.அகில பிரமாண்டமும் உமக்குள் அடக்கம் பெற்றிருக்கிறது.உங்கள் அருட்சக்தியால் அனைத்துயிர்களும் இயங்குகின்றன.
          பகவானே நீங்கள் வரம் தரும் தெய்வங்களில் வரத ராஜாவாக இருக்கிறீர்கள்.தாங்கள் வரம் தர விரும்பினால் நான் கேட்பவை அனைத்தும் தர வேண்டும். தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட எந்த உயிரினங்களாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. அவர்கள் மனிதனாக, மிருகமாக இருந்தாலும் சரி,உயிருள்ள, உயிரற்ற ஜடப்பொருள்களாலும், தேவர் இனத்தில் தேவ,அசுர, நாக, கின்னரர்களாலும் மரணம் வரக்கூடாது.வீடு,அரண்மனை அல்லது மாளிகைக்கு உள்ளே அல்லது வெளியே அல்லது பகலில் அல்லது இரவில் தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட ,சிருஷ்டிக்கப்படாத உயிருள்ள பிராணிகளாலும் உயிரற்ற ஜடப்பொருள்களாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக்கூடாது. மேலும் அஸ்திரங்களாலும் ஆயுதங்களாலும் தாக்கப்பட்டு நான் இறக்க கூடாது. ஆகாயம் பூமி எங்கும் நான் இறக்க கூடாது.யுத்ததில் என்னை எவரும் எதிர்த்து போர் செய்ய முடியாமல் போகட்டும்.அனைத்து உலகங்களையும் நானே ஆட்சி செய்ய வேண்டும். இந்திராதி தேவர்களும் லோக பால தேவர்களும் உங்கள் மகிமையால் அடிபணிவது போல் அந்த மகிமையை நானும் பெற்று அவர்கள் எனக்கு அடிபணிய வேண்டும். தவசிகளும் சித்த யோகிகளும் அடைந்திடும் தெய்வீக சித்துக்களும் என்னிடம் வர வேண்டும்.
          ஹிரணியகசிபு துர்லபமான இப்படிப்பட்ட வரங்களை கேட்டதும் அவன் தவத்தால் மகிழ்ந்து போன காரணத்தால் பிரம்மா கூறினார்.”அப்பனே நீ கேட்ட வரங்கள் அனைத்தும் மிக துர்லபமானவை.இருப்பினும் நான் அந்த வரங்கள் அனைத்தையும் தந்து விடுகிறேன்என்று கூறினார். ஹிரணியகசிபு அவரை பக்தியுடன் பூஜித்தான்.பிரம்மதேவர் இவ்வாறு வேண்டிய வரங்களை தந்துவிட்டு பிரமலோகம் சென்றார்.
          ஹிரணியகசிபு வரங்களை பெற்று விட்டு நாடு திரும்பினான். அவன் மனதில் அடித்தளத்தில் தம்பியை கொன்ற விஷ்ணுவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. முதலில் திக்விஜயத்தை தொடங்கினான்.பூலோகத்தில் இருந்த ராஜாக்களை வென்று பூவுலகை தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்தான்.அதன் பின் தேவர்கள்,அசுரர்கள்,தலைவர்கள்,கந்தர்வர்கள்,கருடன் நாக தேவர்கள்,சித்தர்கள்,சாரானர்கள், வித்யாதரர்கள்,ரிஷிகள்,பித்ருக்கள் மனுக்கள்,யட்ச ரக்ஷாசர்கள்,பூத பிரேத,பிசாசுக்கள் திசை காக்கும் தேவர்கள் அனைவரையும் வென்று விட்டு சொர்கபுரி அமராவதியையும் வென்று இந்திராதி தேவர்களையும் விரட்டி விட்டான். இந்திரன் மாளிகை சகல சம்பத்துக்களும் நிறைந்திருந்தன.பவள படிக்கட்டுக்கள்,கோமேதகம் பதித்த ஸ்படிக சுவர்களும் வைடூர்ய தூண்களும் மாணிக்க ஆசனங்களும் வண்ண வண்ண விதானங்களும் செல்வச்சிறப்புடன் இருந்தன. பால் நுரை போல மஞ்சங்களும் விரிப்புகளில் முத்துச்சரங்களும் வெகு அழகாக இருந்தன.அப்சரசுகள் பொற்சலங்கை அணிந்து அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தனர். ஹிரணியகசிபு அங்கு ஒரு காட்டமான மது பானத்தை அருந்திக்கொண்டு இருப்பான்.ஆகாயமும் பூமியும் கடல்களும் அவனுக்கு வேண்டிய செல்வங்களை வழங்கிக்கொண்டு இருந்தன.
          அவனது கொடுங்கோல் ஆட்சி எங்கும் நிலவியது.யாக வழிபாடுகளும் தேவ பூஜைகளும் தமக்கே உரித்தாக வேண்டும் என்று ஆணையிட்டான்.இவனது கொடுங்கோல் ஆட்சி பல காலம் நீடித்தது. தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் பூலோகத்தில் தவமியற்றும் சித்த மகா முனிவர்களும் இவனது சர்வாதிகார கொடுமைகளை பொறுக்க முடியாமல் பகவானை சரண் அடைந்தனர்.அவர்கள் நியமங்கள் மேற்கொண்டு உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்து பகவானை ஆராதனை செய்து கெஞ்சும் வகையில் பிரார்த்தனை செய்தனர்.அப்போது ஓர் அசரீரி குரல் மேக கம்பீரமாக கேட்டது.”தேவர்களே முனிவர்களே நான் ஹிரணியகசிபு செய்யும் கொடுமைகளை அறிவேன். தேவர்கள் வேதம்,பசு,காளை,பிராமணர்கள்,சாதுக்கள்,தர்மம் இவர்களை நாசப்படுத்துபவர்கள் வெகு சீக்கிரமே அழிந்துபோவார்கள்.நீங்கள் கவலை பட வேண்டாம்.பகையில்லா சாந்த சொரூபியாக பிரகலாதன் ஹிரணியகசிபுவுக்கு மகனாக பிறப்பான்.என் பக்தனான பிரகலாதன் ஒரு பெரிய மகாத்மாவாக இருப்பான். அவனிடம் துவேஷம் வைத்து பகைத்துக்கொள்வான்.அப்போது நானே அவனை சம்ஹாரம் செய்து விடுவேன்.” இதனை கேட்டு அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.(தொடரும்)        

Tuesday 2 July 2013

நரசிம்மாவதாரம் 2


நரசிம்மாவதாரம்

லோகங்களின் அதிபதி! பிரம்மதேவரே ஹிரணியகசிபுவின் தவத்தீ ஜ்வாலையால் தகித்துக்கொண்டு இருக்கிறோம்.நீங்கள் படைத்த உயிர் வர்க்கம் சாம்பலாவதற்க்கு முன் ஏதாவது செய்யுங்கள்.தாங்கள் எல்லாம் அறிந்தவர்.இருந்தும் ஹிரணியகசிபுவின் அபிப்பிராயத்தை தெரியப்படுத்துகிறோம்.

          பகவானே அவனது லட்சியம் என்னவென்றால் தாங்கள் பெரும் தவத்தாலும் யோகசக்தியாலும் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து எல்லா லோகங்களுக்கும் மேலான சத்திய லோகத்தில் வீற்று இருக்கிறீர்கள்.அது போல தானும் உலகங்களையும் ஜீவராசிகளையும் தன் வயப்படுத்தி உங்களது மேலான இடத்தை கைப்பற்ற நினைக்கிறான்.எனது லட்சியம் நிறைவேறும் வரை ஓய மாட்டேன்,எத்தனை ஜன்மம் எடுத்தால் என்ன?காலத்திற்க்கு ஒரு முடிவில்லை.இந்த ஆத்மாவும் நாசப்பட்டு போவதில்லை,யுகங்கள் கழிந்தாலும் என்றோ ஒருநாள் என் லட்சியம் நிறைவேறும்.

          பாவ புண்ணிய கர்மங்களின் சட்ட திட்டங்களை மாற்றி அமைப்பேன்.எப்போதும் இல்லாத நியதியை கொண்டு வரப்போகிறேன்.வைகுண்டாதி லோகங்களுக்கு ஒருநாள் அழிவு ஏற்படத்தான் போகிறது.இவ்வாறு நினைத்துக்கொண்டு இருக்கிறான்.பிரபுவே தாங்கள் விதித்த விதிகள் அவன் கைக்கு போய்விட்டால் நல்லவர்களும் தேவர்களான நாங்களும் தொலைந்தோம்.

          தேவர்கள் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் பிருகு தட்ச பிரஜாபதி முதலிய பரிவாரங்களுடன் பிரம்மதேவர் அன்னவாகனத்தில் ஹிரணியகசிபுவின் தவமியற்றும் ஆசிரமத்திற்க்கு சென்றார்.அங்கு அவர் கண்ட காட்சி ஹிரணியகசிபுவை கரையான் புற்றும், புற்களும் மூங்கில் புதர்களுமாக மறைத்திருந்தன.அங்கிருந்த எறும்புகளும் பூச்சிகளும் மாமிச மேதை,மஜ்ஜை எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்டிருந்தன.மேகங்களால் மூடப்பட்ட சூரியன் போல புதர்களாலும் புற்று மண்ணாலும் மூடப்பட்டும் தவத்தின் தேஜஸால் உலகங்களை தகித்துக்கொண்டு இருந்தான்.

          அவனை கண்டு பிரம்மதேவர் கூறினார்.”அப்பனே ஹிரணியகசிபு உனக்கு மங்களம் உண்டாகட்டும்.கச்யப முனிவர் மகனே உன் தவம் சித்தி பெற்றுவிட்டது.தவத்தை விட்டு எழுந்து வா.தயக்கமின்றி என்ன வரம் வேண்டுமோ அதை கேள்.என்னே உனது மனோ பலம்!அற்புதமான மனோதிடம் கொண்டவன் நீ.எறும்பு முதலிய ஜந்துக்கள் உன் தேகத்தை தின்று விட்டன.அவ்வாறு இருந்தும் எலும்புக்கூட்டில் நீ பிராணனை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறாய்.இது பேரதிசியம்!இப்படிப்பட்ட கடும் தவத்தை எந்த ரிஷியும் செய்தது இல்லை.இனிமேல் எவரும் செய்யப்போவதும் இல்லை. தேவர்களின் நூறு வருடம் வரை (மனிதர்களின் ஒரு வருட காலம் தேவர்களின் ஒரு நாள் ஆகும். அந்த கணக்குப்படி 36500 வருடம் வரை ) நீர் அருந்தாமல் எவரால் உயிர் வாழ முடியும்? ஹிரணியகசிபு நீ மிக அரிதான செயலை தான் செய்திருக்கிறாய்.உன் தவத்தால் யாம் உன் வசப்பட்டு விட்டோம்.அசுர சிரோமணி, நீ எதை வேண்டுமானாலும் கேள்.உன் விருப்பப்படி எல்லாவற்றையும் தருவோம்,என் தரிசனம் வீண் போகாது”.

          இவ்வாறு கூறிவிட்டு பிரம்மதேவர் எலும்புக்கூடாக இருந்த சரீரத்தில் தன் கமண்டலத்தில் இருந்து தெய்வீக நீரை தெளித்தார்.விறகு சுள்ளிகளுக்குள் புகைந்துகொண்டிருத்த நெருப்பு திடீரென பிரகாசமாக வெளிப்படுவது போல புற்று மண் மூங்கில் புதருக்குள் இருந்து ஹிரணியகசிபு பேரொளியுடன் தோன்றினான்.அச்சமயம் திடகாத்திர சரீரத்துடன் வாலிபனாக வந்தான்.அவனது அங்கங்கள் புது பொலிவுடன் காணப்பட்டன.மனம் தெளிவு பெற்று புலன்களில்  புதிய சக்தி சஞ்சரிக்க குரல் கம்பீரமாக இருந்தது.வஜ்ரம் போல திட சரீரம் உருக்கிய பொன் போல பிரகாசித்துக்கொண்டு இருந்தது.அவன் ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் தேவர்கள் புடை சூழ பிரம்மா இருப்பதை கண்டு அவரை சாஷ்டாங்கமாக பூமியில் விழுந்து வணங்கினான்.(தொடரும்)