Thursday 18 July 2013

நரசிம்மாவதாரம் 4

 
ஹிரணியகசிபுவுக்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர்.சம்ஹ்லாது,அனுஹலாது,ஹிலாது,பிரகலாது என்ற பெயர் பெற்றிருந்தனர்.பிரகலாது நான்காவது மகனாக இருந்தான்.பிரகலாது தான் அண்ணன்களைவிட முற்றிலும் குணங்கள் மாறுபட்டவனாக இருந்தான்.அண்ணன்கள் மிகவும் சுயநலவாதிகளாக இருந்தனர்.பிரகலாதன் பாலகனாக இருந்தாலும் பக்குவப்பட்ட பெரியோர் போல பெருந்தன்மையுடன் இருப்பான்.பிராமணர்களை மதிப்பான். புலனடக்கம் பெற்று சத்தியத்தை கடைபிடிப்பான். பிராணிகளிடம் அன்பு காட்டுவான்.பரோபகாரியாக இருப்பான். தன்னை விட அந்தஸ்து குறைந்தவர்களிடம் நட்பாக நடந்து கொள்வான். பெரியோர்களின் பாதங்களை தொட்டு வணங்குவான்.ராஜகுமாரனாக இருந்தும் பிறர் துன்பத்தை தன் துன்பம் போல நினைப்பான்.மனிதர்களுக்கோ அரக்கர்களுக்கோ இயல்பாக ஆசைப்படும் வாஸ்துக்கள் மீது ஆசைப்பட மாட்டான்.
          ஐந்து வயது பாலகனாக இருந்தும் தன் சகத்தோழர்களுடன் விளையாடாமல் விஷ்ணு பகவானை நினைத்து  தியானத்தில் ஆழ்ந்து இருப்பான்.சில சமயம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருப்பான். மொத்தத்தில் அவன் பகவானை நினைக்காத கணமே இருக்காது.பகவான் தன்னை மடியில் வைத்து ஆலிங்கனம் செய்வது போல உணர்வான். சில சமயம் எனக்கு தரிசனம் தராமல் எங்கே போனீர்கள் ஸ்வாமி? என்று கதறி அழுவான்.அல்லது தியான நிலையில் பகவானின் பரமானந்தத்தை  அனுபவிப்பான்.
          ராஜகுமாரர்களுக்கு கல்வி புகட்டுவதற்காக குருகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. சுக்கிராசாரியாரின் இரண்டு புத்திரர்கள் சண்டா,அமர்கா,என்ற பெயர் பெற்றவர்கள் அசுர புத்திரர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.அச்சமயம்ஹிரணியகசிபுவின் நான்கு ராஜகுமாரர்களும் குருகுலத்தில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு அரசியல்,நீதி,அர்த்தசாஸ்திரம்(பொருளாதாரம்)போர்க்கலை எல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டன. பகவத் விஷயங்களிலும் ஆத்மஞானம் பெரும் யோகத்திலும் நாட்டம் கொண்ட பிரகலாதனுக்கோ அதிகார பதவி,பெயர்,புகழ் ஐசுவர்யம் இவற்றுக்கு வழி வகுக்கும் உலகியல் விஷயங்கள், கற்றுத்தரும் பாடங்கள் பிடிக்கவில்லை.அவ்வாறு இருந்தும் குரு சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை கிரகித்துக்கொண்டான்.அவற்றில் தேர்ச்சியும் பெற்றான்.ஆனால் முழுமனதுடன் அதை விரும்பவில்லை.ஆசிரியர்கள் இவன் மிகவும் புத்திசாலியாக இருக்கிறான்.பாடங்களை கணப்பொழுதில் கற்று தேர்ச்சி பெற்று விடுகிறான்.என்று பாராட்டினார்கள்.ஹிரணியகசிபுவுக்கு இதை தெரிவித்தார்கள். 
          ஒரு நாள் ஹிரணியகசிபு பிரகலாதனை குருகுலத்தில் இருந்து வரவழைத்து அவனை தன் மடியில் வைத்து அப்பனே பிரகலாதா நீ கற்ற கல்வியில் எதை மேன்மையாக நினைக்கிறாயோ அதை எனக்கு எடுத்து உரைப்பாய்.என்றான். பிரகலாதன் கூறினான். இவ்வுலகில் உள்ள மனிதர்கள் நான் எனது என்று பற்றுக்களை விட்டோழித்து புற்களால் மூடப்பட்ட இருள் அடைந்த பாழும் கிணறு போலிருக்கும் உலக வாழ்க்கையை விட்டு துறந்து வனம் சென்று ஸ்ரீஹரியை சரண் அடைவதே சிறந்தது என்று கருதுகிறேன்.
          ஹிரணியகசிபு பயங்கரமாக சிரித்தான். இந்த சிறிய பாலகனுக்கு துறவறம் யார் சொல்லிக்கொடுத்தது. குருவின் ஆசிரமத்தில் யாரோ பிராமண வேடத்தில் நம் எதிரிகளுக்கு துணையாக செயல்படுகிறார்கள். ஆசிரியர்களை கூப்பிட்டு இவ்வாறு பாடம் புகட்டியவனை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கச்சொன்னான்.
          பிரகலாதனை குருகுலத்திற்க்கு அழைத்துச்சென்று குருமார்கள் பிரகலாதனை அன்புடன் பேசி விசாரித்தார்கள். அப்பனே பிரகலாதா உனக்கு மங்களம் உண்டாகட்டும். இங்கு நாங்கள் உனக்கு நன்றாக தானே பாடம் நடத்துகிறோம். நாங்கள் சொல்லித்தராத பாடத்தை நீ ஏன் உன் தந்தையிடம் வேறு ஏதோ விஷயங்களை சொல்கிறாய்.புத்தி கெட்டு போய் விட்டதா? குளவிளக்கே நாங்கள் சொல்லித்தராத பகவத் விஷயங்களை யார் உனக்கு உபதேசித்தது?அல்லது யாரும் உபதேசிக்காமல் அவ்வாறு உளறுகிறாயா?
          பிரகலாதன் கூறினான்: “நமது, பிறரது என்ற வேற்றுமை அறிவு பகவானின் மாயையால் ஏற்படுகிறது. நம்மிடம் இருக்கும் பரமாத்மாவை உணர்ந்து கொண்டால் பகை உணர்வு எங்கிருந்து வரும்? உங்கள் பாஷையில் அந்த பரம்பொருள் ஸ்ரீ நாராயணரே என் மதியை கெடுத்து விட்டார்.அதாவது ஆட்கொண்டு விட்டார். குருஸ்வாமி காந்தம் இரும்பை இழுப்பது போல சக்கரபாணி விஷ்ணுவின் இச்சா சக்தியால் என் மனம் தானாக இழுக்கப்படுகிறது. அவரை நினைத்தவுடன் தன்வசம் இழந்து விடுகிறேன்.”
                                                       .(தொடரும்)        
        
            

No comments:

Post a Comment