Tuesday, 9 July 2013

நரசிம்மாவதாரம் 3

 
அஞ்சலி செய்து மிகப்பணிவாக அன்பு கலந்த பக்தியுடன் மனமுருகி கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக துதி பாடினான்.சுவாமி யுகங்கள் முடிந்து கல்ப கால இறுதியில் சிருஷ்டிக்கு முன் காலத்தின் சக்தியில் எல்லா இருளால் சூழப்பட்டிருக்க தன்னொளி பெற்ற தங்கள் தேஜசால் வெளிச்சம் ஏற்பட்டு சிருஷ்டி ஆரம்பமானது. தாங்களே ஜகத்தின் மூல காரணமாக இருக்கிறீர்கள்.பிராணன்,புலன்கள்,மனம்,புத்தி ஆகியவற்றால் தாங்களே தன்னை தோற்றுவித்துக்கொண்டீர்கள். ஜகத்தில் ஜீவன்களுக்கு உயிர் கொடுத்து அவர்களை ரட்சித்து வாழ வைக்கிறீர்கள்.வேதங்களும்,யாகங்களும் உங்களிடத்து தோன்றின.அகில பிரமாண்டமும் உமக்குள் அடக்கம் பெற்றிருக்கிறது.உங்கள் அருட்சக்தியால் அனைத்துயிர்களும் இயங்குகின்றன.
          பகவானே நீங்கள் வரம் தரும் தெய்வங்களில் வரத ராஜாவாக இருக்கிறீர்கள்.தாங்கள் வரம் தர விரும்பினால் நான் கேட்பவை அனைத்தும் தர வேண்டும். தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட எந்த உயிரினங்களாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. அவர்கள் மனிதனாக, மிருகமாக இருந்தாலும் சரி,உயிருள்ள, உயிரற்ற ஜடப்பொருள்களாலும், தேவர் இனத்தில் தேவ,அசுர, நாக, கின்னரர்களாலும் மரணம் வரக்கூடாது.வீடு,அரண்மனை அல்லது மாளிகைக்கு உள்ளே அல்லது வெளியே அல்லது பகலில் அல்லது இரவில் தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட ,சிருஷ்டிக்கப்படாத உயிருள்ள பிராணிகளாலும் உயிரற்ற ஜடப்பொருள்களாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக்கூடாது. மேலும் அஸ்திரங்களாலும் ஆயுதங்களாலும் தாக்கப்பட்டு நான் இறக்க கூடாது. ஆகாயம் பூமி எங்கும் நான் இறக்க கூடாது.யுத்ததில் என்னை எவரும் எதிர்த்து போர் செய்ய முடியாமல் போகட்டும்.அனைத்து உலகங்களையும் நானே ஆட்சி செய்ய வேண்டும். இந்திராதி தேவர்களும் லோக பால தேவர்களும் உங்கள் மகிமையால் அடிபணிவது போல் அந்த மகிமையை நானும் பெற்று அவர்கள் எனக்கு அடிபணிய வேண்டும். தவசிகளும் சித்த யோகிகளும் அடைந்திடும் தெய்வீக சித்துக்களும் என்னிடம் வர வேண்டும்.
          ஹிரணியகசிபு துர்லபமான இப்படிப்பட்ட வரங்களை கேட்டதும் அவன் தவத்தால் மகிழ்ந்து போன காரணத்தால் பிரம்மா கூறினார்.”அப்பனே நீ கேட்ட வரங்கள் அனைத்தும் மிக துர்லபமானவை.இருப்பினும் நான் அந்த வரங்கள் அனைத்தையும் தந்து விடுகிறேன்என்று கூறினார். ஹிரணியகசிபு அவரை பக்தியுடன் பூஜித்தான்.பிரம்மதேவர் இவ்வாறு வேண்டிய வரங்களை தந்துவிட்டு பிரமலோகம் சென்றார்.
          ஹிரணியகசிபு வரங்களை பெற்று விட்டு நாடு திரும்பினான். அவன் மனதில் அடித்தளத்தில் தம்பியை கொன்ற விஷ்ணுவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. முதலில் திக்விஜயத்தை தொடங்கினான்.பூலோகத்தில் இருந்த ராஜாக்களை வென்று பூவுலகை தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்தான்.அதன் பின் தேவர்கள்,அசுரர்கள்,தலைவர்கள்,கந்தர்வர்கள்,கருடன் நாக தேவர்கள்,சித்தர்கள்,சாரானர்கள், வித்யாதரர்கள்,ரிஷிகள்,பித்ருக்கள் மனுக்கள்,யட்ச ரக்ஷாசர்கள்,பூத பிரேத,பிசாசுக்கள் திசை காக்கும் தேவர்கள் அனைவரையும் வென்று விட்டு சொர்கபுரி அமராவதியையும் வென்று இந்திராதி தேவர்களையும் விரட்டி விட்டான். இந்திரன் மாளிகை சகல சம்பத்துக்களும் நிறைந்திருந்தன.பவள படிக்கட்டுக்கள்,கோமேதகம் பதித்த ஸ்படிக சுவர்களும் வைடூர்ய தூண்களும் மாணிக்க ஆசனங்களும் வண்ண வண்ண விதானங்களும் செல்வச்சிறப்புடன் இருந்தன. பால் நுரை போல மஞ்சங்களும் விரிப்புகளில் முத்துச்சரங்களும் வெகு அழகாக இருந்தன.அப்சரசுகள் பொற்சலங்கை அணிந்து அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தனர். ஹிரணியகசிபு அங்கு ஒரு காட்டமான மது பானத்தை அருந்திக்கொண்டு இருப்பான்.ஆகாயமும் பூமியும் கடல்களும் அவனுக்கு வேண்டிய செல்வங்களை வழங்கிக்கொண்டு இருந்தன.
          அவனது கொடுங்கோல் ஆட்சி எங்கும் நிலவியது.யாக வழிபாடுகளும் தேவ பூஜைகளும் தமக்கே உரித்தாக வேண்டும் என்று ஆணையிட்டான்.இவனது கொடுங்கோல் ஆட்சி பல காலம் நீடித்தது. தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் பூலோகத்தில் தவமியற்றும் சித்த மகா முனிவர்களும் இவனது சர்வாதிகார கொடுமைகளை பொறுக்க முடியாமல் பகவானை சரண் அடைந்தனர்.அவர்கள் நியமங்கள் மேற்கொண்டு உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்து பகவானை ஆராதனை செய்து கெஞ்சும் வகையில் பிரார்த்தனை செய்தனர்.அப்போது ஓர் அசரீரி குரல் மேக கம்பீரமாக கேட்டது.”தேவர்களே முனிவர்களே நான் ஹிரணியகசிபு செய்யும் கொடுமைகளை அறிவேன். தேவர்கள் வேதம்,பசு,காளை,பிராமணர்கள்,சாதுக்கள்,தர்மம் இவர்களை நாசப்படுத்துபவர்கள் வெகு சீக்கிரமே அழிந்துபோவார்கள்.நீங்கள் கவலை பட வேண்டாம்.பகையில்லா சாந்த சொரூபியாக பிரகலாதன் ஹிரணியகசிபுவுக்கு மகனாக பிறப்பான்.என் பக்தனான பிரகலாதன் ஒரு பெரிய மகாத்மாவாக இருப்பான். அவனிடம் துவேஷம் வைத்து பகைத்துக்கொள்வான்.அப்போது நானே அவனை சம்ஹாரம் செய்து விடுவேன்.” இதனை கேட்டு அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.(தொடரும்)        

No comments:

Post a Comment