Wednesday 21 August 2013

நரசிம்மாவதாரம்8

  
 
    
அகத்தூய்மை, புறத்தூய்மை இல்லாவிட்டாலும் அன்பு கலந்த பக்தி செய்தால் தாமாக அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஏற்படும். பகவானை தரிசனம் செய்வதற்க்கும் அவர் திருவடிகளை அடைவதற்க்கும் பல வழிகள் இருக்கின்றன. அவர் திருநாமங்களை ஜபித்து, அவர் திருவிளையாடல்களை கேட்டு பக்தி செய்வது, யாக கர்மங்கள் மூலமாக ஆராதனை செய்வது, அல்லது கர்மங்களை அவருக்கே அர்ப்பணம் செய்வது, பூஜை செய்வது, பிராணாயாமம்,தியானம் ஆகிய யோக முறையில் பரமாத்மா சொரூபத்தை அறிவது முதலிய ஞான, கர்ம,பக்தி, யோக வழிகளில் அவரை அறியலாம்.
          பிரகலாதன் இவ்வாறு பாகவத விஷயங்களை சொல்லிக்கொண்டிருந்த போது அசுர மாணவர்கள் பிரகலாதனிடம் கேட்டனர். –“பிரகலாதா இந்த விஷயமெல்லாம் உனக்கு எப்படி தெரிந்தது? நீ பிறந்ததிலிருந்து அரசரின் அரண்மனையில் தானே இருக்கிறாய். அங்கு தாய் தந்தையரை தவிர எவரையும் அறியமாட்டாய். இங்கு குருகுலத்தில் ஆசிரியர்கள் குரு ஸ்வாமிகளை அறிவாய்.எங்களையும் அறிவாய். ஆனால் ஸ்ரீநாரதர் உனக்கு உபதேசம் செய்ததாக கூறுகிறாய். நாரதர் எப்போது உனக்கு பரமாத்ம ஞான உபதேசம் செய்தார்?”
          பிரகலாதன் கூறினான்: “நர நாராயணர்களிடம் பாகவத தர்மங்களை ஸ்ரீ நாரதர் உபதேசம் பெற்றார்.வேறு இடத்தில் பிரியம் செலுத்தாத பகவானையே சொத்தாக நினைக்கும் அடியார்களின் பாதகமலங்களை சேவித்தவருக்கே பகவானின் ஞானோபதேசம் கிடைக்கும்.
          தோழர்களே நாரதரிடம் நான் எப்படி உபதேசம் பெற்றேன் என்பதை கூறுகிறேன் கேளுங்கள். என் தந்தை தவம் செய்வதற்காக மந்திராசலம் சென்றிருந்தபோது தேவர்கள் அசுரர்களோடு போர் செய்தனர்.பாம்பை எறும்புகள் சேர்ந்து தின்று விடுவது போல ஹிரணியகசிபு செய்த பாவங்களே அவனை தின்று விட்டன. அவன் ஒழிந்தான். இனி இருக்கிற அசுரர்களையும் ஒழித்து விடுவோம். என்று கூறிக்கொண்டு அசுரர்களை நாசம் செய்தனர். ராஜ அரண்மனைக்குள் வந்து அனைவரையும் விரட்டி அடித்தனர். அவர்களை எதிர்க்க முடியாமல் பந்துக்களையும் நண்பர்களையும் குருமார்களையும் பற்றி கவலைப்படாமல் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள நான்கு திசைகளிலும் ஓடி ஒளிந்தனர். அச்சமயம் கதறிக்கொண்டிருந்த என் தாயை இந்திரன் பிடித்துக்கொண்டான். அப்போது நான் தாயின் கர்பத்தில் இருந்தேன். என் தாயை பிடித்துக்கொண்டு எங்கோ சென்று கொண்டிருந்தான். அச்சமயம் நாரதர் எதிரில் வந்தார். “இந்திரா இதென்ன செய்கை பிறன் மனைவியை பிடித்துக்கொண்டு போகிறாய்?இவள் என்ன தவறு செய்தாள்?” என்று நாரதர்  கேட்டார்.
          இந்திரன் கூறினான் நாரதரே உமக்கு தெரியாதா இவள் ஹிரணியகசிபுவின் மகனை கர்பத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறாள். ஹிரணியகசிபுவின் மகன் ஆபத்தானவன். அவன் பிறந்ததும் தந்தையை விட பலசாலியாக இருப்பான். அவ்வளவு தான் தேவர்கள் நாம் ஒழிந்தோம். என்றே நினைக்க வேண்டும். இவளை  கொண்டு போய் ஓர் மாளிகையில் வைத்து அசுர குழந்தை பிறந்தவுடன் அதை கொன்று விட்டு இவளை விடுவித்து விடுவேன் என்றான். அதற்கு நாரதர் சொன்னார். இந்திரா நீ தவறாக திட்டம் போடுகிறாய். நீ நினைப்பது போல பிறக்க போகிற பிள்ளை தீயவனாக இருக்க மாட்டான். இவன் ஸ்ரீ நாராயணனின் பரம பக்தனாக இருப்பான். தேவர்களுக்கு எதிரியாக மாட்டான். பகவானின் பக்தர்களுக்கே எடுத்துக்காட்டாக விளங்குவான். நாரதர் இவ்வாறு கூறியதும் தான் செய்த தவறை உணர்ந்து அவளை விமானத்தில் இருந்து இறக்கி விட்டான். என் மாதாவை வலம் வந்து வணங்கி விட்டு சென்று விட்டான். அநாதை போல் நின்ற என் தாயை ஆசுவாசப்படுத்தி நாரதர் தன் ஆசிரமத்திற்க்கு அழைத்துச்சென்றார். குழந்தை பிறக்கும் வரை அங்கேயே இருக்கச்சொன்னார்.
என் தாய் நாரதர் ஆசிரமத்தில் தங்கினாள். அங்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையாக இருந்தது. ஆசிரமத்தில் இருந்த தவசீலர்களும் பணிப்பெண்களும் நாராயணனை தொழுது கொண்டிருந்தனர். பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். ஆசிரமம் முழுவதும் தெய்வீகமும் அற்புத சாந்திமயமாக இருந்த சூழலில் என் தாய் மிகவும் மன அமைதி பெற்று சந்தோஷமாக இருந்தாள்.
          எனது தாய் என்னை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த காலத்தில் விஷ்ணு பகவானின் மகிமைகளையும் பாகவத தர்மங்களையும் பரமாத்ம ஞானத்தையும் உபதேசம் செய்தார். அந்த உபதேசங்கள் என் மனதில் இருந்து இப்போதும் நீங்கவில்லை. சிரத்தையுடன் கேட்பவர்கள் அதை மனதில் நிறுத்திக்கொள்ள முடியும். நீங்களும் சிரத்தையுடன் கேட்டால் மறக்க மாட்டீர்கள்.  
 (தொடரும்)
 
 
    
 
 
        
            
 

No comments:

Post a Comment