Wednesday 30 May 2012

மரணமில்லா பெருவாழ்வு

ஒரு சமயம் துர்வாசமுனிவர் வைகுண்டம் சென்று விஷ்ணு பகவானை சேவித்து விட்டு பகவானிடம் தெய்வீக மலர் மாலையை பிரசாதமாக பெற்றுக்கொண்டு வந்தார்.வழியில் தேவராஜா இந்திரன் ஐராவத யானை மீது அமர்ந்து எதிரில் வந்தான். அச்சமயம் துர்வாச முனிவர் தான் கொண்டு வந்த மலர் மாலையை இந்திரனுக்கு பரிசாக அருளினார்.இந்திரனோ அதை அலட்சியமாக வாங்கி  ஐராவத யானையின் தலை மீது போட்டான்.யானை அந்த மாலையை துதிக்கையில் எடுத்து காலடியில் போட்டு நசுக்கி கசக்கிற்று.இக்காட்சியை கண்ட துர்வாசருக்கு மிகுந்த கோபம் வந்தது.பெருமாளின் மாலையை யானை காலடியில் போட்டு மிதிக்கவா நான் மாலையை உன்னிடம் தந்தேன்?நீ பயபக்தியுடன் வாங்கிக்கொண்டு கிரீடத்தில் சூட்டிக்கொள்வாய் என்று நினைத்தேன்.நீ பகவானின் அருளை பெற தகுதியற்றவன்.பகவானின் அருள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கு தான் வரும்.ஆதலால் நீ இப்போதே தேவ ராஜ லக்ஷ்மியை இழந்து ஒன்றுமில்லாதவனாக போய்விடுவாய்.என்று கூறி விட்டு விரைந்து சென்று விட்டார்.
            அன்று முதல் தேவர்களுக்காக நடத்தப்படும் யாகங்கள் நின்று போயின.அசுர சக்கரவர்த்தி பலி அசுரபடைகளுடன் வந்து தேவர்களோடு போர் செய்தார்.தேவர்கள் தரப்பில் மிகுந்த சேதம் ஏற்பட்டது.தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி கலந்து ஆலோசித்தனர்.மரணத்தை வெல்லும் வழியை பற்றி விவாதித்தனர்.அனைவரும் பிரம்ம தேவரிடம் சென்றனர்.பிரம்ம தேவர் இந்திரன், வாயு,அக்னி முதலிய தேவர்களை அழைத்துக்கொண்டு வைகுண்ட லோகம் சென்றார்.அங்கு விஷ்ணு பகவானை மனமுருக வேண்டினார்.--"பகவானே தேவர்கள் செல்வங்கள் இழந்து பலமும் இழந்து நிற்கின்றனர்.இவர்களை எதிர்க்கும் சக்திகள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன.பகவானே சிவபெருமானும் நானும் தேவர்களும் அசுரர்களும் மானிடர்களும் பூலோகத்தில் இருக்கும் உயிரினங்களும் தாவரங்களும் தங்களின் சொற்ப ஆற்றலில் இருந்து வெளிப்பட்டு இருக்கிறார்கள்.அவ்வாறு இருக்க தங்களது விராட விசுவ ரூபத்தை எப்படி வர்ணிக்க முடியும்?பிரபுவே தங்கள் பார்வையில் எவரும் தீயவர் இல்லை.நல்லவர்களும் இல்லை.ஒரு தலை பட்சமாக எவரும் பகைவர் இல்லை. எவரும் அன்பர் இல்லை.அவ்வாறு இருந்தும் சத்துவ,ராஜஸ,தாமச குணங்களை ஏற்று லோகங்களை படைத்து காத்து அழித்துஅனைவரையும் உய்வதற்கு அருள் செய்கிறீர்கள்.சரண் அடைந்தவரை காப்பவரே தாங்கள் பற்றற்று எதிலும் தொடர்பில்லாமல் சத்திய சொரூபமாக ஆதி அந்தமில்லாது அனைத்துயிர்களிலும் ஆத்மாவாக இருக்கிறீர்கள்.தாங்கள் புன்னகையுடன் தரிசனம் தந்து அருள் பார்வையுடன்  நோக்க வேண்டும். ஆசைகளுக்கு அடிமைப்பட்டு மனிதர்கள் கர்மங்கள் செய்யும் போது துன்பங்களை தான் அதிகம் அனுபவிக்கிறார்கள்.ஆனால் செய்த கருமங்களை தங்களுக்கு அர்ப்பணம் செய்யும் போது அவர்கள் மனம் அமைதி அடைந்து தங்களை நினைக்கிறது.எல்லாம் வல்ல இறைவன் நீங்கள் ஜீவராசிகளுக்கேல்லாம் பிரியமானவர். அவர்கள் நலத்தை காப்பவர். ஆத்மாவாக இருப்பவர்.
            தேவர்களின் துதி பாடலை கேட்டு எங்கும் நிறைந்த பரம்பொருள் விஷ்ணு பகவான் தன்னோளியால் திசையெல்லாம் பிரகாசிக்க செய்து அவர்கள் முன் சங்கு சக்கர தாரியாக ஒப்பற்ற பேரழகுடன் தோன்றினார்.தேவர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் கூறினார்."பிரம்மா முதலிய தேவர்களே கவலை படவேண்டாம்.அசுரர்கள் வளர்ச்சியின் காலம் இது.ஆதலால் நாம் காரியத்தை சாதித்துக்கொள்ள வேண்டுமானால் அசுரர்களுடன் முதலில் நீங்கள் நட்பு கொள்ள வேண்டும்.(எப்படி என்றால் பாம்பு பிடாரன் கூடைக்குள் ஒரு எலி ஒன்று நுழைந்து விட்டது.கூடைக்குள் எலி நுழைந்தவுடன் பாம்பு சொன்னது.எலியே நீ கூடையை கடித்து ஒரு ஓட்டையை போட்டு விட்டால் நாம் இருவரும் தப்பித்து வெளியேறி விடுவோம். பாம்பு சொன்னதை நம்பி எலி கூடையை கடித்து ஓட்டை செய்தது.பாம்பு திடீரென எலியை விழுங்கி விட்டு ஓட்டை வழியாக தப்பித்து போய் விட்டது.)பாற்கடலில் இருந்து நீங்கள் அமிர்தம் பெறுவதற்கு முதலில் முயற்சி செய்ய வேண்டும்.
            கடலில் தாவரங்களையும் ஒளஷதங்களையும் போட வேண்டும்.மந்திர மலையை சமுத்திரத்தில் போட்டு மத்தாக்கி வாசுகி பாம்பை கயிராக்கி என் உதவியால் கடைய வேண்டும்.முதலில் கடலில் விஷம் பொங்கி வரும்.நீங்கள் அதைக்கண்டு அஞ்ச வேண்டாம்.மேலும் கடலில் இருந்து பல வித ஐஸ்வர்யங்கள் வரும். எதற்கும் நீங்கள் ஆசை படாமல் இருக்க வேண்டும்.ஆசைப்பட்ட பொருள் கிடைக்காவிட்டால் கோபப்பட கூடாது.பகவான் அமிர்தம் கிடைக்கும் வழியை இவ்வாறு கூறி விட்டு மறைந்தார்.சர்வ சக்தி படைத்த இறைவனின் திரு உள்ளப்படி நடக்கப்போவதை யார் தான் அறிவார்?பிரம்மாவும் சிவபெருமானும் அவர் அவர் இருப்பிடத்திற்கு சென்று விட்டனர்.
            தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி பலிச்சக்கரவர்த்தியை காணச்சென்றனர்.கைகளில் ஆயுதங்கள் இல்லாமல் வருவதை கண்டு அசுரர்கள் இதுதான் நல்ல சந்தர்பம் என்று கருதி அவர்களை பிடிக்கமுயன்றனர்.அசுர ராஜா பலி நட்பும் பகையும் உள்ள அரசியலை நன்கு அறிந்தவர்.தூய கீர்த்தி பெற்ற பலி தேவர்களை கைது செய்ய வேண்டாம் என்று அசுர தளபதிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.அசுர சேனாதிபதிகளும், மந்திரிகளும் புடை சூழ சிம்மாசனத்தில் அமர்ந்த பலி ராஜா தங்கள் வருகைக்கு என்ன காரணம் என்று வினவினார்.இந்திரன் சமாதானம் பேசுவதற்காக இங்கு வந்துள்ளோம். என்றார்.பலி அவர்களை தகுந்தபடி உபசரித்து பேச சொன்னார்.விஷ்ணு பகவான் உபதேசித்தபடி தேவர்கள் நாம் இருவரும் ஒத்துழைத்தால் அமிதம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்றனர்.இரு தரப்பினரும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு அமிர்தம் கடைவதற்கு சம்மதித்தனர்.பலி ராஜாவின் படைத்தளபதிகள் உற்சாகமானார்கள்.அதன்பின் தேவர்களும் மிகுந்த பலசாலிகளான அசுர படை தலைவர்களும் மந்திர மலையை தூக்க முற்பட்டனர்.மாபெரும் மலையை தூக்க முடியாமல் தூக்கி நழுவ விட்டனர்.மலை அடியில் சில தேவர்களும் அசுரர்களும் நசுங்கி இறந்தனர்.அப்போது ஆபத்பாந்தவன் விஷ்ணு பகவான் தோன்றினார்.அவர் அனாயாசமாக மலையை தூக்கி கருடன் மீது ஏற்றிக்கொண்டு கடற்கரை வந்து சேர்த்தார்.
            அனைவரும் கடலுக்குள் மலையை போட்டு வாசுகி பாம்பை அதில் சுற்றினர்.முதலில் தேவர்கள் பாம்பின் தலைப்பக்கம் பிடித்தனர்.அப்போது அசுரர்கள் கூறினார்கள்.பாம்பின் வாலை பிடிப்பது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது.நாங்கள் வேதங்களை கற்று தேர்ந்தவர்கள்.கல்வியில் சிறந்து விளங்கும் நாங்கள் உயர் குடியில் பிறந்தவர்கள்.வீரத்திற்கு எடுத்துக்காட்டாக பல வீர தீர செயல்கள் புரிந்து புகழ் பெற்றவர்கள்.தேவர்களை விட நாம் ஒன்றும் குறைந்து போகவில்லை.என்று கூறிவிட்டு அசுரர்கள் ஒருபக்கம் பேசாமல் நின்று கொண்டார்கள்.விஷ்ணு பகவான் புன்னகைத்துவிட்டு வாசுகி தலையை விட்டு விட்டு வாலை பிடித்துக்கொண்டார்.தேவர்கள் பகவான் பக்கம் சென்று வாலை பிடித்துக்கொண்டனர்.பலம் மிக்க தேவர்களும் அசுரர்களும் கடைய ஆரம்பித்தவுடன் மந்தர மலை கடலுக்குள் மூழ்க ஆரம்பித்தது.அனைவரும் உற்சாகம் இழந்தனர்.இதை அறிந்த விஷ்ணு பகவான் ஒரு பெரிய விசாலமான ஆமை வடிவம் எடுத்து கடலுக்குள் சென்றார்.புதைந்த மந்தர மலையை மேல் தூக்கி முதுகில் தாங்கிகொண்டார்.அதன் பின் மந்தர மலை நன்றாக சுற்றி கடலை கடைந்தது.(தொடரும்)

Tuesday 15 May 2012

மாமன்னன் பிருது தொடர்ச்சி 2

அரசன்  வேனின் ஆட்சியில் யாகவழிபாடுகள் நின்று போய்விட்டதாலும் நாட்டில் அநியாயங்களும் அக்கிரமங்களும் நடந்து கொண்டு இருந்ததால் பூமி தேவி வன் கொடுமைகளை தாங்காமல் மண் வளத்தையும் பயிர் முதலிய தாவரங்கள் தளைத்து வளரும் சக்தியையும் தன்னுள் அடக்கி புதைத்துக்கொண்டாள். அதன் விளைவாக விளைச்சல் இல்லாமல் குடிமக்களுக்கு உணவு தானியம் கிடைக்காமல் எங்கும் பசியும் பஞ்சமும் நிலவியது.குடிமக்கள் அனைவரும் ஒன்று கூடி பிருது மன்னனிடம் வந்து முறையிட்டனர்
             அரசே வயலில் பயிர்கள் விளைச்சல் இல்லாமல் போனதால் நாங்கள் பசியால் வாடுகிறோம்.மாற பொந்துக்குள் தீ கங்கு அணையாமல் மரத்தை சிறிது சிறிதாக எரிப்பது போல எங்களுக்குள் இருக்கும் பசித்தீ எங்களை கபளீகரம் செய்து கொண்டு உள்ளது.இதோ பாருங்கள் நாங்கள் அனைவரும் எழும்பும் தோலுமாக இருக்கிறோம்.உங்களை நம்பி வந்திருக்கிறோம்.ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்.பூமியை சமதளப்படுத்தி எங்களுக்கு வீடு அமைத்துக்கொடுத்தீர்கள்.
            பிருது மகாராஜாவின் குடிமக்கள் துயரங்களை கேட்ட பின் இதற்க்கு ஏதாவது வழியை கண்டுபிடித்து ஆவன செய்கிறேன் என்று கூறிவிட்டு நெடுநேரம் யோசித்தார். இந்த பூமிமாதா தான் பயிர்களை விளைவிக்கும் மண் வளத்தை தன்னில் மறைத்துக்கொண்டு விட்டது என்று அறிந்தார்.அவர் மிகவும் ஆத்திரம் அடைந்து பூமியை பிளந்து விடவேண்டும் என்று நினைத்து அக்னி பகவானிடம் பெற்ற வில்லை எடுத்தார்


.அதில் அம்பை பொருத்தினார்.இதை அறிந்த பூமி தேவி நடுங்கினாள்.வேட்டைகாரனுக்கு பயந்து மான் ஓடுவது போல பசு உருவமெடுத்து ஓடினாள். ஆனால் எங்கு ஓடி ஒளிந்தாலும் பிருது ராஜா பின் தொடர்ந்து வருவதை கண்டாள்.இந்த உலகில் மக்கள் மரணத்திற்கு பயந்து ஓடினால் மரணம் அவர்களை விட்டு விடுமா?பூமி தேவி வேறு வழியின்றி பிருது மகா ராஜாவிடம் சமாதானமாக போகலாம் என்று எண்ணம் கொண்டு கூறினாள். "பிருது மகாராஜா சரணம் என்று வந்தவர்களை காப்பவரே என்னை கொல்வதன் நோக்கம் என்ன?பெண்கள் இரக்கத்திற்கு உரியவர்கள்.சாதாரண மக்களே பெண்களை இம்சிக்க மாட்டார்கள்.அவ்வாறு இருக்க தேவர்களால் அரசாட்சி பதவியில் அமர்த்தப்பட்ட சக்கரவர்த்தி நீங்கள் தர்மத்தை கை விடலாமா?என்னை பிளந்து விட்டு தரையில் வசிக்கும் குடிமக்களை கடல் நீரில் வாழ வைப்பீர்களா?
            பிருது மன்னன் பதிலுரைத்தார்:--"பூமி தேவி யாகத்தில் தேவர்களுக்கு சமமாக அவிர்பாகத்தை பெற்றுக்கொண்டு பயிர் முதலிய தாவர விளை நிலத்தின் வளங்களை ஏன் தன்னுள் அடக்கி கொண்டாய்?பச்சை புல் தின்று விட்டு பால் கறக்காத பசு போல வேடமணிந்து இருக்கிறாய்?நான் பசுவை கொல்ல மாட்டேன் என்று தான் பசு வேடம் தரித்து ஓடுகிராயோ?நான் உன்னிடம் இரக்கம் காட்ட போவதில்லை.உன்னை கொன்றுவிட்டு அந்த ரத்தத்தால் குடிமக்களின் பசி தாகத்தை தீர்த்து வைக்க போகிறேன்.பூ தளம் இல்லாமல் போனால் என்ன?நான் ஏன் யோக சக்தியால் தளம் உண்டாக்கி குடிமக்களை அதில் வாழ வைப்பேன்.என்று கூறி முடித்தான்.
            ஆத்திரம் தணியாத பிருது ராஜாவை நோக்கி கை கூப்பி வணங்கி பூமி தேவி கூறினாள். நீங்கள் ஆதிநாராயணர் அம்சத்தில் தோன்றியவர்.தர்மத்தை ரட்சிக்க வந்தவர்.அதாவது விஷ்ணு ரூபமாக உலகை காக்க வந்தவர்.என்னை கொள்ள முயற்சிப்பது தகுமா?ஆதி வராக அவதாரத்தில் கடலில் மூழ்கி இருந்த என்னை வெளியில் கொண்டு வந்து தரணீதரன் என்று பெயர் பெற்றீர்கள்.இப்போது பிருது ராஜாவாக தோன்றி படகு போல் பிரஜைகளை தாங்கும் என்னை கொல்ல வருகிறீர்கள்.பிருது ராஜா கோபம் தணியாமல் இருப்பதை கண்டு பூமி தேவி மேலும் கூறினாள். மகாராஜா கோபம் தணிந்து நான் சொல்வதை கேளுங்கள்.அறிவுள்ளவர்கள் உபாயத்தால் எப்படி காரியத்தை சாதித்துக்கொள்ள வேண்டும் என்று யோசிக்க வேண்டும்.ஆதி காலத்தில் இருந்தே மகரிஷிகள் இறைவழிபாடு மூலம் தெய்வ அருளால் நற்பலன்களை அடைந்தார்கள்.மனிதர்கள் விவசாய நுணுக்கங்களை அறிந்து முறைப்படி விவசாயம் செய்து வெற்றி கண்டார்கள்.மகாராஜா பிரம்ம தேவர் தானியங்களையும் பயிர் வகைகளையும் சிருஷ்டித்தார்.காலத்தின் மாறுதலால் பூமியில் அநியாயம் செய்பவர்களும், தர்மத்திற்கு எதிராக நடப்பவர்களும் தன தானிய செல்வங்களை பெற்று பொது நலம் கருதாமல் மக்களுக்கு பங்கிட்டு கொடுக்காமல் சுயநலத்திற்காக வாழ்ந்தார்கள்.அதனால் நான் அந்த தானிய விதைகளை யாகத்திற்கு பயன்படுத்துவதற்காக தனக்குள் மறைத்து வைத்துக்கொண்டேன்.காலப்போக்கில் அந்த தானிய விதைகள் எனக்குள் ஜீரனமாகிவிட்டன. குடிமக்களின் பசி பிணி நீங்க அவர்கள் நலமாக வாழஅவர்களுக்கு அன்னமளிக்க விரும்புகிறீர்கள். ஆதலால் சிருஷ்டியின் ஆதியில் படைக்கப்பட்ட மனித இனத்தின் முதல்வர் ஸ்வயம்புமனு என்பவரை அழைத்து வாருங்கள்.அவரை கன்று போல பாவித்து எனது பால் மூலமாக எல்லாவித உணவு தானியங்களையும் கறந்து கொள்ளுங்கள்.அதனால் உங்கள் நாட்டின் பஞ்சம் தீரும்.மேலும் தாங்கள் செய்ய வேண்டியது மழைநீர் பூமியில் அனைத்து பகுதிகளிலும் தங்கும்படி மேடுகளை பள்ளமாக்குங்கள்.குளம் ஏரிகளில் நீர் நிரம்புமானால் விவசாயம் நன்கு நடக்கும்.
          பூமிதேவி இவ்வாறு கூறியதும் பிருது மகாராஜா பசு வடிவம் கொண்ட பூமியில் இருந்து தானியங்களை பாலாக கறந்து கொண்டார்.பிருது மகாராஜாவால் வசமாக்கப்பட்ட பசுவடிவம் கொண்ட பூமியில் இருந்து மற்றவர்களும் அவர் அவர் தேவைக்கு ஏற்றவாறு பாலை கறந்து கொண்டனர்.பிருகஸ்பதியை கன்றாக்கிரிஷி முனிவர்கள் வேத உபநிஷதுகளை கறந்து கொண்டனர்.இந்திரனை கன்றாக செய்து தேவர்கள் பல சக்திகளை கறந்து கொண்டனர்.அது போல அசுரர்களும், பித்ருக்களும்,சித்தர்களும் தேவைக்கேற்ற விசயங்களை கறந்து கொண்டனர்.வன விலங்குகளும் நாக,யட்ச,ராட்சஷர்களும், காடுகளும்,மலைகளும்,பூமியில் இருந்து பெற்றுக்கொள்ளவேண்டிய வஸ்துக்களை பெற்றுக்கொண்டனர்.இவ்வாறு பிருது மகாராஜா குடிமக்களின் பஞ்சத்தை போக்கினார்.நீதி வழுவாமல் நல்லாட்சி புரிந்தார்.
            பிருது மகாராஜா யாகங்கள் பல செய்து விஷ்ணு பகவானையும், தேவர்களையும் வழிபட்டார்.நூறு யாகம் செய்தால் இந்திர பதவி கிடைக்கும் என்பதால் பிருது மகாராஜா அதிக யாகங்கள் செய்து முடித்து நூறாவது யாகம் செய்யும் பொது இந்திரன் குதிரையை திருடிக்கொண்டு போனான்.பல விக்னங்களை உருவாக்கினான்.அதனால் அந்த யாகத்தை கைவிட்டார்.விஷ்ணு பகவான் அவர் யாகபூஜையில் தரிசனம் தந்து பிருதுவி பாராட்டினார்.தர்மத்தை காத்து தன் கடமைகளை செய்து மேன்மை அடைந்த உயர்ந்த மனிதர்கள் தம் ஆத்மாவின் முன்னேற்றத்திற்காக மோட்ச வழியை தேடுவார்கள்.விஷ்ணு பகவான் பிருது ராஜாவுக்கு மேலும் அறிவுரை கூறினார்.பிருது ராஜா யாக பூஜைகள் மூலம் இறைவனை வழிபட்டாலும் தன்னுள் இருக்கும் பரமாத்மாவை உணர வேண்டும்.மனதை சமநிலையில் வைத்து சுக துக்கங்களை சமமாக நினைத்து மந்திரிகள் துணையோடு நாட்டை காக்க வேண்டும்.குடிமக்களை காப்பது உன் கடமை அல்லவா?அவ்வாறு மக்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் ஆட்சி செய்தால் புண்ணியத்தில் ஆறாவது பங்கு உன்னை சேரும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்களிடம் வரி வசூலித்து அவர்களுக்காக செலவிடாமல் போனால் அரசன் அவர்கள் பாவத்தில் பங்கு பெற்று துன்பம் அடைவான்.விஷ்ணு பகவான் இவ்வாறு கூறியதும் பிருது அவருக்கு பூஜைகள் செய்து மகிழ்வித்தார்.அதன் பின் சனத் குமாரர்கள் வருகை தந்து சில அறிவுரைகளை கூறினார்கள்.அவர்களுக்கும் மரியாதைகள் செய்து மன்னர் பிருது பூஜித்தார்.நெடுங்காலம் ஆட்சி செய்த பின் புதல்வர்களுக்கு முடிசூட்டிவிட்டு தபோவனம் சென்று தவம் செய்து மன்னர் பிருது  முக்தி அடைந்தார்.  

Saturday 5 May 2012

மாமன்னன் பிருது தொடர்ச்சி 1

            தேவர்களும் ரிஷி முனிவர்களும் உன்னை வாழ்த்துவார்கள்.ரிஷி முனிவர்கள் சொன்னது அனைத்தையும் கேட்டுவிட்டு வேன் அரசன் அவர்களை நோக்கி ஏளனமாக கூறினான்:--"முனிவர்களே உங்களுடைய மடமையை என்னவென்று சொல்வது?அதர்மத்தில் தர்மசிந்தனை கொள்வது சரியல்ல.ஒரு பெண் தன்னை காப்பாற்றும் கணவரை துறந்து வேறு ஒருவனிடம் சென்று சேவை செய்வது சரியா?அது போல சேவை செய்ய கடவுளை போல நான் இருக்க நீங்கள் தேவர்களையும் விஷ்ணு பகவானையும் பூஜிக்கிறீர்கள். அரசன் கடவுளுக்கு சமமானவன். அவனிடம் எல்லா தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.அவன் ஆணையை மீறக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.ஆதலால் முனிவர்களே நான் எதை சொன்னாலும் செய்தாலும் நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருங்கள்.என்று கூறினான்.
        வேன் மன்னன் முனிவர்களின் பேச்சை கேட்டு அறவழியில் நடக்கவில்லை.அவனது கொடுங்கோல் ஆட்சி மேலோங்கியது.தர்ம நெறிகளையும் அறத்தையும் மீறினான்.இதைக்கண்டு ரிஷிமுனிவர்களின் கோபம் அதிகரித்தது.முனிவர்கள் இறுதியில் தம் கோப பார்வையால் நோக்கி இவன் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை. இவன் செத்தால் தான் உலக மக்களுக்கு விமோசனம் உண்டாகும் என்றனர்.ரிஷிகளின் வாக்கு பலித்தது.வேன் உயிரற்று பூமியில் விழுந்தான்.முனிவர்கள் தம்தம் ஆசிரமத்திற்கு போய் விட்டனர்.வேனின் தாய் சுனிதா மிகவும் அழுது புலம்பினாள்.வேனின் உயிரற்ற உடலை கெடாமல் வைத்துக்கொண்டு இருந்தாள். 
            ஒருநாள் ரிஷிகள் வழக்கம் போல சரஸ்வதி நதிக்கரையில் இறைவழிபாடு நடத்திக்கொண்டு இருந்த போது மாபெரும் தூசி படலத்தை கண்டனர்.என்னவென்று அறிந்தபோது கொள்ளையர்கள் ஊர்களிலும்,கிராமங்களிலும் புகுந்து கொள்ளையடித்து விட்டு குதிரைகளில் ஓடிக்கொண்டு இருந்தனர்.வேன் அரசன் இறந்து விட்டதால் ஏன் என்று கேட்க எவருமில்லாததால் அராஜகம் நிலவியது.அனைவரும் வரம்புகள் மீறி நடந்துகொண்டு இருந்தனர்.நாடு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
            ரிஷி முனிவர்கள் எதிலும் தலையிடாமல் இருப்பதும் சரியல்ல.மக்களின் துயரங்களை துடைப்பதும் நமது கடமை அல்லவா.ஆங்காங்கு நாட்டில் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கும்போது நாம் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்.என்று நினைத்து ரிஷிமுனிவர்கள் ஒன்று கூடி பேசினர். புகழ் மிக்க வீரராஜாக்களும்,அறங்காவலர்களும் தோன்றிய இந்த ராஜரிஷி பரம்பரை கொண்ட வேனின் தந்தை அங்க ராஜாவின் வம்சம் வீணாகிப்போககூடாது.என்று கூறி வேனின் இறந்த உடலை அணுகி சவத்தின் தொடைப்பகுதியை கடைந்தார்கள்.அதிலிருந்து கருத்த நிறமுடைய ஒரு மனிதன் தோன்றினான்.அவன் கை,கால்கள் குட்டையாக இருந்தன.கண்கள் சிவந்து தாடை பெரிதாக,நாசி சப்பையாக தலைகேசம் சிவந்து காணப்பட்டான்.அவன் ரிஷிகளை நோக்கி நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்.ரிஷிகள் அவனை நோக்கி நீ பேசாமல் இரு என்றனர்.அவன் வேன் அரசனின் பாவத்தின் மொத்த உருவமாக இருந்தான்.(அவன் வம்ச பரம்பரைகளை பிற்காலத்தில் மக்கள் நிஷாதர்கள் என்று அழைத்தனர்.நிஷாதர்கள் வேட ஜாதியை சேர்ந்தவர்கள்.அவர்கள் நாட்டில் குடியேறாமல்காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்தனர்.)அதன் பின் ரிஷிமுனிவர்கள் வேனின் புஜங்களை கடைந்தார்கள்.அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது.அதிலிருந்து தெய்வாம்சம் பொருந்திய ஒரு அழகான மனிதன் பேரொளியுடன் தோன்றினான். அத்தெய்வ திருமகனை கண்டு ரிஷி முனிவர்கள் கூறினார்கள்.இவன் விசுவத்தை காக்கும் கடவுள் ஸ்ரீ நாராயணனின் தெயவாம்சத்தில் இருந்து தோன்றி இருக்கிறான்.அவனுடன் ஒழி வீசிக்கொண்டு அவன் மனைவி லக்ஷ்மியின் அம்சத்தில் இருந்து வந்திருக்கிறாள்.வானகமும் வையகமும் புகழ இவன் வெண் கொற்றக்குடையின் கீழ் நல்லாட்சி புரிவான்.அதனால் பிருது என்ற பெயருடன் விளங்குவான்.பிருது என்றால் பெரும்புகழ் உடையவன்.என்றார்கள்.பிராமணர்கள் பிருதுவின் புகழ் பாடினார்கள்.தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.அப்சரஸ்கள் நடனமாடினார்கள்.ஆகாயத்தில் சங்கு முழக்கமும் துந்துபி சத்தமும் கேட்டது.தேவரிஷிகளும் பித்ருக்களும் வருகை தந்தனர்.சாட்சாத் பிரம்மா தேவர்களுடன் அங்கு வந்தார்.பிருதுவின் கைகளைபிடித்து கை ரேகைகளை பார்த்து கூறினார்.-- வேன் மகன் நாராயணர் அம்சத்தில் தோன்றியவன் இவன் கை ரேகை சுதர்சன சக்கரத்தில் உள்ளது போல அமைந்துள்ளது.இவன் கால்களில் தாமரை பூ போல ரேகைகள் உள்ளது.இவன் மனைவி அர்ச்சி என்பவள் சாட்சாத் லக்ஷ்மி தேவி அம்சத்தில் இருந்து வந்தவள்.
           அதன் பின் வேதம் ஓதும் பிராமணர்களும்,தேவர்களும்,ரிஷிமுனிவர்களும் பேரரசன் பிருதுவுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தனர்.அச்சமயம் நதியும் ,கடலும்,மலையும் உருவெடுத்து ரத்தினங்கள் பரிசாக அளித்தன.அது மட்டுமில்லாமல் நாக தேவதைகள் தெய்வ பசு,பூமிதேவி,பட்சிராஜா,வன தேவதைகள் அனைவரும் விலை உயர்ந்த பரிசுகளை கொண்டு வந்தனர்.குபேரன் தங்க சிம்மாசனம் கொண்டு வந்தான்.வருண பகவான் வெண்குடையும்,இந்திரன் வைரக்கிரீடத்தையும் பரிசாக அளித்தனர்.ருத்திர பகவான் வீர வாளையும், அம்பிகை கேடயத்தையும்,அக்னிபகவான் வில்லையும்,சூரியபகவான் ஒளிவீசும் வாளையும் வாயு பகவான் சாமர்ந்களையும் தந்தனர்.
            இறுதியில் கவிபாடும் கவிஞர்கள் பிருதுவின் புகழ் பாட முன் வந்தனர்.அச்சமயம் மேகக்கம்பீர குரலில் வேன் மகன் பிருது மகாராஜா கூறினார்.--"கவிஞர்களே நான் இன்னமும் ஒரு சாதனை கூட புரியவில்லை.எதை வைத்து என்னை பாட போகிறீர்கள்?சாதனைகள் புரிந்தவுடன் என்னை பற்றி பாடலாமே மேலும் புகழுக்கு உரியவர் விஷ்ணு பகவான் இருக்கிறார்.தேவர்களும் இருக்கிறார்கள்.மேலும் அரசர்கள் புகழ் மயக்கம் கொண்டவர்கள்.கவிஞர்கள் அரசனை பற்றி புகழ்ந்து பாடினால் அதற்க்கு தகுந்தபடி சாதனைகள் புரிய வேண்டும்.கவிஞர்கள் பாடும் வஞ்சப் புகழில் வீழ்ந்து அரசர்கள் தற்பெருமை கொண்டு மயக்கத்தில் விழுகின்றனர்.
            பிருது மகாராஜா இவ்வாறு கூறியதும் ரிஷி முனிவர்கள் அனைவரும் பிருதுவின் அடக்கத்தை புகழ்ந்து மாகதவந்தி கவிஞர்களை பிருதுவி பற்றி பாட சொன்னார்கள்.
            கவிஞர்கள் பாடினார்கள்.--பிருது மகாராஜா தாங்கள் படைக்கப்பட்ட உயிரினங்களை விஷ்ணு பகவான் காப்பாற்றுவது போல குடிமக்களுக்கு ஒரு குறையும் ஏற்படாதவாறு காப்பாற்றுவீர்கள்.காலம் தவறாமல் மழை பொழிவது போல மிதமாக வரிவசூளித்து அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.அற வழி நின்று நீதி வழுவாமல் செங்கோல் ஆட்சி புரிந்து சத்ருவின் குற்றமற்ற மகனை  தண்டிக்காமல்  இருப்பீர்கள் .குற்றம் செய்தவன் 
தன்  மகனாக  இருந்தும்  அவனை தண்டிப்பீர்கள்.இரக்க சித்தமுடைய நீங்கள் யாகங்கள் செய்து இறைவனை வழிபடுவீர்கள்.இறைவனடியார்களை அன்பாக நடத்துவீர்கள்.தீயவர்களை தண்டிப்பீர்கள்.கவிஞர்கள் இவ்வாறு புகழ்ந்து பாடினார்கள்.
            பிருது மகாராஜா ஆட்சியில் அமர்ந்து தன் கடமையை நிறைவேற்றினார்.குடிமக்கள் நன்றாக வீடுகளை அமைத்துக்கொள்ள மேடுபள்ளமாக இருந்த பூமியை சமதலப்படுத்தினார்.பாதைகள் அமைத்தார்.மலைநீர்தேங்கி விவசாயம் செய்ய வழிவகுத்தார்.ஆனால் வருடா வருடம் விவசாயம் பொய்த்துக்கொண்டு இருந்தது.பயிர் விளைச்சல் இல்லாமல் பஞ்சம் ஏற்பட்டது(தொடரும்)




Friday 4 May 2012

மரணமில்லா பெருவாழ்வு தொடர்ச்சி 2

     பகவான் தன சக்ராயுதத்தால் ராகு தலையை வெட்டி விட்டார். தேவர்கள் அனைவரும் அமிர்தம் குடித்து விட்ட நிலையில் விஷ்ணு பகவான் மோகினி வடிவத்தை மறைத்து விட்டு சுய ரூபம் எடுத்து வைகுண்டம் சென்று விட்டார்.
            தேவர்களும் அரக்கர்களும் ஒரே குறிக்கோளை அடைய பாடுபட்டு வேலை செய்தார்கள்.ஆனால் முழு பலனையும் தேவர்களே பெற்றார்கள்.இந்த பாகுபாடு ஏன் நடக்க வேண்டும்?அதற்க்கு காரணம் இருக்கிறது.தேவர்கள் பகவானை சரண் அடைந்தார்கள்.சுயநலம் இல்லாமல் செயல்பட்டார்கள்.மேலும் மனிதன் தன் உயிர், செல்வம்,தன்னலம்,மனைவி மக்கள் ஆகியோருக்காக உழைக்கிறான்.ஆனால் பகவானை சார்ந்து பகவானுக்கு அர்பணிப்பு நோக்கத்துடன் செய்தால் நல்ல பலன்களை அடைவான் . அரக்கர்கள் பிறர் நலமாக வாழ்வதை பொறுக்க மாட்டார்கள்.அவர்களிடம் சூதும் நய வஞ்சகமும் கலந்து இருந்தன.தன் இன மக்களிடையே கூட ஒற்றுமை இல்லாமல் அமிர்தத்திர்காக சண்டை இட்டார்கள்.பகவானிடம் பக்தி இல்லாமல் இருந்தார்கள்.ஆதலால் உழைப்புக்கு தகுந்தபடி பலன் அடைய வில்லை.பகவானுக்கு அற்பணிப்பு சிந்தனையுடன் எதுவும் செய்தால் (மரத்திற்கு வேரில் நீர் ஊற்றுவது போல )ஆதி மூல பொருள் பகவானின் அருள் கிடைத்து மனித வாழ்வு தாமாக மேன்மை அடையும்.
            அரக்கர்கள் தாம் ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்தவுடன் ஆத்திரம் அடைந்து தம்தம் ஆயுதங்களை எடுத்து போருக்கு தயாரானார்கள்.தேவர்களோ அமிர்தம் குடித்த அபூர்வ சக்தி பெற்று இருந்தார்கள்.அவர்களுக்கு புது வீரமும் தைரியமும் கூடி இருந்தன.இரு தரப்பினருக்கும் பயங்கர யுத்தம் மூண்டது.வெகு விரைவில் அதி தீவிரம் அடைந்தது.கடற்கரை பக்கம் நெஞ்சை நடுங்க வைக்கும் யுத்தம் மிக பயங்கரமாக நடந்தது.தேவர்களும் அசுரர்களும் அவர் அவர் பெயரை சொல்லி அரை கூவல் விடுத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.யானை,தேர்,குதிரை முதலிய பலவித வாகனங்கள் மீதேறி போர் செய்தனர். தேவர்கள் அமிர்தம் குடித்து விட்டதால் அவர்கள் அதிக சேதம் அடைய வில்லை. அசுரர்கள் தரப்பில் பலத்த சேதம் அடைந்ததது.ரத்த ஆறு பெருக்கெடுத்து ஓட அசுரர்களின் வெட்டுண்ட உடல்களும் கை கால்களும் நிறைந்து பூமியே புலப்படாமல் போய்விட்டது. பலி ராஜாவுக்கும் இந்திரனுக்கும் பயங்கர யுத்தம் நடந்தது.கூறிய அம்புகளால் இந்திரன் பலியை தாக்கினான்.பலி ஐராவத யானையையும் இந்திரனையும் ஒரே நேரத்தில் தாக்கினான்.பலி எரிமலை போல தீப்பிழம்பை உமிழ்ந்து கொண்டிருந்த ஒரு சக்தி ஆயுதத்தை எடுத்து தாக்க முற்பட்ட போது இந்திரன் வஜ்ராயுதம் வீசி அதை வெட்டினான்.பலி பல வித ஆயுதங்களால் தாக்கினான்.எல்லாம் வீனாகிப்போனதும் மாயங்களை உருவாக்கினான். பெரிய எரிமலை ஆயுதங்களை வீசிக்கொண்டு தேவர் சேனை மீது விழுந்தது.இடியும் மின்னலும் உருவாக்கி தீ கங்குகள் மழை  போல  விழுந்தன.புயல் வீசியது.புது புது ராக்ஷசர்கள் தோன்றி ஆயுதங்களால் தாக்கினார்கள்.தேவர்கள் பலி ராஜாவின் தாக்குதல்களையும் மாயங்களையும் தாங்க முடியாமல் பகவானை சரண் அடைந்தனர்.அகில லோகங்களுக்கும் உயிர் கொடுக்கும் சர்வ வல்லமை படைத்த கடவுள் விஷ்ணு கருடன் மீதேறி வந்ததும் ஆணை அனைத்து வித மாயங்களும் கஷ்டங்களும் ஒழிந்தன. விஷ்ணு பகவான் தன்னை திரிசூலத்தால் தாக்க வந்த காலநேமி என்ற அசுரனை கொன்றார்.மாலி சுமாலி என்ற இரு அரக்கர்கள் பயங்கரமாக போரிட்டு தாக்குதல் நடத்தினர்.விஷ்ணு பகவான் அவர்களை சம்ஹாரம் செய்துவிட்டு வைகுண்டம் சென்று விட்டார்.
            இந்திரனுக்கும் பலிக்கும் பலத்த யுத்தம் நடந்தது.இந்திரன் பலியை நோக்கி ஏசினான்.மாயம் செய்வதில் வல்லவனே என்னுடன் நேருக்கு நேராக யுத்தம் செய்.இதோ உன் பந்துக்களோடு இப்போதே என் வஜ்ராயுதத்தால் அடிபட்டு எமலோகம் செல்லப்போகிறாய்.அசுராதிபதி பலி இந்திரனை நோக்கி கூறினான்.தேவராஜனே அவர் அவர் கர்ம பலனுக்கு தகுந்தபடி ஏற்றமும் வீழ்ச்சியும் அடைகிறார்கள்.காலத்தின் தூண்டுதலால் அவர் அவருக்கு வெற்றி தோல்விகள் கிடைக்கின்றன.புகழும் அவமானமும் அடைந்த ஞானிகள் சந்தோசமோ துக்கமோ எதையும் சமமாக ஏற்றுக்கொள்வார்கள்.நீ பேராசையால் மூழ்கியதால் உனக்கு தத்துவம் எல்லாம் எங்கே புரிய போகிறது.?
            பலியின் சொற்களால் கோபம் அடைந்த இந்திரன் இடி போல தாக்கும் வஜ்ராயுதத்தை பலி மீது ஏவினான்.பலமாக தாக்கப்பட்ட பலி விமானத்தில் இருந்து கீழே விழுந்தான்.
            பலி வீழ்ந்து விட்டதை அறிந்த அவன் நண்பன் ஜம்பாசுரன் இந்திரனோடு போர் செய்தான்.ஐராவத யானையை மயக்கமடைய செய்தான்.ஆத்திரம் அடைந்த இந்திரன் வஜ்ராயுதத்தால் அவன் தலையை வெட்டினான்.அடுத்து அடுத்து பலாசுரன்,நமுசி, பகாசுரன்அனைவரும் தாக்க வந்தனர்.மூவரும் அம்புகளை மலை போல விழ செய்து இந்திரனை மூடி மறைத்தார்கள்.இந்திரனை காணாமல் தேவர்கள் தவித்தனர்.ஆனால் சிறிது நேரம் கழித்து இந்திரன் உதய சூரியன் போல வந்து பகாசுரனையும், பலாசுரனையும் கொன்றார்.ஆனால் நமுசி வஜ்ராயுதத்தால் இறக்கவில்லை. இந்திரன் குழம்பிக்கொண்டிருக்கையில் அசரிரி முழங்கியது.இவன் உலர்ந்த பொருளாலும் ஈரமான வஸ்துவாலும் தாக்கப்பட்டு சாகாதவன்.நமுசி மீது கடல் நுரையை எடுத்து அவன் மீது வீசினான்.ஆயதங்கள் தாக்கப்பட்டு சாகா வரம் பெற்ற நமுசி கடல் நுரையால் அழிந்தான்.
            அசுரர்கள் பெரும்பாலும் அழிந்த நிலையில் யுத்தம் செய்து கொண்டு இருந்தபோது பிரம்மதேவர் நாரத மகரிஷியை அனுப்பி தேவர்களை யுத்தத்தை நிறுத்துமாறு சொன்னார்.
            ஸ்ரீ நாரதர் போர்களத்திற்கு வந்து தேவர்களை போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
            நீங்கள் அனைவரும் அமிர்தம் குடித்து விட்டதால் இத்துடன் அசுரர்களை சம்ஹாரம் செய்வதை நிறுத்திவிட்டு திரும்பிவிடுங்கள்.நாரத மகரிஷி இவ்வாறு கூறியதும் தேவர்களும் அசுரர்களும் யுத்தத்தை நிறுத்தினர்.ஸ்ரீ நாரதரின் ஆலோசனைப்படி அசுர வேந்தன் பலியையும்,கை கால்களும் உடம்பும் வெட்டுப்படாத அசுரர்களையும் அசுர வீரர்கள் அஸ்தாச்சலத்திர்க்கு கொண்டு சென்றனர்.அங்கு சுக்கிராச்சாரியார் மிருத சஞ்சீவினி வித்தையை பயன்படுத்தி பலி அரசனையும் மற்ற அசுர தளபதிகளையும் உயிர்பித்து விட்டார்.தூங்கி எழுந்தவர்கள் போல அனைவரும் எழுந்தனர்.அசுர தளபதி பலிஎதற்கும்கலங்காதவன்.பிறப்பு,இறப்பு,வெற்றி,தோல்வி,மேன்மை,சிறுமை ஆகியவற்றின் சுழற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று அறிந்த ஞானி ஆவான்.

Wednesday 2 May 2012

மாமன்னன் பிருது

ராஜரிஷி அங்கன் என்பவர் பரத கண்டத்தை ஆட்சி புரிந்து வந்தார்.அவரது நல்லாட்சியில் குடிமக்கள் எந்த குறையுமின்றி சுகமாக வாழ்ந்தனர்.
            ஒரு சமயம் அரசன் அங்கன் அசுவமேத மகா யாகத்தை ஆரம்பித்தார்.அந்த யாகத்தில் வேத விற்பன்னர்களும் ரித்விஜர்களும் யாகஹவிர்பாகத்தை தேவர்களுக்கு அர்ப்பணித்து மந்திர உச்சாடனம் செய்தனர்.ஆனால் தேவர்கள் அந்த ஹவிர் பாகத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.ரித்விஜர்கள் அரசரிடம் கூறினார்கள்.--"ஹோமத்தில் இட்ட பதார்த்தங்களை நாங்களே புனிதமாக தயாரித்தோம்.சிரத்தையுடன் அக்னியில் அர்ப்பணித்தோம். நாங்கள் வேத மந்திரங்களை பிழையின்றி உச்சரித்தோம்.ஆயினும் தேவர்கள் தாங்கள் வழங்கிய பிரசாதத்தை ஏற்க மறுக்கின்றனர்.தாங்கள் தயவு செய்து மௌனத்தை கலைத்து யாகசபை அங்கத்தினரை இதற்குண்டான காரணத்தை பற்றி கேட்கவேண்டும்."
            அரசர் தன் மௌனத்தை கலைத்து சபை அங்கத்தினர்களை வினவினார்.--"சுவாமிகளே தேவர்களுக்கு நான் என்ன குற்றம் செய்தேன்?ஏன் யாக ஹவிர்பாகத்தை ஏற்க மறுக்கின்றனர்?சபை அங்கத்தினர்கள் கூறினார்கள்.-- "அரசே இந்த ஜன்மத்தில் தாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை.பூர்வஜென்மத்தில் செய்த பாவத்தின் பலனால் சகல நற்குணங்களும் நிறைந்த நீங்கள் புத்திர பாக்கியம் இல்லாமல் இருக்கிறீர்கள்.குழந்தை இல்லாத காரணத்தால் தேவர்கள் உங்கள் ஹவிர் பாகத்தை ஏற்க மறுக்கிறார்கள்.மகப்பேறு உண்டாவதற்கு முதலில் வழியை தேடுங்கள்.புத்திர செல்வம் நிறைந்திருந்தால் தேவர்கள் ஹவிர் பாகத்தை ஏற்று அருள் புரிவார்கள்" என்று கூறினார்கள்.
            சந்தான பாக்கியம் ஏற்படுவதற்காக விஷ்ணு பகவானை குறித்து யாகம் செய்யுங்கள்.பகவானை அழைத்து யாகம் செய்தால் நிச்சயம் தேவர்கள் ஹவிர் பாகத்தை ஏற்றுக்கொள்வார்கள்.என்றார்கள்.உடனே அரசர் ஆணைக்கு இணங்க புத்திர பாக்கியத்தை குறிக்கோளாக வைத்து விஷ்ணு பகவானிடம் வேண்டுதலை பிரகடனப்படுத்தி ஹவிர்பாகத்தை யாகத்தில் ரித்விஜர்கள் சமர்பித்தனர். அக்னியில் ஆஹுதி இட்டவுடன் அக்னி குண்டத்தில் இருந்து பொன்னொளி வீசும் வஸ்த்திர ஆபரணங்களுடன் ஒரு தேவ புருஷன் தோன்றினான்.அவன் கையில் பாயசம் நிறைந்த பொற்பாத்திரம் இருந்தது.அதை அரசரிடம் கொடுத்து விட்டு மாயமாக மறைந்தான்.பகவானின் அருளை உணர்ந்த மன்னர் அதை பயபக்தியுடன் வாங்கி ராணி சுநிதாவிடம் கொடுத்தார்.சுநிதா அந்த தெய்வீக பாயாசத்தை உண்டு ஒரு மகனை பெற்றாள்.
அவனுக்கு வேன் என்று பெயர் சூட்டினார்கள்.அந்த ராஜகுமாரன் குணம் கெட்டவனாக வளர்ந்தான்.சுநிதாவின் தந்தை அதர்ம வம்சத்தில் தோன்றியதால் எல்லாவித தீமைகளும் அவனிடம் குடி கொண்டு இருந்தன.
             வேட்டையாடச்சென்று அப்பாவி விலங்குகளை கொல்வான். சக தோழர்களுடன் விளையாடும்போது தோழன் என்று கூட நினைக்காமல் சிறு தகராறில் கொன்று விடுவான்.பிரஜைகளும் மற்ற அனைவரும் வேன் வருகிறான் என்றால் அலறி அடித்து ஓடுவார்கள்.மன்னன் அங்கன் பலவிதமாக அவனை திருத்த முயன்றார்.எவ்வளவோ முயன்றும் அவரால் முடியவில்லை.ராஜகுமாரன் அனைவரையும் இம்சித்துக்கொண்டு இருப்பான்.மன்னன் குடிமக்களிடம் நன்மதிப்பையும், புகழையும் இழந்தார்.வருத்தம் மேலிட்டு கூறினார்.உலகில் புத்திர பாக்கியம் அடையாத மனிதர்கள் புண்ணியவான்கள்.பூர்வ ஜன்மத்தில் அவர்கள் ஹரியை ஆராதித்து இருப்பார்கள்.ஏனெனில் கேட்ட மகனின் அடாத செயல்களால் துன்பங்களை அனுபவிக்காமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட மகனை பெற்றதால் கெட்ட பெயரும் பழியும் தான் மிஞ்சுகின்றன.நல்ல மகனை பெற்றால் அவனிடம் பாசமும் பந்தமும் ஏற்படுகின்றன.ஆனால் நமக்கு முன்னோர்கள் ஆசி கிடைக்கும் குணம் கெட்ட மகனால் நம்மையும் சேர்த்து நரகத்திற்கு இழுத்து செல்வான்.இவ்வாறு யோசித்துக்கொண்டே இரவில் தூக்கம் வராமல் தவித்தார்.திடீரென பட்டுப்பஞ்சனையில் இருந்து எழுந்தார்.செல்வச்சிறப்புமிக்க அரண்மனையிலிருந்து எவரும் அறியாத நிலையில் வெளியேறி காட்டிற்கு சென்று விட்டார்.
            விடிந்ததும் அரசரை காணவில்லை என்று உறவினர்களும், மந்திரிகளும்,புரோகிதர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.காடு மலைகளிலும் நாட்டிலும் ஊரிலும் தேடச்சொல்லி வீரர்களை அனுப்பினார்கள்.யோகத்தின் ரகசியத்தை அறியாதவர்கள் உலகமெங்கும் கடவுளை தேடினால் கடவுள் கிடைப்பாரா?அந்த கதை ஆகிவிட்டது.மன்னன் எங்கு சென்று மறைந்தார் என்று தெரியவில்லை.
            பிருகு முதலிய ரிஷி முனிவர்கள் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் இல்லாமல் போனால் குற்றங்கள் நடக்கும் என்று நினைத்து சிலகாலம் பொறுத்திருந்து வேறு வழியின்றி சுநிதாவின் மகன் வேனை பட்டாபிஷேகம் செய்து வைத்து அரசனாக்கினார்கள்.வேன் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் கொள்ளையர்களும் தீயவர்களும் அடங்கி ஒடுங்கினர்.ஆனால் அரசன் வேன் இஸ்வர்ய மதம் பிடித்து கொடுங்கோல் ஆட்சி நடத்தினான்.மதம் பிடித்த யானை போல அடக்கு முறையை கையாண்டு ஆட்சி செலுத்தினான்.ரிஷி முனிவர்கள் சித்தி பெறுவதற்காக யாகங்கள் செய்ய கூடாது என்று உத்தரவு போட்டான்.குடிமக்களை துன்புறுத்தும் வகையில் சட்டம் இயற்றினான்.
            ரிஷிகளும் முனிவர்களும் ஒன்று கூடி பேசினார்கள்.இப்போது குடிமக்கள் இருதலை கொள்ளி எறும்பு போலாகிவிட்டார்கள்.நாட்டில் அரசனால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என்று வேனை அரசனாக்கினோம்.அரசனாவதற்கு அவனுக்கு சற்றும் தகுதி இல்லை. கொள்ளையர்களிடமிருந்து குடிமக்களை காப்பாற்ற வேனை அரசனாக்கினோம்.அவன் இயல்பு சற்றும் மாறவில்லை.இப்படியே விட்டால் குடிமக்களை நாசம் செய்து விடுவான்.இறுதியாக அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்.தர்மோபதேசம் செய்து அறவழி நடந்தால் அனைவருக்கும் நலம் உண்டாகும்.என்று அவனிடம் கூறுவோம்.நாம் கூறும் நல்ல வார்த்தைகளை அவன் கேட்கவில்லை என்றால் குடிமக்களின் தூற்றுதலால் நாசப்பட்டு போனவேளை, நாம் சபித்து கொன்றுவிடுவோம்.  என்று கூறிவிட்டு ரிஷிகளும் முனிவர்களும் அரசனிடம் சென்று கூறினார்.             மன்னரே!நாங்கள் கூறப்போகும் அறிவுரையை கேளுங்கள்.இதை ஏற்றுக்கொண்டால் தங்களுக்கு ஆயுள்,செல்வம்,பலம்,புகழ்,எல்லாம் மேலும் பெருகும்.ஒரு மனிதன் மனம் வாக்கு,காயம்,அறிவு,ஆகியவற்றால் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்.அதனால் இகலோகத்தில் அனைவரின் வாழ்த்துக்களை பெற்று நீங்கள் மேன்மை அடைவீர்கள்.பரலோகத்தில் சுவர்க்கம் சென்று நற்கதியடைவீர்கள்.பிரஜைகள் நலமாக வாழ நல்ல திட்டங்களை உருவாக்குங்கள்.அரசன் கொள்ளையர்களிடம் இருந்து பிரஜைகளை காக்க வேண்டும்.அரசே மனிதர்கள் அனைவரும் தம்தம் கடமைகளை செய்து கொண்டு பகவானை ஆராதிக்க வேண்டும்.விஷ்ணு பகவான் பிரம்ம தேவர் முதலிய தேவர்களுக்கும் தேவன் ஆவார்.அவரை மகிழ்வித்து விட்டால் உலகில் அடைவதற்கு எதுவும் துர்லபம் இல்லை.மேலும் குடிமக்கள் அல்லது ரிஷி முனிவர்கள் நாட்டு நலனுக்காக அரசனின் மேன்மைக்காக யாகங்கள் செய்வார்கள்.அதற்க்கு தாங்கள் தடை விதிக்க கூடாது.(தொடரும்)

Friday 13 April 2012

ஜடபரதன் தொடர்ச்சி 1

அனைத்துயிர்களிலும் பகவானை காணும் மகா புருசர்கள் என்றும் பகையும் பற்றும் துறந்து விட்டவர்கள் , அவர்களை பகவானே பல சக்தி வடிவங்கள் கொண்டு எப்போதும் காத்துக்கொண்டு இருப்பார்.
            சிந்து சௌவீர தேசாதிபதி ரஹுகணன் என்ற அரசன் ஞானோபதேசம் பெறுவதற்காக இட்சுமதி நதிக்கரையோரம் பல்லக்கில் சென்று கொண்டிருந்தபோது பல்லக்கு தூக்குபவர்களுக்கு மேலும் ஒரு ஆள் தேவைப்பட்டது. அச்சமயம் ஓர் இடத்தில் வேலை ஏதும் செய்யாமல் பேசாமல் அமர்ந்திருக்கும் பரதனை அவர்கள் கண்டார்கள்.இவன் நல்ல திடகாத்திரமாக வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருக்கிறான்.என்று பல்லக்கு தூக்குபவர்கள் அவரை அழைத்து வந்து ஒருபக்கம் பல்லக்கு தூக்க சொன்னார்கள்.அவரும் அந்த ஆட்களோடு சேர்ந்து பல்லக்கை தூக்கிக்கொண்டு நடந்தார்.அப்போது அவர் இரண்டு அடி முன்னால் ஏதாவது பூச்சி எறும்பு முதலிய உயிர்கள் நடுவில் வந்து கால்களில் மிதிபடாமல் இருக்க பார்த்துக்கொண்டே நடந்தார்.அதனால் பல்லக்கு தூக்கும் மற்றவர்களோடு சேர்ந்து நடக்க முடியவில்லை. பல்லக்கு ஆட்டம் கண்டது.
            பல்லக்கு ஆடுகிறதே,ஏன் சீராக போகவில்லை?என்று பல்லக்கு தூக்குபவர்களை அரசன் வினவினான்.அதற்க்கு அவர்கள் புதிதாக வந்தவன் எங்களுடன் சேர்ந்து வரவில்லை.அதனால் பல்லக்கு ஆடுகிறது என்றார்கள்.
அரசன் பரதனை நோக்கி ஏன் அப்பா பல்லக்கு தூக்கி, அதற்குள் தளர்ந்து விட்டாய்?உடல் நலிந்து மெலிந்து இருக்கிறாய்.பாவம் வயதாகிவிட்ட உன்னை பல்லக்கு தூக்க வைத்து விட்டார்களோ?என்று கிண்டலாக பேசினான்.பரதன் மேலும் அதே போல பல்லக்கை சீராக தூக்காமல் ஆட்டிக்கொண்டே தூக்கி சென்றார்.இதனால் மிகுந்த கோபம் அடைந்த அரசன் என்ன தைரியம் இருந்தால் என்னை அவமதித்து இப்படி செய்வாய்.? உனக்கு தக்க தண்டனை தரவேண்டும் என்றார்.
           பரதனுக்கு நான் என்ற அகந்தை விட்டுப்போனதால் அரசனின் அதிகார பேச்சுக்குரலால் எந்த வகையிலும் அவர் பாதிக்க வில்லை.தன்னை போல அனைவரையும் நினைத்த பரதன் பிரியமாக பேசினார்.அரசே நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.எல்லாம் நிலையற்றவை என்றிருக்கும்போது பாரமாக இருந்தால் தானே அதை சுமப்பது கஷ்டம் என்று சொல்ல முடியும்?. திடகாத்திரமாக இருப்பது சரீரம் தான்.ஆத்மா என்றும் மாறாதது.குண்டாக இருப்பதுசரீரம்மெலிந்துஇருப்பது,வியாதி,மனக்கவலை,பசி,தாகம்,பயம்,கலகம்,ஆசை,கிழப்பருவம்,நித்திரை,பிரேமை,குரோதம்,கர்வம்,சோகம் இவையெல்லாம் சேர்ந்தது தான் தேகம்.அந்த தேகத்தை எனது என்று நினைப்பவர்களுக்கே இன்பமும் துன்பமும் வருகிறது.எனக்கோ தேகத்தில் பற்று இல்லை.உயிரோடு இருக்கிறவரை தான் உணர்ச்சிகளால் பாதிப்பு ஏற்படுகிறது.நீங்கள் அரசன்,நான் சேவகன் என்று நினைப்பது தற்காலிகமானது.அனைவருக்குள் இருக்கும் ஆத்மாவோ என்றும் அழியாதது.இருப்பினும் தங்கள் ஆணைப்படி நடக்கிறேன்.நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.நானோ அனைத்தையும் கடந்த நிலையில் ஜடமாக இருக்கிறேன்.என்னை தண்டித்து என்ன பிரயோஜனம்.அது அரைத்த மாவையே அரைக்கும் போலாகிவிடாதா?என்றார்.
            ஜடமாக இருந்த பரதன் இவ்வாறு கூறி முடித்து தேகத்தில் பற்று வைக்காத சாந்த மூர்த்தி, வினைப்பயன்களை போக்க மீண்டும் பல்லக்கை தூக்க முயன்றார்.அச்சமயம் சிந்து சௌவீர மன்னன் அவர் பேச்சு தத்துவங்கள் நிறைந்திருப்பதை உணர்ந்து பல்லக்கை விட்டு கீழே இறங்கினான்.சிந்து சௌவீர மன்னன் தத்துவ ஞானம் அறிவதில் மிக ஆவலாக இருந்தான்.பல யோக சாஸ்த்திரங்கள் படித்திருந்தான்.பரமாத்ம ஞானத்தை பற்றி பரதன் பேசியதை கேட்டு அகந்தையை விட்டொழித்து பரதன் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்து கூறினான்.தெய்வ சொரூபமாக என்னிடம் வந்து தத்துவ ஞானம் பேசினீர்கள்.பூணூல் தரித்து பிரம்ம தேஜஸ் மறைக்கப்பட்டு நீறு பூத்த நெருப்பு போலிருக்கும் தாங்கள் யார்?நீங்கள் பித்தர் போல திரியும் அவ தூதர் தத்தாத்ரேயர் தானா? அல்லது நான் தேடிக்கொண்டிருக்கும் கபில முனிவரா?இந்த இடத்திற்கு எப்படி வந்தீர்கள்?யாருக்கு மகனாக எங்கு பிறந்தீர்கள்?நான் இந்திரன் வஜ்ராயுதத்தை அல்லது சிவபெருமானின் திரிசூலத்தையும் கண்டு பயப்பட மாட்டேன்.அல்லது தேவர்களின் ஆயுதங்களாலும் எனக்கு பயமில்லை.ஆனால் தங்களை போன்ற இறைவன் அருள் பெற்ற பிராமணரை அவமதித்த பாவத்தை நினைத்து பயப்படுகிறேன்.என்னை மன்னிக்க வேண்டும்.பிரம்ம ஞானத்தை விளக்கும் தாங்கள் கூறும் தத்துவங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.என்போன்ற சுக போகங்களில் திளைத்து இருப்பவனுக்கு யோகேஸ்வரர்களின் பேச்சும் செயலும் எங்கே புரியப்போகிறது?
            யுத்தம் போன்ற காரியத்தில் ஈடுபடும்போது சிரமமும் தேகத்தில் வலியும் ஏற்படுகிறது.தங்களுக்கும் சுமை தூக்கும்போது சிரமம் உண்டாகுமே?ஆனால் தாங்கள் தனக்கும் தேகத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறீர்கள்.மேலும் அடுப்பில் வைத்த நீர் நிறைந்த பாத்திரம் சூடாகிறது.அதில் போட்ட அரிசி வெந்து போகிறது.இந்த நிலை எப்படி பொய்யாகும்.அதாவது தேகம்,மனம்,புலன்கள்,பிராணம் ஆகியவை பாதிக்கப்படும் போது ஆத்மாவும் பாதிக்கப்படும். அது தொடர்பில்லாமல் எப்படி இருக்க முடியும்?அரசன் என்ற அகந்தையால் தங்களை அவமதித்து விட்டேன்.தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும்.எனக்கு ஞானோபதேசம் செய்தருள வேண்டுகிறேன்.அரசன் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் பரதன் இவ்வுலகில் பிறந்த பயனை அடைவதற்காக ஏற்பட்டிருக்கும் பிறவாமை என்ற மோட்ச வழிகளை கூறி ஆத்ம ஞானோபதேசம் செய்தார்.
            மனிதன் ஞானம் பெற்று மாயையை வெல்ல வேண்டும்.மனதிற்கும் ஆத்மாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.மனத்தால் சுக துக்கங்களை அனுபவிப்பதனால் கர்மபலங்கள் மனிதனை பின்தொடர்கின்றன.அதனால் அவன் பாவ புண்ணிய கர்மங்களை செய்கிறான்.அதன் ஜனன மரண சுழற்ச்சியில் சிக்கிக்கொள்கிறான்.இந்த உலக இயக்கம் உண்மை போல தோற்றமளித்தாலும் அவை நிலையற்றவை.அதனால் அதை பொய் என்று கூறுகிறோம்.பிறவி பெருங்கடலில் இருந்து கரை சேரவேண்டுமானால் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு, இறைவனடி சேர வேண்டுமானால் எல்லாம் வல்ல ஈசனை சரணடைய வேண்டும்.அடியார்களை தொழுது அவர்களிடம் உபதேசம் பெற்று பற்றற்ற வாழ்க்கை நடத்த வேண்டும்.தான், தனது என்று எதையும் கருதாமல் பகவானுக்கே அர்ப்பணம் செய்து கடமைகளை செய்ய வேண்டும்.பரமாத்மாவின் அம்சமாக தன்னுள் உரையும் ஆத்மாவை உணர வேண்டும்.பரதன் இவ்வாறு மேலும் பல ஆத்ம தத்துவ உபதேசங்களை செய்து முடிவில் கூறினார்.
              அரசே நானும் பூர்வ ஜன்மத்தில் உங்களை போல் ஓர் அரசனாக இருந்தவன் தான்.அரச போகங்களையும், பரலோக மேன்மைகளையும்,  இகலோக விசயங்களையும் துறந்துவிட்டு தபோவனம் சென்று தவமியற்றி கொண்டிருந்தேன்.என் தவ வாழ்க்கையில் ஒரு விபத்து போல ஒரு மான்குட்டி மேல் பிரியம் வைத்து விட்டேன்.அதனால் மோட்சம் அளிக்கும் தவயோகத்திலிருந்து வழி தவறி போய்விட்டேன்.மான் பிறவி எடுத்து போன பிறவி நினைவுகள் தப்பாமல் காலத்தை கடத்தினேன்.அதனால் தான் இந்த ஜென்மத்தில் எவரிடமும் தொடர்புகொள்ளாமல் பற்றற்று இருக்கிறேன்.பகவானின் சிந்தனைகளிலேயே காலத்தை கழிக்கிறேன்.என்று கூறினார்.
            ஞானம்,யோகம் முதலிய பல ஆத்மீக விசயங்களை கேட்டபின் தெளிவு பெற்று அரசன் கூறினான்.சுவாமி இன்று நான் தங்களை தரிசித்து பிறவி எடுத்த பலனை அடைந்து விட்டேன்.பிரம்ம ஞானத்தை உபதேசித்து என்னை கடைத்தேற்றி விட்டீர்கள்.தங்களை சேவித்து நான் பாக்கியவானாகிவிட்டேன்.தங்களை போன்று மறைந்து வாழும் பிரம்ம ஞானிகளை நமஸ்காரம் செய்கிறேன்.தங்களை போன்ற பிரம்ம ஞானிகள் முதியவர்களாகவோ,இளம்வயதினராகவோ, அல்லது பாலகர்களாகவோ கூட இருக்கலாம்.அவர்களுக்கெல்லாம் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.ரஹுகணன் இவ்வாறு தெளிவு பெற்று மன நிறைவுடன் புறப்பட்டான்.ராஜரிஷி பரதனை பற்றி சான்றோர்கள் இவ்வாறு கூறுவார்கள்.ஊர் குருவிகள் கருடனொடு போட்டியிட்டு பறக்க முடியாது.அதுபோல பூமியில் இருக்கும் அரசர்கள் எவராலும் பரதனின் பெருமையை அடையமுடியாது.ஸ்ரீ ஹரியின் மீது அளவற்ற அன்பு கொண்டு பரதன் மனைவி,மக்கள்,மற்றும் அரச போகங்களை துறந்து காட்டிற்கு சென்றார்.
            அளவற்ற செல்வங்கள் ராஜ போகங்கள், ஆட்சியின் அதிகாரம்,உயர்ந்த பதவி, பெயர்,புகழ் ஆகியவற்றை தேவர்களும் விரும்புவார்கள்.அந்த மேன்மையின் லக்ஷ்மி கடாட்சம் நம் மீது விழாதா என்று ஏங்குவார்கள்.மாமன்னர் பரதனோ பகவானின் பாதார விந்தங்களில் மனம் லயித்து விட்டதனால் அந்த லக்ஷ்மி செல்வங்களை துச்சமாக நினைத்தார்.மான் சரீரத்தை துறக்கும் போது அவர் உரக்க கூறினார்.யோக சாதனையால் தேட வேண்டியவர், தர்மத்தை காப்பவர்,பிரகிருதி சக்தியின் ஈஸ்வரர்,சர்வாந்தராத்மாவாக விளங்குபவரான யக்ஞா மூர்த்தி நாராயணரை வணங்குகிறேன்.
            மனிதன் பரத மன்னரின் தூய வரலாற்றினை பாராயணம் செய்தால் பாரில் கீர்த்தியும் ஆயுளும் பெற்று மோட்சம் அடைவான்.இந்த கதையை படிப்பவன், பிறருக்கு படித்து சொல்பவன் விரும்பியவை அனைத்தையும் அடைவான்.பிறரிடம் கையேந்தி நிற்க மாட்டான்.

Friday 6 April 2012

ஜடபரதன் தொடர்ச்சி

யோகனுஷ்டானம் செய்து மோட்சம் கிடைக்கும் தருவாயில் இப்படி ஒரு தடை வந்ததை அவர் உணரவில்லை.மாபெரும் சாம்ராஜ்யம், அரண்மனை,மனைவி,மக்களையும் துறந்து மோட்சம் அடைந்து இறைவனடி சேர யோக தவம் செய்வதற்காக அல்லவா காட்டிற்கு வந்தார்.வேறு ஜாதியில் பிறந்த இந்த மான்குட்டி பாசத்தில் ஏன் சிக்கவேண்டும்.இதை வினைப்பயன் என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்?தவிர்க்க முடியாத மரண காலம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை.வியாதியும் மரணமும் சொல்லிக்கொண்டு வருவதில்லை.சர்பம், எலி வலைக்குள் நுழைவது போல அது எங்கும் வந்து விடும்.அந்த மரணத்தருவாயில் பரதன் படுத்துக்கிடந்தார்.அந்த மான், தான் பெற்ற மகன் போல பக்கத்தில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தது.பரதன் பாசத்துடன்அந்த மானை  பார்த்துக்கொண்டேஉயிர் துறந்தார்.
            அந்திம காலத்தில் வரும் நினைவுகளின் பலனால் அடுத்த ஜென்மத்தில் சாதாரண மனிதர்களுக்கு கிடைக்கும் கதி போல மானாகவே பிறந்தார்.ஆனால் தான் செய்த தவப்பயனால் அவருக்கு போன ஜென்மத்தின் நினைவுகள் மறையவில்லை.அவர் மிகவும் வருந்தினார்.மனதையும் புலன்களையும் தன் வசம் கட்டுப்படுத்திய மகான்களின் பாதையில் போய் கொண்டு இருந்தேன்.ஆசைகளை துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்டேன்.சகல உயிர்களுக்கும் ஆத்மாவாக இருக்கும் பரம்பொருளை நோக்கி எனது மனம் அறிவு புலன்கள் அனைத்தயும் செலுத்தினேன்.அதில் உறுதியாக நின்று தவமியற்றி கொண்டிருந்த நேரத்தில் திடீரென என் மனம் ஒரு மான்குட்டியை நோக்கிச்சென்று பாதை மாறிப்போய்விட்டது.என்று நினைத்து வருந்தினார்.
மானாக பிறந்தவுடன் தன் தாயை விட்டு பிரிந்து முன்பு இருந்த அதே புலஹாசிரமத்திற்க்கு வந்தார்.சாலக்கிராம நதி தீர்த்தக்கரையில் சிலகாலம் காய்ந்த புல்,இலை சருகுகளை உண்டு விதிவசத்தால் வரும் மரணத்தை நோக்கி காத்திருந்தார்.இனி எதிலும் பற்று வைக்ககூடாது என்று மிக எச்சரிக்கையுடன் இருந்தார்.பின்பு எதையும் உண்ணாமல் கண்டகி நதியில் பாதி தேகம் வரை மூழ்கி இருந்தார்.சிலநாட்களுக்கு பின் முழுவதும் மூழ்கி மான்தேகத்தை துறந்தார்.
            ஆங்கிரஸ கோத்திரத்தில் ஒரு பிராமணர் வேதங்களை கற்றுணர்ந்து தவமும் ஒழுக்கமும்,நற்குணங்களும் நிறைந்து இருந்தார்.அவரது மனைவி ஒரு பெண்ணையும், ஒரு ஆண் குழந்தையையும் இரட்டையர்களாக பெற்றாள். அந்த ஆண்குழந்தை தான் பரதன் என்று ஞானிகள் கூறினார்கள்.பரதன் செய்த தவப்பலனால் முன் ஜன்ம நினைவுகள் மறையாமல் இருந்தது.இந்த ஜன்மத்தில் எந்த பற்றிலும் சிக்கிக்கொள்ளகூடாது என்று நினைத்து பரதன் எவர் குணங்களை தியானித்து துதி செய்தால் உலக பந்தங்களில் இருந்து விடுபட்டு மோட்சம் கிடைக்குமோ அந்த பகவானின் திருவடிகளை மனதில் பதிய வைத்து எப்போதும் திக் பிரமை பிடித்தது போல தனித்து இருப்பார்.
            அவர் தந்தை மகனுக்கு வேதங்களை கற்பித்து அவரை வித்தகனாக ஆக்க வேண்டும் என்று பெரிதும் முயன்றார்.ஆனால் அவர் அறிவில்லா மந்த புத்தி உள்ளவர் போல காட்டிக்கொள்வார்.எதையும் மனப்பாடம் பண்ண முடியாதவர் போல கல்வியில் நாட்டம் இல்லாதவர் போல இருந்தார்.தன்மகனை நல்ல கல்விமானாக்க விரும்பிய தந்தை காலப்போக்கில் தான் விரும்பியது நிறைவேறாமல் மரணமடைந்து விட்டார்.இனி பாடங்களை படி என்று எவரும் சொல்லவில்லை.சுற்றத்தாரும் அவர் மூத்த அண்ணன் மார்களும் ஞானமார்கத்தை அறியாத காரணத்தால் இவரை புத்திசுவாதீனம் இல்லாதவர்,காது கேட்காதவர் என்று ஒதுக்கினார்கள்.
            பயிர் செய்யும் நிலத்தின் சொந்தக்காரர்கள் இவரை அழைத்து வயலில் வேலைசெய்யச்சொன்னார்கள். அதற்க்கு கூலியாக உணவு அளித்தார்கள்.எவர்
எப்படிப்பட்ட உணவை கொடுத்தாலும் ருசி பார்க்காமல் பரதன் சாப்பிட்டு விடுவார்.இதை பார்த்து அண்ணன் மார்கள் தன் சொந்த வயலில் ஜடமாக தோற்றமளித்த ஞானி பரதனை அழைத்து வேலை செய்ய சொன்னார்கள்.அவர் கண்மூடித்தனமாக வேலை செய்தார்.வெயிலோ மழையோ எந்த இடத்திலும் படுத்து உறங்குவார்.
            ஒரு சமயம் கொள்ளைகாரர்கள் தலைவன் தமக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு காளி தேவி கோவிலுக்கு சென்று நரபலி கொடுப்பதாக வேண்டிக்கொண்டான்.பலி கொடுப்பதற்காக ஒரு மனிதனை பிடித்து அடைத்து வைத்திருந்தனர்.அந்த பலியிடவேண்டிய மனிதன் உயிரை காப்பாற்றிக்கொள்ள எப்படியோ தப்பி ஓடி விட்டான்.தலைவனின் சேவகர்கள் அவனை தேடினார்கள்.அவன் எங்கும் கிடைக்காமல் போகவே அவர்கள் கண்களில் பரதன் தென்பட்டார்.அவரை மான்கள்,காட்டுப்பன்றிகள் முதலிய மிருகங்கள் வராமல் இருக்க காவலுக்கு வைத்தார்கள்.அவர் எதையும் கவனிக்காமல் அமர்ந்திருந்தார்.கொள்ளையர்கள் நீர் பிராமணரா?என்று எதையும் விசாரிக்காமல் நரபலிக்கு ஏற்ற சர்வ லக்ஷணங்களும் பொருந்திய ஒரு மனிதன் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து அவரை பிடித்துக்கொண்டு வந்தனர்.
            அவர்கள் நரபலி கொடுக்கும் முறைப்படி பரதனை மஞ்சள் நீராட்டி சந்தனம்,மாலை,புதுவஸ்திரம்,தூபதீபங்கள் காட்டி,தாரை,தப்பட்டைகள் முழங்க கோவிலுக்கு அழைத்து வந்தார்கள்.பரதனை பலிபீடத்தில் கிடத்தி காளியம்மனை துதித்து ரத்தத்தால் திருப்திப்படுத்த மந்திரம் ஜபித்து பூசாரி கூறிய அரிவாள் எடுத்து வெட்டப்போனார்.தெய்வங்களுக்கு பிராமணரை பலியிடுவதை சாஸ்த்திரங்கள் தடைவிதிக்கின்றன.சாதாரணமாக ஆபத்து காலத்திலும் பிராமணர்களை கொலை செய்வது பெரும்பாவம் என்று இருக்கும்போது போனஜன்மத்திளிருந்தே தவமும் யோகமும் செய்து பரமாத்மாவுடன் ஒன்றிய நிலை அடைந்தவர் பரதன்.எந்த பாவமும் அறியாத நல்லவர்.இந்த ஜென்மத்தில் பிராமணராக பிறந்து பகவத் சிந்தனையில் மூழ்கி இருப்பவர்.அப்படிப்பட்டவரை பலியிட போகும்போது காளிதேவிக்கு திருமேனிஎங்கும் நெருப்பு பட்டு பற்றிஎரிவது போல இருந்தது.அந்த பிரம்ம தேஜசை பொறுக்காமல் விக்கிரகத்தை உடைத்து காளிதேவி ஆத்திரம் கொண்டு வெளிப்பட்டாள். கோபத்தில் கண்கள் சிவந்து தாடை பற்கள் தெரிய பயங்கரமாக இருந்தாள்.




 மேலும் தன் கணங்களோடு பாய்ந்து வர உலகையே சம்ஹாரம் செய்யப்போவது போல வந்தாள். அட்டகாசமாக சிரித்து குதித்தாள்.வெட்டப்போன அரிவாளை பிடுங்கி அந்த அரிவாளை கொண்டு அங்கு கூடியிருந்த கொள்ளையர்கள் தலைகளை தன் கணங்களோடு சேர்ந்து வேட்டித்தள்ளினாள்.காளிதேவியும் கணங்களும் சேர்ந்து தலைகளை பந்தாடினார்கள்.அவர்கள் ரத்தத்தை குடித்தார்கள்.(தொடரும்)