சம்ஹார மூர்த்தி ருத்திர பகவான் ஊழிக்காலத்தில் சடைகள் விரித்து த்வஜச்தம்பங்கள் போலிருக்கும் நீட்டிய கரங்களில் ஆயுதங்கள் தரித்து உக்கிர தாண்டவ நடனம் புரிந்து கொண்டு சூலாயுதத்தை சுழற்றும் போது திசை காக்கும் கஜங்கள் பயந்து ஓடுகின்றன.மின்னல் இடி போல பயங்கர சிரிப்பொலி திசைகளில் மோதி அவற்றை பிளந்து விடுவது போல அதிர்கின்றன.அதே சமயம்
அவரது தேஜசை எவராலும் தாங்க முடியாது.புருவம் நெளிந்து தாடை பற்கள் பட்டு நட்சத்திர தாரகைகளில் தீ பொறி கிளம்பும்.சங்கர பகவானை கோபப்படச் செய்து எவரும் நலம் அடைய மாட்டார்கள்.சாக்ஷாத் பிரம்மாவாக இருந்தாலும் என்ன? அவர்கள் நாசப்பட்டு போவார்கள்.
அங்கு யாக மண்டபத்தில் அமர்ந்திருந்து யாகம் செய்து கொண்டிருந்தவர்கள் பயந்து ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு இருந்தனர்.ஓடி வந்த ருத்ர சேனைகள் யாக மண்டபத்தை சுற்றி வளைத்துக்கொண்டனர்.பூதகணங்கள் சில குட்டையாகவும் பழுப்பு மஞ்சள் நிறம் கொண்டவர்களாகவும் முதலை முகம் படைத்தவர்களாக பயங்கரமாக இருந்தனர்.வந்த க்ஷணத்தில் கொடிமரத்தை தகர்த்தெறிந்தனர்.மேற்கில் உள்ள யாக சாலையின் பெண்கள் தங்குமிடத்தை உடைத்தனர்.எதிரில் இருக்கும் சபா மண்டபத்தையும் துவம்சம் செய்தனர்.யாக சாலையில் இருக்கும் பாக சாலையை (சமையல் சாலையை ) நாசப்படுத்தினர்.அக்னித்திரசாலையை உடைத்து விட்டு யாக குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைத்தனர்.முனிவர்களின் மனைவிகளை பயமுறுத்தினர்.சிங்கம் இரையை பிடிப்பது போல வீரபத்திரன் தகஷனை பிடித்துக்கொண்டார்.மணிமான் என்ற சிவா கணம் ப்ருகுவையும் சண்டீசர் பூசாவையும் நந்தீஸ்வரர் பகனையும் பிடித்துக்கொண்டனர்.
பூத கணங்கள் யாக சாலையின் இருப்பிடங்களையும் பொருள்களையும் அடித்து நொறுக்கி நாசம் செய்து விட்டு ரித் விஜர்களையும்,சபா நாயகரையும், தேவர்களையும் அடித்து துன்புறுத்தினார்கள்.அனைவரும் ஓடி ஒளிந்தனர்.கரண்டியுடன் நின்றிருந்த ப்ருகுவை பிடித்த வீரபத்திரன் தாடியையும் மீசையையும் பிடுங்கி எடுத்தார்.இந்த ப்ருகு தான் அன்று தக்ஷன் சிவபெருமானை ஏசிக்கொண்டு இருந்த போது மீசையை முறுக்கினான்.கண்களால் பார்த்து ஏசுகிறவனை தூண்டிவிட்ட பகனை கீழே கிடத்தி கண்களை பிடுங்கினார். பூஷா என்பவனின் பற்களை தட்டி உடைத்தார்.இந்த பூஷா தான் தக்ஷன் சிவபெருமானை அவமானப்படுத்தி பேசும்போது சிரித்துக்கொண்டு இருந்தான்.இறுதியில் வீரபத்திரன் தக்ஷனை தரையில் கிடத்தி அவன் நெஞ்சில் ஏறி அமர்ந்து கழுத்தை வாளால் வெட்டினார்.கழுத்து வெட்டுப்படாமல் போகவே சற்று நேரம் யோசித்து இறுதியில் யாகத்தில் உயிர் பலியிடும் முறையை பின்பற்றி தக்ஷனின் தலையை துண்டாக்கி விட்டார்.இதை கண்டு பூத பேய்,பிசாசு கணங்கள் வீரபத்திரனை நோக்கி சபாஷ்,சபாஷ் என்று புகழ்ந்தனர்.தக்ஷன் தரப்பினர் ஹா,ஹா இனி நாம் செத்தோம் என்றனர்.வீரபத்திரன் தக்ஷன் தலையை யாக குண்டத்தின் தக்ஷினாக்னியில் போட்டு விட்டார்.சிவகணங்கள் யாக சாலைக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து கைலாயம் நோக்கி சென்றனர்.
ருத்ர கணங்களால் திரிசூலம், பட்டீசம்,வாள், கதை,பரிகாயுதம் முதலிய ஆயுதங்களால் அங்கங்கள் சின்னா பின்னமாக்கப்பட்டு தேவர்களும் ,ரிஷி முனிவர்களும் சபாநாயகர்களும் துன்புற்று வருந்தி பயந்து பிரம்மாவை சரண் புகுந்தனர்.பிரம்மா கூறினார்.----- " தேவர்களே மிகுந்த ஆற்றல் படைத்தவர்களுக்கு சிறிய குற்றமிழைத்தாலும் அதன் முடிவு நன்மை தராது.நீங்களோ யாகத்தில் ருத்திர கடவுளுக்காக அவிர்பாகம் வைக்காமல்
குற்றம் செய்து விட்டீர்கள்.சிவ நிந்தை வேறு செய்தீர்கள்.சீக்கிரம் கைலாய மலை சென்று அவர் திருவடிகளில் வீழ்ந்து மன்னிக்கும்படி கேளுங்கள்.சதி தேவியின் பிரிவால் மனம் வெறுத்து போயிருப்பார்.இருப்பினும் அவர் ஆஷு தோஷாக அதாவது சீக்கிரம் மகிழ்ந்து அருள் புரிபவராக சுபாவமுடயவராக இருக்கிறார்.அவரை சமாதானப்படுத்தவில்லை என்றால் இக்கணமே அனைத்து உலகங்களையும் எரித்து சாம்பலாக்கி விடுவார்.ருத்திர பகவானின் சிவ தத்துவத்தையும் ஆற்றலையும் யார் தான் அறிவார்?தேவர்களும் ரிஷி முனிவர்களும் இந்திரனும் அறிய மாட்டார்கள்.ஏன் நானும் அந்த இறைவனின் ஆற்றலை அறிய முடியாமல் இருக்கிறேன்.இதை கேட்டு தேவர்களும் ரிஷிமுனிவர்களும் பிரம்மாவுடன் சேர்ந்து கைலாயம் நோக்கி புறப்பட்டனர்.
இமயமலை இயற்கை காட்சிகள் சொர்க்கபுரி போல இருந்தன.மலர்களின் வாசமுள்ள பூஞ்சோலைகள் அருவிகள்,நந்தா,அலக்நந்தா நதிகள் வனப்பு மிக்க பூ வனங்கள், கற்பக விருக்ஷங்கள் அடங்கிய அழகிய காடுகள் கண்களுக்கு இனிய அழகிய காட்சிகளை கண்டுகொண்டே தேவர்கள் சென்றனர்.குபேர புரியான அழகாபுரியை கடந்து சென்றனர்.
அங்கு வனப்பு மிக்க ஒரு பிரதேசத்தில் ஓர் ஆலமரம் சோபித்துக்கொண்டு இருந்தது.அதன் அடியில் குசான விரிப்பில் சாந்தமே உருவமாக தக்ஷின திசை நோக்கி தக்ஷினாமூர்த்தியாக சிவபெருமான் அமர்ந்திருந்தார்.யட்ச ராட்சச தலைவன் குபேரன் அவருக்கு சேவை சாதித்துக்கொண்டிருக்க சித்தர்களும் சனந்தனாதி முனிவர்களும் அவரிடம் ஞானோபதேசம் பெற்றுக்கொண்டிருந்தனர்.ஜகத்தின் நாயகன் ஜகத்குரு மகேஸ்வரன் லோகத்தில் இருக்கும் ஜீவா ராசிகளின் அன்பராவார்.
சந்தியா கால மேகம் போல சிவந்த மேனியுடையவர், இடது பாதத்தை வலது தொடையில் வைத்து திரு நீறு தரித்து, ருத்ராக்ஷை அணிந்து கரத்தில் ஞானமுத்திரை பிடித்து தவக்கோலம் பூண்டு நாரத முனிவருக்கு ஞானோபதேசம் செய்து கொண்டிருந்தார்.பிரம்ம தேவரும் மற்ற ரிஷிகளும் சிவபெருமானை தண்டனிட்டு வணங்கினர்.பிரம்மா சிவபெருமானை நோக்கி துதி செய்தார்.பகவானே தாங்களே சிவனாக,சக்தியாக உலகங்களை படைத்து,காத்து,ஊழிக்காலத்தில் அழித்து விடுகிறீர்கள்.வேதங்களை ரட்சிப்பதற்காக யாகம் செய்வதற்கு அருள் செய்து சுப கர்மங்களுக்கு அறங்காவலர்களாக பிறப்பெடுத்த பிராமணர்களை ரட்சிக்கிறீர்கள். நற் பலனை தந்து மோட்சமும் அளிக்கிறீர்கள்.தீயவர்களை தண்டித்து திருத்தி அவர்களையும் கடைத்தேற்றுகிறீர்கள். பெரியோர்கள் மீதும் மகான்கள் மீதும் கோபமும் பொறாமையும் கொண்டவர்கள் ஒரு காலமும் மேன்மை அடைய மாட்டார்கள்.அவர்கள் செய்த தீ வினையே அவர்களை கொன்று விடும்.ஆனால் உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் அத்தீயவர்கள் மீது இரக்கம் காட்டுவார்கள்.
எங்கும் நிறைந்த பரம்பொருளே எல்லாம் அறிந்தவரே கர்ம மார்கத்தில் சிக்குண்டு சொர்கத்தையே பெரிதாக நினைக்கும் தக்ஷன் போன்றவர்கள் மீது மனமிரங்கி அருள் புரியுங்கள்.இவர்கள் மோட்சத்தை பற்றி அறிய மாட்டார்கள்.தேவர்கள் சொஸ்தமாக வேண்டும்.தக்ஷன் மீண்டும் உயிர் பெற்று தங்களுக்கு தவறாது ருத்திர பாகம் அர்பணித்து யாகத்தை பூர்த்தி செய்யட்டும்.யாகம் செய்த பிராமணர்கள் தங்களை பூசிக்காமல் அறிவிழந்து விட்டனர்.பகன் மீண்டும் கண்களை பெறட்டும்.ப்ருகு வின் காயம் பட்ட முகம் மீசை தாடியுடன் நலமாகி விட வேண்டும்.பூஷா பற்களுடன் சேர்த்து மற்ற அங்க ஹீனமான தேவர்களும் நலமாகி விட வேண்டும்.பிரம்ம இவ்வாறு பிரார்த்தனை செய்துகொண்ட பின் மகாதேவர் கூறினார். ( தொடரும்)