Saturday, 31 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 50

"யதஸ்ததீயா:"
பக்தர்களின் ஜாதி வித்தியாசமோ மற்ற ஏற்ற தாழ்வுகளோ ஏன் பார்க்ககூடாது?ஏனென்றால் அவர்கள் இறைவனின் அடியார்கள்.பகவானுக்கு சொந்தமானவர்கள்.
"வாதோ நாவலம்ப்ய : "
பக்தியோக சாதகர்கள் வாத விவாதங்களில் ஈடுபட கூடாது.அதற்க்கு அவசியமும் இல்லை.தாம் பகவானை பக்தி செய்வதிலேயே, பஜனை செய்வதிலேயே பொழுதை போக்க வேண்டுமே அன்றி வாத விவாதங்களில் ஈடுபட்டு பொன்னான நேரத்தை வீணாக்க கூடாது.
          உன் வாதம் சரியில்லை.நான் சொல்வது தான் சரி என்று நாத்திக வாதம் அல்லது பிற மனிதர்கள் கருத்துக்களை முறியடித்து தர்க்க வாதங்களை வளர்க்க கூடாது.பகவானின் பிரேமை பக்தியை மறந்து வேறு பல விசயங்களில் சிக்கிக்கொள்ள கூடாது.
          தர்க்கம் செய்யும்போது இரு தரப்பினரும் தன் கருத்துக்களை நிலை நாட்ட பிடிவாதமாகவே இருப்பார்கள்.இறுதியில் சண்டையாக கூட மாறலாம்.
"தர்க்கா பிரதிஸ்தாத் " என்று பிரம்மா சூத்திரம் கூறுகிறது.
           விசிச்டாத்வைத கருத்துக்களை பிரதானமாக கொண்டு எழுதிய ராமானுஜா சாரியார் பக்திக்கு தர்க்கவாதத்திற்கு இடமில்லை என்று பாஷ்யம் எழுதியுள்ளார்.கடோபநிசத் கூறுகிறது.
"நைஷா தர்கேன மதிராபனேயா"
தர்க்க வாதத்தால் பிரம்ம தத்துவத்தை புரிய வைக்க முடியாது.இந்த சத்திய தத்துவம் தூய சித்தம் படைத்த சாத்வீக மனிதனுக்கு தாமாகவே உணரப்படுகிறது.
          தர்க்க வாதம் செய்து சாஸ்திர தத்துவங்கள் அறியப்படலாம் தான்.ஆனால் அதை குருவிடம் சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதற்காக தர்க்க ரீதியாக அணுகலாம்.அதில் குற்றமில்லை.
          பிற மனிதரோடு பிடிவாதமாக ஒருவர் கருத்தை ஒருவர் வலியுறுத்த வாதம் செய்யும் போது கோபம் வரும். ஒருவரை ஒருவர் திட்டிக்கொல்வார்கள்.பகை என்ற தீ பெரிதாக வளர்ந்து கை கலப்பில் முடியும்.தவிர்க்க முடியாத வாதம் செய்யும் சந்தர்பம் ஏற்பட்டாலும் அதை சுமுகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும்.எதிராளி மிக பிடிவாதக்காரனாக இருந்தால் வாதத்தை தவிர்த்து விட வேண்டும்.
          அவர்கள் கருத்து தன் பக்திக்கு, வழிபாட்டிற்கு எதிராக சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களுடன் தொடர்பு கொள்ள கூடாது.வார்த்தைகளை வளர்க்க கூடாது.தனது கருத்தை புகழ கூடாது.வாதம் செய்யும் நோக்கம் கொண்டு பேசக்கூடாது.பிறர் குற்றங்களை சுட்டிக்காட்டி அவர் மனம் புண் படும்படி பேசக்கூடாது.தன் கருத்தை மதிக்காதவர்களிடம், ஒப்புக்கொள்ளாதவர்களிடம்தன் கருத்தை திணிப்பதற்காக அவர்களின் கருத்தை வெட்டிவிட்டு அழுத்தமாக பேசக்கூடாது.ஏனெனில் அப்படி பேசினால் எதிர் வாதம் செய்பவர்கள் எதையும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.ஆனால் சிரத்தையுடன் கேள்வி கேட்கப்படும் போது நிச்சயம் பகவத் விசயங்களை பற்றி கூற வேண்டும்.பிறரை கேலி செய்வது போல பேசக்கூடாது.பக்தியில் இருக்கும் நம்பிக்கையை தகர்க்க கூடாது. தானும் கடைத்தேற்றி பிறரையும் கடைத்தேற்றவேண்டும். என்ற எண்ணம் இருக்க வேண்டும். பக்தியில் நன்மை பயக்கும் சொற்களை இனிமையாக அன்பாக கூற வேண்டும்.
           தர்க்க வாதங்கள் நிச்சயமாக பகவத் பிரேமையை அளிக்காது.இறைவனடி சேர்க்காது.ஞானத்தையும் உண்டாக்காது.தர்க்கவாதம் நடக்கும் இடத்தில அகந்தை,துவேசம்,கோபம்,பகை,இம்சை எல்லாம் கூட்டம் கூடி அமர்ந்துவிடும்.
"பாஹூல்யாவகாசாதநியதத்வாச்ச "
வாத விவாதங்கள் செய்துகொண்டே இருந்தால் அவை நீண்டு கொண்டே போகும்.தத்தம் கருத்துக்களை நிலை நாட்ட வார்த்தை ஜாலங்கள் சிக்கலை ஏற்படுத்தும்.மேலும் தர்க்க வாதத்தால் எந்த பயனும் இல்லை.தர்க்க வாதம் செய்து சித்தாந்தத்தை நிலை நாட்டி வென்று விட்டாலும் பலனில்லை.பேசுவது என்பது எதுவும் நடைமுறைக்கு பயன்படாது.
பேசுவதை சுலபமாக பேசலாம்.வாழ்கையில் உண்மையை கடைப்பிடிப்பதே சரியான அணுகுமுறையாகும்.வாழ்கையில் சூதின்றி பகவானை தொழுவது சிரத்தையுடன் திருநாமங்களை ஜபம், பஜனை செய்வது மேலான கடமையாகும்.(தொடரும்)

Friday, 30 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 49

"நாஸ்தி தேஷு ஜாதிவித்யா ரூபகுல தனக்ரியாதி பேத:" 
மேற்சொன்னவாறு பிறந்த அனன்ய பக்தர்கள் எவராகவும் இருக்கலாம். அவருக்கென்ற அடையாளமும் இருக்காது.பக்தி யோகத்தில் பக்தன் பகவான் மீது பிரேமை செலுத்தும் தகுதி பெற்றவனாக மட்டும் தான் இருப்பான்.மற்ற எந்த தகுதியும் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை.என்று கூறுகிறார்கள்.
          பக்தர்களிடம் ஜாதி வித்தியாசம் பார்க்ககூடாது.பக்தனின் ஜாதி,கல்வித்தகுதி,அழகு,குலம்,பணவசதி,அவன் செய்யும் தொழில் அனைத்தையும் வைத்து அவனை வித்தியாசப்படுத்த கூடாது.தாழ்வாக நினைக்க கூடாது.இதை வைஷ்ணவ கிரந்தத்தில் கூறியிருக்கிறார்கள்.
         வைஷ்ணவ பக்தி கிரந்தத்தில் பகவானுக்கு செய்யும் அபசாரங்கள் 64 உள்ளன.அவற்றில் ஒரு அபசாரம் பக்தர்களில் ஜாதி வித்தியாசம் பார்ப்பது.
ஏழை என்று புறக்கணிப்பது.அவன் செய்யும் தொழிலை இழிவு படுத்தி பேசுவது.பிரேமையால் பகவானையே வசப்படுத்திய பக்தன் மரியாதைக்கு உரியவன்.
        குகன் உயர்ந்த குலத்தவன் அல்ல.கொக்கை எரித்த முனிவனுக்கு, மாமிசம் விற்று பிழைக்கும் குலத்தொழிலை கொண்ட தர்ம வியாதன் தர்மோபதேசம் செய்தான்.வேடுவ குல பெண்ணான சபரி ஸ்ரீ ராமரிடம் அதீத பக்தி கொண்டவர்.அரக்க குலத்தில் பிறந்த பிரகலாதன்,வானரன் ஹனுமான், தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த விதுரன்,படிப்பறிவு இல்லாத கோபிகை பெண்கள்,இவர்கள் அனைவரும் எந்த தகுதியும் இல்லாதவர்களானாலும் உள்ளத்தில் பகவானின் பிரேமை பக்தி அபரிதமாக இருந்தது.
         வைஷ்ணவ சம்பிரதாயங்களில் 64 அபசாரங்களையும் ஜாதி வித்யாசமில்லா எல்லா மக்களும் குற்றங்கள் போல தவிர்க்க வேண்டும்.
அபசாரங்கள் சிலவற்றை கீழே குறிப்பிட்டுள்ளோம்:
          வேதங்களை மதிக்காமல் இருப்பது,பகவானின் ஓவியம் அல்லது விக்ரஹத்தை கல்,மண் என்று நினைப்பது,குருவை அவமதிப்பது,நைவேதம் செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிடும் தின்பண்டமாக நினைப்பது,தீர்த்தத்தை சாதாரண நீராக நினைப்பது,துளசி அல்லது வில்வ இலையை சாதாரண இலையாக மதிப்பது,பகவானின் திருவிளையாடல்களை மனிதர்கள் வாழும் முறைக்கு ஒப்பிட்டு கேவலமாக பேசுவது,பகவான் இருக்கிறாரா இல்லையா என்று விவாதிப்பது,அவர் அருளை சந்தேகிப்பது,கிராம தெய்வங்களை அவமதிப்பது,நிந்திப்பது,சாதுக்கள் மீது குற்றம் காண்பது,குலதெய்வத்தை அற்பமாக நினைப்பது,கோவிலில் அல்லது வீட்டில் பகவான் மூர்த்திக்கு முன்னால் காலை நீட்டுவது,கோவிலுக்குள் கையில் கம்பை எடுத்துக்கொண்டு போவது,கோவிலில் பெரிய மனிதர்களை கண்டால் அவர்களை வணங்குவது,கோவிலில் பகவானுக்கு முன்னால் உரக்க சிரிப்பது,அர்ச்சகரிடம் கோபம் கொள்வது,பெண்கள் தலை கேசத்தை முடியாமல் கேசத்தை விரித்துக்கொண்டு போவது,கோவிலுக்கு போதை வஸ்துக்களை உட்கொண்டு அல்லது மாமிசம் சாப்பிட்டு விட்டு போவது,கோவிலில் பிற மனிதர்களிடம் தர்க்க வாதம் செய்வது,பொய் பேசுவது,பகவான் துணை செய்வதில்லை என்று கூறுவது,பிரசாத்தை விற்பது,கோவிலில் பிற மனிதர்களுடன் சண்டை போடுவது அழுக்கு ஆடை அணிந்து தலை ஸ்நானம் செய்யாமல் கோவிலுக்குள் போவது
 கோவிலில் தமக்கு பிரியமுள்ள நபரை பார்த்து நீங்கள் தான் கடவுள் என்று கூறி காலில் விழுந்து வணங்குவது,கை கால்களை கழுவிக்கொள்ளாமல் போவது,கைகளை வீசி நடந்து கொண்டு பிரகாரம் சுற்றுவது,ஆகியவை மன்னிக்க முடியாத அபசாரங்கள்.(தொடரும்)           

Thursday, 29 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 48

                                                                     
தீய பழக்க வழக்கங்களால் துந்துகாரி என்றொருவன் மகா பாவியாகிவிட்டான்.ஒருநாள் தீயவர்கள் ஒன்று சேர்ந்து அவனை கொலை செய்து விட்டனர்.அவனது வீட்டிலேயே அவனை கொலை செய்து அவனை அங்கேயே புதைத்தும் விட்டனர்.அதன் விளைவாக துந்துகாரி பேயாக மாறிவிட்டான்.கோகர்ணன் என்ற தம்பி துந்துகாரிக்கு இருந்தான்.அவன் மிகவும் நல்லவன்.கடவுள் பக்தி கொண்டவன்.தம்பி தீர்த்தயாத்திரை சென்ற போது அண்ணனை கொலை செய்தார்கள்.தம்பி வீட்டிற்கு வந்து உறங்கிக்கொண்டிருக்கும் போது துந்துகாரி பேய் உருவில் தோன்றி தம்பியை எழுப்பினான்.தான் கொலையுண்டு துர்கதி அடைந்ததை கூறி அழுதான்.கோகர்ணன் மனம் வருந்தி அண்ணனை தூய்மைபடுத்தி கடைத்தேற என்ன வழி என்று யோசித்தான்.பின்பு பெரியோர்களையும் மகான்களையும் சந்தித்து பேசினான்.அவர்கள் பாகவத புராண கதையை நீ படிக்கவேண்டும், மக்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களையும் நீ கேட்கவைக்க வேண்டும்,உன் அண்ணனும் பாகவத கதையை கேட்க வேண்டும் என்றார்கள்.கோகர்ணன் ஒரு விழா போல எடுத்து பாகவத கதையை பாராயணம் செய்தான்.அதன் விளைவாக துந்துகாரி பேய் உருவம் துறந்து தூய்மை அடைந்தான்.இறுதியில் தேவ உருவம் பெற்று சுவர்க்கம் சென்றான்.துந்துகாரி கோகர்ணனை நோக்கி உன்னைப்போல பக்தர்கள் பாவிகளையும் தூய்மை படுத்தி கடைத்தேற்றுவார்கள் என்று கூறி சென்றான்.
         பாகவத புராணத்தில் உத்தவர் கோபிகை பெண்களின் கிருஷ்ண பக்தியை கண்டு மிகவும் வியந்து போனார்கள்.-கல்வி அறிவு இல்லாதவர்களாக, தவம் ,ஞானம் பெற்று மேதாவிகளாக இல்லாதவர்களாக இந்த கோபியர்கள் இருந்தும் வேதங்கள் தேடும் பரம்பொருள் ஸ்ரீ கிருஷ்ணன் மீது ஒப்பற்ற பிரேமை கொண்டவர்களாக இருக்கிறார்கள்.கிருஷ்ண பிரேமை அடைவதற்காக பந்த பாசங்களை துறந்து விட்டார்கள்.நான் பகவானிடம் இதை மட்டும் வேண்டிக்கொள்கிறேன்.இந்த பிருந்தாவனத்தில் நான் புல்லாகவோ, செடிகொடியாகவோ அல்லது புதராகவோ ஜென்மமெடுத்து இந்த கோபியரின் பாத தூசி என் மீது பட்டு பெரும் பேரு பெற்றவனாகிவிட வேண்டும்.என்று கூறுகிறார்.
"தன்மயா:"
பஜனை அல்லது தியானம் செய்யும் பக்தர்கள் தாம் எங்கே இருக்கிறோம்,என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள்.அனன்ய பக்தர்கள் இறைவனோடு ஒன்றிவிடுகிரர்கள். அதுபோல பக்தனும் மனம்,அறிவு,நான் என்ற தன்மை,தேகம் எல்லாம் பகவானுக்கே அர்ப்பணம் செய்து பகவானுடன் ஒன்றி விடுவான்.பகவானுக்கும் அவனுக்கும் பேதமற்று போவதால் அவன் இருக்கும் இடமும் சூழ்நிலையும் தூய்மையாகிறது.
         இப்படிப்பட்ட பக்தர்களால் பகவானும் அவரது திருநாமங்களும் பகவத் பக்தியும் மகா மகிமையுடன் விளங்குகின்றன.
"மோதந்தே பிதரோ ந்ருத்யந்தி தேவதா: ஸநாதா சேயம் பூர்பவதி " 
இவ்வுலகில் பிறவியெடுத்து உண்மையான அனன்ய பக்தர்களாகிவிட்டால் அவனது முன்னோர்கள் மிகவும் சந்தோசப்படுவார்கள்.அவன் இவ்வுலகிற்கு வந்து மக்களை நல்வழிப்படுத்தி தர்மம் தழைத்தோங்க செய்வான், என்று தேவர்கள் மகிழ்ச்சியால் நடனமாடுவார்கள்.அந்த மகான் அவதரிப்பதால் பாவங்களால் துன்பப்பட்ட பூமி பாவங்களை அழிக்க வந்த தலைவன் என்று மகிழ்ந்து போகுமாம்.
          அந்த மகான் மக்களை நல்வழிப்படுத்தி பாவங்களை குறைப்பான்.அவன் செயல்களும் புகழத்தக்க மாபெரும் சேவையாக இருக்கும்.மக்களின் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.யாகங்கள் நடக்கும்.பித்ரு கடன்கள் மீது சிரத்தை ஏற்படும்.அவனை பின்பற்றும் பக்தர்கள் திருப்பணிகள் பல செய்து பக்தி மார்க்கத்தை பரப்புவார்கள்.
          இங்கு பாகவத புராணத்தில் கூறப்பட்டதை கவனத்தில் கொண்டுவர வேண்டும்.
          பிரகலாதன் ஸ்ரீ நரசிம்ம பகவானை நோக்கி கூறுகிறான்."தேவாதி தேவனே என்ன வரம் வேண்டும் என்று கேட்டீர்கள்?ஜகத்குருவான தாங்கள் தேஜஸையும் ஐஸ்வர்யதயும் என்தந்தை ஆத்திரமடைந்து இழிவாக பேசினார்.தம்பியை கொன்றவன் நாராயணன் என்று தவறாக நினைத்து அவர் தங்கள் பக்தனான என்னை இம்சித்து கொடுமைகள் பல செய்தார். மேலும் மன்னிக்க முடியாத குற்றங்கள் பலவற்றை செய்து இருக்கிறார்.தயாநிதியே பாவியான என் தந்தை பயங்கர பாவத்தில் இருந்து விடுபட வேண்டும்.இதுவே நான் கேட்கும் வரம்".உண்மையில் எனக்காக நரசிம்மாவதாரம் எடுத்து தங்களது பார்வை பட்டவுடனேயே என் தந்தை பரமாத்மாவாகிவிட்டார்.
நரசிம்மபகவான் கூறுகிறார்."அப்பனே உன் தந்தையும், முன்னோர்களான பித்ருக்களும் முன்னும் பின்னும் முப்பத்தி ஏழு தலைமுறைகள் சேர்ந்து எனது வைகுண்ட பதவியை அடைந்து விட்டார்கள்.ஏனெனில் பக்தனான நீ இந்த குலத்தில் வந்து பிறந்தாய் அல்லவா?  உன்போன்ற சாந்தமான பக்தர்கள் சமநோக்குடையவர்களாக   இருக்குமிடம் தூய்மையாகிவிடும்.பாலை நிலமும் பசுமையாகிவிடும். நீ இன்றில் இருந்து பக்தர்களுக்கெல்லாம் உதாரணமாக பேசப்படுவாய்.தந்தைக்கு இனி நீ இறுதி சடங்குகளை செய்வாயாக.உன் போன்ற மகனை பெற்றவன் என் அங்கங்கள் ,ஸ்பரிசம் பட்டு தூய்மையாகிவிட்டான் என்று கூறினார்.(தொடரும்)

Wednesday, 28 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 47

தாச பாவ பக்தியாக இருந்தாலும் பதி பக்தியாக இருந்தாலும் தன் நாயகனை தவிர எவரையும் அறிய மாட்டார்கள்.அவர்கள் மனம்,தேகம்,செல்வம்,அறிவு,வாழ்வு ,உயிர், தர்மம்,மோட்சம், நற்கதி அனைத்தும் எங்கள் இறைவன் தான் என்று நினைப்பார்கள்.
"பக்தா ஏகாந்தினோ முக்யா:"
          அனன்ய பக்தர்களே முதலிடம் பெறுவார்கள்.முன் சொன்ன சூத்திரத்தில் சிறந்த பக்தி லட்சணத்தை கூறியிருந்தார்கள்.அந்த சிறந்த பக்தி அதாவது வேறு இடத்தில வைக்காத அன்பு கலந்த பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
          அனன்ய பக்தியானது ஒப்பற்றது.தமக்கு சொந்தமான செல்வம்,குடும்பம் எல்லாம் பரமாத்மாவுக்கே சொந்தமாகி விடுகிறது.பக்தனோ பரமனின் சேவகன் போல உலகில் செயல்படுகிறான்.எதையும் பரமாத்மா சொரூபமாகவே காண்கிறான்.
"கண்டாவரோத ரோமாஞசாச்ரூபி: பரஸ்பரம் லபமானா: பாவயந்தி குலானிப்ருதிவீம் ச "
பகவானின் திருவிளையாடல்களை பாராயணம் செய்யும் போது, கேட்கும் போது அல்லது பஜனை பாடும் போது அவரை நினைத்து நடனமாடும்போது பரவசத்தின் உன்னத நிலைக்கு போய்விடுவார்கள்.அச்சமயம் பாடும்போது தொண்டை அடைக்கும்.ஆனந்த கண்ணீர் பெருகும்போது ரோமாஞ்சனம் உண்டாகும்.இப்படிப்பட்ட அனன்ய பக்தர்கள் முன் வந்த தலைமுறைகளையும்  வரப்போகும் தலைமுறைகளையும் புனிதப்படுதுவார்கள். பூமியை சுற்றுச்சூழலை புனிதப்படுதுவார்கள்.லயிப்புடன் பஜனை செய்யும் போது சுற்றுச்சூழலில் உள்ள தீய சக்திகள் பறந்தோடிவிடும்.கலகமும் கேடும் ஒழிந்து மனிதர்கள் மனதில் சாந்தி கிடைக்கும்.இப்படிப்பட்ட தூய பக்தர்களின் அருகாமை கிடைப்பதே பெரும் பாக்கியம்.
"தீர்த்தீ குர்வந்தி தீர்த்தானி ஸுகர்மீ குர்வந்தி கர்மாணி ஸச்சாஸ்த்ரீ குர்வந்தி சாஸ்த்ரானி "
புண்ணிய க்ஷேத்திரங்களையும் அவர்கள் புன்னியமாக்குவார்கள்.பாவச்செயல்களால் பாவியானவர்களையும் தரிசன,ஸ்பரிசங்களால் அல்லது பாத சேவையால் புனிதப்படுதுவார்கள்.அவர்கள் செய்யும் செயல்கள் மற்றவருக்கு எடுத்துக்காட்டாக மாறுகின்றன.பாவிகளும் புநிதப்படுதப்படுகிறார்கள் என்பதற்கு பின்வரும் கதை கூறப்பட்டுள்ளது.(தொடரும்)

Tuesday, 27 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 46

இவ்வாறு பக்தர்கள் காமம் என்ற ஆசையை இறைவனை நோக்கி திருப்பி விட்டு ஆசைகளை வெல்கிறார்கள்.கோபத்தை பகவானிடம் எப்படி காட்டுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
"தகவிலை தகவிலையே நீ கண்ணா 
தடமுலை புனர்தோறும் ,புணர்ச்சிக்கு ஆராச்-
சுக வெள்ளம் விசும்பு இறந்து,அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து,அது கனவு என நீங்கி ஆங்கே 
அக உயிர் அகம்-அகம் தோறும் உள் புக்கு 
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ!
மிக மிக இனி உன்னைப்பிரிவை ஆமால் 
வீவ நின் பசு-நிறை மேய்க்கப் போக்கே " 
          கண்ணா நீ மிகக் கொடியவன்.உன்னோடு அனுபவித்த இன்ப வெள்ளம் வானை கடந்து என் அறிவை அழித்து கனவை போல மறந்து போயிற்று.என் உயிருக்குள் புகுந்து பொறுக்க முடியாத ஆசை நிலையில் என்னை வீழ்த்துகிறது.நீ இந்த பசுக்களை மேய்க்கப்போவது ஒழிக.காமம்,குரோதம்,சிநேகம்,ஐக்கியம்,நட்பு ஆகிய அனைத்து பாவங்களையும் நிதமும் ஹரியில் செலுத்தினால் இறைவனோடு இரண்டற கலந்து விடும் யோகம் வரும்.
          சூத்திரத்தில் கூறிய கர்வம் என்ற பாவத்தை பகவான் மீது செலுத்த வேண்டுமானால் அந்த உன்னத நிலையை ராதை தான் அடைந்திருந்தாள். அவ்வாறு இதுவரை எந்த பக்தனாலும் அடைய முடியவில்லை.இனி அடையபோவதுமில்லை. ராதை பிரேமை மிகுதியால் கண்ணனோடு கோபம் கொண்டு தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தாள். இது பக்தியின் அதி உச்சகட்ட நிலையாகும்.
"த்ரி ரூப பங்க பூர்வகம் நித்யதாஸ நித்யகாந்த
பஜனாத்மகம் வா,ப்ரேமைவ கார்யம் ப்ரேமைகார்யம்" 
இறைவனை பிரேமை பாவத்துடன் பூஜிப்பதே சிறந்தது என்று கூறுகிறார்கள்.அதாவது எஜமானன்-சேவகன் -சேவை இம்மூன்றையும் துறந்து அல்லது மூன்றையும் கடந்து தாஸ பாவம் அடைய வேண்டும்.அல்லது அன்பானாக நினைக்கவேண்டும்.மாணிக்கவாசகரும் ஆழ்வாரும் பெண் பாவம் அடைந்து இறைவனை தொழுதார்கள்.மாணிக்கவாசகர் இறைவனான பசுபதி ஒருவரே ஆண்,மற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம் பெண்ணாக இருப்பவைகள்,ஆதலால் ஆத்மாக்கள் எல்லாம் பதியான பசுபதியே நாட வேண்டும்.என்றார்.இங்கு ஸ்ரீ நாரதபெருமான் அதையே காந்தா பாவம் என்று கூறுகிறார்.(தொடரும்)

Monday, 26 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 45

"அபிமான தம்பாதிகம் த்யாஜ்யம் "
கர்வமும் பகட்டும் துறக்கவேண்டும். இதற்க்கு முன் சொன்ன சூத்திரத்தில் காமகுரோத லோபங்களையும் நாத்திகத்தையும் துறக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.இந்த நான்கையும் துறந்து விட்டால் யாம் புலன்களை ஜெயித்து விட்டோம் என்று கர்வப்பட்டு கொண்டு இருக்க கூடாது.என்று கூறுகிறார்கள். கர்வம் அறிவுக்கண்ணை மறைக்கும்.அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.பணிவு கர்வத்தை அழிக்கும். 
          தன்னிடம் இல்லாததை பிறர் புகழ வேண்டும் என்று பகட்டாக காண்பிக்க கூடாது.பணம் புகழுக்காகதான் பெரிய தர்மாத்மாவாகவும் பெரிய பக்தனாகவும் படம் காட்டிக்கொண்டு பகவானுக்கு தொண்டு செய்வது போல பாவனை செய்து கொண்டு திரிய கூடாது.பிறருக்காக   அல்லது அவர்கள் கவனத்தை திருப்புவதற்காக நாம் செய்யும் செயல்கள் நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும்.கற்ற கல்வியும் அறிவும்,வித்தையும் மேம்படாது.நேர்மையும் பணிவும் பக்திக்கு சாதகமாக இருக்கும்.புராண காலத்தில் அசுரர்கள், இனி நம்மை எவராலும் வெல்ல முடியாததென்று எண்ணி வீழ்ச்சி அடைந்தார்கள்.அதனால் இதை அசுரத்தன்மை வாய்ந்த துர்குனமாக கர்வத்தை கூறி இருக்கிறார்கள்.
"ததர்பிதாகிலாசார: ஸன் காமக்ரோதாபிமானாதிகம் தன்மின்னேவ கரணீயம் "   
அனைத்து கர்மங்களையும் பகவானுக்கு சமர்ப்பணம் செய்த பின் என்ன மீதமிருக்கிறது?தன்னில் இருக்கும் காம குரோத அபிமாங்கலால் தீங்கு வராமல் அவரே தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.என்று அவர் பொறுப்பிலேயே விட்டு விட வேண்டும்.ஆனால் பக்குவப்பட்ட உண்மையான பக்தர்களிடம் காமக்குரோத அபிமாங்கள் பகை எல்லாம் துளியும் இருக்காது.அவர்களோ பிரேமை பக்தியில் தன்னையே 
கரைத்துக்கொள்வார்கள். அவர்கள் கௌரவம்,மானம்,வேகம்,குலம்,நற்குனசீலம்,தேகம்,செல்வம்,போகம்,மோட்சம் அனைத்தும் பகவானிடம் ஆரம்பத்திலேயே சமர்ப்பித்து விட்டார்கள்.பகவான் மட்டும் விரும்பக்கூடிய பொருளாக இருக்கும்.முனிவர்களும் இப்படிப்பட்ட பக்தர்களை பாராட்டுவார்கள்.
          பகவானின் திருமேனி அழகு அலாதியானது.அது அணிந்த ஆபரனங்களுக்கும் அழகை சேர்க்ககூடியது. மூவுலகங்களையும் மயக்கும் ஜெகன் மோகன ரூபம் சௌந்தர்யமும் இனிமையும் அமிர்தமும் கலந்த பரமானந்த பேரழகு.அவரது இனிய இசை குளிர் நிலவு போல சாந்தியை தரும்.அந்த ஜோதியை கண்டு தவத்தால் சித்தி பெற்று தெய்வத்தன்மை அடைந்த மகாமுனிவர்களும் தன் நிலை இழந்த வார்த்தைகளால் அளிக்க முடியாத ஒரு பரவச நிலை அடைகிறார்கள்.(தொடரும்)

Sunday, 25 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 44


  1. பெண்கள் மீது அதிக  மோகம் கொண்டவர்களுக்கு வேறு விஷயங்கள் பிடிக்காது.பெண்களை பற்றி பேசவும், பார்க்கவும்,படிக்கவும் தான் பிடிக்கும்.அங்கு இறைவனை பற்றி சிந்திக்க இடமிருக்காது.பக்தி யோகத்திற்கு இது மாபெரும் தடை என்றே நினைக்க வேண்டும்.பெண்களை பற்றி காதல் பாட்டுக்கள் பாடவும் நாடகங்கள் பார்க்கவும் தவிர்க்க வேண்டும்.உண்மையான பக்தனுக்கு இயற்கையாகவே இவற்றுள் ஈடுபாடு இருக்காது.கிரஹஸ்த ஆசிரமத்தில் இருந்தாலும் அற வழியில் சென்று இல்லறம் நடத்த வேண்டும்.அதாவது மனைவியுடன் சேர்ந்து இறை வழிபாடு நடத்த வேண்டும்.தான தர்மங்கள் செய்ய வேண்டும்.மனைவியுடன் சேர்ந்து பக்தி பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.மனைவியும் உலக ஆசைகளை துறந்து கணவனோடு சேர்ந்து பகவானின் அருளை நாட வேண்டும்.பொருளாசையும் பொன்னாசையும் துறந்து இறைவன் அருளை பெற ஒத்துழைக்கவேண்டும்.
  2. பேராசைக்கோ ஓர் அளவும் இல்லை.எல்லையும் இல்லை.பணம்,பதவி,மோகம் கொண்டவர்கள் என்றும திருப்தியுடன் வாழ மாட்டார்கள்.மேலும் மேலும் உயரே போக விரும்புவார்கள்.ஆசையில் தேவராஜன் இந்திரனுக்கும் திருப்தியில்லை என்று கூறுவார்கள்.ஆசை கண்களை மறைக்க அநியாய வழியிலும் பணம் சம்பாதிக்க துணிவார்கள்.தனவந்தர்களிடம் நட்பு வைத்து அவர்களது சுகபோக வாழ்கையை கண்டும்,சமுதாயத்தில் அவர்களின் செல்வாக்கை கண்டும் நாம் மதி மயங்கி விடக்கூடாது.செல்வ சுக போகம் கேவலம் தூசிக்கு சமமாக நினைக்க வேண்டும்.அது இக லோகத்தில் முடிந்து விடும்.இறை அருள் தான் என்றும் நம்மை தொடரும்.இதை நினைத்து மனதை ஜெயிக்க வேண்டும்.அதற்க்கு மாறாக பணத்திற்கு பின்னால் நாம் அடிமை போல ஓடிக்கொண்டிருந்தால் எப்போது தான் இறைஅருளை பெற ஓடுவதை நிறுத்தி திரும்பி வருவோம்?ஆயுள் முடிந்தவுடன் செல்வ சுகங்களும் இத்துடன் முடிந்து விடும்.சாரமற்ற இவ்வுலக வாழ்வில் என்ன மேன்மையடைந்தோம்? எதை தான் சாதித்தோம்?
  3. பிரத்யட்சமாக காண்பது இந்த உலக வாழ்க்கை தான்.அதை விட்டு விட்டு காணாத ஒரு பொருளுக்காக ,வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய விசயங்களை துறந்து நேரத்தையும் வாழ்கையையும் வீணாக்குவதா, என்று நாத்திகம் பேசுபவர்களோடு கண்டிப்பாக நட்பு கொள்ள கூடாது.கடன் வாங்கியாவது நாவுக்கு ருசியாக நெய் சோறு உண்டு பட்சணங்கள் சாப்பிட்டு இன்பமாக வாழ்வாயாக,உயிரோடு இருக்கும் வரை பிறரை ஏமாற்றி இன்பமாக வாழ்வாயாக.இறந்த பின் யார் உன்னை என்ன செய்யா முடியும்?பரலோகம்,இறைவன் என்பதெல்லாம் சுத்த பொய், என்று நாத்திகம் பேசுவார்கள்.இவர்களுடன் உறவு கொண்டால் நாமும் கலங்கபட்டவர்கள் போல மாறி விடுவோம்.அது நம்மை அதோ கதிக்கு கொண்டு போய் விடும். மேற்சொன்ன மற்ற தீமைகளுக்கு அடிமையாகிவிட்டாலும் ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு பக்தியில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.ஆனால் நாத்திகனாக மாறிவிட்டாலோ மீண்டும் ஆத்திகனாக மாறினால் தான் இறைவன் பக்தி வழிக்கு வர முடியும்.இதுவும் பெரும் ஆபத்தானது.
  4. பொதுவாக உண்மையான பக்தன் எவரையும் விரோதியாக கருத மாட்டான்.ஏனெனில் அவன் பகையை துறந்தவன்.அவ்வாறு இருக்க சகல உயிர்களையும் பரமாத்மாவின் மக்களாகவே பார்பான். இந்த உன்னத நிலை அடையாத பக்தன் தமக்கு எதிராக செயல்படும் அல்லது துவேசிக்கும் நபரிடம் பதிலுக்கு அதே போல பகை பாராட்ட கூடாது.அவனை பற்றி விமர்சிக்கவும் கூடாது.ஏனெனில் பகையும் கோபமும் துவேசமும் பழி வாங்கும் என்னத்தை உண்டாக்குகிறது.பக்தனோ பகவானை அன்பொழுக ஆராதிப்பவன்.தானும் அன்பு மயமானவன்.ஆதலால் அனைவரிடமும் கூடுமானவரை மனதில் அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அன்பும் நட்பான எண்ணங்களும் மனதிலிருந்து வெளியே பரவும்போது எதிர் திசையிலிருந்து வரும் கோபமும் பகையும் தணிந்து போகும்.அதற்க்கு மாறாக அதே போல நாமும் கோபமும் துவேசமும் வளர்த்து எண்ணங்கள் மூலமாக பரவசெய்தால் இரண்டும் மோதிக்கொண்டு வெடிக்கும்.இவ்வாறு பக்தி யோகத்தில் இருப்பவன் காம,குரோத,லோபங்களை ஜெயிக்க வேண்டும்.(தொடரும்)