Tuesday, 27 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 46

இவ்வாறு பக்தர்கள் காமம் என்ற ஆசையை இறைவனை நோக்கி திருப்பி விட்டு ஆசைகளை வெல்கிறார்கள்.கோபத்தை பகவானிடம் எப்படி காட்டுகிறார்கள் என்பதை பார்ப்போம்.
"தகவிலை தகவிலையே நீ கண்ணா 
தடமுலை புனர்தோறும் ,புணர்ச்சிக்கு ஆராச்-
சுக வெள்ளம் விசும்பு இறந்து,அறிவை மூழ்க்கச்
சூழ்ந்து,அது கனவு என நீங்கி ஆங்கே 
அக உயிர் அகம்-அகம் தோறும் உள் புக்கு 
ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ!
மிக மிக இனி உன்னைப்பிரிவை ஆமால் 
வீவ நின் பசு-நிறை மேய்க்கப் போக்கே " 
          கண்ணா நீ மிகக் கொடியவன்.உன்னோடு அனுபவித்த இன்ப வெள்ளம் வானை கடந்து என் அறிவை அழித்து கனவை போல மறந்து போயிற்று.என் உயிருக்குள் புகுந்து பொறுக்க முடியாத ஆசை நிலையில் என்னை வீழ்த்துகிறது.நீ இந்த பசுக்களை மேய்க்கப்போவது ஒழிக.காமம்,குரோதம்,சிநேகம்,ஐக்கியம்,நட்பு ஆகிய அனைத்து பாவங்களையும் நிதமும் ஹரியில் செலுத்தினால் இறைவனோடு இரண்டற கலந்து விடும் யோகம் வரும்.
          சூத்திரத்தில் கூறிய கர்வம் என்ற பாவத்தை பகவான் மீது செலுத்த வேண்டுமானால் அந்த உன்னத நிலையை ராதை தான் அடைந்திருந்தாள். அவ்வாறு இதுவரை எந்த பக்தனாலும் அடைய முடியவில்லை.இனி அடையபோவதுமில்லை. ராதை பிரேமை மிகுதியால் கண்ணனோடு கோபம் கொண்டு தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இருந்தாள். இது பக்தியின் அதி உச்சகட்ட நிலையாகும்.
"த்ரி ரூப பங்க பூர்வகம் நித்யதாஸ நித்யகாந்த
பஜனாத்மகம் வா,ப்ரேமைவ கார்யம் ப்ரேமைகார்யம்" 
இறைவனை பிரேமை பாவத்துடன் பூஜிப்பதே சிறந்தது என்று கூறுகிறார்கள்.அதாவது எஜமானன்-சேவகன் -சேவை இம்மூன்றையும் துறந்து அல்லது மூன்றையும் கடந்து தாஸ பாவம் அடைய வேண்டும்.அல்லது அன்பானாக நினைக்கவேண்டும்.மாணிக்கவாசகரும் ஆழ்வாரும் பெண் பாவம் அடைந்து இறைவனை தொழுதார்கள்.மாணிக்கவாசகர் இறைவனான பசுபதி ஒருவரே ஆண்,மற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம் பெண்ணாக இருப்பவைகள்,ஆதலால் ஆத்மாக்கள் எல்லாம் பதியான பசுபதியே நாட வேண்டும்.என்றார்.இங்கு ஸ்ரீ நாரதபெருமான் அதையே காந்தா பாவம் என்று கூறுகிறார்.(தொடரும்)

Monday, 26 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 45

"அபிமான தம்பாதிகம் த்யாஜ்யம் "
கர்வமும் பகட்டும் துறக்கவேண்டும். இதற்க்கு முன் சொன்ன சூத்திரத்தில் காமகுரோத லோபங்களையும் நாத்திகத்தையும் துறக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.இந்த நான்கையும் துறந்து விட்டால் யாம் புலன்களை ஜெயித்து விட்டோம் என்று கர்வப்பட்டு கொண்டு இருக்க கூடாது.என்று கூறுகிறார்கள். கர்வம் அறிவுக்கண்ணை மறைக்கும்.அனைவரிடமும் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.பணிவு கர்வத்தை அழிக்கும். 
          தன்னிடம் இல்லாததை பிறர் புகழ வேண்டும் என்று பகட்டாக காண்பிக்க கூடாது.பணம் புகழுக்காகதான் பெரிய தர்மாத்மாவாகவும் பெரிய பக்தனாகவும் படம் காட்டிக்கொண்டு பகவானுக்கு தொண்டு செய்வது போல பாவனை செய்து கொண்டு திரிய கூடாது.பிறருக்காக   அல்லது அவர்கள் கவனத்தை திருப்புவதற்காக நாம் செய்யும் செயல்கள் நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும்.கற்ற கல்வியும் அறிவும்,வித்தையும் மேம்படாது.நேர்மையும் பணிவும் பக்திக்கு சாதகமாக இருக்கும்.புராண காலத்தில் அசுரர்கள், இனி நம்மை எவராலும் வெல்ல முடியாததென்று எண்ணி வீழ்ச்சி அடைந்தார்கள்.அதனால் இதை அசுரத்தன்மை வாய்ந்த துர்குனமாக கர்வத்தை கூறி இருக்கிறார்கள்.
"ததர்பிதாகிலாசார: ஸன் காமக்ரோதாபிமானாதிகம் தன்மின்னேவ கரணீயம் "   
அனைத்து கர்மங்களையும் பகவானுக்கு சமர்ப்பணம் செய்த பின் என்ன மீதமிருக்கிறது?தன்னில் இருக்கும் காம குரோத அபிமாங்கலால் தீங்கு வராமல் அவரே தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.என்று அவர் பொறுப்பிலேயே விட்டு விட வேண்டும்.ஆனால் பக்குவப்பட்ட உண்மையான பக்தர்களிடம் காமக்குரோத அபிமாங்கள் பகை எல்லாம் துளியும் இருக்காது.அவர்களோ பிரேமை பக்தியில் தன்னையே 
கரைத்துக்கொள்வார்கள். அவர்கள் கௌரவம்,மானம்,வேகம்,குலம்,நற்குனசீலம்,தேகம்,செல்வம்,போகம்,மோட்சம் அனைத்தும் பகவானிடம் ஆரம்பத்திலேயே சமர்ப்பித்து விட்டார்கள்.பகவான் மட்டும் விரும்பக்கூடிய பொருளாக இருக்கும்.முனிவர்களும் இப்படிப்பட்ட பக்தர்களை பாராட்டுவார்கள்.
          பகவானின் திருமேனி அழகு அலாதியானது.அது அணிந்த ஆபரனங்களுக்கும் அழகை சேர்க்ககூடியது. மூவுலகங்களையும் மயக்கும் ஜெகன் மோகன ரூபம் சௌந்தர்யமும் இனிமையும் அமிர்தமும் கலந்த பரமானந்த பேரழகு.அவரது இனிய இசை குளிர் நிலவு போல சாந்தியை தரும்.அந்த ஜோதியை கண்டு தவத்தால் சித்தி பெற்று தெய்வத்தன்மை அடைந்த மகாமுனிவர்களும் தன் நிலை இழந்த வார்த்தைகளால் அளிக்க முடியாத ஒரு பரவச நிலை அடைகிறார்கள்.(தொடரும்)

Sunday, 25 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 44


  1. பெண்கள் மீது அதிக  மோகம் கொண்டவர்களுக்கு வேறு விஷயங்கள் பிடிக்காது.பெண்களை பற்றி பேசவும், பார்க்கவும்,படிக்கவும் தான் பிடிக்கும்.அங்கு இறைவனை பற்றி சிந்திக்க இடமிருக்காது.பக்தி யோகத்திற்கு இது மாபெரும் தடை என்றே நினைக்க வேண்டும்.பெண்களை பற்றி காதல் பாட்டுக்கள் பாடவும் நாடகங்கள் பார்க்கவும் தவிர்க்க வேண்டும்.உண்மையான பக்தனுக்கு இயற்கையாகவே இவற்றுள் ஈடுபாடு இருக்காது.கிரஹஸ்த ஆசிரமத்தில் இருந்தாலும் அற வழியில் சென்று இல்லறம் நடத்த வேண்டும்.அதாவது மனைவியுடன் சேர்ந்து இறை வழிபாடு நடத்த வேண்டும்.தான தர்மங்கள் செய்ய வேண்டும்.மனைவியுடன் சேர்ந்து பக்தி பஜனைகளில் கலந்து கொள்ள வேண்டும்.மனைவியும் உலக ஆசைகளை துறந்து கணவனோடு சேர்ந்து பகவானின் அருளை நாட வேண்டும்.பொருளாசையும் பொன்னாசையும் துறந்து இறைவன் அருளை பெற ஒத்துழைக்கவேண்டும்.
  2. பேராசைக்கோ ஓர் அளவும் இல்லை.எல்லையும் இல்லை.பணம்,பதவி,மோகம் கொண்டவர்கள் என்றும திருப்தியுடன் வாழ மாட்டார்கள்.மேலும் மேலும் உயரே போக விரும்புவார்கள்.ஆசையில் தேவராஜன் இந்திரனுக்கும் திருப்தியில்லை என்று கூறுவார்கள்.ஆசை கண்களை மறைக்க அநியாய வழியிலும் பணம் சம்பாதிக்க துணிவார்கள்.தனவந்தர்களிடம் நட்பு வைத்து அவர்களது சுகபோக வாழ்கையை கண்டும்,சமுதாயத்தில் அவர்களின் செல்வாக்கை கண்டும் நாம் மதி மயங்கி விடக்கூடாது.செல்வ சுக போகம் கேவலம் தூசிக்கு சமமாக நினைக்க வேண்டும்.அது இக லோகத்தில் முடிந்து விடும்.இறை அருள் தான் என்றும் நம்மை தொடரும்.இதை நினைத்து மனதை ஜெயிக்க வேண்டும்.அதற்க்கு மாறாக பணத்திற்கு பின்னால் நாம் அடிமை போல ஓடிக்கொண்டிருந்தால் எப்போது தான் இறைஅருளை பெற ஓடுவதை நிறுத்தி திரும்பி வருவோம்?ஆயுள் முடிந்தவுடன் செல்வ சுகங்களும் இத்துடன் முடிந்து விடும்.சாரமற்ற இவ்வுலக வாழ்வில் என்ன மேன்மையடைந்தோம்? எதை தான் சாதித்தோம்?
  3. பிரத்யட்சமாக காண்பது இந்த உலக வாழ்க்கை தான்.அதை விட்டு விட்டு காணாத ஒரு பொருளுக்காக ,வாழ்ந்து அனுபவிக்க வேண்டிய விசயங்களை துறந்து நேரத்தையும் வாழ்கையையும் வீணாக்குவதா, என்று நாத்திகம் பேசுபவர்களோடு கண்டிப்பாக நட்பு கொள்ள கூடாது.கடன் வாங்கியாவது நாவுக்கு ருசியாக நெய் சோறு உண்டு பட்சணங்கள் சாப்பிட்டு இன்பமாக வாழ்வாயாக,உயிரோடு இருக்கும் வரை பிறரை ஏமாற்றி இன்பமாக வாழ்வாயாக.இறந்த பின் யார் உன்னை என்ன செய்யா முடியும்?பரலோகம்,இறைவன் என்பதெல்லாம் சுத்த பொய், என்று நாத்திகம் பேசுவார்கள்.இவர்களுடன் உறவு கொண்டால் நாமும் கலங்கபட்டவர்கள் போல மாறி விடுவோம்.அது நம்மை அதோ கதிக்கு கொண்டு போய் விடும். மேற்சொன்ன மற்ற தீமைகளுக்கு அடிமையாகிவிட்டாலும் ஆண்டவனிடம் மன்னிப்பு கேட்டு பக்தியில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.ஆனால் நாத்திகனாக மாறிவிட்டாலோ மீண்டும் ஆத்திகனாக மாறினால் தான் இறைவன் பக்தி வழிக்கு வர முடியும்.இதுவும் பெரும் ஆபத்தானது.
  4. பொதுவாக உண்மையான பக்தன் எவரையும் விரோதியாக கருத மாட்டான்.ஏனெனில் அவன் பகையை துறந்தவன்.அவ்வாறு இருக்க சகல உயிர்களையும் பரமாத்மாவின் மக்களாகவே பார்பான். இந்த உன்னத நிலை அடையாத பக்தன் தமக்கு எதிராக செயல்படும் அல்லது துவேசிக்கும் நபரிடம் பதிலுக்கு அதே போல பகை பாராட்ட கூடாது.அவனை பற்றி விமர்சிக்கவும் கூடாது.ஏனெனில் பகையும் கோபமும் துவேசமும் பழி வாங்கும் என்னத்தை உண்டாக்குகிறது.பக்தனோ பகவானை அன்பொழுக ஆராதிப்பவன்.தானும் அன்பு மயமானவன்.ஆதலால் அனைவரிடமும் கூடுமானவரை மனதில் அன்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.அன்பும் நட்பான எண்ணங்களும் மனதிலிருந்து வெளியே பரவும்போது எதிர் திசையிலிருந்து வரும் கோபமும் பகையும் தணிந்து போகும்.அதற்க்கு மாறாக அதே போல நாமும் கோபமும் துவேசமும் வளர்த்து எண்ணங்கள் மூலமாக பரவசெய்தால் இரண்டும் மோதிக்கொண்டு வெடிக்கும்.இவ்வாறு பக்தி யோகத்தில் இருப்பவன் காம,குரோத,லோபங்களை ஜெயிக்க வேண்டும்.(தொடரும்)

Saturday, 24 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 43

ரிஷி முனிவர்கள் வியாசர்,நாரதர்,சுகதேவர் ஆகியோர் உருவமற்ற பரப்ரம்மத்தை உணர்ந்தவர்கள்.தியான சமாதியில் பரமானந்த பேரின்பத்தை அடைந்தவர்கள்.ஆயினும் இவர்களில் பகவானின் தெய்வீக குணங்கள் ,தெய்வீக இசை,ஆகியவற்றில் தன்னை இழந்து விட்டார்கள்.ஏனெனில் பகவானின் திருமேனி மாயையோடு கூடியது அல்ல.இது தெய்வீக ஜோதி சொரூபமானது.பகவத் கீதையில் அர்ச்சுனன் வியந்து தரிசித்த ரூபம்.இதை சொல்லிலடங்கா பரம சாந்தியாக ஆனந்த கடலாக வர்ணித்தாலும் நிறைவாகாது.அந்த பரஞ்சோதியின் பிரேமையும் அப்படிபட்டதேயாகும்.
" லோகஹானௌ சிந்தா ந கார்யா நிவேதி தாத்ம லோகவேதத்வாத் "
பக்தர்கள் உலகியல் விசயங்களின் லாப நஷ்டங்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.ஏனெனில் சிந்தை எல்லாம் சிவமயமாக அல்லது ஹரி மயமாக இருக்கும் போது அங்கு வேறு விசயங்களுக்கு இடமேது? உலகியல் கடமைகளையும் வேத சாஸ்திரங்களை பின்பற்றி வாழும் முறைகளையும் முன்பே அவன் அர்ப்பணம் செய்து விடுகிறான்.பக்தியின் உச்சகட்டத்திற்கு போன பின் தன்னையும் தன் கடமைகளையும் கூட மறந்து விடுகிறான்.மற்ற சிந்தனைகள் அவனை விட்டு தாமாகவே விடைபெற்று விடுகின்றன.தன்னையே அர்ப்பணித்து விட்ட பின் அவனை சார்ந்த மனைவி, மக்கள்,சொத்து சுகங்கள் எல்லாம் தாமாக பகவான் திருவடியில் சேர்ந்து விடுகின்றன.அவன் உயிர் வாழ்வதற்காக மட்டும் பட்டற்று கடமைகளை செய்கிறான்.
"ந ததஸித்தௌ லோகவ்யவ ஹாரோ ஹேய :
 கிந்து பலத்யாகஸ்தத் ஸாதனம் ச கார்யமேவ " 
மேற்சொன்னவாறு உலகியல் விசயங்களும் வேத சாஸ்திர கடமைகளும் பக்தியின் மேல்நிலையில் தாமாக விடுபடாவிட்டால் கடமைகளை அவசியம்
செயலாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.நல்ல கர்மங்களின் புண்ணிய பலனை ஆண்டவனுக்கே கொடுத்து விட வேண்டும்.பகவானுக்காகவே சேவை செய்வது போல பிற உயிர்களுக்கு நன்மை செய்து வாழ வேண்டும். அவ்வாறு செய்தால் தற்பெருமை ஒழியும். பக்தியின் ஆரம்பபடியில் இருப்பவர்கள் தீமையிலிருந்து விலகி சுயநலமின்றி தேவ பூஜைகளையும் பித்ரு கடனையும் சாஸ்திரங்கள் கூறியபடி செய்வார்கள்.
"ஸ்திரிதன நாஸ்திக வைரி சரித்ரம் நச்ரவணியம்"
முன் சொன்ன சூத்திரங்களில் உலகில் வாழ்வதற்கு உதவும் கடமைகளை, பக்தியை ஒரு சாக்காக வைத்து துறக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்கள்.இருப்பினும் பக்தி மார்க்கத்தில் செல்பவர்கள் சில தீமைகளில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
          பெண் முஹம பிடித்த நபர்களுடன் நட்பு கொள்ள கூடாது.பேராசை பட்டு பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்க கூடாது.நாத்திகம் பேசும் நபர்களிடம் சகவாசம் கூடாது.தமக்கு எதிராக செயல்படும் நபர்களிடம் தீராத பகையும் வேண்டாம்.அவர்களை பற்றி புறம் பேசவும் வேண்டாம்.அவர்கள் வரலாற்றினை கேட்கவும் வேண்டாம்.
          ஆண்களை வசியபடுத்தும் சுபாவமுடைய பெண்களிடம் நட்பு கொள்வது மரணத்தை தழுவுவதற்கு சமமானது.ஏனென்றால் யானைகூட்டத்திற்க்கு தலைமை தாங்கும் யானையை மற்ற யானைகள் வந்து அதனுடன் சண்டையிட்டு வீழ்த்திவிடும். அதனால் தன் ஆத்மாவை மேன்மை அடைய செய்து பக்தி யோக வழியை பின் பற்றி வாழ விரும்புகிறவன் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.(தொடரும்)


Friday, 23 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 42

                                                              

ஒரு கோடை காலத்தில் காட்டில் உள்ள யானை கூட்டம் அதிக வெப்பத்தால் துன்புற்று நீர் நிலையை நோக்கி சென்றது.ஓர் இடத்தில ஒரு பெரிய ஏரியை கண்டு மிக உற்சாகமாக யானைகள் நீருக்குள் இறங்கி தண்ணீர் பருகி தாமரை தண்டுகளை பிடுங்கி தின்றன.இஷ்டம் போல நீராடின.ஏரி நீரை யானைகள் கலக்கி கொண்டிருக்கும் போது திடீரென்று நீருக்கடியில் ஒரு முதலை வந்து யானை தலைவன் காலை பற்றிக்கொண்டது.நிலை தடுமாறிய யானை தலைவன் பலம் கொண்டு காலை இழுத்தது.மற்ற யானைகளும் யானை தலைவனை இழுத்தன.முதலிடம் சிக்கிகொண்ட யானையை பார்த்து மற்ற யானைகள் பிளிறின.அவைகளின் முயற்சி பலிக்காமல் போனது.நெடுநாள் கழித்து முதளையிடம் சிக்கிய யானை தலைவனை விட்டு விட்டு யானை கூட்டம் அனைத்தும் சென்று விட்டன.முதலைக்கோ நீரில் பலம் கூடிக்கொண்டே இருந்தது.
           யானைக்கும் முதலைக்கும் நடந்த இழுபறி போராட்டம் வருடக்கணக்கில் தொடர்ந்தது.யானை பலவீனமடைய தொடங்கியது.அச்சமயம் யானைக்கு கர்மவினைபயனாக முன்ஜென்ம நினைவு வந்தது.நாம் இந்த பிறவியில் வீழ்ந்து ஆசா பாசங்களில் சிக்குண்டு ஆண்டவனை மறந்தோமே என்று நினைத்தது.சரண் அடையும் அடியாட்களை காப்பாற்றும் இயல்புடைய ஸ்ரீ நாராயணர் தாம் எம்மை காப்பாற்ற வேண்டும் அவரே யம பயம் போக்கி பக்தருக்கு நற்கதி அளிப்பார் என்று நினைத்து ஆதிமூலமே ஸ்ரீ நாராயணா என்னை காத்தருள்வீர் பெருமானே இந்த தாவர ஜங்கமம் அடங்கிய வையகமும் வானகமும் காக்கும் பரம் பொருளே என்மீது தயை புரிய வேண்டும் என்று பகவானை அழைத்து. சர்வசக்தி படைத்த விஷ்ணு பகவானுக்கு யானையின் பிரார்த்தனை குரல் விஷ்ணு பகவானுக்கு கேட்டது.அவர் மனமிரங்கி கருடன் மீதேறி அங்கு வந்தார்.சுதர்சன சக்ராயுதம் ஏவி முதலையின் தலையை வெட்டினார்.யானையை இழுத்து கரையில் கொண்டு வந்தார்.அவர் ஸ்பரிசம் பட்டு யானை தன உடல் துறந்து தேவனாக மாறியது.முதலையும் சாபம் நீங்க பெற்றது.இருவரும் தேவர்களாக மாறி விஷ்ணுபகவானுடன் சேர்ந்து வைகுண்ட பதவியை அடைந்தார்கள்.
 "ப்ரமாணாந்தர்ஸயான பேக்ஷத்வாத் ஸ்வயம் பரமாணத்வாத் "
பக்தியை நிருபிக்க எந்த பிரமாணமும் தேவையில்லை.ஏனெனில் அதுவே பிரத்யட்ச பிரமாணமாக இருக்கிறது.பக்தியின் பிரேமை ஆனந்தம் தாமாக உணரப்படுகிறது.அந்த இறை இன்பம் பக்தனாக இருப்பவனுக்கே தெரியும்.மனமுருகி நினைக்கும் போதே பரவசமடைந்து நடனமும் ஆடுவார்கள்.
"சாந்திரூபாத் பரமானந்தரூபாச்ச "
பக்தி ஏன் பிரத்யட்ச பிரமாணமாக நிருபிக்கபடுகிறது?ஏனென்றால் அது சாந்தி ரூபமானது.பரமானந்த ரூபமானது.பக்தி செலுத்தினால் பக்தனுக்கு சாந்தி கிடைக்கிறது.பகவான் தன மஹா மகிமையை விட்டு இறங்கி வந்து பக்தர்கள் முன் தன் திவ்ய சக்தியுடன் பிரகடனமாகிறார்.பகவான் ஆனந்தமானவன் என்று நிரூபிக்கிறார்.இது முக்குணங்களுடன் சேர்ந்த சகுண பிரம்ம சொருபமில்லை என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.(தொடரும்)

Thursday, 22 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 41

பகவத் கீதை கூறுகிறது.-
           ஆர்த்த பக்தன், ஜிக் ஞாஸு பக்தன்  பக்தன்,அர்த்தார்த்தீ பக்தன் ஆகிய மூன்று வகை பக்தர்கள் தனி தனி இயல்பு உடையவர்கள்.
           ஆர்தபக்தன்: ஆபத்து வியாதி போன்ற தன் கஷ்டங்களையும் பாவங்களையும் அழிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பகவானை தொழுது பஜனை செய்வது கோவில் திருப்பணிகளை செய்வது ஆகிய வழிகளால் இறைவனை ஆராதிப்பான்.
            ஜிக் ஞாஸு பக்தன்: பகவான் என்றால் அவருடைய ஆற்றல் என்ன ? பகவானை தத்துவார்த்தமாக எப்படி அறிய முடியும் எங்கும் நிறைந்த ஈசன் எப்படி அருள் பாலிக்கிறார்?என்று பகவானை பற்றி நன்கு அறிய விரும்பும் வேட்கை கொண்டவன் தன் அரிய பிரேமை பக்தியால் உபாசனை செய்து நெருங்குகிறவன் ஜிக் ஞாஸு பக்தன் பக்தன் ஆகிறான்.
             அர்த்தார்த்தீ பக்தன்:இவன் புராண காலத்து அசுரர்கள் போல தவமிருந்து நாம ஜபம்,தியானம் செய்து வரங்களை கேட்பான்.மென்மையான வாழ்வு ,பெயர்,புகழ்,செல்வம் எல்லாம் பகவானிடம் விரும்புவான்.
           உலகத்தின் நிலையில்லா வாழ்வில் நிலையில்லா அற்ப சுகங்களுக்கும் சந்தோசங்களுக்கும் பகவானிடம் கையேந்துவது எப்படி இருக்கிறதென்றால் -பொன்னும் பொருளும் ரத்தினங்களும் வழங்கும் பெரும் செல்வந்தனிடம் போய் எனக்கு தவிடு வேண்டும் என்று கேட்பது போல உள்ளது.
           உண்மையில் செல்வதினுள் பெரும் செல்வம் இறைவன் அன்றோ அந்த செல்வதை அடைந்த பின் வேறு எந்த செல்வம் பெரிதானது?அல்லது வேறு செல்வதை எதற்காக விரும்ப வேண்டும்?
"உத்தரஸ்மாதுத்தரஸ்மாத் பூர்வ பூர்வா ச்ரேயாய பவதி "
முக்குண பகதிகளில் சாத்வீக பக்தியே சிறந்ததாக முதலிடம் பெறுகிறது.அதுபோல ஆர்த்த பக்தி-அர்த்தார்த்த பக்தி,  ஜிக் ஞாஸு பக்தி ஆகிய வற்றில்  ஜிக் ஞாஸு பக்தியே சிறந்ததாக முதலிடம் பெறுகிறது.
"அன்யஸ்மாத் சௌலப்யம் பக்தௌ"
இறைவனை அடைய வேண்டிய மற்ற வழிகளை விட பக்தியோக வழியே சுலபமானது.கர்ம,ஞான, தியான யோகங்கள்,அனுஷ்டானம் செய்வதற்கு கடினமானவை.பக்தியோகத்தின் பலனோ எந்த பாதிப்புமின்றி கிடைத்து விடும்.மற்ற சாதனைகளில் சிறிய தவறு ஏற்பட்டாலும் அதன் பலன்கள் எதிர்மாறாக இருக்கும்.அல்லது சாதகர்களை பாதிக்க கூடியதாக இருக்கும்.
பகவான் மீது நம்பிக்கை கொண்டு முக்காலத்திலும் எங்கும் அவர் அருளை உணர்ந்தவன் நிச்சயம் பக்திக்கு பாத்திரமாகி விடுவான்.அக்கணமே அவன் பாவங்கள் எல்லாம் நாசப்பட்டு விடும்.இதற்காக எதையும் தியாகம் செய்ய தேவையில்லை.
             விலங்குகளும் பறவைகளும் பக்தி செய்து ஆண்டவனை தரிசித்த வரலாறும் உள்ளது. கஜேந்திரன் யானை, தவளை,பல்லி, சிலந்தி,வானரர்,ஆகியோர் செய்த வரலாறு கோவில்களில் சிற்பங்களால் ஓவியங்களால் பேசப்படுகிறது.பக்தி செய்த பக்தர்களிடம் பகவான் தன் மகாமஹிமையை விட்டு இறங்கி வந்து விடுவார்.(தொடரும்)

Wednesday, 21 December 2011

நாரத பக்தி சூத்திரம் தொடர்ச்சி 40

ஆசைகளை அடிப்படையாக கொண்டு உலகில் பெயருடன் புகழுடன் வாழ வேண்டும்.இஸ்வர்யங்கள் பெற்று வசதியாக, சுகமாக வாழ வேண்டும்.என்று ஆராதனை செய்வது(அதாவது இதில் விக்ரஹ  ஆராதனையும் கோவில் வழிபாடும் இருக்கும்)இதுவே ராஜச பக்தி எனப்படுகிறது.
           கோவிலை கட்டி பிறர் புகழ வேண்டும் என்பதற்காக போலியான பக்தி பஜனை செய்வது,அல்லது கோவிலில் விளக்கு போட்டு உபயம் என்று எழுதி வைப்பது,அல்லது கோவிலுக்கு தேவையான பொருள் உதவி செய்யும் போதும் பண உதவி செய்யும் போதும் தன் பெயரை பொறிக்கசெய்து உபயம் என்று எழுதி வைப்பது ராஜச பக்தி எனப்படுகிறது.
         பிறருக்கு கஷ்டத்தை கொடுத்து இம்சித்து பக்தி பஜனை எல்லாம் செய்வது தாமச பக்தியாகும்.இந்த வரிசையில் உயிர் பலி கொடுத்து இம்சித்து பூஜைகளை நடத்துவதும் தாமச பக்தியை சேர்ந்தது.பிறருடன் போட்டி போட்டுக்கொண்டு வழிபாடு செய்வதும் ஆடம்பரமாக செலவு செய்து விழா எடுப்பதும் பொருட்களை கோவிலுக்கு தானமாக தந்ததை பெருமையாக பேசிக்கொள்வதும் தாமச பக்தியை சேர்ந்தவை.
          தாமச பக்திக்கு எடுத்துக்காட்டாக மூர்க்க நாயனார் என்ற ஒரு சிவ பக்தர் ஒருவர் இருந்தார்.அவர் திருவேற்காட்டில் அமர்ந்துள்ள சிவபெருமானுக்கு சிவதொண்டு புரிந்து வந்தார்.அவர் சிவனடியாருக்கு உணவளித்து அதை பார்த்து மகிழ்ந்த பின் தான் உண்பது வழக்கம்.
          அவர் நாள் தோறும் தூய்மையான சோறு நெய் சுவை மிகுந்த கறி வகைகள் முதலியவற்றை நன்றாக சமைக்க செய்து தம்மிடம் வந்த சிவனடியார்களை வணங்கி உபசரித்து அவர்களுக்கு உணவளித்து அவர்களுக்கு வேண்டிய பொருட்களை கொடுத்துதவி அத்தொண்டில் பெரிதும் மகிழ்ந்து வந்தார்.இப்படி இருக்க நாளுக்கு நாள் அடியவர்கள் கூட்டம் பெருகலாயிற்று.நாயனாரிடம் இருந்த பொருட்கள் எல்லாம் செலவாயின.அவர் தம்மிடம் இருந்த அடிமைகளோடு பரம்பரை உரிமையான நிலம் அணிகலன்கள் முதலிய பொருட்கள் எல்லாம் விற்று சிவனடியாருக்கு விருந்து படைக்கும் திருத்தொண்டில் மகிழ்ந்து வந்தார்.முடிவில் எவ்வகை பொருளும் இல்லாத நிலை ஏற்பட்டது.மேலும் மேலும் விருந்து படைக்க வழியில்லாமல் அவர் வறுமையில் வாடி இனி பொருளுக்கு என்ன செய்வது என்று மனம் சோர்ந்தார்.பிறகு முன்னாளில் கற்ற சூதாட்டத்தினால் பொருளீட்ட கருதினார்.அவ்வூரில் சூதாடுவோர் இல்லாததால் அவ்வூரில் இருந்து புறப்பட்டார்.
          அவர் சூதாடும்போது முதல் ஆட்டத்தில் தோற்று பணய பொருளை இழப்பார்.ஆனால் பின் ஆட்டங்களில் எல்லாம் வெற்றி பெற்று பெரும் பணய பொருளை அள்ளிக்கொள்வார். எதிர் ஆட்டம் ஆடுபவர் வாக்கு மாறினால் தமது உடை வாளால் அவரை குத்துவார்.  சூதாட்டத்தில் தாம் வெற்றி பெற்ற பொருளை தம் கையாளும் தீண்ட மாட்டார்.தமக்காகவும் பயன்படுத்த மாட்டார்.அவற்றை சமையல் செய்வோரிடம் கொடுப்பார்.அவர்கள் அமுதாகுவார்கள்.அடியார்கள் யாவரும் விருந்துன்டபின் கடைசி பந்தியில் தாமும் அமர்ந்து அமுது செய்வார்.
          மூர்க்க நாயனார் இவ்வுலகை விடுத்த பின் சிவ புண்ணிய பேற்றால் பூத கணங்கள் சூழ்ந்து இசை பாட ஆனந்த தாண்டவம் செய்தருளும் சிவபெருமானது உலகமாகிய சிவபுரம் அடைந்து பேரின்பமடைந்தார்.
         கௌணீ பக்தர்கள் முறையாக பகவானை உபாசிப்பதில்லை என்றாலும் இவர்கள் நிச்சயம் பகவானை நெருங்க முயற்சி செய்கிறார்கள்.படிப்படியாக இவர்களும் அகத்தூய்மை பெற்று நிச்சயம் பகவானை அடைவார்கள்.
          கருணைக்கடலான பகவான் அவரை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாலும் அவர் நம்மை நோக்கி நான்கு அடி எடுத்து வைக்கிறார்.இவர்களும் இறுதியில் பகவானின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.இவர்களையும் புண்ணிய ஆத்மாக்களாக மகா புருசர்கள் பக்தி செலுத்தி ஊக்குவிப்பார்கள்.ஏனெனில் பக்தியால் மட்டும் பகவானை சார்ந்து சரண் அடைவது பகவத் தியானம் பஜனை எல்லாம் தாமாகவே வந்துவிடும்.ஆனால் எப்படியும் பகவானை அடையவேண்டும் என்ற லட்சியம் வேண்டும்.வேறுவிதமாக மூன்று வகை பக்தர்கள் இருக்கிறார்கள்(தொடரும்)