Saturday 29 November 2014

சிங்காசனம



இந்த ஆசனம் சிங்கத்தின் வடிவம் கொண்டதாகும். நாக்கை துருத்தி, கை விரல்கள் சிங்கத்தின் கால் விரல்கள் போலிருக்கும்.
          மற்ற ஆசனங்கள் போல் இல்லாமல் இதில் சரீரத்தின் மேல் அங்கங்கள் தாக்கப்படுகின்றன. முக்கியமாக கண்,காது,மூக்கு, தொண்டை,நாக்கு,நுரையீரல்,கைவிரல்கள்,குதிகால் ஆகியவற்றில் அழுத்தம் கொடுக்கப்படுகின்றன. நன்கு பசியெடுக்கும். முகதாடை,நாக்கு, தொண்டையை ஒட்டிய நாக்கின் தொடக்கப்பகுதி ஆகியவற்றிற்கு நன்கு பயிற்சி கிடைக்கிறது. தொண்டை குழி முழுங்கும் பகுதி குரல்வளம், குரல்வளை எல்லாம் தாக்கப்படுகின்றன. கண்களுக்கு நல்ல கூர்மையான நோக்கும் சக்தி கிடைக்கிறது. காது, மூக்கு தொண்டைகளின் குற்றங்கள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கிறது. டான்ஸில், தொண்டைவீக்கம்,தொண்டை கரகரப்பு, இருமல் எல்லாம் வேருடன் நீக்கப்படுகின்றன.
          வயிற்றில் ஜீரண சுரப்பிகள் வேலை செய்யும். நாக்கை வெளியில் இழுப்பதால் தொண்டை மூக்கில், சுத்த ரத்தம் பாயும். வாயில் ஜீரண எச்சில் சுரப்பியால் உணவு நன்கு ஜீரணமாகும். நாக்கை வெளியில் நீட்டுவதால் நரம்புகள் இழுக்கப்பட்டு தாடைகள் இறுக்கம் குறைந்து பலப்படுகின்றன. விக்கல் வியாதி தடுக்கப்படுகிறது.
         சிங்காசனத்தை தொடர்ந்து செய்து பழகிய பின் முழங்கால் தொடை, சதைபிடிப்பு நீங்கி பலமுள்ளதாக ஆகின்றன. இந்த ஆசனத்துடன் சேர்ந்து மூலபந்தம்(ஆசனவாயை மேல்நோக்கி சுருக்குதல்) போட்டால் மூலவியாதி குணமாகும்.
          தன்னுள் சிங்கத்தின் பலம் வருவது போல பாவனை செய்தால் எல்லா அங்கங்களும் வலிமை பெற்றுவிடும். இவ்வாறு தியானம் செய்தால் (மன உறுதி) கிடைக்கும். சக்தி பெருகும்.
          செய்முறை:
          கீழே ஒரு விரிப்பை விரித்தபின் முழங்கால் மடக்கி பூமியில் அமர வேண்டும். கால் பாதங்களை விரல்கள் கீழே நேராக வைத்து குதிகால்களில் உட்கார வேண்டும். குதிகால்கள் சேர்ந்தே இருக்க வேண்டும். முகம் சூரியனை பார்த்து இருக்க வேண்டும். இரண்டு முழங்கால்களும் ஒரு இடைவெளிவிட்டு பூமியில் பதிந்து இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் தொடைகளின் இடைவெளியில் (நடுவில்) ஊன்ற வேண்டும். அதன் பின் கைவிரல்கள் உள்பக்கம் வைத்து (தன்னை நோக்கி வைத்திருக்க வேண்டும்) சற்று முன்பக்கம் குனிந்து கைகளை மடக்காமல் விறைப்பாக வைத்துக்கொள்க. வயிற்றை உள்பக்கம் வைத்து நெஞ்சை முன் பக்கம் கொண்டு வரவேண்டும். தொண்டையை திறந்து நாக்கை வெளியில் நீட்ட வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளியில் நீட்ட வேண்டும். திருஷ்டியை மூக்கு நுனியில் வைத்துக்கொள்க. சுவாசம் வாய் வழியாக போய்வரவேண்டும். ஒருநிமிடத்தில் நாக்கை வெளியிலும் உள்ளேயும் கொண்டுபோய் நீட்ட வேண்டும்.
          ஒரு நிமிடத்திலிருந்து மூன்று நிமிடம் வரை பிரதி தினமும் இதே முறையில் அவசர கதியில் நாக்கை வெளியில் நீட்டி உள்ளேயும் கொண்டு போக வேண்டும். சிலர் ஒன்றிலிருந்து மூன்று நிமிடம் வரை நாக்கை வெளியில் நீட்டிக்கொண்டு இருப்பார்கள். அல்லது நாக்கை மேல் பல் வரிசை நடுவில் ஒட்ட வைத்து நாக்கின் கடைசி பகுதியில் (சிறுநாக்கு தொண்டைப்பகுதியில்)அழுத்தம் கொடுக்கலாம். அதன் பின் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீளமாக வெளியில் நீட்டிக்கொள்வார்கள். இதனால் அதிக பலன் கிடைக்கும். சிங்காசனத்தில் முழுப்பலன் அடைவது நாக்கை பலமாக, நீளமாக வெளியில் நீட்டுதலே ஆகும். நாக்கை மேல்நோக்கி தொண்டை குழி சேர்த்து ஒட்ட வைப்பது மிகுந்த பலன் உண்டாகும்.
          சிங்காசனத்தில் மூலபந்தம்(ஆசனவாயை மேல்நோக்கி சுருக்கி வைப்பது) போட்டு ஜாலந்தர் பந்தமும்(முகவாய் கட்டையை கழுத்துடன் ஒட்ட வைப்பது) போட்டாலும் நல்லது. சிலர் சிங்காசனத்தில் கைவிரல்களை சிங்கத்தின் கால் விரல் போல செய்து முழங்கால்களில் வைப்பார்கள்.

          மேலும் சிலர் முழங்கால்களில் நின்று முன்னால் குனிந்துகைவிரல்களை விரித்து பூமியில் வைப்பார்கள். இதனால் பலனில் பெரும் வித்தியாசமில்லை. முக்கியமாக நாக்கை வெளியில் நீட்டுவதால் காது, தொண்டை, தாடை ஆகியவை பலப்படுகின்றன. நாக்குக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. (தொடரும்)

Friday 28 November 2014

பகாசனம்


பகாசனமும் யோனிஸ்தானத்தில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அடி வயிறு இரண்டு புட்டம், தொடை,தொடையின் ஆரம்பப்பகுதி, ஜனனேந்திரியம்,நாடி,நரம்புகள் பலப்படும். வீரியம் காக்கப்படும். சொப்பனதோஷம் நீங்கும். பெண்களுக்கு இது அதிக பலன்களை தரும். வெள்ளைபடுதல், மாதவிலக்கு கஷ்டங்கள், அதிக உதிரபோக்கு முதலிய வியாதிகள் நீங்கும். மூல நோய் குணமாகும். பௌத்திரம் குணமாகும். பெண்களின் அழகு கூடும்.
செய்யும் விதி:
கீழே போர்வை அல்லது ஜமுக்காளம் விரித்து அதில் இரண்டு கால்களையும் நீட்டியபடி அமரவேண்டும். பின்பு முழங்கால்களை மடக்கி இரண்டு பாதங்களின் அடிப்பாகத்தையும் சேர்த்து குதி கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். அதன்பின் இரண்டு கைகளால் இரண்டு குதிகாலை பிடித்து நாபியின் இடத்தில் கொண்டுபோய் வைக்க வேண்டும். சேர்ந்த இரண்டு பாதங்களும் ஜனனேந்திரியத்திர்க்கு  நேர்கோட்டில் பூமியில் வைக்க வேண்டும். மெதுவாக சுவாசத்தை நிரப்பவேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைத்து கொள்க. நெஞ்சை நிமிர்த்தி நேராக அமரவேண்டும். சக்திக்கு தகுந்தவாறு இருபது நொடியிலிருந்து ஒரு நிமிடம் வரை மூச்சை அடக்கி கொண்டு இருக்க வேண்டும். அதன்பின் மெதுவாக சுவாசத்தை விட வேண்டும். சற்று நேரம் சாதாரணமாக சுவாசிக்க வேண்டும். கஷ்டமாக இருந்தால் சாதாரணமாக உட்காரலாம். இவ்வாறு மூன்று அல்லது ஐந்து முறை ஆசனம் போடலாம். ஆரம்பத்தில் இந்த ஆசனம் போட கடினமாக இருக்கும். முயற்சி செய்து பயிற்சி செய்தால் சில நாட்களுக்கு பின் போட வரும். குதிகால்களை நாபியின் நேர் கோட்டில் சேர்த்து வைத்து பத்து நொடி வரை செய்து கிரமமாக நேரத்தை அதிகப்படுத்தலாம்.

          நான்கு முறை பகாசனம் செய்த பிறகு ஐந்தாவது முறை இவ்வாறு பிராணாயாமம் செய்யலாம். மூன்று நொடி சுவாசத்தை இழுத்து ஆறு நொடிவரை கும்பகம் செய்து(உள்ளே அடக்கி)மூன்று நொடியில் சுவாசத்தை வெளியே விடவேண்டும்.  இதை தாளபத்த பிராணாயாமத்துடன் செய்யலாம். அதாவது இதயத்துடிப்புடன் சேர்த்து மூன்று முறை சுவாசித்து ஆறுமுறை சுவாசக்காற்றை அடக்கி மூன்றுமுறை   (இதயம் துடிக்கும் நேரத்தில்) வெளியில் விடலாம் என்று யோகிகள் கூறுவார்கள். (இந்த ஆசனத்தை தக்க வழிகாட்டுதலுடன் செய்யவும்)(தொடரும்)

Wednesday 24 September 2014

குப்தாசனம்:

 

தேகத்தில் மறைவிடத்தை பாதுகாப்பதே குப்தாசனம் எனப்படுகிறது. குப்தாசனம் ஆண்,பெண் இருவருக்குமே ஏற்றது. சமமாக பலன் தரக்கூடியது. ஆண்களுக்கு உபஸ்த இந்திரியத்தில் சுத்த ரத்தம் கிடைக்கச்செய்கிறது. அதை பலப்படுத்துகிறது. பிரம்மச்சரியம் கடைபிடிக்க உதவியாக இருக்கிறது. வீரியத்தை பாதுகாக்கிறது. சீர் இல்லாத மாதவிலக்கு அல்லது மாதவிலக்கு சமயம் ஏற்படும் கஷ்டங்கள் அதிக இரத்தப்போக்கு ஆகியவை எல்லாம் குணமாகின்றன. கற்பப்பையும் சினைப்பையும் பலப்படுகின்றன. இதை பெண்களுக்கு ஏற்பட்ட வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
செய்யும் விதி:
கீழே ஜமுக்காளம் விரித்து அதில் நேராக அமர வேண்டும். இடது கால் பாதத்தை ஜனன உறுப்புக்கு கீழே வைக்க வேண்டும். காலை பூமியில் பதிய வைக்க வேண்டும். பாதத்தின் அடிப்பாகம் மேல்நோக்கி இருக்க வேண்டும். இரண்டு முழங்கால்களின் பாரம் பூமியில் இருக்க இடது கால் பாதம் வலது கால் தொடைக்குள் இருக்க வேண்டும். வலது குதிகால் ஆசனவாயை நன்கு மூடி அழுத்தம் கொடுக்க வேண்டும். தலை, கழுத்து, முதுக்குத்தண்டு  சமமாக நேர்கோட்டில் இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைத்துக்கொண்டு ஈஸ்வரனை தியானம் செய்யலாம். ஒரு நிமிஷத்திலிருந்து பிரதி தினமும் மூன்று நிமிஷம் வரை இந்த ஆசனம் செய்யலாம். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகநேரம்(அரைமணிநேரம்) செய்யலாம்.
இந்த ஆசனத்தில் மலத்துவாரத்தை குதையின் மூலத்தை குதிகால் அடைத்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஜனனேந்திரியத்திற்கு கீழேயும் அமுக்கப்படுகிறது. இதை பெண்கள் மிகவும் கவனமாக செய்யவேண்டும். ஜனன இந்திரியத்தில் அழுத்தாமல் குதஸ்தானமும் ஜனன இந்திரியத்தின் கீழே உள்ள இடமும் அமுக்கப்படவேண்டும். ஆசனத்தில் குதா துவாரத்திலும் ஜனன இந்திரியத்திற்கு கீழும் ரத்த ஓட்டம் தடுக்கப்பட்டு பின் ஆசனம் முடிந்தபின் சுத்த இரத்தம் பாயும். அந்தரங்க உறுப்புகள் பலப்படும். ஆசனம் முடிந்தபின் நிச்சயம் சவாசனம் போட வேண்டும். நன்கு ஓய்வு எடுத்த பின் எழுந்திருக்க வேண்டும்.

 தொடரும்
            

     

Tuesday 26 August 2014

பத்மாசனம்

 பத்மாசனம்:


 பூ மலர்ந்திருப்பது போல செய்வதே பத்மாசனம். இரண்டு கால் பாதங்களு 
தாமரை ம் தொடைகள் மீது வைத்திருக்க அடி பாகம் மேல் இருக்க தாமரை பூ மலர்ந்திருப்பது போல தோற்றமளிக்கும்.
          இந்த ஆசனத்தில் தேகத்தின் கீழ் பகுதி (இடுப்பு ) பலப்படும். முதுக்குத்தண்டு நேராக இருக்கும். யோகிகளுக்கு பிராணவாயு சுஷும்னா நாடி வழியே போகும். இதனால் அறிவு நன்றாக செயல்படும். சிந்தனா சக்தி விருத்தியாகும். இது தியானம் செய்ய வேண்டிய ஆசனம். ஆன்மீக பாதையில் துணை புரியும். ஜபமும் தியானமும் செய்யப்பயன்படுகிறது. பிரம்மச்சரியம் காக்கப்படுகிறது.
          இந்த ஆசனத்துடன் ஜாலந்தர் பந்தமும், மூல பந்தமும் செய்வார்கள். முகவாய்க்கட்டையை கழுத்துடன் ஓட்ட வைத்துக்கொள்வது ஜாலந்தர் பந்தம். மூலபந்தம் என்பது ஆசனவாயை சுருக்குவது. இதனால் அஜீரண கோளாறுகள் நீங்கும். வாதரோகமும், பேதியும் தடுக்கப்படும். இந்த ஆசனம் போட்டுக்கொண்டு உத்தித பத்மாசனம், பர்வதாசனம், ப்ரமராசனம் , தாடாசனம் எல்லாவற்றையும் செய்வார்கள். அதனால் சரீர தேகம் ஆரோக்கியம் பெருகும்.
          ஆண், பெண் முதல் பாலகர் அனைவரும் இதை செய்யலாம். இத்துடன் உட்யான பந்தம் செய்தால் (வயிற்றை ஏக்கி ஓட்டினார் போல செய்வது) அதிக பலன் கிட்டும். இந்த ஆசனம் போட்டு முடித்த பின் கால்களை சகஜ நிலைக்கு கொண்டுவரும்போது தேகத்தின் கீழ் அங்கங்களில் சுத்த இரத்தம் பாயும்.

:செய்முறை
இரண்டு கால்களையும் பரத்தி வைத்தபின் வலது பாதத்தை இடது தொடை மீதும், இடது பாதத்தை வலது தொடை மீதும் வைக்க வேண்டும். இரண்டு பாதங்களையும் தொடைகளில் நன்கு பதிய வைக்கவேண்டும். நாபியின் நேர் இரண்டு குதிகால்களும் தொடை ஆரம்பிக்கும் பகுதியில் நன்கு ஒட்டி வைக்க வேண்டும். பாதத்தின் அடிப்பாகம் மேல் இருக்க வேண்டும். குதிகால்கள் இரண்டும் சேர்ந்திருக்க வேண்டும். வலது புறங்கையை இடது உள்ளங்கையில் வைத்திருக்க குதி கால்கள் மேல் வைக்கலாம். அல்லது இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைத்துக்கொள்ளலாம். தொடைகளும் முழங்கால்களும் பூமியில் பதிந்து இருக்க வேண்டும். அதில் தளர்வாக (லூசாக) இருக்க கூடாது. முதுக்குத்தண்டு, கழுத்து, தலை , இடுப்பு எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்க பார்வை புருவத்தின் நடுவில் அல்லது மூக்கு நுனியில் இருக்க வேண்டும். அல்லது கண்களை மூடிக்கொண்டு புருவநடுவில் நோக்க வேண்டும். அல்லது எதிரில் தெய்வபடத்தையும் நோக்கலாம்.
          பத்மாசனம் ஒன்றிலிருந்த்து பத்து நிமிடம் வரை செய்யலாம். தியானம் செய்பவர்கள் அதற்கு மேலும் செய்வார்கள். கைகளை முழங்காலில்(சுலபமாக இருக்க) வைத்துக்கொள்வார்கள். எதையும் கஷ்டப்பட்டு செய்யக்கூடாது. பயிற்சி செய்து சுலபமாக செய்யலாம். கஷ்டப்பட்டு நெடுநேரம் வரை செய்யக்கூடாது. அதாவது வலி எடுக்கும்வரை செய்யக்கூடாது.
          கனமான சரீரம் உள்ளவர்கள் கால்களை தடிமனாக இருந்தால் இதை செய்ய முடியாவிட்டால் ஒரு கால் பாதத்தை மட்டும் தொடையில் வைத்துக்கொள்ளலாம். அப்போது அர்த்த பத்மாசனம் ஆகிறது. மற்றுமொரு காலை மடக்க முடிந்தவரை மடக்கி கொள்ளலாம். அர்த்த பத்மாசனம் செ(தொடரும்)
ய்பவர்கள் ஒருகாலை மாற்றி மாற்றி தொடையில் வைத்துக்கொள்வது அவசியம். அவ்வாறு இருக்கும்போது இரண்டு கால்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

          இந்த ஆசனத்தில் முக வாய்க்கட்டையை கழுத்துடன் ஒட்ட வைத்துக்கொள்ளும் பயிற்சியால் தைராய்ட் வர வாய்ப்பில்லை. மூளை சுறுசுறுப்பாகிறது. இந்த ஆசனத்தில் வயிற்றை எக்கி ஒட்ட வைத்து ஆசனவாயை மேல்பக்கம் சுருக்கினால் (மூலபந்தம்) பெருங்குடல் நன்கு செயல்படும். செரிமானம் நன்கு ஏற்பட்டு மலச்சிக்கல் நீங்கும். 

Monday 25 August 2014

சுகாசனம்

சுகாசனம்:





உட்கார்ந்து செய்யும் ஆசனங்களில் சுகாசனம் சுலபமானது. எளிமையானது. ஸ்திரமாக,சுகமாக எந்த ஸிதிதியில் அமர்ந்தாலும் அது சுகாசனமாகிறது என்று பதஞ்சலி யோகம் கூறுகிறது. ஸ்திரமாக உட்காருவதற்கு சுகாசனமே மிகவும் சிறந்தது. மணிக்கணக்கில் கடவுள் வழிபாடுகளில் பஜனை, தியான சமாதி(ஆழ்நிலை தியானம்) ஆகியவை செய்யும்போது சுகாசனத்தில் அமர்வது சுலபமாகிறது. இதில் தேகம்,மனம்,பிராணன்,புலன்கள்,ஆகியவை அதிகம் சோர்வாவதில்லை. சரீரத்தின் கீழ் பகுதியும்,இடுப்பும் நரம்புகளும் உறுதிப்பட்டு பலப்படுகின்றன. முதுகுத்தண்டும் ஆரோக்கியமாகி பலப்படுகிறது. யோகிகளுக்கு சுஷுனா நாடி வழியாக பிராணவாயு சீராக போகும். தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது.
செய்யும் விதி:
கீழே ஒரு விரிப்பை விரித்துக்கொள்ள வேண்டும். நேராக அமர்ந்து வலது காலின் குதியை இடது தொடையின் மேல் இருக்கும்படி செய்யவேண்டும். இடது காலின் குதிகால் வலது தொடையின் அடியில் செருக வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்களில் வைக்க வேண்டும். சுவாசம் இயல்பாய் போய்க்கொண்டிருக்க வேண்டும். முதுகுத்தண்டும், கழுத்து, தலையும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். கண் பார்வை மூக்கு நுனியை பார்க்க வேண்டும். சரீரத்தை மிகவும் விறைப்பாக வைக்க வேண்டாம். சோர்வாக இருந்தால் கால்களை மாற்றி அமர்ந்து கொள்ளலாம்.
பூஜை, தியானம், போஜனம்  ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம். ஐந்து நிமிடத்திலிருந்து மூன்று மணிநேரம் வரை அமர்ந்து இருக்கலாம். ஜபம் செய்யும்போது மூன்று மணிநேரம் வரை காலை மாற்றாமல் சோர்வின்றி அமர முடிந்தால் இந்த ஆசனம் சித்தியாகிவிட்டது என்று யோகிகள் கூறுவார்கள்.
          சரீர ஆசனத்தை முன்னிட்டு இந்த ஆசனத்தை அவ்வளவு நீண்ட நேரம் செய்யத் தேவையில்லை. வசதிக்கு ஏற்றவாறு காலை மாற்றி மாற்றி செய்யலாம். ஆனால் முதுகுப்பகுதி நேராக இருப்பது அவசியம். மிகவும் விறைப்பாக இருக்க வேண்டாம். நாம் சுகமாக அமர்ந்துள்ளோம் என்று மனதை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.

(தொடரும்)

Tuesday 19 August 2014

உத்தானபாதாசனம்






உத்தானபாதாசனம்:
கால்கள் இரண்டையும் தூக்குவதே உத்தானபாதாசனம் எனப்படுகிறது. கால்களை தூக்கிவைப்பதே முக்கியம். இதனால் வயிற்றில் இருக்கும் கேஸ் வாயுரூபமாக வெளியேறுகிறது. இடுப்பு பலப்படுகிறது. பசி எடுக்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. வயிற்று நரம்புகள் பலப்படுகின்றன. இரைப்பை நன்கு செயல்படும். வயிற்றில் கொழுப்பு இருக்காது. ஹிரனியா வராது. ஆண்,பெண் இருவருக்கும் சரிசமமான பலன் கிடைக்கிறது. இந்த ஆசனத்தை காலையில் எழுந்தவுடன் செய்யலாம். இதனால் கால்களின் ஜாயிண்ட் பகுதியும் நரம்புகளும் இடுப்பும் உறுதி படும். இதில் இருக்கும் அசுத்தங்கள் சிறுநீர் வழியாக வெளியே வரும். தேகத்தின் கீழ் இருக்கும் அங்கங்கள் உறுதியாகும்.
செய்முறை:                      
கீழே ஜமுக்காளத்தில் படுக்கவேண்டும். இரண்டு கைகளையும் தொடைகளின் பக்கம் ஓட்டினார் போல நேராக வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கால்களும்,முழங்கால்,குதி,கால்பெருவிரல் எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்க. மூச்சை இழுத்து அடக்க வேண்டும். மெது-மெதுவாக இரண்டு கால்களையும் சேர்ந்தாற்போல் மேலே தூக்கி கீழே பூமி-விரிப்பிலிருத்து இரண்டு அடி மேல்தூக்கி ஸ்திரமாக வைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரல் மீது பதியவைக்க வேண்டும். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் மேல் தூக்கி வைக்க வேண்டும். பத்து பதினைந்து நொடிகள் வரை அவசியம் வைக்க வேண்டும். பின்பு மூச்சை விட்டுக்கொண்டு மெதுவாக கால்களை கீழே வைக்க வேண்டும். ஐந்து அல்லது ஏழு முறை கால்களை தூக்கி உத்தான பாதாசனம் செய்தபின் கால்களை மெதுவாக கீழே வைத்தபின் கண்களைமூடி சவாசனம் செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் இந்த ஆசனம் செய்கிறோமோ அதன் பாதி நேரம் சவாசனத்தில் ஓய்வு எடுக்க வேண்டும்.
          இந்த ஆசனத்தை செய்யும் போது இரண்டு முறை ஒவ்வொரு அடியாக மேலே கொண்டுபோய் இரண்டடி உயரம் வைத்து அப்யாசம் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தில் இடது கால், வலது கால் மாறி மாறி தூக்கி செய்யலாம். இப்படி சுலபமாக செயலாம்.
          இந்த ஆசனத்தில் மூன்று அல்லது ஐந்து முறை அப்யாசம் செய்யும்போது ஒருநிமிடம் மூச்சை அடக்கி வைத்திருக்கும் வரை இரண்டு கால்களும் மேல் தூக்கி இருக்க வேண்டும். கால்களை மேல்தூக்கி வைத்திருக்கும்போது இரண்டும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்று கவனத்தில் இருக்க வேண்டும். இரண்டு கால்களையும் மெதுவாக மேல்நோக்கி போகவேண்டியது அவசியம். அப்போது தான் ஆசனத்தின் முழுப்பலனையும் அடையலாம். அதே போல மெதுவாக மந்தகதியுடன் கீழே கொண்டுவருவதும் அவசியம். கால்களில் நடுக்கம் இருக்க கூடாது. மன உறுதி அவசியம். கால்களை மேல்தூக்கி வைத்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்தி அப்யாசம் செய்ய வேண்டும்.


                           தொடரும்

Monday 18 August 2014

மத்ஸ்யாசனம்


மத்ஸ்யாசனம்:
மத்ஸ்யம் என்றால் மீன். மத்ஸ்யாசனம் போட்டு தண்ணீரில்(மல்லாக்க) நீந்தலாம். பத்மாசனத்தில் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இந்த ஆசனத்தில் கிடைக்கும். கழுத்து பகுதியில் கொழுப்பு சேராமல் இருக்கும். மார்பு நுரையீரல் பலப்படும். ஜலதோஷம்,மூச்சிரைப்பு, டான்சில் எல்லாம் இருக்காது. இந்த ஆசனத்தில் கழுத்து அழுத்தப்படுவதால் தாயிராட்,பைராதைராய்ட் வராமல் தடுக்கும். கேன்சரும் தடுக்கப்படும். அனாவசிய சுரப்பிகள் சுரக்காமல் உடலில் அசுத்தம் சேராமல் இருக்கும். வயிற்றுக்கோளாறுகள் நீங்கும். சிறுகுடல், பெருங்குடல் வியாதிகள் குணமாகும். ஆசனவாய் குழாய் நன்கு செயல்படுவதால் மலச்சிக்கல் நீங்கும். அபான வாயு சீராகும்.
செய்முறை:
தூய காற்றோட்டமான இடத்தில் கீழே விரிப்பு விரித்து அமரவேண்டும். வலது பாதம் இடது தொடையிலும், இடது பாதம் வலது தொடை மீதும் வைக்கவேண்டும். நன்கு ஒட்டினாற்போல் இருக்கவேண்டும். இரண்டு பாதங்களின் குதிகால்கள் நாபியின் நேராக அடிவயிற்றை ஒட்டி இருக்கவேண்டும். பின் மெதுவாக முதுகை கீழே வைத்து படுக்கவேண்டும். படக்கென்று படுக்க கூடாது. இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தலைக்கு கீழே வைத்துக்கொள்க. தலையிலும் முழங்காலிலும் தேகத்தின் முழுப்பாரம் இருக்க தேகத்தின் நடுப்பகுதியை மேலே உயர்த்திக்கொள்க. இடுப்புப்பகுதி பூமியை தொடக்கூடாது. வயிற்றையும் மேல்நோக்கி எழச்செய்யவேண்டும்.
          மத்ஸ்யாசனத்தை தினமும் ஒன்றிலிருந்து மூன்று நிமிடம் வரை செய்யலாம். மெதுவாக நேரத்தை கூட்டிக்கொண்டு போகலாம். பின்பு பத்து பதினைந்து நிமிடம் வரை செய்யலாம். பத்து பதினைந்து நிமிடம் வரை செய்தால் நோய் குணமாவதற்கு நல்ல பலன் கிடைக்கும். இதை சர்வாங்காசனத்திற்கு பின் செய்தால் மிகவும் நல்லது. அல்லது ஹலாசனமும் கர்ணபீடாசனமும் செய்பவர்கள் மத்ஸ்யாசனம் அவசியம் செய்யலாம்.  சிலர் இரண்டு கைகளையும் தலைக்கு கீழ் வைத்துக்கொள்ளாமல் இரண்டு கைகளால் கால் பெருவிரல்களை பிடித்துக்கொள்வார்கள். மத்ஸ்யாசனத்தில் இதுவும் ஒரு வகையாகும். இந்த ஆசனத்தினால் பூஜங்களிலிருந்து கைகள் வரை மிகவும் உறுதியாகும். மத்ஸ்யாசனத்திற்கு பின்பு சவாசனம் அவசியம் செய்ய வேண்டும். சவாசனத்தில் உடல் அங்கங்களை தளர்வாக விட்டு கண்களை மூடி மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் இறுக்கம் போகும்.

          தடிமனான சரீரம் உள்ளவர்கள் பத்மாசனம் போட முடியாது. வெறும் சம்மணமிட்டு இந்த ஆசனத்தை பழக வேண்டும். ஒருமாதம் நன்கு பழகியபின் பத்மாசனம் போடவரும். ஆரம்பத்தில் இதை பதினைந்து நொடிகள் செய்யலாம். பலநாள் பயிற்சிக்கு பின்   பத்து நிமிடம் செய்யலாம். இந்த ஆசனத்தில் சுவாசம் இயல்பாக போகவேண்டும். பிராணாயாமம் தேவையில்லை.

தொடரும்