Saturday 29 November 2014

சிங்காசனம



இந்த ஆசனம் சிங்கத்தின் வடிவம் கொண்டதாகும். நாக்கை துருத்தி, கை விரல்கள் சிங்கத்தின் கால் விரல்கள் போலிருக்கும்.
          மற்ற ஆசனங்கள் போல் இல்லாமல் இதில் சரீரத்தின் மேல் அங்கங்கள் தாக்கப்படுகின்றன. முக்கியமாக கண்,காது,மூக்கு, தொண்டை,நாக்கு,நுரையீரல்,கைவிரல்கள்,குதிகால் ஆகியவற்றில் அழுத்தம் கொடுக்கப்படுகின்றன. நன்கு பசியெடுக்கும். முகதாடை,நாக்கு, தொண்டையை ஒட்டிய நாக்கின் தொடக்கப்பகுதி ஆகியவற்றிற்கு நன்கு பயிற்சி கிடைக்கிறது. தொண்டை குழி முழுங்கும் பகுதி குரல்வளம், குரல்வளை எல்லாம் தாக்கப்படுகின்றன. கண்களுக்கு நல்ல கூர்மையான நோக்கும் சக்தி கிடைக்கிறது. காது, மூக்கு தொண்டைகளின் குற்றங்கள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கிறது. டான்ஸில், தொண்டைவீக்கம்,தொண்டை கரகரப்பு, இருமல் எல்லாம் வேருடன் நீக்கப்படுகின்றன.
          வயிற்றில் ஜீரண சுரப்பிகள் வேலை செய்யும். நாக்கை வெளியில் இழுப்பதால் தொண்டை மூக்கில், சுத்த ரத்தம் பாயும். வாயில் ஜீரண எச்சில் சுரப்பியால் உணவு நன்கு ஜீரணமாகும். நாக்கை வெளியில் நீட்டுவதால் நரம்புகள் இழுக்கப்பட்டு தாடைகள் இறுக்கம் குறைந்து பலப்படுகின்றன. விக்கல் வியாதி தடுக்கப்படுகிறது.
         சிங்காசனத்தை தொடர்ந்து செய்து பழகிய பின் முழங்கால் தொடை, சதைபிடிப்பு நீங்கி பலமுள்ளதாக ஆகின்றன. இந்த ஆசனத்துடன் சேர்ந்து மூலபந்தம்(ஆசனவாயை மேல்நோக்கி சுருக்குதல்) போட்டால் மூலவியாதி குணமாகும்.
          தன்னுள் சிங்கத்தின் பலம் வருவது போல பாவனை செய்தால் எல்லா அங்கங்களும் வலிமை பெற்றுவிடும். இவ்வாறு தியானம் செய்தால் (மன உறுதி) கிடைக்கும். சக்தி பெருகும்.
          செய்முறை:
          கீழே ஒரு விரிப்பை விரித்தபின் முழங்கால் மடக்கி பூமியில் அமர வேண்டும். கால் பாதங்களை விரல்கள் கீழே நேராக வைத்து குதிகால்களில் உட்கார வேண்டும். குதிகால்கள் சேர்ந்தே இருக்க வேண்டும். முகம் சூரியனை பார்த்து இருக்க வேண்டும். இரண்டு முழங்கால்களும் ஒரு இடைவெளிவிட்டு பூமியில் பதிந்து இருக்க வேண்டும். இரண்டு கைகளையும் தொடைகளின் இடைவெளியில் (நடுவில்) ஊன்ற வேண்டும். அதன் பின் கைவிரல்கள் உள்பக்கம் வைத்து (தன்னை நோக்கி வைத்திருக்க வேண்டும்) சற்று முன்பக்கம் குனிந்து கைகளை மடக்காமல் விறைப்பாக வைத்துக்கொள்க. வயிற்றை உள்பக்கம் வைத்து நெஞ்சை முன் பக்கம் கொண்டு வரவேண்டும். தொண்டையை திறந்து நாக்கை வெளியில் நீட்ட வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளியில் நீட்ட வேண்டும். திருஷ்டியை மூக்கு நுனியில் வைத்துக்கொள்க. சுவாசம் வாய் வழியாக போய்வரவேண்டும். ஒருநிமிடத்தில் நாக்கை வெளியிலும் உள்ளேயும் கொண்டுபோய் நீட்ட வேண்டும்.
          ஒரு நிமிடத்திலிருந்து மூன்று நிமிடம் வரை பிரதி தினமும் இதே முறையில் அவசர கதியில் நாக்கை வெளியில் நீட்டி உள்ளேயும் கொண்டு போக வேண்டும். சிலர் ஒன்றிலிருந்து மூன்று நிமிடம் வரை நாக்கை வெளியில் நீட்டிக்கொண்டு இருப்பார்கள். அல்லது நாக்கை மேல் பல் வரிசை நடுவில் ஒட்ட வைத்து நாக்கின் கடைசி பகுதியில் (சிறுநாக்கு தொண்டைப்பகுதியில்)அழுத்தம் கொடுக்கலாம். அதன் பின் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீளமாக வெளியில் நீட்டிக்கொள்வார்கள். இதனால் அதிக பலன் கிடைக்கும். சிங்காசனத்தில் முழுப்பலன் அடைவது நாக்கை பலமாக, நீளமாக வெளியில் நீட்டுதலே ஆகும். நாக்கை மேல்நோக்கி தொண்டை குழி சேர்த்து ஒட்ட வைப்பது மிகுந்த பலன் உண்டாகும்.
          சிங்காசனத்தில் மூலபந்தம்(ஆசனவாயை மேல்நோக்கி சுருக்கி வைப்பது) போட்டு ஜாலந்தர் பந்தமும்(முகவாய் கட்டையை கழுத்துடன் ஒட்ட வைப்பது) போட்டாலும் நல்லது. சிலர் சிங்காசனத்தில் கைவிரல்களை சிங்கத்தின் கால் விரல் போல செய்து முழங்கால்களில் வைப்பார்கள்.

          மேலும் சிலர் முழங்கால்களில் நின்று முன்னால் குனிந்துகைவிரல்களை விரித்து பூமியில் வைப்பார்கள். இதனால் பலனில் பெரும் வித்தியாசமில்லை. முக்கியமாக நாக்கை வெளியில் நீட்டுவதால் காது, தொண்டை, தாடை ஆகியவை பலப்படுகின்றன. நாக்குக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது. (தொடரும்)

No comments:

Post a Comment