Tuesday, 26 August 2014

பத்மாசனம்

 பத்மாசனம்:


 பூ மலர்ந்திருப்பது போல செய்வதே பத்மாசனம். இரண்டு கால் பாதங்களு 
தாமரை ம் தொடைகள் மீது வைத்திருக்க அடி பாகம் மேல் இருக்க தாமரை பூ மலர்ந்திருப்பது போல தோற்றமளிக்கும்.
          இந்த ஆசனத்தில் தேகத்தின் கீழ் பகுதி (இடுப்பு ) பலப்படும். முதுக்குத்தண்டு நேராக இருக்கும். யோகிகளுக்கு பிராணவாயு சுஷும்னா நாடி வழியே போகும். இதனால் அறிவு நன்றாக செயல்படும். சிந்தனா சக்தி விருத்தியாகும். இது தியானம் செய்ய வேண்டிய ஆசனம். ஆன்மீக பாதையில் துணை புரியும். ஜபமும் தியானமும் செய்யப்பயன்படுகிறது. பிரம்மச்சரியம் காக்கப்படுகிறது.
          இந்த ஆசனத்துடன் ஜாலந்தர் பந்தமும், மூல பந்தமும் செய்வார்கள். முகவாய்க்கட்டையை கழுத்துடன் ஓட்ட வைத்துக்கொள்வது ஜாலந்தர் பந்தம். மூலபந்தம் என்பது ஆசனவாயை சுருக்குவது. இதனால் அஜீரண கோளாறுகள் நீங்கும். வாதரோகமும், பேதியும் தடுக்கப்படும். இந்த ஆசனம் போட்டுக்கொண்டு உத்தித பத்மாசனம், பர்வதாசனம், ப்ரமராசனம் , தாடாசனம் எல்லாவற்றையும் செய்வார்கள். அதனால் சரீர தேகம் ஆரோக்கியம் பெருகும்.
          ஆண், பெண் முதல் பாலகர் அனைவரும் இதை செய்யலாம். இத்துடன் உட்யான பந்தம் செய்தால் (வயிற்றை ஏக்கி ஓட்டினார் போல செய்வது) அதிக பலன் கிட்டும். இந்த ஆசனம் போட்டு முடித்த பின் கால்களை சகஜ நிலைக்கு கொண்டுவரும்போது தேகத்தின் கீழ் அங்கங்களில் சுத்த இரத்தம் பாயும்.

:செய்முறை
இரண்டு கால்களையும் பரத்தி வைத்தபின் வலது பாதத்தை இடது தொடை மீதும், இடது பாதத்தை வலது தொடை மீதும் வைக்க வேண்டும். இரண்டு பாதங்களையும் தொடைகளில் நன்கு பதிய வைக்கவேண்டும். நாபியின் நேர் இரண்டு குதிகால்களும் தொடை ஆரம்பிக்கும் பகுதியில் நன்கு ஒட்டி வைக்க வேண்டும். பாதத்தின் அடிப்பாகம் மேல் இருக்க வேண்டும். குதிகால்கள் இரண்டும் சேர்ந்திருக்க வேண்டும். வலது புறங்கையை இடது உள்ளங்கையில் வைத்திருக்க குதி கால்கள் மேல் வைக்கலாம். அல்லது இரண்டு கைகளையும் முழங்கால்களில் வைத்துக்கொள்ளலாம். தொடைகளும் முழங்கால்களும் பூமியில் பதிந்து இருக்க வேண்டும். அதில் தளர்வாக (லூசாக) இருக்க கூடாது. முதுக்குத்தண்டு, கழுத்து, தலை , இடுப்பு எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருக்க பார்வை புருவத்தின் நடுவில் அல்லது மூக்கு நுனியில் இருக்க வேண்டும். அல்லது கண்களை மூடிக்கொண்டு புருவநடுவில் நோக்க வேண்டும். அல்லது எதிரில் தெய்வபடத்தையும் நோக்கலாம்.
          பத்மாசனம் ஒன்றிலிருந்த்து பத்து நிமிடம் வரை செய்யலாம். தியானம் செய்பவர்கள் அதற்கு மேலும் செய்வார்கள். கைகளை முழங்காலில்(சுலபமாக இருக்க) வைத்துக்கொள்வார்கள். எதையும் கஷ்டப்பட்டு செய்யக்கூடாது. பயிற்சி செய்து சுலபமாக செய்யலாம். கஷ்டப்பட்டு நெடுநேரம் வரை செய்யக்கூடாது. அதாவது வலி எடுக்கும்வரை செய்யக்கூடாது.
          கனமான சரீரம் உள்ளவர்கள் கால்களை தடிமனாக இருந்தால் இதை செய்ய முடியாவிட்டால் ஒரு கால் பாதத்தை மட்டும் தொடையில் வைத்துக்கொள்ளலாம். அப்போது அர்த்த பத்மாசனம் ஆகிறது. மற்றுமொரு காலை மடக்க முடிந்தவரை மடக்கி கொள்ளலாம். அர்த்த பத்மாசனம் செ(தொடரும்)
ய்பவர்கள் ஒருகாலை மாற்றி மாற்றி தொடையில் வைத்துக்கொள்வது அவசியம். அவ்வாறு இருக்கும்போது இரண்டு கால்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.

          இந்த ஆசனத்தில் முக வாய்க்கட்டையை கழுத்துடன் ஒட்ட வைத்துக்கொள்ளும் பயிற்சியால் தைராய்ட் வர வாய்ப்பில்லை. மூளை சுறுசுறுப்பாகிறது. இந்த ஆசனத்தில் வயிற்றை எக்கி ஒட்ட வைத்து ஆசனவாயை மேல்பக்கம் சுருக்கினால் (மூலபந்தம்) பெருங்குடல் நன்கு செயல்படும். செரிமானம் நன்கு ஏற்பட்டு மலச்சிக்கல் நீங்கும். 

Monday, 25 August 2014

சுகாசனம்

சுகாசனம்:





உட்கார்ந்து செய்யும் ஆசனங்களில் சுகாசனம் சுலபமானது. எளிமையானது. ஸ்திரமாக,சுகமாக எந்த ஸிதிதியில் அமர்ந்தாலும் அது சுகாசனமாகிறது என்று பதஞ்சலி யோகம் கூறுகிறது. ஸ்திரமாக உட்காருவதற்கு சுகாசனமே மிகவும் சிறந்தது. மணிக்கணக்கில் கடவுள் வழிபாடுகளில் பஜனை, தியான சமாதி(ஆழ்நிலை தியானம்) ஆகியவை செய்யும்போது சுகாசனத்தில் அமர்வது சுலபமாகிறது. இதில் தேகம்,மனம்,பிராணன்,புலன்கள்,ஆகியவை அதிகம் சோர்வாவதில்லை. சரீரத்தின் கீழ் பகுதியும்,இடுப்பும் நரம்புகளும் உறுதிப்பட்டு பலப்படுகின்றன. முதுகுத்தண்டும் ஆரோக்கியமாகி பலப்படுகிறது. யோகிகளுக்கு சுஷுனா நாடி வழியாக பிராணவாயு சீராக போகும். தியானத்தில் மனம் ஒருமைப்படும். சஞ்சலம் அடையாது.
செய்யும் விதி:
கீழே ஒரு விரிப்பை விரித்துக்கொள்ள வேண்டும். நேராக அமர்ந்து வலது காலின் குதியை இடது தொடையின் மேல் இருக்கும்படி செய்யவேண்டும். இடது காலின் குதிகால் வலது தொடையின் அடியில் செருக வேண்டும். இரண்டு கைகளையும் இரண்டு முழங்கால்களில் வைக்க வேண்டும். சுவாசம் இயல்பாய் போய்க்கொண்டிருக்க வேண்டும். முதுகுத்தண்டும், கழுத்து, தலையும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். கண் பார்வை மூக்கு நுனியை பார்க்க வேண்டும். சரீரத்தை மிகவும் விறைப்பாக வைக்க வேண்டாம். சோர்வாக இருந்தால் கால்களை மாற்றி அமர்ந்து கொள்ளலாம்.
பூஜை, தியானம், போஜனம்  ஆகிய சந்தர்ப்பங்களில் இந்த ஆசனத்தை செய்யலாம். ஐந்து நிமிடத்திலிருந்து மூன்று மணிநேரம் வரை அமர்ந்து இருக்கலாம். ஜபம் செய்யும்போது மூன்று மணிநேரம் வரை காலை மாற்றாமல் சோர்வின்றி அமர முடிந்தால் இந்த ஆசனம் சித்தியாகிவிட்டது என்று யோகிகள் கூறுவார்கள்.
          சரீர ஆசனத்தை முன்னிட்டு இந்த ஆசனத்தை அவ்வளவு நீண்ட நேரம் செய்யத் தேவையில்லை. வசதிக்கு ஏற்றவாறு காலை மாற்றி மாற்றி செய்யலாம். ஆனால் முதுகுப்பகுதி நேராக இருப்பது அவசியம். மிகவும் விறைப்பாக இருக்க வேண்டாம். நாம் சுகமாக அமர்ந்துள்ளோம் என்று மனதை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்.

(தொடரும்)

Tuesday, 19 August 2014

உத்தானபாதாசனம்






உத்தானபாதாசனம்:
கால்கள் இரண்டையும் தூக்குவதே உத்தானபாதாசனம் எனப்படுகிறது. கால்களை தூக்கிவைப்பதே முக்கியம். இதனால் வயிற்றில் இருக்கும் கேஸ் வாயுரூபமாக வெளியேறுகிறது. இடுப்பு பலப்படுகிறது. பசி எடுக்கிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. வயிற்று நரம்புகள் பலப்படுகின்றன. இரைப்பை நன்கு செயல்படும். வயிற்றில் கொழுப்பு இருக்காது. ஹிரனியா வராது. ஆண்,பெண் இருவருக்கும் சரிசமமான பலன் கிடைக்கிறது. இந்த ஆசனத்தை காலையில் எழுந்தவுடன் செய்யலாம். இதனால் கால்களின் ஜாயிண்ட் பகுதியும் நரம்புகளும் இடுப்பும் உறுதி படும். இதில் இருக்கும் அசுத்தங்கள் சிறுநீர் வழியாக வெளியே வரும். தேகத்தின் கீழ் இருக்கும் அங்கங்கள் உறுதியாகும்.
செய்முறை:                      
கீழே ஜமுக்காளத்தில் படுக்கவேண்டும். இரண்டு கைகளையும் தொடைகளின் பக்கம் ஓட்டினார் போல நேராக வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கால்களும்,முழங்கால்,குதி,கால்பெருவிரல் எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்க. மூச்சை இழுத்து அடக்க வேண்டும். மெது-மெதுவாக இரண்டு கால்களையும் சேர்ந்தாற்போல் மேலே தூக்கி கீழே பூமி-விரிப்பிலிருத்து இரண்டு அடி மேல்தூக்கி ஸ்திரமாக வைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரல் மீது பதியவைக்க வேண்டும். எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் மேல் தூக்கி வைக்க வேண்டும். பத்து பதினைந்து நொடிகள் வரை அவசியம் வைக்க வேண்டும். பின்பு மூச்சை விட்டுக்கொண்டு மெதுவாக கால்களை கீழே வைக்க வேண்டும். ஐந்து அல்லது ஏழு முறை கால்களை தூக்கி உத்தான பாதாசனம் செய்தபின் கால்களை மெதுவாக கீழே வைத்தபின் கண்களைமூடி சவாசனம் செய்ய வேண்டும். எவ்வளவு நேரம் இந்த ஆசனம் செய்கிறோமோ அதன் பாதி நேரம் சவாசனத்தில் ஓய்வு எடுக்க வேண்டும்.
          இந்த ஆசனத்தை செய்யும் போது இரண்டு முறை ஒவ்வொரு அடியாக மேலே கொண்டுபோய் இரண்டடி உயரம் வைத்து அப்யாசம் செய்ய வேண்டும். இந்த ஆசனத்தில் இடது கால், வலது கால் மாறி மாறி தூக்கி செய்யலாம். இப்படி சுலபமாக செயலாம்.
          இந்த ஆசனத்தில் மூன்று அல்லது ஐந்து முறை அப்யாசம் செய்யும்போது ஒருநிமிடம் மூச்சை அடக்கி வைத்திருக்கும் வரை இரண்டு கால்களும் மேல் தூக்கி இருக்க வேண்டும். கால்களை மேல்தூக்கி வைத்திருக்கும்போது இரண்டும் சேர்ந்தே இருக்கவேண்டும் என்று கவனத்தில் இருக்க வேண்டும். இரண்டு கால்களையும் மெதுவாக மேல்நோக்கி போகவேண்டியது அவசியம். அப்போது தான் ஆசனத்தின் முழுப்பலனையும் அடையலாம். அதே போல மெதுவாக மந்தகதியுடன் கீழே கொண்டுவருவதும் அவசியம். கால்களில் நடுக்கம் இருக்க கூடாது. மன உறுதி அவசியம். கால்களை மேல்தூக்கி வைத்திருக்கும் நேரத்தை அதிகப்படுத்தி அப்யாசம் செய்ய வேண்டும்.


                           தொடரும்

Monday, 18 August 2014

மத்ஸ்யாசனம்


மத்ஸ்யாசனம்:
மத்ஸ்யம் என்றால் மீன். மத்ஸ்யாசனம் போட்டு தண்ணீரில்(மல்லாக்க) நீந்தலாம். பத்மாசனத்தில் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இந்த ஆசனத்தில் கிடைக்கும். கழுத்து பகுதியில் கொழுப்பு சேராமல் இருக்கும். மார்பு நுரையீரல் பலப்படும். ஜலதோஷம்,மூச்சிரைப்பு, டான்சில் எல்லாம் இருக்காது. இந்த ஆசனத்தில் கழுத்து அழுத்தப்படுவதால் தாயிராட்,பைராதைராய்ட் வராமல் தடுக்கும். கேன்சரும் தடுக்கப்படும். அனாவசிய சுரப்பிகள் சுரக்காமல் உடலில் அசுத்தம் சேராமல் இருக்கும். வயிற்றுக்கோளாறுகள் நீங்கும். சிறுகுடல், பெருங்குடல் வியாதிகள் குணமாகும். ஆசனவாய் குழாய் நன்கு செயல்படுவதால் மலச்சிக்கல் நீங்கும். அபான வாயு சீராகும்.
செய்முறை:
தூய காற்றோட்டமான இடத்தில் கீழே விரிப்பு விரித்து அமரவேண்டும். வலது பாதம் இடது தொடையிலும், இடது பாதம் வலது தொடை மீதும் வைக்கவேண்டும். நன்கு ஒட்டினாற்போல் இருக்கவேண்டும். இரண்டு பாதங்களின் குதிகால்கள் நாபியின் நேராக அடிவயிற்றை ஒட்டி இருக்கவேண்டும். பின் மெதுவாக முதுகை கீழே வைத்து படுக்கவேண்டும். படக்கென்று படுக்க கூடாது. இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தலைக்கு கீழே வைத்துக்கொள்க. தலையிலும் முழங்காலிலும் தேகத்தின் முழுப்பாரம் இருக்க தேகத்தின் நடுப்பகுதியை மேலே உயர்த்திக்கொள்க. இடுப்புப்பகுதி பூமியை தொடக்கூடாது. வயிற்றையும் மேல்நோக்கி எழச்செய்யவேண்டும்.
          மத்ஸ்யாசனத்தை தினமும் ஒன்றிலிருந்து மூன்று நிமிடம் வரை செய்யலாம். மெதுவாக நேரத்தை கூட்டிக்கொண்டு போகலாம். பின்பு பத்து பதினைந்து நிமிடம் வரை செய்யலாம். பத்து பதினைந்து நிமிடம் வரை செய்தால் நோய் குணமாவதற்கு நல்ல பலன் கிடைக்கும். இதை சர்வாங்காசனத்திற்கு பின் செய்தால் மிகவும் நல்லது. அல்லது ஹலாசனமும் கர்ணபீடாசனமும் செய்பவர்கள் மத்ஸ்யாசனம் அவசியம் செய்யலாம்.  சிலர் இரண்டு கைகளையும் தலைக்கு கீழ் வைத்துக்கொள்ளாமல் இரண்டு கைகளால் கால் பெருவிரல்களை பிடித்துக்கொள்வார்கள். மத்ஸ்யாசனத்தில் இதுவும் ஒரு வகையாகும். இந்த ஆசனத்தினால் பூஜங்களிலிருந்து கைகள் வரை மிகவும் உறுதியாகும். மத்ஸ்யாசனத்திற்கு பின்பு சவாசனம் அவசியம் செய்ய வேண்டும். சவாசனத்தில் உடல் அங்கங்களை தளர்வாக விட்டு கண்களை மூடி மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் இறுக்கம் போகும்.

          தடிமனான சரீரம் உள்ளவர்கள் பத்மாசனம் போட முடியாது. வெறும் சம்மணமிட்டு இந்த ஆசனத்தை பழக வேண்டும். ஒருமாதம் நன்கு பழகியபின் பத்மாசனம் போடவரும். ஆரம்பத்தில் இதை பதினைந்து நொடிகள் செய்யலாம். பலநாள் பயிற்சிக்கு பின்   பத்து நிமிடம் செய்யலாம். இந்த ஆசனத்தில் சுவாசம் இயல்பாக போகவேண்டும். பிராணாயாமம் தேவையில்லை.

தொடரும்

Tuesday, 5 August 2014

சவாசனம்

சவாசனம்

சவம் போல சகல அங்கங்களும் அசைவற்று கிடப்பது தான் சவாசனம். இதை சரியான முறையில் செய்தால் சரீரத்திற்க்கு உறக்கத்தை கொடுத்து ஆரோக்கியம் பெறுவதை விட அதிக பலன்களை தரக்கூடியது. தூக்கமின்மையால் மனிதன் அவதிப்படுகிறான். சரீரமும் மனதும் சோர்வடையும்போது இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். யோகசாஸ்திரம் இதை உயர்வாகவும், லாபகரமாகவும் கூறி இருக்கிறது.
          சாந்தமாக படுத்திருந்து என்ன பலன் கிடைக்கப்போகிறது என்ற கேள்வி எழலாம். ஆனால் மனிதன் விழித்திருக்கும்போது பல வேலைகளை செய்கிறான். நடக்கும்போது, ஓடும்போது, உடற்பயிற்சியாகிறது. படிப்பது, யோசிப்பது, அலுவலகவேலை,வியாபாரம்,தொழில் முதலிய துறைகளில் மன
அழுத்தம் ஏற்படுகிறது. நரம்புகளில் இறுக்கம்,உணர்ச்சிகளில் வேகம் உண்டாகிறது. உடம்பு உஷ்ணம் ஆகிறது. ரத்தக்கொதிப்பு வருகிறது. சவாசனத்தால் நாடி நரம்புகளில் இறுக்கம், நரம்புதளர்ச்சி,அழிந்து உடம்பில் உஷ்ணம் குறைகிறது. இதயம் சீராக துடித்து ரத்த சுத்தி ஆகிறது.
          எலும்பு முறிவு ஏற்பட்டால் மருத்துவர் சொல்லும் ஆலோசனை என்னவென்றால் அந்த பகுதியை ஆடாமல் அசையாமல் வைத்திருப்பது அவசியம். ரத்தம் சீராக எல்லா அவயங்களிலும் பாய வேண்டும். அதனால் ஆசனம் செய்பவர்கள் சவாசனத்திற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
           சவாசனத்தால் மனம் அமைதி அடைகிறது. சவாசனத்திற்க்கு பின் சரீரத்திற்க்கு அதிக சக்தி கிடைக்கிறது.இந்த ஆசனம் செய்யும்போது சீராக மூச்சு பயிற்சி செய்தால் நுரையீரலுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். இதய நோயிலிருந்து விடுபட இந்த ஆசனம் நன்கு உதவி செய்கிறது. ராமபானம் போல செயல்படுகிறது என்று கூறுகிறார்கள்.
செய்முறை:
கீழே ஜமுக்காளம் விரித்து அதில் நேராக மல்லாக்க படுக்க வேண்டும். இரண்டு கைகளையும் இடுப்புடன் சேர்த்து வைக்க வேண்டும். விரல்களை சேர்க்காமல் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொண்டு உடம்பு முழுவதையும் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதால் இவ்வாறு நினைக்க வேண்டும். எனது கை,கால்கள்,விரல்கள், முழங்கால்கள், தொடைகள்,கழுத்து,வயிறு எல்லாம் செயலற்று மரத்துப்போனது போல ஆகிவிட்டன. அங்கமெல்லாம் லூசாகிவிட்டன. தேகத்தில் எங்கும் இறுக்கமில்லை. நான் மிகவும் அமைதியாக இருக்கிறேன். (அச்சமயம் கவலைகளை மறந்து விட வேண்டும்) இயற்கை அன்னை மடியில் ஆனந்தமாக கிடக்கிறேன் என்று நினைக்க வேண்டும். மேலே,கீழே எங்கும் சாந்தி நிலவுகிறது. நிர்மலமாக தூய காற்றை சுவாசித்து எங்கும் தூய்மையை உணரவேண்டும். மொத்தத்தில் சுத்தமாக யோசிப்பதை விட்டுவிடுங்கள். இதனால் பயம்,கோபம், வருத்தம் போன்ற உணர்ச்சிகள் மறைந்து போகும். மனதில் அபூர்வ அமைதி வந்துவிடும். மனதை காலியாக வைத்துக்கொண்டால் தலைபாரம்,தலைவலி எல்லாம் காணாமல் போகும்.
          உறக்கநிலையில் மனம் சிந்திப்பதில்லை. அதனால் மனதுக்கும் தேகத்துக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. சவாசனம் செய்யும்போது மனதை லேசாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதில் சிந்தனைகள் வருவதை தடுப்பது இயலாத காரியம் தான். அவ்வாறு இருப்பினும் தியானத்தில் இருப்பது போல பாவிக்க வேண்டும். தொடர்ந்து அப்யாசம் செய்தால் மனம் அமைதியடையும்.
          சில சமயம் சவாசனத்தில் தூங்கிவிடுவார்கள். அதனால் தீயபலன் எதுவும் இல்லையென்றாலும் நல்ல ஆரோக்கியம் கிடைப்பது போல பாவனை செய்து தேகத்தையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளவேண்டும். வெட்டவெளியிலிருந்து பிராணசக்தி நமக்கு கிடைப்பது போல நினைக்க வேண்டும்.
          சவாசனம் என்பது சோம்பலாக படுத்துக்கொண்டிருப்பது அல்ல. சரீரத்தை லேசாக்கிக்கொண்டு மனதையும் லேசாக்கிக்கொள்ளவேண்டும்.  அல்லது மனம் கனத்திருக்க கூடாது. இந்த ஆசனம் மூளையின் உஷ்ணத்தை தணித்து அழுத்தத்தை குறைத்து நன்கு செயல்பட செய்கிறது. அதனால் ரத்தத்திற்க்கு நல்ல ஆக்ஸிஜன் கிடைக்கிறது.
          நீங்கள் எந்த ஆசனம் செய்து முடித்தாலும் அதன் பாதிநேரம் சவாசனம் செய்தால் நன்மை கிடைக்கும். மூன்று நிமிடம் குறைந்தபட்சம் செய்ய வேண்டும். வேறு ஆசனம் செய்து முடித்தபின் பதினைந்து நிமிடம் கூட செய்யலாம். இந்த ஆசனத்தை பிரதானமாக வைத்து செய்யும்போது மன அழுத்தம், இதய நோய் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற அரைமணிநேரம் அல்லது அதற்கும் அதிகமாக செய்யலாம். மேலும் தினமும் ஒரு நாளில் இரண்டு, மூன்று முறை அல்லது பல முறையும் செய்யலாம்.
          சோர்வு, படபடப்பு, பயம், சோகம், பொறாமை, துவேஷம் ஆகியவற்றாலும், நரம்பு தளர்ச்சியாலும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தால் உடல் உஷ்ணம் தணியும். மனமும் அமைதி அடையும். மேற்சொன்ன துர் குணங்களும் தீமைகளும் சீராக மூச்சு விடும்போது அல்லது இதயதுடிப்புடன் சேர்த்து கணக்கு வைத்து சுவாசப்பயிற்சி செய்யும்போது ஒழிந்து போகும். சவாசனத்தில் கால் பாதத்திலிருந்து தலையில் மூளை வரை செயலற்று உணர்வற்று இருப்பதை உணரவேண்டும். சுவாசத்தை சீராக்கினால் மனதில் குழப்பங்கள் நீங்கும். மூன்று வாரத்திற்கு பின் சுவாசத்தின் நல்ல பலன் கிடைக்கும். எதையும் அவசரமாக படபடப்புடன் செய்யக்கூடாது. ஆசனங்களை ஆர்வமுடனும்,சிரத்தை, பக்தியுடனும் செய்யவேண்டும்.
(தொடரும்)        


Monday, 4 August 2014

கர்ண பீடாசனம்

கர்ண பீடாசனம்

கர்ணபீடாசனத்தில் இரண்டு முழங்கால்களால் இரண்டு காதுகளையும் சேர்த்து அமுக்கி வைக்க வேண்டும். அதனால் இதற்கு கர்ணபீடாசனம் என்ற பெயர் வந்தது. இதற்கு முன் சொன்ன ஆசனங்களின் பலன் இதர்க்கும் உண்டு. கூடுதலாக இருமல், டான்ஸில்,ஜலதோஷம்,தொண்டைக்கட்டி,மூச்சு இளைப்பு வராது. மேலும் காது வலி,காதில் சீல்  வடிதல் ஆகிய நோய்கள் குணமாகும்.
செய்முறை:
கால்களை சற்று பரத்தி வைத்து படுக்க வேண்டும். இடுப்புக்கு மேலே இரண்டு கால்களை தூக்கியபின் தலைக்கு பின் கொண்டுபோகவேண்டும். இரண்டு பாதங்களை பூமியில் வைக்க வேண்டும். கைகளை நேராக கீழே வைக்க வேண்டும். அதன்பின் முழங்கால்களை மெதுவாக தலைப்பக்கம் மடக்கவேண்டும்.அதன் பின் தோள்களுடன் சேர்க்க வேண்டும். காதில் அழுத்தம் கொடுத்து பூமியை தொட வேண்டும். முழங்கால்களில் இருந்து பாதம் வரை (தலையிலிருந்து) ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். பின்பு மெதுவாக சகஜநிலைக்கு வரவேண்டும். இதை மூன்று முறை செய்யலாம். ஆரம்பத்தில் இந்த ஆசனத்தில் இரண்டு கைகளால் இடுப்பை பிடித்துக்கொள்வதால் தவறு ஏதுமில்லை. ஆரம்பத்தில் பத்து அல்லது பதினைந்து நொடிகள் வரை செய்யலாம். ஐந்து முறை செய்தபின் அபயாசத்தால் நேரத்தை அதிகப்படுத்தி இரண்டு நிமிடம் செய்யலாம்.
          இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் படக்கென்று வேகமாக கால்களை உயர்த்தி பின்னுக்கு கொண்டுபோகக்கூடாது. அதேபோல் பின்னாலிருந்து எடுத்து கால்களை கீழே வைக்க கூடாது. அதனால் தீய பலன் ஏற்படும். இடுப்பில் வலி ஏற்படும். அல்லது இடுப்பு பிடித்துக்கொள்ளும். இதுவும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல. முறையாக சர்வாங்காசனம், ஹலாசனம்,அதன்பின் கர்ணபீடாசனம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.    
 (தொடரும்)


Tuesday, 22 July 2014

ஹலாசனம்

ஹலாசனம் 

ஹலாசனம் கலப்பையை நினைவு படுத்தும் ஆசனமாகும். முதுகுதண்டின் இறுக்கத்தை போக்கும். மார்பும் முதுக்கும் பலப்படும். சுத்த இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். வாயு பிடிப்பு ஏற்படாது. வயிற்று உபாதைகள் நீங்கும். சிறுகுடல், பெருகுடல் ஈரல் ஆகியவற்றில் அழுத்தம் ஏற்படுவதால் நன்கு செரிமானம் ஏற்பட்டு மலச்சிக்கல் நீங்கும். தாய்ராய்ட் பைராதாய்ராய்ட் முதலிய உறுப்புகள் பலப்பட்டு மனதையும் அறிவையும்(மூளை சுறுசுறுப்பு)ஆரோக்கியமாக வைக்கும். குடல் இறக்கம் வராமல் தடுக்கும். வயிற்றிலும் இடுப்பிலும் தேவையில்லாத கொழுப்புக்கள் நீங்கி மெலிதாக்கும். சர்க்கரை வியாதி தொலையும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
செய்யும் விதி   
கீழே ஜமுக்காளம் விரித்து நேராக படுக்க வேண்டும். முழங்கால் குதிகால் தொடை எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் தொடைகளை ஒட்டி வைக்க வேண்டும். இரண்டு கைகளையும் பூமியில் ஸ்திரமாக வைத்துக்கொண்டு கால்களை அதே சேர்த்த நிலையில் மெதுவாக தூக்கி இடுப்பை 90 டிகிரி கோணத்தில் கொண்டு போனவுடன் கால்களை தலைக்கு முன் நேராக கொண்டுபோய் கால்பெருவிரல் பூமியில் பதியும்படி வைக்க வேண்டும். முழங்காலை மடக்காமல் நேராக வைக்க வேண்டும். முகவாய்க்கட்டை கழுத்துடன் ஒட்டி இருக்கவேண்டும். சிறிது நேரம் அதே நிலையில் இருக்க வேண்டும்.பின்பு கால்களை தூக்கி முதலில் இருந்தவாறு படுத்த நிலைக்கு வர வேண்டும். சற்று ஓய்வு எடுத்த பின் முடிந்த வரை மீண்டும் மீண்டும் இந்த ஆசனத்தை செய்வது நல்ல பலனை அளிக்கும். ஆரம்பத்தில் இதை 20 நொடிகள் வரை செய்யலாம். வாரத்திற்க்கு ஒருமுறை நேரத்தை கூட்டிக்கொண்டு போகலாம். பின் நான்கு நிமிடம் வரை செய்யலாம். அவசரப்பட்டு கால்களை எடுத்து தூக்குவது கூடாது. நரம்புகள் பிசகி விடும். ஆசனம் செய்யும்போது கைகளை இடுப்பில் வைத்துக்கொள்ளலாம். அதனால் சுலபமாக இந்த ஆசனம் வரும். மற்ற ஆசனங்களுடன் சேர்த்து செய்யும்போது நான்கு நிமிடத்திற்க்கு அதிகமாக இதை செய்யவேண்டாம். பெண்கள் அதிகநேரம் இதை செய்யவேண்டாம்.
          இந்த ஆசனத்தில் இரு கைகளையும் பின்னால் கொண்டுபோய் கால் பெருவிரல்களை மடக்கலாம். ஹலாசனத்துடன் சர்ப்பாசனம், சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை செய்யலாம். இந்த ஆசனத்தை உயர் இரத்த அழுத்தம் இதய நோய் உள்ளவர்கள் செய்யக்கூடாது. இந்த ஆசனத்தை சிறிது நேரம் செய்தாலும் சுவாசத்தை வெளியேற்றிவிட்டு வயிற்றை ஒட்டவைத்தும் ஆசனவாயை சுருக்கி செய்தால் நன்றாக பசியெடுக்கும். இது முடிந்தவுடன் சவாசனம் அவசியம் செய்யவேண்டும். அதனால் சுத்த இரத்தம் சீராக சகல அங்கங்களில் ஓடும்.
(தொடரும்)