தேவர்கள் கண்காணாத இடத்திற்கு சென்று மறைந்துவிட்டதும் பலி சக்கரவர்த்தி தன்
அசுரப்படை பரிவாரங்களோடு சொர்க்கபுரி அமராவதியை அடைந்து ஆட்சியை
பிடித்தான்.மூவுலகிலும் அதிகாரம் செய்து ஆட்சி புரிய ஆரம்பித்தான்.பிருகு வம்ச
பிராமணர்களும் சுக்கிரச்சரியாரும் அகிலத்தையும் வென்ற சிஷ்யன் பலிராஜா மேலும்
வளர்ச்சியடைய அன்பு மேலிட்டு நூறு யாகங்கள் செய்தார்கள்.அதனால் அரசனின் கீர்த்தி
எட்டுத்திக்கிலும் பரவியது.
தேவர்கள் ஓடி ஒளிந்ததும் அரக்கர்களின்
சாம்ராஜ்யம் பிரமாதமாக நடந்தது.இதை அறிந்து தேவமாதம் மிகவும்
வருதமுற்றாள்.நெடுநாள் தவமிருந்து ஆசிரமத்திற்கு திரும்பிய தன் கணவர் கச்யபமுனிவரை
வரவேற்று உபசரணை செய்தாள்.அவள் வாட்டமுடன் இருப்பதை கண்டு முனிவர் எப்போதும் நமது
ஆசிரமத்தை அலங்கரித்து வைத்திருப்பாய்.எங்கும் உற்சாகமும் சந்தோசமும் இல்லையே.காரணம்
என்னவென்று அறிய விரும்புகிறேன்.வீட்டிற்கு வந்த விருந்தாளியை உபசரிக்க தவறி
விட்டாயா?அல்லது பூஜிக்கத்தகுந்த பிராமணர்களை அலட்சியபடுத்தி
விட்டாயா?அறம்,பொருள், இன்பம்,இந்த மூன்றும் இல்லறத்தில் இருப்பவனுக்கு சகல
சௌக்கியங்களை அளித்து இறுதியில் வீடு பேரு அடைய வழி செய்கின்றன.நீ ஏன் சோகமாக
இருக்கிறாய்? என்று கேட்டார்.
தேவர்களை பெற்ற தேவமாதா
அதிதி கூறினால்: யாக பூஜை நடத்தும் பிராமணர்கள் பசுக்கள் அறம் பொருள்,அனைத்தும்
சௌக்கியமாக தான் உள்ளன.நான் தவறாமல் அதிதி பூஜை,தேவபூஜை செய்து கொண்டு தான்
இருக்கிறேன்.எவரும் நமது ஆசிரமத்தை விட்டு பசியோடு சென்றதில்லை.பிரஜாபதியான
நீங்கள் தான் பெற்ற மக்களிடம் பேதமில்லாமல் பாரபட்சமின்றி நடந்து
கொள்கிறீர்கள்.இதை நான் அறிவேன்.தேவர்களும் அசுரர்களும் உங்கள் மக்கள் தான்
இருப்பினும் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால் அசுரர்கள் தேவர்களான எம் மக்களிடம்
ராஜ்ஜியம்,புகழ்,ஐஸ்வர்யம் சம்பத்துகள் அனைத்தையும் பறித்துக்கொண்டு சொர்க்கபுரி
அமராவதியை ஆட்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.அமராவதி நம் கைக்கு
வரவேண்டும்.அசுரர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும்.தாங்கள் அனைவருக்கும் எது
நன்மையோ அதை செய்து அருளவேண்டும்.நான் என்மக்களோடு சேர்ந்து துன்பத்தை அனுபவித்து
கொண்டு இருக்கிறேன்.என்றாள்.
கச்யபமுனிவர் கூறினார்: உன்
துக்கம் தீர வேண்டுமென்றால் நீ ஒரு விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.பங்குனிமாதம்
சுக்கில பட்சம் பனிரெண்டு நாள் பயோவிரதம் இருக்கவேண்டும்.அந்த பனிரெண்டு நாள்
பகவானுக்கு நைவேத்தியம் செய்த பாலை மட்டும் உண்ணவேண்டும்.வேதமூர்த்தியாக இருக்கும்
பகவானை சூரியனில் அக்னியில் ஜலத்தில் வைத்து பூசிக்கவேண்டும்.பால் பஞ்சாமிர்தம்
அபிசேகம் செய்து பலவித மலர்களாலும் வஸ்திர ஆபரணங்களாலும் பூஜை செய்ய
வேண்டும்.பால்பாயாச அன்னம் நிவேதினம் செய்து அதையே அக்னியில் ஹோமம் செய்ய
வேண்டும்.விரதம் முடித்த நாளன்று பிராமணர்களை அழைத்து பால் பாயாசம் அறுசுவை உணவு
அளித்து சக்திக்கு தக்கவாறு தான தர்மங்கள் செய்ய வேண்டும். பிரம்ம தேவரால்
உபதேசிக்கப்பட்ட இந்த விரதத்தை நான் உனக்கு உபதேசித்தேன்.மனம்,வாக்கு,காயம்
ஒன்றுபட்டு ஒரே சிந்தனையுடன் சர்வாத்மாவான நாராயணனை வழிபடுவாயாக.
அதிதி தேவியும் மிகுந்த பக்தி
சிரத்தையுடன் பகவானை வழிபட்டாள்.இறுதியில் எந்த குறையும் இல்லாது விரதத்தை
முடித்தாள்.பகவானை துதி செய்து தன் அந்தராத்மாவில் பகவானை நிறுத்தினாள். உடனே
எங்கும் நிறைந்த பரமாத்மா விஷ்ணு பிரத்யக்ஷமானார்.அவர் அதிதியை நோக்கி
கூறினார்.”தேவி உன் விருப்பத்தை யாம் அறிவோம்.உன் மக்கள் சொர்க்கபுரி ராஜ்யத்தை
திரும்பபெற வேண்டும். அசுரர்கள் வீழ்ச்சியடைய வேண்டும்.என்று
விரும்புகிறாய்.தற்சமயம் யுத்தம் செய்து அவர்களை வெல்ல முடியாது.ஏனெனில் கடவுளும்
விதியும் பிராமணரும் பலிராஜாவுக்கு அனுகூலமாக இருக்கிறார்கள்.அதனால் வேறு ஒரு
உபாயத்தால் காரியத்தை சாதிக்கவேண்டும்.நீ செய்த விஷ்ணுபகவானின் ஆராதனை வீண்
போககூடாது அல்லவா.அதற்காக உனக்கு மகனாக பிறந்து காரியத்தை சாதிக்கப்போகிறேன்”
என்று கூறி மறைந்தார்
.(தொடரும்)