பரசுராமர் தந்தையின் யோக
சக்தியையும், தபோபலத்தையும் அறிந்திருந்தார். அதனால் அவர்
கூறினார். “தந்தையே என் தாயும்,அண்ணன்களும் உயிர் பெற்று எழ வேண்டும். நான் வெட்டி
கொலை செய்த விஷயம் அவர்கள் நினைவில் இருக்க கூடாது.” இதை கேட்ட ஜமதக்னி முனிவர்
அப்படியே ஆகட்டும் என்றார். அக்கணமே தாயும்,அண்ணன்களும் தூங்கி எழுந்தவர்கள்
போல உயிர் பெற்று எழுந்தார்கள். பரசுராமர் தன் தந்தையின் யோக சக்தியை அறிந்தே
அவ்வாறு கொலை செய்தார்.
மாஹிஸ்மதிபுரியில் ஹைஹைய ராஜ வம்ஸத்து
ராஜகுமாரர்கள் தன் தந்தை பரசுராமரால் கொல்லப்பட்டதை நினைத்து நினைத்து மனம்
குமுறிக்கொண்டு இருந்தனர். பழிக்கு பழி வாங்க துடித்தனர். ஒரு நாள் பரசுராமர் தன்
அண்ணன்களோடு சேர்ந்து காட்டிற்கு சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து
கார்த்தவீரியன் புதல்வர்கள் ஆசிரமத்திற்கு வந்தனர். ஜமதக்னி மகரிஷி அக்னி சாலையில்
ஹோமம் வளர்த்து இறைவனை நினைத்து தியானத்தில் அமர்ந்திருந்தார். வெளி உலக
நினைவின்றி இறைவனோடு ஐக்கியமாகி இருந்தார். ஒரு பாவமும் அறியாத ஜமதக்னி முனிவரை
அந்த பாவி ராஜகுமாரர்கள் வாளால் வெட்டினர். ரேணுகாதேவி அழுதுகொண்டே கெஞ்சி
தடுத்தாலும் அவரது வெட்டுண்ட தலையை ராஜகுமாரர்கள் எடுத்து சென்றனர்.
ரேணுகாதேவி தலையிலும் மார்பிலும்
அடித்துக்கொண்டு கதறி அழுதாள். தாயின் அழுகுரலால் காடே அதிர்ந்தது. அதை கேட்டு
பரசுராமர் விரைந்து ஓடோடி வந்தார். ஆசிரமத்தில் தன் தந்தை தலையில்லாமல் வெட்டுண்டு
கிடப்பதை பார்த்தார். அந்த காட்சியை கண்டு பொறுக்காமல் மனம் கலங்கி எல்லை கடந்த
சோகத்தால் மயக்கமடைந்தார். மயக்கம் தெளிந்து “தந்தையே தாங்கள் உயர்ந்த உள்ளம்
படைத்த மகாத்மாவாக இருந்தீர்களே! தவத்தில் ஆழ்ந்து தர்மத்தை கடைபிடித்து
எவருக்கும் தீங்கு நினைக்காத சாந்தமூர்த்தியாக இருந்தவருக்கு இந்த கதி ஏன்
வரவேண்டும்? என்று புலம்பிவிட்டு கார்த்தவீரியனின் மகன்களை
நினைத்து வெகுண்டார். அண்ணன்களிடம் தன் தந்தையின் உடலை ஒப்படைத்து விட்டு கையில்
கோடாரி எடுத்து க்ஷத்திரியர்களை சம்ஹாரம் செய்ய விரைந்தார்.
மாஹிஸ்மதி நகரம் சென்று
கார்த்தவீரியனின் புதல்வர்களோடு போர் செய்து அவர்கள் தலைகளை வெட்டி வீழ்த்தினார்.
நகரத்தின் மையப்பகுதியில் தலைகளால் குன்று
போல உருவாக்கினார். பிராமணர்களை கொன்ற அரச குல க்ஷத்திரியர்களின் நாடு
மங்களமிழந்து காணப்பட்டது. ரத்த ஆறு
பெருக்கெடுத்து ஓடியது. அதை கண்டு நல்லவர்களுக்கு துரோகமிழைத்த க்ஷத்திரியர்களின்
நெஞ்சம் நடுங்கியது. அந்த நகரத்தில் இருந்த ராஜாவம்ச க்ஷத்திரியர்களை
அழித்தபின்பும் பரசுராமருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. தன் தந்தைக்கு செய்த துரோகத்தை
நினைத்து அப்பாவி மக்களையும் ஒரு பாவமும் செய்யாத பிராமணர்களையும் கொடுமை
படுத்தும் க்ஷத்திரிய அரசர்களையும் இருபத்தி ஓர் முறை அழித்தார். சாமந்த பஞ்சகம்
என்ற குருக்ஷேத்திர தலத்தில் ஐந்து குளங்களை ரத்தத்தால் நிரப்பினார்.
பரசுராமர் தன் தந்தையின் தலையை கொண்டு
வந்து உடலோடு சேர்த்தார். யாகங்களை வளர்த்து ஆத்மசொரூபனான பரமனை வழிபட்டார்.
யாகங்கள் முடிந்தவுடன் தான் வெற்றிகண்ட நாடு நகரங்களையும் நிலங்களையும் தானமாக
வழங்கினார். தென்கிழக்கு பூமியை ரித்விஜர்களுக்கும்,கச்யபருக்கு நடுவில் இருக்கும்
நிலத்தையும் ஆரிய வர்த்த தேசங்களை உபதிரஷ்டா ரிஷிகளுக்கும், மற்ற திசைகளை சபாநாயகர்களுக்கும்
தானமாக வழங்கிவிட்டு பிரம்ம நதி சரஸ்வதி நதியில் யாகம் முடித்து ஸ்னானம் செய்து
பாவங்கள் கழுவப்பட்டு மேகங்கள் விலகிவிட்ட சூரியன் போல பிரகாசித்தார்.
ஜமதக்னி முனிவர் தெய்வ சரீரம்
பெற்று உயிர்த்தெழுந்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்டவர், உயிருக்கு உயிராக
நேசிக்கப்பட்டவர் வானகத்தில் சப்தரிஷி மண்டலத்தில் ஒருவராக வணங்கப்படுகிறார். அடுத்து வரும்
சிருஷ்டி காலத்தில் சப்தரிஷிகளில் ஒருவராக இருந்து வேத தர்மங்களை காப்பாற்றுவார்.
சீதாதேவியின் சுயம்வரத்தில்
ஸ்ரீராமர் சிவதனுசை முறித்து சீதையை மணந்தார்.அதனால் கோபமடைந்த பரசுராமர் தசரத
மகன் ராமனை நோக்கி கூறினார். “எனது வில்லை வளைத்து அம்பை பொருத்தி உன் பலத்தை
வெளிப்படுத்துவாய்” என்றார். ஸ்ரீ ராமர் பரசுராமர் சொற்படி அவர் வில்லை வளைத்து
அம்பை பொருத்தி அந்த அம்பை எங்கு விடவேண்டும்?( ஏனெனில் அம்பை பொருத்தியவுடன் அதை
வீணாக்கலாகாது என்பதால்) பரசுராமரும் தம்முடைய பரலோகம் செல்லும் வழியை அடைக்குமாறு
கேட்டுக்கொண்டார். அதனால் பரசுராமரின் பரலோகம் செல்லும் வழியை அடைத்து விட்டார்.
அதனால் பரசுராமர் பூலோகத்தில் மகேந்திர மலையில் தவமியற்றிக்கொண்டு இருக்கிறார்.
சித்த கந்தர்வ தேவர்கள் இன்னும் அவர்
புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார்கள். ஸ்ரீ விஷ்ணு பகவானின் அவதாரமாக பரசுராமர்
பிறந்து நல்லவர்களை காத்து தீய அசுர
க்ஷத்திரியர்களை சம்ஹாரம் செய்தார். பரசுராமர் தன் தந்தையிடம் கொண்ட பக்தி
உலகில் பிரசித்தி பெற்றது.