ஹிரணியகசிபு கூறினான்.நீங்கள் இவனை மீண்டும் குருகுலம்
அழைத்துச்சென்று துறவறம் விஷயத்தை தவிர்த்து செல்வச்சிறப்பு பெற்று இல்லறத்தில்
வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். அறம் பொருள் இன்பம் இவற்றின் நன்மைகளை
எடுத்துரைத்து பாடம் எடுங்கள்.” அப்படியே ஆகட்டும் என்று பிரகலாதனை குருகுலத்திற்க்கு
அழைத்து வந்தனர். மீண்டும் கணிதம் அரசியல் சட்டம் பற்றி பாடம் கற்று தந்தனர்.
ஒரு வேலை
நிமித்தமாக குருமார்கள் வெளிதேசம் சென்றிருந்தபோது மாணவர்கள் அனைவரும் பிரகலாதனை
விளையாட அழைத்தனர். ஆனால் பிரகலாதன் அவர்களை அமரச்செய்து ஆன்மீக சொற்பொழிவு
நடத்தினான்.ஜனன மரண துக்கங்களை எடுத்து சொல்லி உபதேசம் செய்தான். நன்மை தீமை
அறியாத பாலகர்களாக இருந்ததால் அவன் உபதேசங்களை சிரத்தையுடன் கேட்டனர்.
பிரகலாதன்
கூறினான்.-அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது.
பிறவாமை என்ற மோட்சத்தை அடைவதற்காகவே மானிடபிறவி
கிடைக்கிறது. பகவான் அனைத்து பிராணிகளுக்குள் ஆத்மாவாக, நண்பனாக, அன்பனாக இருக்கிறார். மரணமும்
நோயும் எப்போது வரும் என்று யாருக்கு தெரியும்? ஆதலால் சிறுவயதிலிருந்தே ஆன்மீக
விஷயங்களில் நாட்டம் கொண்டு ஹரியின் திருநாமங்களை ஜபித்து வழிபட வேண்டும். இகலோக
சுகக்ஷேமங்கள் அடைவதற்க்கு தனியாக சிரமமேடுத்து ஏன் முயல வேண்டும்? அவையெல்லாம் தாமாகவே வந்து
சேரும். மனிதன் வீணாக ஏன் தன்னை பற்றி கவலை படவேண்டும்? தன்னை அறியாமல் கணப்பொழுதில்
ஆயுள் முடிந்து விடுகிறது. அதற்கு நமது ஆத்மாவை உயர் நிலைக்கு கொண்டு போகவேண்டாமா?
குழந்தை பருவத்தில் ஓடி ஆடி
விளையாடுவதில் நாட்கள் கழிந்து விடுகின்றன. வாலிப வயதில் செல்வம் திரட்டுவதில்
மனைவிமக்களை பேணுவதில் காலம் கழிந்து விடுகிறது. அதிலும் இரவுப்பொழுது வீணாக
கழிந்து விடுகிறது. வயோதிகம் வந்தவுடன் உடல் தளர்வடைந்து விடுகிறது. நோய்வாய்ப்பட்டு
விடுகிறது. அந்த நிலையில் எந்த காரியமும் சாதிக்கமுடியாது. பகவானை வழிபட முடியாது.
வாலிப வயதில் அனைவரும் செல்வத்திற்கு பின்னால் ஓடுகிறார்கள். பெரிய பெரிய ஆசைகளையும்
லட்சியங்களையும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். தன் மகள்,சகோதரி திருமணவாழ்வு சந்தோஷமாக
இருக்க வேண்டும் என்ற கவலையில் தன்னை பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
பகவானை
மகிழ்விக்க பக்தி செய்வது பெரிய கடினமான காரியமல்ல. தான் செய்த கர்மங்கள்
அனைத்தையும் பகவானுக்கு சமர்ப்பணம் செய்து விட்டால் போதும். கர்ம வினைகள்
அனைத்தும் தீர்ந்து போகும்.அசுரர்களாகிய நீங்கள் அசுர குணங்களை விட்டோழித்து
இரக்கம்,அன்பு முதலிய தெய்வ குணங்களுடன் இருங்கள். தேவர்கள்
விஷ்ணுவை ஆராதித்து அமரர்கள் ஆகிவிட்டார்கள். அவ்வாறு நாமும் ஆராதித்தால் எல்லா
மேன்மைகளும் அடைவோம். அவரை ஆராதிக்க மகிழ்விக்க யக்ஞம்,தானம் தவம் விரதங்கள் எல்லாம்
போதுமானதல்ல. பக்தி இருந்தால் மட்டும் போதும்.
(தொடரும்)