Thursday, 18 July 2013

நரசிம்மாவதாரம் 4

 
ஹிரணியகசிபுவுக்கு நான்கு புதல்வர்கள் இருந்தனர்.சம்ஹ்லாது,அனுஹலாது,ஹிலாது,பிரகலாது என்ற பெயர் பெற்றிருந்தனர்.பிரகலாது நான்காவது மகனாக இருந்தான்.பிரகலாது தான் அண்ணன்களைவிட முற்றிலும் குணங்கள் மாறுபட்டவனாக இருந்தான்.அண்ணன்கள் மிகவும் சுயநலவாதிகளாக இருந்தனர்.பிரகலாதன் பாலகனாக இருந்தாலும் பக்குவப்பட்ட பெரியோர் போல பெருந்தன்மையுடன் இருப்பான்.பிராமணர்களை மதிப்பான். புலனடக்கம் பெற்று சத்தியத்தை கடைபிடிப்பான். பிராணிகளிடம் அன்பு காட்டுவான்.பரோபகாரியாக இருப்பான். தன்னை விட அந்தஸ்து குறைந்தவர்களிடம் நட்பாக நடந்து கொள்வான். பெரியோர்களின் பாதங்களை தொட்டு வணங்குவான்.ராஜகுமாரனாக இருந்தும் பிறர் துன்பத்தை தன் துன்பம் போல நினைப்பான்.மனிதர்களுக்கோ அரக்கர்களுக்கோ இயல்பாக ஆசைப்படும் வாஸ்துக்கள் மீது ஆசைப்பட மாட்டான்.
          ஐந்து வயது பாலகனாக இருந்தும் தன் சகத்தோழர்களுடன் விளையாடாமல் விஷ்ணு பகவானை நினைத்து  தியானத்தில் ஆழ்ந்து இருப்பான்.சில சமயம் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் இருப்பான். மொத்தத்தில் அவன் பகவானை நினைக்காத கணமே இருக்காது.பகவான் தன்னை மடியில் வைத்து ஆலிங்கனம் செய்வது போல உணர்வான். சில சமயம் எனக்கு தரிசனம் தராமல் எங்கே போனீர்கள் ஸ்வாமி? என்று கதறி அழுவான்.அல்லது தியான நிலையில் பகவானின் பரமானந்தத்தை  அனுபவிப்பான்.
          ராஜகுமாரர்களுக்கு கல்வி புகட்டுவதற்காக குருகுலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. சுக்கிராசாரியாரின் இரண்டு புத்திரர்கள் சண்டா,அமர்கா,என்ற பெயர் பெற்றவர்கள் அசுர புத்திரர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தனர்.அச்சமயம்ஹிரணியகசிபுவின் நான்கு ராஜகுமாரர்களும் குருகுலத்தில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு அரசியல்,நீதி,அர்த்தசாஸ்திரம்(பொருளாதாரம்)போர்க்கலை எல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டன. பகவத் விஷயங்களிலும் ஆத்மஞானம் பெரும் யோகத்திலும் நாட்டம் கொண்ட பிரகலாதனுக்கோ அதிகார பதவி,பெயர்,புகழ் ஐசுவர்யம் இவற்றுக்கு வழி வகுக்கும் உலகியல் விஷயங்கள், கற்றுத்தரும் பாடங்கள் பிடிக்கவில்லை.அவ்வாறு இருந்தும் குரு சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை கிரகித்துக்கொண்டான்.அவற்றில் தேர்ச்சியும் பெற்றான்.ஆனால் முழுமனதுடன் அதை விரும்பவில்லை.ஆசிரியர்கள் இவன் மிகவும் புத்திசாலியாக இருக்கிறான்.பாடங்களை கணப்பொழுதில் கற்று தேர்ச்சி பெற்று விடுகிறான்.என்று பாராட்டினார்கள்.ஹிரணியகசிபுவுக்கு இதை தெரிவித்தார்கள். 
          ஒரு நாள் ஹிரணியகசிபு பிரகலாதனை குருகுலத்தில் இருந்து வரவழைத்து அவனை தன் மடியில் வைத்து அப்பனே பிரகலாதா நீ கற்ற கல்வியில் எதை மேன்மையாக நினைக்கிறாயோ அதை எனக்கு எடுத்து உரைப்பாய்.என்றான். பிரகலாதன் கூறினான். இவ்வுலகில் உள்ள மனிதர்கள் நான் எனது என்று பற்றுக்களை விட்டோழித்து புற்களால் மூடப்பட்ட இருள் அடைந்த பாழும் கிணறு போலிருக்கும் உலக வாழ்க்கையை விட்டு துறந்து வனம் சென்று ஸ்ரீஹரியை சரண் அடைவதே சிறந்தது என்று கருதுகிறேன்.
          ஹிரணியகசிபு பயங்கரமாக சிரித்தான். இந்த சிறிய பாலகனுக்கு துறவறம் யார் சொல்லிக்கொடுத்தது. குருவின் ஆசிரமத்தில் யாரோ பிராமண வேடத்தில் நம் எதிரிகளுக்கு துணையாக செயல்படுகிறார்கள். ஆசிரியர்களை கூப்பிட்டு இவ்வாறு பாடம் புகட்டியவனை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கச்சொன்னான்.
          பிரகலாதனை குருகுலத்திற்க்கு அழைத்துச்சென்று குருமார்கள் பிரகலாதனை அன்புடன் பேசி விசாரித்தார்கள். அப்பனே பிரகலாதா உனக்கு மங்களம் உண்டாகட்டும். இங்கு நாங்கள் உனக்கு நன்றாக தானே பாடம் நடத்துகிறோம். நாங்கள் சொல்லித்தராத பாடத்தை நீ ஏன் உன் தந்தையிடம் வேறு ஏதோ விஷயங்களை சொல்கிறாய்.புத்தி கெட்டு போய் விட்டதா? குளவிளக்கே நாங்கள் சொல்லித்தராத பகவத் விஷயங்களை யார் உனக்கு உபதேசித்தது?அல்லது யாரும் உபதேசிக்காமல் அவ்வாறு உளறுகிறாயா?
          பிரகலாதன் கூறினான்: “நமது, பிறரது என்ற வேற்றுமை அறிவு பகவானின் மாயையால் ஏற்படுகிறது. நம்மிடம் இருக்கும் பரமாத்மாவை உணர்ந்து கொண்டால் பகை உணர்வு எங்கிருந்து வரும்? உங்கள் பாஷையில் அந்த பரம்பொருள் ஸ்ரீ நாராயணரே என் மதியை கெடுத்து விட்டார்.அதாவது ஆட்கொண்டு விட்டார். குருஸ்வாமி காந்தம் இரும்பை இழுப்பது போல சக்கரபாணி விஷ்ணுவின் இச்சா சக்தியால் என் மனம் தானாக இழுக்கப்படுகிறது. அவரை நினைத்தவுடன் தன்வசம் இழந்து விடுகிறேன்.”
                                                       .(தொடரும்)        
        
            

Tuesday, 9 July 2013

நரசிம்மாவதாரம் 3

 
அஞ்சலி செய்து மிகப்பணிவாக அன்பு கலந்த பக்தியுடன் மனமுருகி கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக துதி பாடினான்.சுவாமி யுகங்கள் முடிந்து கல்ப கால இறுதியில் சிருஷ்டிக்கு முன் காலத்தின் சக்தியில் எல்லா இருளால் சூழப்பட்டிருக்க தன்னொளி பெற்ற தங்கள் தேஜசால் வெளிச்சம் ஏற்பட்டு சிருஷ்டி ஆரம்பமானது. தாங்களே ஜகத்தின் மூல காரணமாக இருக்கிறீர்கள்.பிராணன்,புலன்கள்,மனம்,புத்தி ஆகியவற்றால் தாங்களே தன்னை தோற்றுவித்துக்கொண்டீர்கள். ஜகத்தில் ஜீவன்களுக்கு உயிர் கொடுத்து அவர்களை ரட்சித்து வாழ வைக்கிறீர்கள்.வேதங்களும்,யாகங்களும் உங்களிடத்து தோன்றின.அகில பிரமாண்டமும் உமக்குள் அடக்கம் பெற்றிருக்கிறது.உங்கள் அருட்சக்தியால் அனைத்துயிர்களும் இயங்குகின்றன.
          பகவானே நீங்கள் வரம் தரும் தெய்வங்களில் வரத ராஜாவாக இருக்கிறீர்கள்.தாங்கள் வரம் தர விரும்பினால் நான் கேட்பவை அனைத்தும் தர வேண்டும். தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட எந்த உயிரினங்களாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. அவர்கள் மனிதனாக, மிருகமாக இருந்தாலும் சரி,உயிருள்ள, உயிரற்ற ஜடப்பொருள்களாலும், தேவர் இனத்தில் தேவ,அசுர, நாக, கின்னரர்களாலும் மரணம் வரக்கூடாது.வீடு,அரண்மனை அல்லது மாளிகைக்கு உள்ளே அல்லது வெளியே அல்லது பகலில் அல்லது இரவில் தங்களால் சிருஷ்டிக்கப்பட்ட ,சிருஷ்டிக்கப்படாத உயிருள்ள பிராணிகளாலும் உயிரற்ற ஜடப்பொருள்களாலும் எனக்கு மரணம் சம்பவிக்கக்கூடாது. மேலும் அஸ்திரங்களாலும் ஆயுதங்களாலும் தாக்கப்பட்டு நான் இறக்க கூடாது. ஆகாயம் பூமி எங்கும் நான் இறக்க கூடாது.யுத்ததில் என்னை எவரும் எதிர்த்து போர் செய்ய முடியாமல் போகட்டும்.அனைத்து உலகங்களையும் நானே ஆட்சி செய்ய வேண்டும். இந்திராதி தேவர்களும் லோக பால தேவர்களும் உங்கள் மகிமையால் அடிபணிவது போல் அந்த மகிமையை நானும் பெற்று அவர்கள் எனக்கு அடிபணிய வேண்டும். தவசிகளும் சித்த யோகிகளும் அடைந்திடும் தெய்வீக சித்துக்களும் என்னிடம் வர வேண்டும்.
          ஹிரணியகசிபு துர்லபமான இப்படிப்பட்ட வரங்களை கேட்டதும் அவன் தவத்தால் மகிழ்ந்து போன காரணத்தால் பிரம்மா கூறினார்.”அப்பனே நீ கேட்ட வரங்கள் அனைத்தும் மிக துர்லபமானவை.இருப்பினும் நான் அந்த வரங்கள் அனைத்தையும் தந்து விடுகிறேன்என்று கூறினார். ஹிரணியகசிபு அவரை பக்தியுடன் பூஜித்தான்.பிரம்மதேவர் இவ்வாறு வேண்டிய வரங்களை தந்துவிட்டு பிரமலோகம் சென்றார்.
          ஹிரணியகசிபு வரங்களை பெற்று விட்டு நாடு திரும்பினான். அவன் மனதில் அடித்தளத்தில் தம்பியை கொன்ற விஷ்ணுவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. முதலில் திக்விஜயத்தை தொடங்கினான்.பூலோகத்தில் இருந்த ராஜாக்களை வென்று பூவுலகை தன் கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்தான்.அதன் பின் தேவர்கள்,அசுரர்கள்,தலைவர்கள்,கந்தர்வர்கள்,கருடன் நாக தேவர்கள்,சித்தர்கள்,சாரானர்கள், வித்யாதரர்கள்,ரிஷிகள்,பித்ருக்கள் மனுக்கள்,யட்ச ரக்ஷாசர்கள்,பூத பிரேத,பிசாசுக்கள் திசை காக்கும் தேவர்கள் அனைவரையும் வென்று விட்டு சொர்கபுரி அமராவதியையும் வென்று இந்திராதி தேவர்களையும் விரட்டி விட்டான். இந்திரன் மாளிகை சகல சம்பத்துக்களும் நிறைந்திருந்தன.பவள படிக்கட்டுக்கள்,கோமேதகம் பதித்த ஸ்படிக சுவர்களும் வைடூர்ய தூண்களும் மாணிக்க ஆசனங்களும் வண்ண வண்ண விதானங்களும் செல்வச்சிறப்புடன் இருந்தன. பால் நுரை போல மஞ்சங்களும் விரிப்புகளில் முத்துச்சரங்களும் வெகு அழகாக இருந்தன.அப்சரசுகள் பொற்சலங்கை அணிந்து அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருந்தனர். ஹிரணியகசிபு அங்கு ஒரு காட்டமான மது பானத்தை அருந்திக்கொண்டு இருப்பான்.ஆகாயமும் பூமியும் கடல்களும் அவனுக்கு வேண்டிய செல்வங்களை வழங்கிக்கொண்டு இருந்தன.
          அவனது கொடுங்கோல் ஆட்சி எங்கும் நிலவியது.யாக வழிபாடுகளும் தேவ பூஜைகளும் தமக்கே உரித்தாக வேண்டும் என்று ஆணையிட்டான்.இவனது கொடுங்கோல் ஆட்சி பல காலம் நீடித்தது. தேவர்களும் ரிஷிகளும் முனிவர்களும் பூலோகத்தில் தவமியற்றும் சித்த மகா முனிவர்களும் இவனது சர்வாதிகார கொடுமைகளை பொறுக்க முடியாமல் பகவானை சரண் அடைந்தனர்.அவர்கள் நியமங்கள் மேற்கொண்டு உண்ணாமல் உறங்காமல் விரதம் இருந்து பகவானை ஆராதனை செய்து கெஞ்சும் வகையில் பிரார்த்தனை செய்தனர்.அப்போது ஓர் அசரீரி குரல் மேக கம்பீரமாக கேட்டது.”தேவர்களே முனிவர்களே நான் ஹிரணியகசிபு செய்யும் கொடுமைகளை அறிவேன். தேவர்கள் வேதம்,பசு,காளை,பிராமணர்கள்,சாதுக்கள்,தர்மம் இவர்களை நாசப்படுத்துபவர்கள் வெகு சீக்கிரமே அழிந்துபோவார்கள்.நீங்கள் கவலை பட வேண்டாம்.பகையில்லா சாந்த சொரூபியாக பிரகலாதன் ஹிரணியகசிபுவுக்கு மகனாக பிறப்பான்.என் பக்தனான பிரகலாதன் ஒரு பெரிய மகாத்மாவாக இருப்பான். அவனிடம் துவேஷம் வைத்து பகைத்துக்கொள்வான்.அப்போது நானே அவனை சம்ஹாரம் செய்து விடுவேன்.” இதனை கேட்டு அவர்கள் ஆறுதல் அடைந்தனர்.(தொடரும்)        

Tuesday, 2 July 2013

நரசிம்மாவதாரம் 2


நரசிம்மாவதாரம்

லோகங்களின் அதிபதி! பிரம்மதேவரே ஹிரணியகசிபுவின் தவத்தீ ஜ்வாலையால் தகித்துக்கொண்டு இருக்கிறோம்.நீங்கள் படைத்த உயிர் வர்க்கம் சாம்பலாவதற்க்கு முன் ஏதாவது செய்யுங்கள்.தாங்கள் எல்லாம் அறிந்தவர்.இருந்தும் ஹிரணியகசிபுவின் அபிப்பிராயத்தை தெரியப்படுத்துகிறோம்.

          பகவானே அவனது லட்சியம் என்னவென்றால் தாங்கள் பெரும் தவத்தாலும் யோகசக்தியாலும் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து எல்லா லோகங்களுக்கும் மேலான சத்திய லோகத்தில் வீற்று இருக்கிறீர்கள்.அது போல தானும் உலகங்களையும் ஜீவராசிகளையும் தன் வயப்படுத்தி உங்களது மேலான இடத்தை கைப்பற்ற நினைக்கிறான்.எனது லட்சியம் நிறைவேறும் வரை ஓய மாட்டேன்,எத்தனை ஜன்மம் எடுத்தால் என்ன?காலத்திற்க்கு ஒரு முடிவில்லை.இந்த ஆத்மாவும் நாசப்பட்டு போவதில்லை,யுகங்கள் கழிந்தாலும் என்றோ ஒருநாள் என் லட்சியம் நிறைவேறும்.

          பாவ புண்ணிய கர்மங்களின் சட்ட திட்டங்களை மாற்றி அமைப்பேன்.எப்போதும் இல்லாத நியதியை கொண்டு வரப்போகிறேன்.வைகுண்டாதி லோகங்களுக்கு ஒருநாள் அழிவு ஏற்படத்தான் போகிறது.இவ்வாறு நினைத்துக்கொண்டு இருக்கிறான்.பிரபுவே தாங்கள் விதித்த விதிகள் அவன் கைக்கு போய்விட்டால் நல்லவர்களும் தேவர்களான நாங்களும் தொலைந்தோம்.

          தேவர்கள் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் பிருகு தட்ச பிரஜாபதி முதலிய பரிவாரங்களுடன் பிரம்மதேவர் அன்னவாகனத்தில் ஹிரணியகசிபுவின் தவமியற்றும் ஆசிரமத்திற்க்கு சென்றார்.அங்கு அவர் கண்ட காட்சி ஹிரணியகசிபுவை கரையான் புற்றும், புற்களும் மூங்கில் புதர்களுமாக மறைத்திருந்தன.அங்கிருந்த எறும்புகளும் பூச்சிகளும் மாமிச மேதை,மஜ்ஜை எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்டிருந்தன.மேகங்களால் மூடப்பட்ட சூரியன் போல புதர்களாலும் புற்று மண்ணாலும் மூடப்பட்டும் தவத்தின் தேஜஸால் உலகங்களை தகித்துக்கொண்டு இருந்தான்.

          அவனை கண்டு பிரம்மதேவர் கூறினார்.”அப்பனே ஹிரணியகசிபு உனக்கு மங்களம் உண்டாகட்டும்.கச்யப முனிவர் மகனே உன் தவம் சித்தி பெற்றுவிட்டது.தவத்தை விட்டு எழுந்து வா.தயக்கமின்றி என்ன வரம் வேண்டுமோ அதை கேள்.என்னே உனது மனோ பலம்!அற்புதமான மனோதிடம் கொண்டவன் நீ.எறும்பு முதலிய ஜந்துக்கள் உன் தேகத்தை தின்று விட்டன.அவ்வாறு இருந்தும் எலும்புக்கூட்டில் நீ பிராணனை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறாய்.இது பேரதிசியம்!இப்படிப்பட்ட கடும் தவத்தை எந்த ரிஷியும் செய்தது இல்லை.இனிமேல் எவரும் செய்யப்போவதும் இல்லை. தேவர்களின் நூறு வருடம் வரை (மனிதர்களின் ஒரு வருட காலம் தேவர்களின் ஒரு நாள் ஆகும். அந்த கணக்குப்படி 36500 வருடம் வரை ) நீர் அருந்தாமல் எவரால் உயிர் வாழ முடியும்? ஹிரணியகசிபு நீ மிக அரிதான செயலை தான் செய்திருக்கிறாய்.உன் தவத்தால் யாம் உன் வசப்பட்டு விட்டோம்.அசுர சிரோமணி, நீ எதை வேண்டுமானாலும் கேள்.உன் விருப்பப்படி எல்லாவற்றையும் தருவோம்,என் தரிசனம் வீண் போகாது”.

          இவ்வாறு கூறிவிட்டு பிரம்மதேவர் எலும்புக்கூடாக இருந்த சரீரத்தில் தன் கமண்டலத்தில் இருந்து தெய்வீக நீரை தெளித்தார்.விறகு சுள்ளிகளுக்குள் புகைந்துகொண்டிருத்த நெருப்பு திடீரென பிரகாசமாக வெளிப்படுவது போல புற்று மண் மூங்கில் புதருக்குள் இருந்து ஹிரணியகசிபு பேரொளியுடன் தோன்றினான்.அச்சமயம் திடகாத்திர சரீரத்துடன் வாலிபனாக வந்தான்.அவனது அங்கங்கள் புது பொலிவுடன் காணப்பட்டன.மனம் தெளிவு பெற்று புலன்களில்  புதிய சக்தி சஞ்சரிக்க குரல் கம்பீரமாக இருந்தது.வஜ்ரம் போல திட சரீரம் உருக்கிய பொன் போல பிரகாசித்துக்கொண்டு இருந்தது.அவன் ஆகாயத்தில் அன்ன வாகனத்தில் தேவர்கள் புடை சூழ பிரம்மா இருப்பதை கண்டு அவரை சாஷ்டாங்கமாக பூமியில் விழுந்து வணங்கினான்.(தொடரும்)   

           

 

Friday, 28 June 2013

நரசிம்மாவதாரம்

 
கச்யப முனிவருக்கும் அசுர குல பெண் திதி என்ற மனைவிக்கும் ஹிரணியாக்ஷன்,ஹிரணியகசிபு என்ற இரட்டை மகன்கள் பிறந்தார்கள்.
          அச்சமயம் கல்ப காலம் முடிந்து கடல் வெள்ளம் பூமியை சூழ்ந்திருந்தது. நிலமெல்லாம் கடலுக்குள் மூல்கிவிட்ட நிலையில் ஹிரணியாக்ஷன் கடலுக்குள் திரிந்து கொண்டிருந்தான். எவராவது தன்னுடன் போர் செய்ய வர மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டு இருந்தான். அச்சமயம் உயிர்கள் வாழ்வதற்காக கடலுக்கடியில் இருந்து நிலத்தை வெளியில் கொண்டு வந்து வைப்பதற்காக விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்தார்.  ஹிரணியாக்ஷன் நிலத்தை கடலில் மூல்கி இருக்கும்படி செய்து கொண்டிருந்தான்.இறுதியில்  ஹிரணியாக்ஷனுக்கும் வராக பகவானுக்கும் பலத்த போர் மூண்டது.வராக மூர்த்தி அவனுடன் பயங்கர யுத்தம் செய்து இறுதியில் கொன்று விட்டார். அதன் பின் கடலில் இருந்து பூமியை வெளியில் கொண்டு வந்து ஸ்தாபிதம் செய்தார்.
          தம்பியை கொன்ற விஷ்ணு பகவானை பழிவாங்க நினைத்தான் ஹிரணியகசிபு. தன் குலத்தை நாசம் செய்தவர் விஷ்ணு என்று கருதி அவர் மீது தீராத பகை கொண்டான். அவரை மனதால் நினைப்பதையும் வெறுத்தான்.பெரும் தவம் இயற்றி விஷ்ணுவை விட பெரிய கடவுளாக மாற வேண்டும் என்று நினைத்தான்.
         ஹிரணியாக்ஷனின் மனைவியும் அவன் புதல்வர்களும் அழுது புலம்பிக்கொண்டு இருந்தார்கள்.அச்சமயம் தவிர்க்க முடியாத மரணத்தை பற்றி கூறும்போது போர்முனையில் வீழ்ந்து கிடந்தஉசிநர மன்னரின் சுற்றத்தாரும், மனைவி மக்களும் மீளா துயரில் இருந்த போது சாட்ஷாத் யமதர்மராஜன் சிறுவனாக வந்து அவர்களை எப்படி தேற்றினான் என்ற கதையை அவர்களுக்கு கூறினான்:
          சிறுவனாக மாறிய யமதர்மராஜா கூறினார்: “பந்துக்களே ஜீவராசிகள் எங்கிருந்து வந்ததோ அங்கு திரும்பி போய்தான் ஆகவேண்டும்.என்னை பாருங்கள் சிறுவனாக அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருக்கிறேன்.என் மீது ஆபத்து ஏதும் வரவில்லை. பாதையில் தவறா விட்ட பொருள் அப்படியே இருக்கிறது.ஆனால் வீட்டில் பெட்டியில் பூட்டி வைத்த பொருள் காணாமல் போகிறது.அதாவது மரணம் எந்த சூழலில் எவரை நெருங்கும் என்று தெரியாது. அதாவது வீட்டில் பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளைக்கு ஆபத்து வருகிறது. ஆனால் காட்டில் திரிந்த்து விட்டு க்ஷேமமாக வீடு திரும்பும் மனிதன் இருக்கிறான்.தம்பி மனைவிக்கும் புத்திரர்களுக்கும் இவ்வாறு ஆறுதல் கூறிவிட்டு ஒரு முடிவெடுத்தான்.
          நான் மரணமில்லா பெரு வாழ்க்கைபெற மூப்பு இறப்பு அற்றவனாக எவராலும் வெல்ல முடியாதவனாக ஆக வேண்டும்.மூவுலகங்களை ஆட்சி செய்யும் கடவுளாக மாற வேண்டும். அதற்கு தவம் ஒன்று தான் சிறந்த வழியாகும் என்று நிச்சயித்து சுக்கிராசரியாரிடம் ஆசி பெற்று தன் பட்டத்து ராணியிடமும் விடை பெற்றுக்கொண்டு மந்திரசல மலைச்சாரலில் கடும் தவம் மேற்கொண்டான். ஆகாயத்தை நோக்கி கைகளை மேலே தூக்கி ஒரு கால் பெரு விரலால் பூமியில் நின்ற படி உண்ணாமல் உறங்காமல் கோர தவம் செய்தான்.அவனுடய ஜடாமுடிகள் பிரளய கால சூரிய கதிர்கள் போல பிரகாசித்தன. தேவர்கள் தற்காலிகமாக நிம்மதி கிடைத்தது என்று அவர்,அவர் இடத்திற்க்கு சென்றனர்.
          ஹிரணியகசிபு நீண்ட நாள் தவத்தில் இருந்தான். திடீரென தவத்தின் வெப்பம் தலையில் இருந்து நெருப்பும் புகையுமாக கிளம்பி நான்கு திசைகளிலும் மேலும் கீழும் பரவி லோகங்களை எல்லாம் எரிக்க ஆரம்பித்தது.அந்த தீ ஜ்வாலையில் நதிகளும் சமுத்திரங்களும் கொதிகலன்ங்களானது.காடு மலை தீவுகளுடன் பூமி நடுங்கியது.தாரகையில் நட்சத்திரங்கள் உடைந்து விழுவது போல தீப்பொறி கிளம்பின.
            இறுதியில் ஹிரணியகசிபுவின் தவ தீ ஜ்வாலை தேவலோகத்தை தகிக்க ஆரம்பித்தது.தேவர்கள் பதற்றமடைந்து பிரம்மலோகத்தை அடைந்து பிரம்மாவை பிரார்தித்தார்கள்.(தொடரும்) 
                
            

Thursday, 30 May 2013

அஜாமிளன் 4

 
அஜாமிளன் யமதூதர்களுக்கும் பாகவத சேவகர்களுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருந்தான்.நோயுற்று படுக்கையில் கிடந்தவன் திடீரென சொஸ்தமாகி விட்டான். பகவானின் பார்ஷத சேவகர்களை நோக்கி கண்ணீர் வடித்து வணங்கி ஏதோ சொல்ல வந்தான். பகவானின் பார்ஷத சேவகர்கள் அதை அறிந்து மாயமாய் மறைந்தனர்.யமதூதர்கள் சொன்ன வேத நெறிகளையும் தர்மத்தை பற்றி நிகழ்த்திய சொற்பொழிவையும் கேட்டு தன் வாழ்நாளை எப்படி வீணாக்கி விட்டோம் என்று நினைத்து அழுதான்.அவன் அப்போது தான் தர்மத்தை பற்றி சிந்தித்தான்.
          தான் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கையை பற்றி நினைத்து தன்னை தூற்றிக்கொண்டான்.ஒரு பிராமணனாக இருந்தும் கேவலம் தாசியுடன் வாழ்க்கை நடத்தி விட்டேன்.அப்பாவியான சொந்த மனைவியை துறந்தேன்.தாய் தந்தையரை கவனிக்கவில்லை. அவர்களையும் அனாதையாக்கி துறந்தேன்.
          போன ஜன்மத்தில் நான் என்ன புண்ணியம் செய்தேனோ?மரணத்தின் இறுதிக்காலத்தில் விஷ்ணு பகவானின் தெய்வ தூதர்களை கண்டேன்.அவர்கள் என்னை நரகத்தில் இருந்து காப்பாற்றினார்கள்.அவர்களின் தரிசனத்தால் என் மனம் தூய்மையாகி விட்டது.நான் மகா பாவியாகி விட்டேன்.இறைவன் கொடுத்த நல்ல தூய்மையான வாழ்க்கையை விட்டு விட்டு பாவ மூட்டையாகி விட்டேனே?ஏதோ நான் செய்த எந்த புண்ணியமோ?என்னை பவித்திரமான நாராயணனின் திருநாமத்தை உயிர் பிரியும் போது உச்சரிக்க வைத்தது.அஜாமிளன் இப்படி பலவாறு புலம்பி அழுதான்.அக்கணமே தன் வீட்டையும் மனைவி மக்களையும் துறந்தான்.கால் நடையாக யாத்திரை செய்து ஹரித்வார் என்ற புனித தலத்தை அடைந்தான்.அங்கு கங்கை நீரை மட்டும் பருகிக்கொண்டு பகவானை தியானம் செய்து தவமிருந்தான்.எல்லா பற்றுக்களையும் அறவே ஒழித்துவிட்டு தியானம் செய்தான்.சில நாட்கள் கழித்து அந்திம காலம் வந்தபோது முன்பு தரிசனம் செய்த விஷ்ணு சேவகர்களை கண்டான்.அவர்கள் தாள் தொட்டு வணங்கினான்.அவர்கள் அஜாமிளனை வைகுண்டலோகம் கொண்டு சென்றனர்.
         இந்த அஜாமிளன் கதையை படித்தவர்கள் நரகத்திற்க்கு செல்ல மாட்டார்கள்.அவர்கள் பாவிகளாக இருந்தாலும் அவர்கள் பகவானின் பக்தியில் கரைந்து விடுவார்கள்.இறுதியில் வைகுண்டம் செல்வார்கள்.அஜாமிளன் பகவானை நினைக்காமல் அவன் மகனின் பெயரை உச்சரித்தான்.அது நாராயணனின் திரு நாமமாக இருந்தது.ஆனால் பகவானை நினைத்து உள்ளன்புடன் பக்தியில் ஒன்றிப்போய் அவர் பெயரை உச்சரித்தால் அதன் பலனை சொல்வதற்கோ வார்த்தைகள் இல்லை.
          யமதூதர்கள் யமதர்ம ராஜாவிடம் போய் கேட்டனர். பகவானே உலகில் ஜீவன்கள் பாவ புண்ணிய கர்மங்களை சேர்ந்தே செய்கின்றன.மிக அபூர்வமான மகாத்மாக்கள் மட்டும் புண்ணியங்கள் செய்து அதில் புண்ணிய பலனை எதிர்பாராமல் கர்மம் செய்வார்கள்.எங்களுக்கு ஒரு சந்தேகம் என்னவென்றால் பாவ புண்ணிய கர்மங்களுக்கு பலனாக தண்டனை தருபவர் யார்? யார் இந்த ஜீவலோகத்தை ஆட்சி செய்கிறார்கள்?ஏனெனில் எங்களுக்கு தெரிந்து நீங்கள் தானே செய்த பாவ புண்ணியங்களுக்கு நற்பலனை அல்லது தண்டனையை தருகிறீர்கள்.இன்று உங்கள் ஆணை மீறப்பட்டு விட்டது.தண்டனை தருபவர்கள் ஒன்றுக்கு மேல் இருந்தால் அங்கு ஒரே தர்ம நெறி ஒரே நியாயம் என்று இருக்காது. இன்று வரை தங்கள் ஆணை மீறப்பட்டது இல்லை.நாங்கள் அறிந்த வரை தர்மநியாயத்தை காப்பவர்நீங்கள் தான். உங்களை தவிர  ஜீவராசிகளை அடக்கி ஆள்பவர் வேறு ஒருவர் இருக்கிறாரா?ஏனெனில் இன்று வாழ்நாள் முழுவதும் பஞ்சமாபாதகங்களை செய்த ஒரு பாவியை நரகத்திற்க்கு இழுத்து வர சென்று இருந்த போது அந்த பாவி நாராயணா!நாராயணா!என்று கூவினான். அந்த க்ஷணமே நான்கு தெய்வ புருஷர்கள் தோன்றி அந்தபாவியை காப்பாற்றி எம் பணி செய்யவிடாமல் தடுத்து விட்டனர்.
          யமதர்மராஜா கூறினார்- என்னை விட மகா பெரியவர் எல்லாம் வல்லவர் ஒருவர் இருக்கிறார்.அவரே பிரம்மா,விஷ்ணு, ருத்திரர் என்று திருமூர்த்திகளாக பிரிந்து பிரபஞ்சத்தை படைத்து காத்து அழித்து அருள் புரிகிறார்.விவசாயி ஒருவன் தன் எருதுகளை முதலில் சிறிய கயிறுகளால் கட்டி பின்பு எல்லா கயிரையும் சேர்த்து ஒரு பெரிய கயிரால் இழுத்து செல்வது போல மனிதர்களின் வர்ணாசிரம தர்மம் மற்றும் பற்பல அறநெறிகள் வேத தர்மம் என்ற பெரிய கயிற்றால் கட்டப்பட்டிருக்கின்றன.பகவானே வேத சொரூபமானவர்.யமதூதர்களே இந்திரன் நைர்ரிதிகாலன், வருணன்,சந்திரன்,அக்னி,சிவன்,வாயு,சூரியன்,பிரம்மா,பன்னிரெண்டு ஆதித்யர்கள்,சாத்ய தேவர்கள்,சித்தர்கள்,பிருகு,பிரஜாபதி இந்த சக்தி வாய்ந்த தேவர்களும் இறைவனது திருவுள்ளப்படி என்ன நடக்கும் என்று அறியாதவர்கள்.அந்த இறைவனால்வஸ்த்திரத்திற்கு நூல் காரணமாக இருப்பது போல் இப்பிரபஞ்சம் முழுவதும் அவர் ஆற்றல் பரவி இருக்கிறது.பாகவத தர்மத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்.அவர் மன்னிக்கும் சுபாவமுள்ளவர்.அவர் திருநாமம் சகல பாவங்களில்இருந்தும் விமோசனம் அளிக்கும் சக்தி வாய்ந்தது.
          பகவானின் திருநாமம் பற்றுக்களை அறுத்து மனதை தூய்மையாக்கி இறுதியில் மோட்சத்தை கொடுக்க சக்தி படைத்தது.ஆனால் பாவங்களை நாசப்படுத்த மற்ற வழிகளான பூஜை விரதம்,சாந்த்ராயண விரதம்,ஹோமம்,தியானம்,தானம்,தவம் ஆகியவற்றால் ஆசைகளை ஒழிக்க முடியாது.மோட்சமும் எளிதாக கிடைக்காது.பகவானின் திருநாமம் மட்டுமே மேலானது.
ஆதலால் யம தூதர்களே பகவானின் திருநாமங்களை சொல்லும் பக்தர்களை நெருங்காதீர்கள்.அஜாமிளனை காக்கும் பொருட்டு பகவானின் பார்ஷத சேவகர்களை எதிர்த்து பேசியதற்காக நான் பகவானிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.அவர் மகாமகிமை பொருந்திய பரந்த மனம் கொண்டவர்.அதனால் என்னை நிச்சயம் மன்னிப்பார்.
          யம தூதர்கள் யமதர்மராஜாவிடம் விஷ்ணு பகவானின் அருமை பெருமைகளை அவர் திருநாமத்தின் மகிமையை கேட்டு ஆச்சர்யம் அடைந்தனர்.அன்று முதல் அவர்கள் பகவானின் பக்தர்களை நெருங்குவதில்லை.ஏறெடுத்தும் பார்பதில்லை.       
.

Wednesday, 15 May 2013

அஜாமிளன் 3

அந்த சூட்சும சரீரமே எல்லா ஜன்மங்களில் மகிழ்ச்சி,சோகம்,பயம்,பீடை,எல்லாம் அனுபவித்துக்கொண்டு பிறப்பு,இறப்பு,சுழற்சியில் சிக்கிக்கொண்டு இருக்கிறது.அதன் காரணம் காமம்,குரோதம்,லோபம்,மோகம்,மத மாத்ஸர்யம் ஆகிய  சத்ருக்களை ஜெயிக்காமல் விருப்பு வெறுப்பு என்ற வாசனைகள் மனதின் அடித்தளத்தில் தேங்கி விடுகின்றன.அவற்றுக்கு அடிமையாகி மேலும் மேலும் கர்மங்கள் செய்து அவற்றின் பலன்கள் என்ற நூலால் பட்டுபுழு போல தன்னையே சுற்றிக்கொள்கிறான்.பூர்வ ஜென்மத்தின் கர்மங்களுக்கு தக்கவாறு அவனுக்கு தேகம் கிடைக்கிறது.ஆணாகி,பெண்ணாகி பிறக்கிறான்,மடிக்கிறான்..பர லோகங்களில் பாவங்களை அனுபவிக்கிறான்.
பிறப்பு இறப்புகளில் இருந்து விடுதலை பெற இறைவனருள் வேண்டும்.இறைவனருள் புண்ணியாத்மாக்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்.
         தெய்வங்களே இதோ பாருங்கள். இவன் தன் சொந்த சுகத்திற்காக, சொந்த சந்தோசத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாவத்தையே செய்திருக்கிறான்.ஆதலால் இவனை யமலோகத்திற்க்கு அழைத்துச்சென்று யமதர்ம ராஜாவின் தீர்ப்புபடி இவனுக்கு தண்டனை வழங்குவோம்.இவன் பாவத்திற்க்கு தக்க தண்டனை அனுபவித்து விட்டு பின்பு தான் சுத்தமாவான்.யமதூதர்களின் சொற்பொழிவை கேட்டு ஸ்ரீவிஷ்ணுவின் சேவகர்கள் கூறினார்கள்.
          வருத்ததிர்க்குறிய விஷயம் என்னவென்றால் நியாயம் நடக்க வேண்டிய இடத்தில் அநியாயம் எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. தண்டிக்க தகாதவர்கள் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. பிரஜைகளின் ரட்சகர்களே பிரஜைகளுக்கு துரோகம் செய்வதா?யமதூதர்களே இவன் மரணதருவாயில் பகவானின் மோட்சம் தரும் திருநாமத்தை உச்சரித்து விட்டான்.இவன் கோடி ஜன்மங்களின் பாவங்களுக்கு பிராயசித்தம் செய்து விட்டான். கொள்ளையடிப்பவன்,குடிகாரன்,நண்பனுக்கு துரோகம் செய்பவன்,பிராமணனை கொன்றவன்,தாய்,தந்தை,பெண்,பசு ஆகியோரை கொன்றவன் அனைவரும் பகவானின் திருநாம ஜபம் செய்து தன் பாவங்களை போக்கிக்கொள்ள முடியும்.
           பாவத்திற்க்கு பிராயசித்தம் என்பது மீண்டும் பாவ வழியில் போனால் அது பிராயசித்தம் ஆகாது.தவ,தானம்,விரதம் ஆகியவற்றால் பிராயசித்தம் செய்தால் அந்த பாவங்கள் நிச்சயம் அழிந்து விடும். ஆனால் பகவானின் திருநாமங்களை ஜபம் செய்தால் பாவங்கள் அழிவதுடன் திருநாமத்தை உச்சரிக்கும் மனமும் தூய்மை அடைகிறது.  வேறு பிராயசித்தங்களால் மனதில் இருக்கும் அழுக்குகள் வேருடன் அழிவதில்லை . தெரியாமல் அறியாமல் நெருப்பை தொட்டால் அது சுட்டு விடுகிறது.அது போல தெரியாமல் அறியாமல் பகவான் நாமத்தை உச்சரித்தால் பாவங்கள் தாமாக எரிக்கப்படும்.அதற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.அதிகமாக ஜபம் செய்யும் போது அது மந்திரமாக மாறிவிடுகிறது.
          யம தூதர்களே நாங்கள் சொல்கிறோம்.அதை பிரமானமாக எடுத்துக்கொள்ளுங்கள்.வேறு ஒரு கருத்தை நினைத்து,அல்லது பிற வஸ்துவை அல்லது மனிதரை குறிப்பிடும் போது, அந்த திருநாமத்தை வைத்து பிறரை பரிகாசம் செய்யும்போது பிறரை குறித்து கோபித்துகொள்ளும்போது,நீண்ட ராகம் எடுத்து பாடும்போது உச்சரிக்கப்படும் பகவானின் திருநாமம் பாவங்களை நாசப்படுத்துகிறது. மேலும் சறுக்கிவிழும்போது,தும்மும்போது வலியால் துடிக்கும்போது கீழே விழுந்து அடிபடும்போது மேலே தீ பட்டு சுடும்போது ,பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் கடிக்கும் போது ஹரி,ஹரி என்று உச்சரிக்கவேண்டும்.அப்போது யம யாதனை (யம வாதை)வராது என்று கூறி விஷ்ணு பகவானின் தூதர்கள் மரண தருவாயில் பகவான் நாமம் உச்சரிக்கப்படும்போது எல்லா பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.என்று கூறிவிட்டு யமகிங்கரர்கள் பிடியில் இருந்த அஜாமிளனை காப்பாற்றி விட்டு மறைந்து விட்டனர்.
(தொடரும்)   

Friday, 5 April 2013

அஜாமிளன் 2

அவர்கள் விஷ்ணுவின் சேவகர்களை பார்த்து யார் நீங்கள்? தெய்வ புருஷர்கள் போல இருக்கிறீர்கள்! எங்களை ஏன் தடுக்கிறீர்கள்?இந்த பாவிக்காக பரிந்து கொண்டு எதையும் பேசமுடியாது என்றால் இவன் பஞ்சமா பாதகங்களை வாழ்நாள் முழுவதும் செய்திருக்கிறான்.யமதர்ம ராஜாவின் ஆணையை மீற நீங்கள் யார்?தன் பேரொளியால் இருட்டை போக்கி எங்கும் பிரகாசமாக்கி கொண்டு ஏன் வந்தீர்கள்?
           விஷ்ணு பகவானின் தூதர்கள் சிரித்து விட்டு மேகம் இடியோசை குரலில் பேசினார்கள்.—யம தூதர்களே நீங்கள் உண்மையிலேயே யமதர்மராஜாவின் ஆணைப்படி நடக்கிறீர்கள் என்றால் தர்மத்தின் சொரூபம் என்ன?அதன் தத்துவம் என்ன?தண்டனை யாருக்கு கொடுக்க வேண்டும்? பாவத்திற்க்கு பிராயசித்தம் செய்து விட்டவனுக்குமா தண்டனை தரப்படும்?இதற்குமுதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு இந்த ஆத்மாவை எடுத்து செல்லுங்கள் என்றனர்.
          யமதூதர்கள் பதில் அளித்தார்கள்-வேதங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை செய்வதே தர்மம் என்றும் விதிக்கப்படாத தடுக்கப்பட்ட கர்மங்களை அதர்மம் என்றும் நிச்சயிக்கப்பட்டுள்ளன.எல்லாம் வல்ல இறைவனே வேத சொரூபமானவர்.வேதங்களே அவரது மூச்சு. தன்னோளி பெற்ற ஞானம்.அவரால் படைக்கப்பட்ட சாத்வீக ராஜச தாமச குணங்களை கொண்டு பொருள்களும் பிராணி வர்க்கங்களும் அவரை ஆதாரமாக கொண்டு உள்ளன.குணங்கள் காரியங்கள் ரூபம் அனைத்தும் வேதங்களால் வகுக்கப்படுகின்றன.இவ்வுலகத்தில் ஜென்மமெடுத்த ஜீவனால் மனதின் எண்ணங்களோடு செய்யப்படும் கர்மங்களுக்கு சாட்சியாக சூரியன்,அக்னி,ஆகாயம்,வாயு,புலன்கள்,சந்திரன்,சந்தியாகாலம்,இரவு,பகல்,திசைகள்,ஜலம்,பூமி,காலம்,தர்மம் இவையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றன.இவைகளால் அதர்மம் நிச்சயிக்கப்படுகிறது.அதற்கு தகுந்தாற்போல் தண்டனை நிச்சயிக்கப்படுகிறது.தேவ புருசர்களே ஒரு பிராணி அல்லது ஜீவன் எந்த கர்மத்தை செய்தாலும் அது அவரது குணத்தை அனுசரித்தே இருக்கும்.அதனால் எல்லோராலும் பாவமும் புண்ணியமும் செய்யப்படுகின்றன.தேகம் தரித்த எந்த ஜீவனும் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது.எவ்வளவு பாவமும் புண்ணியமும் செய்கிறானோ அதற்கு தக்கவாறு பரலோகத்தில் அந்த பலனை பெறுவான்.
சாத்வீகம் ,ராஜசம்,தாமஸம்,இந்த மூன்று குண பேதங்களால் இந்த லோகத்தில் மூன்று விதமான ஜீவன்கள் உள்ளன.ஒன்று புண்ணியம் செய்பவர்கள்,பாபாத்மாக்கள்,பாவம் புண்ணியம் இரண்டும் செய்பவர்கள்.அதற்க்கு தகுந்தாற்போல சுகமாகவும் துக்கமாகவும் சுகம் துக்கம் இரண்டும் கலந்து இருக்கிறார்கள்.பரலோகத்தில் சுக துக்கங்களை கூடுதலாக, குறைவாக பெற்றிருப்பார்கள்.எங்கள் ஸ்வாமி யமதர்மராஜா எல்லாம் அறிந்தவர்.பிறப்பற்றவர்.அவர் அனைவரது இதயங்களில் வீற்று இருக்கிறார்.சாட்சியாக பூர்வ கர்ம வினைகளையும் அறிவார்.எதிர்கால கர்ம வினைகளும் அறிவார்.
          தூங்கிக்கொண்டு இருக்கும் மனிதன் சொப்பனத்தில் இருக்கப்படும் சரீரத்தை மட்டும் உணர்ந்து அதை சத்தியமாக நினைக்கிறான்.விழித்த நிலையில் இருக்கும் சரீரத்தை மறந்து விடுகிறான்.   
அதுபோலவே அவன் இந்த ஜென்மத்தில் பூர்வ ஜென்ம ஞாபகங்களை மறந்து விடுகிறான்.தற்காலத்தில் பெற்ற சரீரத்தை தவிர முன் ஜென்ம விவரங்களையும் இனி நடக்கபோக்கும் விஷயங்களையும் ஜென்மங்களையும் அறிய மாட்டான்.தெய்வங்களே! ஜீவன் என்பவன் ஐந்து ஞானேந்திரியங்களுடன்(கண்,காது,மூக்கு,ரசனை,ஸ்பரிசம்)ஐந்து கர்மேந்திரியங்களுடன்(கை கால வாக்கு பாயு உபஸ்தம்)மனம் புத்தி நான் என்ற தன்மையுடன் (அகங்காரம்) கர்மங்களை செய்கிறான் அல்லது விதிக்கப்பட்ட சுக துக்கங்களை அனுபவிக்கின்றான்.சூட்சும சரீரம் மேற்சொன்ன புலன்ங்களோடு சேர்ந்தும் இருக்கும் (தொடரும்)