Friday 29 May 2015

வஜ்ராசனம்:


வஜ்ராசனம் உணவு செரிமானத்திற்கு உகந்த ஆசனம் என்று கூறப்படுகிறது. இந்த ஆசனத்தினால் பயங்கர இடுப்பு வலியும் சயிடிகா பெயினும் குணமாகின்றன. நுரையீரலில் அதிக கபம் சேருதல், வயிறு கோளாரினால் ஜாயிண்ட் பெயின் என்ற மூட்டு வாதம் எல்லாம் குணமாகின்றன. இடுப்பு,தொடை,முதுக்குத்தண்டு, முழங்கால்,பாதங்கள் எல்லாவற்றிலும் நன்கு செயலாக்கம் ஏற்பட்டு திடமாக உறுதியாகி ஆரோக்கியம் அடைகின்றன. ரத்தமின்மையால் வெளுத்து போவது தடுக்கப்படும்.
செய்முறை:
மெத்தென்ற ஒரு விரிப்பில் அமர வேண்டும். முழங்காலை கீழ்பக்கம் மடக்கி முழங்காலை ஊன்றிக்கொண்டு உட்கார வேண்டும். குதிகால் இரண்டும் சேர்ந்திருக்க வேண்டும். கால் பாதத்தின் அடிப்பாகம் இரண்டு புட்டத்தில் அழுத்தி இருக்க வேண்டும். முதுகுத்தண்டும்  தலையும் நேராக இருக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளையும் முழங்கால்களில் வைக்க வேண்டும். முழங்கைகள் மடக்காமல் நீட்டி இருக்க வேண்டும். கை விரல்கள் சேர்ந்திருக்க வேண்டும். கழுத்து நேராக திருஷ்டி நேராக மூக்கு நுனியை பார்க்கலாம். இயல்பாக சுவாசிக்க வேண்டும். இந்த ஆசனம் முடிந்தபின் சவாசனத்தில் படுத்துக்கொள்க. இந்த ஆசனம் செய்த நேரத்தில் இருந்து பாதி நேரம் கணக்கிட்டு படுத்திருக்க வேண்டும்.
          ஜீரண சக்தியை அதிகரிக்க நினைத்தால் நீரை பருகி விட்டு இந்த ஆசனத்தை செய்யலாம். அதிகமாக இடுப்பு வலி, குதிகால் வலி ஸையிடிகா பெய்ன் இவற்றில் பீடிக்கப்பட்டவர்கள் சரீரமெங்கும் தைலத்தை மாலிஷ் செய்து சூரியனின் பின்புற திசையில் அரைமணி நேரம் நித்தமும் செய்யலாம். சூரியனின் வெயில் முதுகில் அல்லது கை,கழுத்து முதலிய பின் பக்கங்களில் படுமாறு அமர்ந்திருக்க வேண்டும். கண்களில் நேராக வெயில் பட கூடாது. தலையின் பின் பகுதியில் வெயில் படாமல் இருக்க ஒரு துண்டை தண்ணீரில் நனைத்து பிழிந்து விட்டு தலையில் போட்டுக்கொள்ளலாம்.
         ஆரம்பத்தில் இந்த ஆசனத்தை பத்திலிருந்து இருபது நொடிகள் வரை செய்யலாம். மெதுவாக நேரத்தை கூட்டிக்கொண்டு போகலாம். நடு நடுவில் சில நொடிகள் ஓய்வெடுத்து பின்பு செய்யலாம். இடையில் ஓய்வு இல்லாமல் அரைமணி நேரம்   வரை இந்த ஆசனத்தில் அமர்ந்து விட்டால் இந்த ஆசனம் சித்தியாகி விட்டது என்று அர்த்தம்.

           நல்ல ஆரோக்கியம் பெற்ற மனிதர்கள் மற்ற ஆசனங்களுடன் சேர்த்து இதை நித்தமும் செய்யலாம். எலும்புகள் எளிதாக வளையும் தன்மை இல்லாதவர்கள் ஆரம்பத்தில் கைகளை முழங்காலில் வைக்காமல் பூமியில் ஊன்றிக்கொள்ளலாம். ஆனால் முதுக்குத்தண்டு நேராக இருப்பது அவசியம். 

No comments:

Post a Comment