Thursday 5 September 2013

நரசிம்மாவதாரம்11

  
 
பிரம்மா சிவபெருமான் ஆகிய பிரதான தெய்வங்களாலும் அவரை சாந்தப்படுத்தி அருகில் நெருங்க முடியாமல் போனதும் பிரம்மா முதலிய தேவர்கள் லக்ஷ்மி தேவியை அருகில் சென்று சாந்தப்படுத்த சொன்னார்கள். லக்ஷ்மிதேவியோ இது வரை கண்டிராத கேட்டிராத கோர பயங்கர உருவத்தை கண்டதும் பயந்து அருகில் போகவில்லை.
அப்போது பிரம்மதேவர் பிரகலாதனை அழைத்து கூறினார். “ மகனே பிரகலாதா உன் காரணமாகத்தானே உன் தந்தை மேல் பகவானுக்கு இவ்வளவு தூரம் கோபம் ஏற்பட்டது. அதனால் நீயே அருகில் சென்று அவரை சமாதானப்படுத்துவாய். அகில உலகங்களும், தேவர்களும்,மனிதர்களும் ஜீவராசிகளும் க்ஷேமமாக இருக்கவேண்டும். நரசிம்மர் கோபத்தை சாந்தப்படுத்த வேண்டும்.இல்லையேல் நாம் அனைவரும் அழிந்து விடுவோம்.” பிரம்மதேவர் இவ்வாறு கூறியதும் பிரகலாதன் அப்படியே ஆகட்டும் என்று கூறி கைகள் கூப்பி அருகில் சென்று சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கினான்.
          பிரகலாதன் தன் தாள்களில் விழுந்து வணங்கியது நரசிம்மர் இதயத்தில் கருணை பெருக்கெடுத்தது. அவர் காலனின் அச்சத்தை போக்கும் தன் அபயத்திருக்கரத்தை பிரகலாதன் சிரசில் வைத்தார். பிரகலாதன் ஆனந்த கண்ணீர் வடித்தான். சரீரம் புல ஹாங்கிதமடைந்து மிகுந்த பக்தியுடன் துதி செய்தான்.
 
“பகவானே பிரம்மா முதலிய தேவர்கள், ரிஷி முனிவர்கள், சித்தர்கள், ஆகியோர் மனமும் அறிவும் எக்காலமும் சாத்வீக தன்மை நிறைந்து இருக்கும். அவர்களின் தெய்வீக குணங்களாலும் உங்களை சந்தோசப்படுத்த முடியவில்லையென்றால் பிறவியிலேயே தீய குணங்கள் படைத்த அசுரப்பிறவிகளாகிய எங்களை கடைத்தேற்ற எங்கள் மீது கருணை கொண்டு ஒரு அவதாரமே எடுத்து விட்டீர்கள். உங்கள் பெருந்தன்மையை என்னவென்று சொல்வது. பிரபுவே தனச்செல்வம்,உயர்குடி, அழகு, தவம்,கல்வி,தேஜஸ்,ஆற்றல்,ஆற்றல் அதிகாரம், பலம்,ஆண்மை அறிவு,யோகம் பதவி இவையெல்லாம் ஒருவனை லௌகீக வாழ்வில் மேன்மைபடுத்தும் சாதனங்களாக (காரணங்களாக)இருந்தும் அவற்றால் பரமபுருசன் பகவானை சந்தோசப்படுத்த முடியாது. மேற்சொன்ன மேன்மைகளுடன் அவன் பிராமணனாக இருந்தாலும் பகவத் பக்தியில்லாமல் தங்கள் அருளை பெற முடியாது. ஆனால் மேற்சொன்ன மேன்மைகள் இல்லாமல் மனம், வாக்கு,காயம், செல்வம், பிராணன் அனைத்தையும் பகவானுக்கு அற்பணித்து பகவத்பக்தி நிறைந்தவன் சண்டாளானாக இருந்தால் என்ன? அவன் அடியார்களில் சிறந்தவன். பூஜிக்கத்தக்கவன், தூயவனாகிறான்.
          பகவானே தாங்கள் எளிய பக்தர்களின் பூஜையையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். தன் முகத்தை எவ்வாறு முகம் பார்க்கும் கண்ணாடி பிரதி பலிக்கிறது போல தங்களை குறித்து செய்யப்படும் வழிபாடுகளின் பலன்கள் அவர்களுக்கே வந்து சேர்கின்றன. நான் எதற்கும் தகுதியற்றவன். அசுரனாக பிறந்து எந்த உரிமையும் இல்லாதவன்.அவ்வாறு இருந்தும் என் அறிவுக்கு ஏற்றவாறு தங்களை துதி பாடுகிறேன். மற்ற தேவர்கள் அனைவரும் அசுரர்கள் போல தங்களை துவேசிப்பதில்லை.
          பகவானே அனைவரையும் இம்சித்து தொல்லை கொடுத்த என் தந்தையை சம்ஹாரம் செய்து விட்டீர்கள். கொடுமைக்காரன் இறந்தான் என்று அனைவரும் நிம்மதியாக இருக்க தாங்கள் சாந்தமடையுங்கள். அனைவரும் தங்களின் சாந்தமான சுய உருவத்தை காண விரும்புகிறார்கள். பரமாத்மாவே தங்களது பயங்கர உருவம் நீளமான நாவு காண கண் கூசும் கண்கள் நெளிந்த புருவம் குடலை மாலையாக போட்ட தங்கள் திருமேனி விறைத்த காதுகள் திக்கஜங்களை பயமுறுத்தும் சிம்மநாதம் சத்ருக்கள் உடலை கிழித்து எறியும் நகங்கள் எல்லாம் பார்த்து பயப்படவில்லை. தீனபந்து உலகில் இருக்கும் துயரங்களை கண்டு தான் பயப்படுகிறேன். கர்மபந்தத்தால் கட்டுண்டு வினைப்பயன்களை அனுபவிக்கும் துன்பம் ஓயாது ஜனன மரண சுழற்சியில் சிக்கி தவித்து கொண்டு இருக்கிறேன். இதிலிருந்து எப்படி விடுபடுவேன்? தங்கள் தாமரை தாழ் பணிந்து எப்படி உய்வடைவேன்?
          என் தந்தை தவமிருந்து ஐசுவர்யம்,ஆயுள் அரசபோகங்கள் அனைவரையும் ஆட்கொள்ளும் திறமை முதலிய எல்லாமேன்மைகளையும் பெற்று இருந்தார். எவ்வளவு தான் பெற்றிருந்தாலும், உயர்வடைந்து இருந்தாலும் எதுவும் நீடித்து நிற்கவில்லை. ஏனெனில் அனைத்திற்கும் ஒரு முடிவு இருக்கிறது. எல்லாம் தங்கள் திருவருளால் நடக்கின்றன. நான் தங்களை நினைத்து சிறிதளவே பக்தி செலுத்தினேன். தாங்கள் தனிப்பெருங்கருணை காட்டி தன் பக்தர்களோடு சேர்த்து தன்னுடயவனாக்கிக்கொண்டீர்கள்.தங்கள் மகிமையை புகழ வார்த்தைகள் இல்லை.
          பகவானே மக்கள் பந்தபாசங்களில் சிக்குண்டு வினைப்பயன்களை ஓயாது அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர். துயரங்களையும் சோகங்களையும் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றனர். உலகில் பல வன்கொடுமைகள் நடக்கின்றன. பிரபுவே உலக மக்கள் துன்பங்கள் அனைத்தையும் அழித்து விடுங்கள். நான் மட்டும் மோட்சமடயவிரும்பவில்லை  அல்லல் படும் மானிடர்களை தங்கள் கடைக்கண்ணால் பாருங்கள். அவர்களுக்காக நான் பிரார்தனை செய்கிறேன். பக்தர்களுக்கு எல்லாமுமாக இருக்கும் இறைவன் தங்களுக்கு கோடி கோடி நமஸ்காரம் செய்து வணங்குகிறேன்.     
(தொடரும்)
 
 
 
    
 
 
        
            

Tuesday 3 September 2013

நரசிம்மாவதாரம்10

  
நரசிம்ம பகவான் காண்பதற்கு மிக பயங்கரமாக இருந்தார்.நெருப்பிலிட்ட தங்கக்குமிழ் போல கண்கள் பளபளத்து கோபம் கொப்பளித்தது. வாயை பிளந்து பிடரி கேசத்தை சிலுப்பினார். பயங்கர தாடை பற்களிடையில் வாள் போன்ற நீளமான நாவு துடித்தது.  புருவங்கள் நெளிந்து முகம் மேலும் பயங்கரமாக தெரிந்தது. இரண்டு காதுகளும் விரைப்பாக நின்றிருந்தன.விடைத்த தடித்த மூக்கும் வாயும் மலை குகை போல தோற்றமளித்தன. தாடை மிக பயங்கரமாக தெரிந்தது. விசாலமான சரீரம் வானகத்தை தொட்டது. கழுத்து குட்டையாக தடித்து காணப்பட்டது. மார்பு மிகவும் அகன்று இடுப்பு குறுகி இருந்தது. சந்திரனின் ஒளி கிரணங்கள் ரோமங்கள் பளபளப்பாக மின்னின. ஆயிரக்கணக்கான நீண்ட கைகளில் நகங்களே ஆயுதங்கள் போலிருந்தன. அந்த கைகளில் அவருக்குரிய சங்கு சக்கர ஆயுதங்களும் வஜ்ரம் சூலம் முதலிய ஆயுதங்களும் இருந்தன.அந்த ஆயுதங்களின் சக்தியால் அசுரர்கள் அங்கும் இங்கும் ஓடினர். ஹிரணியகசிபு புரிந்து கொண்டான். இது நிச்சயம் விஷ்ணு பகவானின் மாயை தான் ஆனால் இவரால் என்னை என்ன செய்ய முடியும்? என்று யோசித்து சிம்மநாதம் செய்து கதை எடுத்து ஓங்கினான். விட்டில் பூச்சி நெருப்பில் விழுவது போல அவரை நெருங்கினான்.
          பிரளயத்தின் காரணமாக இருளை சிருஷ்டியின் தொடக்கத்தில் தம் பேரொளி விழுங்கிவிட்டது போல ஹிரணியகசிபு அவர் ஒளியில் கலந்தான். கருடன் சர்பத்தை பிடிப்பது போல திடீரென பகவான் அவனை பிடித்தார். கருடன் பிடியில் இருந்து பாம்பு நழுவிவிடுவது போல அவர் பிடியில் இருந்து நழுவிவிட்டான். தேவர்கள் அனைவரும் மேகங்களில் மறைந்து பார்த்துக்கொண்டு இருந்தனர். ஹிரணியகசிபு தமக்கு பயந்து தான் நரசிம்மர் தன்னை விட்டு விட்டார் என்று எண்ணினான். அதனால் புதியதெம்புடன் வாளையும் கேடயத்தையும் எடுத்து வெட்டப்போனான். அவர் தாக்கவருவதை களரிக்கலை வித்தையை பயன்படுத்தி குதித்து குதித்து தடுத்தான்.
          நரசிம்மர் மிக பயங்கர சிம்ம கர்ஜனை செய்தார். அவர் ஒளியாலும் பலத்த சப்தத்தாலும் தாங்க முடியாதஹிரணியகசிபு கண்களை சற்றே மூடினான். அச்சமயம் நரசிம்மர் லபக்கென அவனை பிடித்து விட்டார். சர்பம் எலியை பிடிப்பது போல அவனை பிடித்தார்.
          பிரம்மாவின் வரப்பிரசாதத்தால் எந்தவித ஆயுதங்களாலும் அவன் இறக்க மாட்டான்என்பதால் பகவான் வைத்திருந்த ஆயுதங்களால் அவன் காயம் அடையவில்லை. பகவான் நகங்களுடன் சேர்த்து கைகளால் அவனை பிடித்து தர்பார் கொலு மண்டபத்தின் வாசற்படிக்கு கொண்டு வந்தார். ஏனெனில் வீடு அரண்மனை ஆகியவற்றின் உள்ளேயும் வெளியேயும் இறக்கக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். துடித்துக்கொண்டிருந்த ஹிரணியகசிபுவை தொடையில் கிடத்தி (பூமியிலும் ஆகாயத்திலும் சாகக்கூடாது என்ற வரத்தினால்)அவன் நெஞ்சை நகங்களால் பிளந்தார். அந்த கோரக்காட்சியை எவராலும் பார்க்க முடியவில்லை. திருமேனியில் ரத்தம் பட்டு குடலை மாலையாக அணிந்து யானையை கொன்ற சிங்கம் போன்று காட்சியளித்தார். அச்சமயம்  நரசிம்மர் பிடரி கேசத்தை சிலுப்பினார். அதனால் மேகங்கள் சிதறின. கண்களின் ஜ்வாலை ஒளியால் சூரிய சந்திர ஒளியும் மங்கிப்போயிற்று. அவர் விட்ட மூச்சுக்காற்றால் சமுத்திரம் கொந்தளித்தது. திசையில் இருக்கும் திக்கஜங்கள் பயத்தால் பிளிறின. அவர் பிடரி கேசத்தால் அடிபட்டு தேவர் விமானங்கள் உடைந்தன. பேரலைகளால் ஆடுவது போல சொர்க்கம் நிலைகுலைந்தது. அவர் பாதம் பட்டு பூமி நடுக்கம் ஏற்பட்டது. மலைகள் உடைந்து சரிந்தன. அவரது பேரொளியால் ஆகாயமும் திசைகளும் கண்களுக்கு தெரியாமல் மறைந்தன. அச்சமயம் நரசிம்மரை எதிர்பவர் எவரும் இல்லாமல் அனைவரும் ஓடி ஒளிந்தனர். ஹிரணியகசிபுவை கீழே தூக்கி வீசி எறிந்தார். அவர் கோபம் சாந்தமாகாமல் மேலும் பெருகியது. நரசிம்மர் மிகக்கோபமாக ராஜ சிம்மாசனத்தில் போய் அமர்ந்தார். அவர் தேஜசும் கோபத்தில் முகம் மிக பயங்கரமாக இருந்ததாலும் தேவர்களும் பிரம்மாவும் அருகில் நெருங்க அஞ்சினார்கள். அவரை சாந்தப்படுத்த முடியாமல் திணறினார்கள்.
          சொர்க்கத்தில் தேவமாதர்கள் ஹிரணியகசிபு மாண்டுவிட்ட செய்தியை அறிந்து முகம் மலர்ந்தார்கள். தெய்வீக மலர்களை மழை போல தூவினார்கள். ஒரு தலைவலி தீர்ந்தது என்று நிம்மதி அடைந்தார்கள். அங்கு சற்று தொலைவில் தேவர்கள் கூட்டமாக வந்து வணங்கினர். கந்தர்வர்கள் கானமிசைத்தனர். அப்சரசுகள் நடனமாடினார்கள். அச்சமயம் பிரம்மா, இந்திரன், சிவபெருமான், தேவர்கள், ரிஷிகள், பித்ருக்கள், சித்தர்கள்,வித்யாதரர்கள்,நாகதேவர்கள்,மனுக்கள்,பிரஜாபதிகள், கந்தர்வர்கள், அப்சரசுகள், சாரண,யக்ஷ,கிம்புருட,வேதாள கின்னரர்கள்,சுநந்த,குமுத முதலிய பகவானின் பார்ஷத சேவகர்கள் அனைவரும் நரசிம்மரை சாந்தப்படுத்த முடியாமல் தவித்தனர். தலை மீது கைகள் உயர்த்தி அஞ்சலி செய்து ஒவ்வொருவராக துதி செய்தனர்.
          மேற்சொன்ன தேவர் இனத்தை சேர்ந்தவரும் மனித இனத்தில் பிரம்ம ரிஷிகளும் மகாமுனிவர்களும் சப்தரிஷிகளும் துதி செய்தனர். இறுதியில் விஷ்ணு பகவானின் சொந்த பார்ஷத சேவகர்களாலும் துதி பாடி சாந்தப்படுத்த முயன்றனர். ஆனால் எதுவும் பலிக்கவில்லை.
 (தொடரும்)
 
 
 
    
 
 
        
            
 

Sunday 25 August 2013


  

நரசிம்மாவதாரம்9

பரமாத்மாவின் காலத்தின் சக்தியால் எவ்வாறு மரங்களில் மலர்கள் பூக்கின்றன. காய்க்கின்றன,பழமாக பழுத்தபின் தாமாக விழுகின்றன. அது போல எல்லா ஜீவராசிகளும் பிறந்து வாழ்ந்து மடிகின்றன. ஆனால் அவர்களின் ஆத்மா அழிவற்றது. மாறுதலாடயாதது. மாயையில் ஒட்டாது. பகவானின் அம்சமான ஆத்மா பற்றுக்களை துறந்து பரமனில் இரண்டற கலக்க வேண்டும். அதற்கு தமக்குள் இருக்கும் பரமாத்மாவை உணரவேண்டும். எவ்வாறு தங்கம் எடுப்பவர்கள் கல், மண் ஆகியவற்றை பிரித்து தங்கத்தை மட்டும் எடுக்கிறார்களோ அவ்வாறு நிலையற்ற அழிந்து போகக்கூடிய விஷயங்களில் இருந்து அந்த ஆத்ம ஜோதியை கண்டுபிடிக்கவேண்டும். சர்வசாட்சியாக இருக்கும் பரமனை உணர வேண்டும்.   முதலில்  பகவானை காண எளிய முறைகளை பின்பற்ற வேண்டும்.அவர் திருவிளையாடல்களை கேட்கலாம்.திருநாமங்களை ஜபிக்கவேண்டும்.

தமக்கு பிடித்தமானவற்றை கொண்டுவந்து அவருக்கு படைத்து மலர்,வஸ்திர ஆபரணங்கள் சாற்றி பூஜிக்க வேண்டும். இந்த முறை மிகவும் எளிமையானது. பக்தி பெருக்கில் மனமுருகி தொழுதால் கர்ம வினைகள் அனைத்தும் ஒழிந்து விடும்.புண்ணியங்கள் செய்து மற்ற லோகங்களுக்கு(இறப்புக்கு பின்) சென்றால் மீண்டும் இப்பூவுலகிற்கு  திரும்பி வர நேரிடும். ஆனால் பகவானின் திருவடிகளை அடைந்து விட்டால் பிறப்பேது? சோகம் ஏது?

         சற்று யோசித்து பாருங்கள். அரண்மனை வாசம் ,மனைவி, மக்கள், தனச்செல்வங்கள், வாகனங்கள், வேலையாட்கள், படைகள், மந்திரிகள், நண்பர்கள், சுற்றத்தார்கள், அறம் ,பொருள் ,இன்பம் இவற்றால் நமக்கு கிடைப்பது என்ன? எல்லா விஷயங்களும் துக்கத்தில் முடிவடைகின்றன.

          எந்த ஜாதியில் எந்த இனத்தில் சேர்ந்தவராக இருந்தாலும் அன்பும் பக்தியும் இருந்தால் பகவானை வசப்படுத்த முடியும். பிராமணராக இருக்கவேண்டும்,ரிஷியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. மேலும் அகத்தூய்மை, மனத்தூய்மை, சரீரத்தூய்மை, நல்லொழுக்கம் இவையெல்லாம் இல்லாவிட்டாலும் எல்லாம் வல்ல சர்வ சக்திமான் அனைத்துயிர்களிலும் வீற்றிருக்கும் சர்வாத்மா மீது பேரன்பு கொண்டு பக்தி செலுத்தினால் மேற்சொன்ன தூய்மை, ஒழுக்கமெல்லாம் தாமாகவே வந்து விடும்.

          பிரகலாதனின் கூற்றை கேட்டு சக மாணவ தோழர்கள் பிரகலாதன் கூறுவது சரிதான் என்று யோசித்தனர். தர்க்கரீதியாகவும் யோசித்து பரஸ்பரம் பேசிக்கொண்டார்கள். பிரகலாதன் சொல்வது எப்படி சரியாக படுகிறதென்றால் இந்த தேவர்கள் அனைவரும் எப்போதும் விஷ்ணு பகவானை பூஜித்துக்கொண்டு அவர் நிழலில் இருந்து அவரையே துணையாகக்கொண்டு சகலவித மேன்மைகளையும் அடைகிறார்கள். அசுரர்களோடு போரிட்டுஅவர்களே ஜெயிக்கிறார்கள். இப்போது அசுரர்களை எப்படி ஒழிக்கவேண்டும் என்ற உபாயத்தை கேட்டுக்கொண்டு இருப்பார்கள். பிரகலாதன் சொன்னது போல ஏன் நாமும் அவரை தொழுதுகொண்டு, பூஜித்துக்கொண்டு அவரை துணையாக வைத்துக்கொண்டு இருக்க கூடாது? அவ்வாறு செய்தால் விஷ்ணுவின் துணைகொண்ட தேவர்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. என்று விஷ்ணு பக்தர்களாகி விட்டனர்.

          வெளியூரிலிருந்து வந்த குருஸ்வாமிகள் குருகுலம் முற்றிலும் மாறிவிட்டதை கண்டனர். குருவின் அறம் பொருள் இன்பம் முதலிய கல்வியை ஏற்காமல் பஜனை செய்துகொண்டு இருந்தனர். குருமார்கள் மிகவும் பதட்டமடைந்தனர். இப்படியே விட்டால் இவன் அசுர குலத்தையே கெடுத்து விடுவான். அரசர் நம்மை தண்டித்து விடுவார். என்று நினைத்து உடனே ஹிரணியகசிபுவிடம் சென்று தகவலை தெரிவித்தனர். தமக்கு பிடிக்காத பொறுக்கமுடியாத இச்செய்தி கேட்ட ஹிரணியகசிபுவின் ஆத்திரம் எல்லை மீறியது. அவன் சரீரம் வெட வெடத்தது. இனிமேல் இவனை விட்டு வைக்க கூடாது. கொன்று விட வேண்டும். என்று நினைத்தான். மனதையும் புலன்களையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவன் கைகள் கூப்பி தந்தையின் முன் நின்றிருந்தான். ஹிரணியகசிபு  அடிபட்ட பாம்பு போல சீறினான். பிரகலாதனை நோக்கி கடுமையாக பேசினான். முட்டாளே நீ எல்லை மீறி விட்டாய். நீ இந்த நிலைமையில் கெட்டுப்போனது போதாது என்று நமது மொத்த அசுரகுலத்தையும் அசுரகுல பிஞ்சுக்குழந்தைகளையும் உன் கொள்கைக்கு மாற்றிவிட துணிந்து விட்டாய். உனது திமிர் அதிகமாகிவிட்டது. நான் சற்றே கண் அசைத்தால் போதும்.தேவர்களும் லோகபாலகர்களும் அஞ்சி நடு நடுங்குவார்கள். அவ்வாறு இருக்க எந்த பலத்தை அல்லது தைரியத்தை வைத்து எனக்கு எதிராக செயல்படுகிறாய்? ஹிரணியகசிபு இவ்வாறு கேட்டவுடன் பிரகலாதன் பதிலுரைத்தான்.   

          “அசுரராஜாவே! பிரம்மாவிலிருந்து புல் பூண்டு வரை ஜீவராசிகள் எந்த பெரியோன் வசம் உள்ளனவோ உங்களையும் என்னையும் சேர்த்து உலகில் இருக்கும் பலவான்களுக்கும் பலவானாக எவர் உள்ளாரோ எவர் சர்வசக்தி படைத்த காலனாக இருக்கிறாரோ அவரே அனைத்து பிராணிகளுக்கும் மனோ பல தேக பலமாக புலன்கள் பலமாக உள்ளார். அவரே படைத்து காத்து பின்பு அழிக்கிறார். தந்தையே தங்கள் மனதை கட்டுப்படுத்துங்கள். அசுர குணத்தை துறந்து விடுங்கள். புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தாதவன் பத்து திக்குகளையும் ஜெயித்து என்ன பயன்?  மனதை கட்டுப்படுத்திய ஞானிக்கு எல்லா பிராணிகளும் சமமாக தெரிவார்கள்.ஹிரணியகசிபு மிகவும் கோபமாக பேசினான். – அறிவு கெட்டவனே போதும் உபதேசங்களை நிறுத்து. என்னை விட வீரன் சக்திபடைத்தவனும் இருக்கிறானா என்று பார்த்து விடுகிறேன். சர்வசக்திமான் எங்கும் நிறைந்தவன் என்று கூறுகிறாயே அவன் இதோ இந்த தூணில் இருக்கிறானா? உன் தலையை வெட்டி வீழ்த்துகிறேன் பார். நீ நம்பிக்கொண்டிருக்கும் அந்த ஹரி வந்து உன்னை ரட்சிக்கட்டும் பார்க்கிறேன். கோபத்தை கட்டுப்படுத்தமுடியாமல் கையில் வாள் எடுத்து சிம்மாசனத்திலிருந்து குதித்தான். தூனை முஷ்டியால் குத்தினான். அச்சமயம் தூணிலிருந்து பயங்கர சப்தம் வந்தது.

          பிரமாண்டமே வெடித்து விடுவது போல வந்த சப்தம் பிரம்ம லோகம் வரை கேட்டது. லோகபாலகர்கள் லோகம் வரை அதிர்ந்தது. பிரளயம் ஏற்பட்டு அழியப்போகின்றன என்று அஞ்சி நடுங்கினர். அசுர தளபதிகள் நெஞ்சை நடுங்க வைக்கும் சப்தம் வானை பிளந்தது.

          பகவான் எங்கும் நிறைந்தவர் என்று பிரகலாதன் சொன்னதை சத்தியமாக்க பகவான் திருஉள்ளம் கொண்டார். அந்த பெரும் சப்தத்துடன் தூண் இரண்டாக பிளந்தது. அதிலிருந்து பேரொளியுடன் ஒரு விசித்திர பயங்கர உருவம் வெளி வந்தது.    




நெஞ்சுக்கு மேலே சிங்கமாகவும் நெஞ்சுக்கு கீழே மனித உருவம் பெற்றிருந்தது. ஹிரணியகசிபு சப்தம் வந்த திசையை நோக்கினான். கண்களை கூசும் பேரொளி தான் முதலில் தெரிந்தது. பின்பு நரசிம்ம ரூபத்தை பார்த்தான். முதலில் நிச்சயம் செய்யமுடியாமல் பிரமித்து நின்றான். இதென்ன சிங்கமாகவும் இல்லாமல் மனித உருவமாகவும் இல்லாமல் கேள்விப்படாத விலங்கினமாக இருக்கிறதே என்று குழம்பிக்கொண்டு இருக்கும்போது கொலை வெறியுடன் நரசிம்ம பகவான் அவன் எதிரில் நின்றார். (தொடரும்)

 

 

 

    

 

 

        

            

 

Wednesday 21 August 2013

நரசிம்மாவதாரம்8

  
 
    
அகத்தூய்மை, புறத்தூய்மை இல்லாவிட்டாலும் அன்பு கலந்த பக்தி செய்தால் தாமாக அகத்தூய்மையும் புறத்தூய்மையும் ஏற்படும். பகவானை தரிசனம் செய்வதற்க்கும் அவர் திருவடிகளை அடைவதற்க்கும் பல வழிகள் இருக்கின்றன. அவர் திருநாமங்களை ஜபித்து, அவர் திருவிளையாடல்களை கேட்டு பக்தி செய்வது, யாக கர்மங்கள் மூலமாக ஆராதனை செய்வது, அல்லது கர்மங்களை அவருக்கே அர்ப்பணம் செய்வது, பூஜை செய்வது, பிராணாயாமம்,தியானம் ஆகிய யோக முறையில் பரமாத்மா சொரூபத்தை அறிவது முதலிய ஞான, கர்ம,பக்தி, யோக வழிகளில் அவரை அறியலாம்.
          பிரகலாதன் இவ்வாறு பாகவத விஷயங்களை சொல்லிக்கொண்டிருந்த போது அசுர மாணவர்கள் பிரகலாதனிடம் கேட்டனர். –“பிரகலாதா இந்த விஷயமெல்லாம் உனக்கு எப்படி தெரிந்தது? நீ பிறந்ததிலிருந்து அரசரின் அரண்மனையில் தானே இருக்கிறாய். அங்கு தாய் தந்தையரை தவிர எவரையும் அறியமாட்டாய். இங்கு குருகுலத்தில் ஆசிரியர்கள் குரு ஸ்வாமிகளை அறிவாய்.எங்களையும் அறிவாய். ஆனால் ஸ்ரீநாரதர் உனக்கு உபதேசம் செய்ததாக கூறுகிறாய். நாரதர் எப்போது உனக்கு பரமாத்ம ஞான உபதேசம் செய்தார்?”
          பிரகலாதன் கூறினான்: “நர நாராயணர்களிடம் பாகவத தர்மங்களை ஸ்ரீ நாரதர் உபதேசம் பெற்றார்.வேறு இடத்தில் பிரியம் செலுத்தாத பகவானையே சொத்தாக நினைக்கும் அடியார்களின் பாதகமலங்களை சேவித்தவருக்கே பகவானின் ஞானோபதேசம் கிடைக்கும்.
          தோழர்களே நாரதரிடம் நான் எப்படி உபதேசம் பெற்றேன் என்பதை கூறுகிறேன் கேளுங்கள். என் தந்தை தவம் செய்வதற்காக மந்திராசலம் சென்றிருந்தபோது தேவர்கள் அசுரர்களோடு போர் செய்தனர்.பாம்பை எறும்புகள் சேர்ந்து தின்று விடுவது போல ஹிரணியகசிபு செய்த பாவங்களே அவனை தின்று விட்டன. அவன் ஒழிந்தான். இனி இருக்கிற அசுரர்களையும் ஒழித்து விடுவோம். என்று கூறிக்கொண்டு அசுரர்களை நாசம் செய்தனர். ராஜ அரண்மனைக்குள் வந்து அனைவரையும் விரட்டி அடித்தனர். அவர்களை எதிர்க்க முடியாமல் பந்துக்களையும் நண்பர்களையும் குருமார்களையும் பற்றி கவலைப்படாமல் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள நான்கு திசைகளிலும் ஓடி ஒளிந்தனர். அச்சமயம் கதறிக்கொண்டிருந்த என் தாயை இந்திரன் பிடித்துக்கொண்டான். அப்போது நான் தாயின் கர்பத்தில் இருந்தேன். என் தாயை பிடித்துக்கொண்டு எங்கோ சென்று கொண்டிருந்தான். அச்சமயம் நாரதர் எதிரில் வந்தார். “இந்திரா இதென்ன செய்கை பிறன் மனைவியை பிடித்துக்கொண்டு போகிறாய்?இவள் என்ன தவறு செய்தாள்?” என்று நாரதர்  கேட்டார்.
          இந்திரன் கூறினான் நாரதரே உமக்கு தெரியாதா இவள் ஹிரணியகசிபுவின் மகனை கர்பத்தில் வைத்துக்கொண்டு இருக்கிறாள். ஹிரணியகசிபுவின் மகன் ஆபத்தானவன். அவன் பிறந்ததும் தந்தையை விட பலசாலியாக இருப்பான். அவ்வளவு தான் தேவர்கள் நாம் ஒழிந்தோம். என்றே நினைக்க வேண்டும். இவளை  கொண்டு போய் ஓர் மாளிகையில் வைத்து அசுர குழந்தை பிறந்தவுடன் அதை கொன்று விட்டு இவளை விடுவித்து விடுவேன் என்றான். அதற்கு நாரதர் சொன்னார். இந்திரா நீ தவறாக திட்டம் போடுகிறாய். நீ நினைப்பது போல பிறக்க போகிற பிள்ளை தீயவனாக இருக்க மாட்டான். இவன் ஸ்ரீ நாராயணனின் பரம பக்தனாக இருப்பான். தேவர்களுக்கு எதிரியாக மாட்டான். பகவானின் பக்தர்களுக்கே எடுத்துக்காட்டாக விளங்குவான். நாரதர் இவ்வாறு கூறியதும் தான் செய்த தவறை உணர்ந்து அவளை விமானத்தில் இருந்து இறக்கி விட்டான். என் மாதாவை வலம் வந்து வணங்கி விட்டு சென்று விட்டான். அநாதை போல் நின்ற என் தாயை ஆசுவாசப்படுத்தி நாரதர் தன் ஆசிரமத்திற்க்கு அழைத்துச்சென்றார். குழந்தை பிறக்கும் வரை அங்கேயே இருக்கச்சொன்னார்.
என் தாய் நாரதர் ஆசிரமத்தில் தங்கினாள். அங்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையாக இருந்தது. ஆசிரமத்தில் இருந்த தவசீலர்களும் பணிப்பெண்களும் நாராயணனை தொழுது கொண்டிருந்தனர். பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். ஆசிரமம் முழுவதும் தெய்வீகமும் அற்புத சாந்திமயமாக இருந்த சூழலில் என் தாய் மிகவும் மன அமைதி பெற்று சந்தோஷமாக இருந்தாள்.
          எனது தாய் என்னை வயிற்றில் சுமந்து கொண்டிருந்த காலத்தில் விஷ்ணு பகவானின் மகிமைகளையும் பாகவத தர்மங்களையும் பரமாத்ம ஞானத்தையும் உபதேசம் செய்தார். அந்த உபதேசங்கள் என் மனதில் இருந்து இப்போதும் நீங்கவில்லை. சிரத்தையுடன் கேட்பவர்கள் அதை மனதில் நிறுத்திக்கொள்ள முடியும். நீங்களும் சிரத்தையுடன் கேட்டால் மறக்க மாட்டீர்கள்.  
 (தொடரும்)
 
 
    
 
 
        
            
 

Monday 19 August 2013

நரசிம்மாவதாரம்7

 
ஹிரணியகசிபு கூறினான்.நீங்கள் இவனை மீண்டும் குருகுலம் அழைத்துச்சென்று துறவறம் விஷயத்தை தவிர்த்து செல்வச்சிறப்பு பெற்று இல்லறத்தில் வாழ்வது எப்படி என்று கற்றுக்கொடுங்கள். அறம் பொருள் இன்பம் இவற்றின் நன்மைகளை எடுத்துரைத்து பாடம் எடுங்கள்.” அப்படியே ஆகட்டும் என்று பிரகலாதனை குருகுலத்திற்க்கு அழைத்து வந்தனர். மீண்டும் கணிதம் அரசியல் சட்டம் பற்றி பாடம் கற்று தந்தனர்.
          ஒரு வேலை நிமித்தமாக குருமார்கள் வெளிதேசம் சென்றிருந்தபோது மாணவர்கள் அனைவரும் பிரகலாதனை விளையாட அழைத்தனர். ஆனால் பிரகலாதன் அவர்களை அமரச்செய்து ஆன்மீக சொற்பொழிவு நடத்தினான்.ஜனன மரண துக்கங்களை எடுத்து சொல்லி உபதேசம் செய்தான். நன்மை தீமை அறியாத பாலகர்களாக இருந்ததால் அவன் உபதேசங்களை சிரத்தையுடன் கேட்டனர்.
          பிரகலாதன் கூறினான்.-அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது.
பிறவாமை என்ற மோட்சத்தை அடைவதற்காகவே மானிடபிறவி கிடைக்கிறது. பகவான் அனைத்து பிராணிகளுக்குள் ஆத்மாவாக, நண்பனாக, அன்பனாக இருக்கிறார். மரணமும் நோயும் எப்போது வரும் என்று யாருக்கு தெரியும்? ஆதலால் சிறுவயதிலிருந்தே ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொண்டு ஹரியின் திருநாமங்களை ஜபித்து வழிபட வேண்டும். இகலோக சுகக்ஷேமங்கள் அடைவதற்க்கு தனியாக சிரமமேடுத்து ஏன் முயல வேண்டும்? அவையெல்லாம் தாமாகவே வந்து சேரும். மனிதன் வீணாக ஏன் தன்னை பற்றி கவலை படவேண்டும்? தன்னை அறியாமல் கணப்பொழுதில் ஆயுள் முடிந்து விடுகிறது. அதற்கு நமது ஆத்மாவை உயர் நிலைக்கு கொண்டு போகவேண்டாமா?
          குழந்தை பருவத்தில் ஓடி ஆடி விளையாடுவதில் நாட்கள் கழிந்து விடுகின்றன. வாலிப வயதில் செல்வம் திரட்டுவதில் மனைவிமக்களை பேணுவதில் காலம் கழிந்து விடுகிறது. அதிலும் இரவுப்பொழுது வீணாக கழிந்து விடுகிறது. வயோதிகம் வந்தவுடன் உடல் தளர்வடைந்து விடுகிறது. நோய்வாய்ப்பட்டு விடுகிறது. அந்த நிலையில் எந்த காரியமும் சாதிக்கமுடியாது. பகவானை வழிபட முடியாது. வாலிப வயதில் அனைவரும் செல்வத்திற்கு பின்னால் ஓடுகிறார்கள். பெரிய பெரிய ஆசைகளையும் லட்சியங்களையும் நினைத்துக்கொண்டிருப்பார்கள். தன் மகள்,சகோதரி திருமணவாழ்வு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற கவலையில் தன்னை பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
          பகவானை மகிழ்விக்க பக்தி செய்வது பெரிய கடினமான காரியமல்ல. தான் செய்த கர்மங்கள் அனைத்தையும் பகவானுக்கு சமர்ப்பணம் செய்து விட்டால் போதும். கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்து போகும்.அசுரர்களாகிய நீங்கள் அசுர குணங்களை விட்டோழித்து இரக்கம்,அன்பு முதலிய தெய்வ குணங்களுடன் இருங்கள். தேவர்கள் விஷ்ணுவை ஆராதித்து அமரர்கள் ஆகிவிட்டார்கள். அவ்வாறு நாமும் ஆராதித்தால் எல்லா மேன்மைகளும் அடைவோம். அவரை ஆராதிக்க மகிழ்விக்க யக்ஞம்,தானம் தவம் விரதங்கள் எல்லாம் போதுமானதல்ல. பக்தி இருந்தால் மட்டும் போதும்.  
  
 (தொடரும்)