இவ்வாறு சர்வ வல்லமை படைத்த ஆயிரம் கைகளுடய
கார்தவீரியார்ச்சுனன் கர்வம் கொண்டு மார்பில் வைஜயந்தி மலர் மாலை அணிந்து ஒரு நாள்
நர்மதா நதியில் மதம் கொண்ட யானை போல அழகான பல பெண்களுடன் ஜலக்கிரீடை செய்து
கொண்டிருந்தான். நதியின் பிரவாகத்தை ஆயிரம் கைகள் கொண்டு தடுத்து கரை கடந்து எதிர்
திசையில் ஓடச்செய்தான். சற்று தூரத்தில் இலங்கை வேந்தன் இராவணன்(சீதையை கவர்ந்து
சென்று ராமரிடம் போரிட்டு இறந்தவன்) கூடாரம் போட்டு தங்கி இருந்தான். திக் விஜயம்
செய்து கொண்டிருந்தபோது படைகளோடு அங்கு தங்கி இருந்தான். திடீரென நர்மதா பிரவாகம்
எதிர் திசை நோக்கி வெள்ளமாக பாய்ந்து ராவணனின் படைகளின் கூடாரங்களை தண்ணீரில்
மூழ்கடித்தது. வெள்ளப்பெருக்கின் காரணத்தை அறிந்தவன் அதை பொறுக்காமல்
கார்தவீரியார்ச்சுனனை கண்டபடி ஏசினான். போருக்கு அறைகூவல் விடுத்தான்.
ஆயிரம் கரங்கள் கொண்ட கார்தவீரியார்ச்சுனன் தம் கரங்களால்
அப்படியே லபக்கென்று பிடித்து தன் தலைநகரம் மாஹிஷ்மதிபுரிக்கு கொண்டு சென்று ஒரு
குரங்கை அடைப்பது போல அவனை சிறையில் அடைத்தான். அதன் பின் புலஸ்திய மகரிஷி
கேட்டுக்கொண்டதானால் கார்தவீரியார்ச்சுனன் ராவணனை விடுவித்தான்.
அத்தகைய
வீர பிரதாபங்கள் நிறைத்த கார்தவீரியார்ச்சுனன் ஒரு நாள் வேட்டைக்காக காட்டிற்குள்
சென்றவன் ஓர் அடர்ந்த காட்டிற்குள் நுழைந்து விட்டான். யதேட்சையாக அங்கு ஜமதக்னி
ரிஷி ஆசிரமத்தை கண்டான். மகா தபஸ்வி ஜமதக்னி முனிவர் கார்தவீரியார்ச்சுனனை மிக
மரியாதையுடன் வரவேற்றார். தம்மிடம் இருந்த காமதேனு நந்தினியின் தெய்வ சக்தியை
கொண்டு அரசனின் படைகளுக்கும் வாகனங்களுக்கும் விருந்து படைதார்.
கார்தவீரியார்ச்சுனன் தன்னையும் மிஞ்சி சீறும் சிறப்பும் ஐசுவர்யமும்
நிறைந்த ஜமதக்னி ரிஷி இருப்பதை பொறுக்காமல் காமதேனு நந்தினி தமக்கே
உரித்தாகவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஜமதக்னிரிஷி அதற்கு சம்மதிக்கவில்லை. மன்னன்
படைகளை ஏவி பலவந்தமாக காமதேனுவை இழுத்துச்சென்று மாகிஷ்மதிபுரியில் இருக்கும் தன்
செல்வம்மிக்க அரண்மனையில் போய் சேர்த்தான். சமித்துகளை சேகரிக்க காட்டிற்குள்
சென்ற பரசுராமர் ஆசிரமம் திரும்பிவந்தார். தாம் இல்லாத நேரத்தில்
கார்தவீரியார்ச்சுனன் காமதேனுவை பலவந்தமாக அபகரித்து சென்ற செய்தியை கேட்டு வெகுண்டெழுந்தார்.
கார்தவீரியார்ச்சுனனின் அடாத செயலை பொறுக்காதவர் மரம் வெட்டும் கோடாரியை
எடுத்தார். வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டார்.
மாகிஷ்மதிபுரியை நோக்கி பரசுராமர் வெள்ளமென பாய்ந்தார். பரசுராமர் மிக
அற்புதமாக பயங்கரமாக காட்சியளித்தார். பிராமண தவசிக்குரிய கருமான் தோல் உடுத்தி
ஜடாமுடி தரித்து சூரியன் போல தேஜஸ்படைத்து ஓடி வந்தார். அவர் வருகையை அறிந்த
ஆயிரம் கரத்தவன் பரசுராமரை கொல்வதற்காக வாள்,வில்,வேல்,அம்பு,சதக்னி, சக்தி ஆயுதங்கள் நிறைந்த
பயங்கரமான பதினேழு அக்குரோனி சேனைகளை அனுப்பினான்.
பரசுராமரின் வேகம் மனோவேகம் வாயு
வேகமாக இருந்தது. அவர் பயங்கரமாக போர் செய்து படைகளை தாக்கினார். சேனை வீரர்களும்
தேர் படைகளும் நொடிப்பொழுதில் வெட்டப்பட்டு நாசப்பட்டு தரையில் விழுந்தனர்.
வாகனங்கள் வெட்டுண்டு வீழ்ந்தன. வெட்டப்பட்ட மாவீரர்களின் கைகளும் தொடைகளும்
பூஜங்களும் பூமியில் சிதறி விழுந்தன. ரத்த ஆறு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
இந்த அதிசயத்தை கண்ட கார்தவீரியார்ச்சுனன்
தன் மானம் இழந்தவனாக பொங்கி எழுந்தான். தாமே போர் முனைக்கு சென்றான்.
கார்தவீரியார்ச்சுனன் தன் ஆயிரம் கரங்களில் ஐநூறு தனுசுகளை
பிடித்து அம்புகளை எய்தான். ஆயுத தாக்குதலில் வல்லவரான பரசுராமர் ஒரே வில்லில்
கணக்கற்ற அம்புகளை வீசி ஒரே நேரத்தில் எதிரில் வரும் அம்புகளை உடைத்தெறிந்தார்.
அதை கண்டு கார்தவீரியார்ச்சுனன் தன் ஆயிரம் கரங்களை கொண்டு மலைகளையும் மரங்களையும்
பெயர்த்து பரசுராமர் மீது எறிந்தான். பரசுராமர் மிக வேகமாக தன் கோடாரியால் அவனது
பாம்புகள் போல் இருந்த ஆயிரம் கரங்களை வெட்டிச்சாய்த்தார்.மலை சிகரம் போல நின்ற
கார்தவீரியார்ச்சுனன் தலையையும் வெட்டிச்சாய்த்தார். தந்தை இறந்து போனதை கண்டதும்
அவனது புதல்வர்கள் பயந்து ஓடி விட்டார்கள். பரசுராமர் இவ்வாறு
கார்தவீரியார்ச்சுனனை வென்று விட்டு காமதேனுவை மீட்டுக்கொண்டு ஆசிரமம் திரும்பி
வந்தார். தந்தை ஜமதக்னியிடமும் அண்ணான்மார்களிடமும் மாகிஷ்மதிபுரியில் தான் போரில்
சாதித்த சாதனைகளை விரிவாக கூறி முடித்தான்.
ஜமதக்னிமுனிவர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மிகவும்
வருத்தமுடன் கூறினார். “நீ பாவம் செய்து விட்டாய் பரசுராமா! நீ மாபெரும்
வீரன் தான். ஆனால் ஒரு மாமன்னனை நீ கொன்றிருக்க கூடாது. ஏனெனில் நாட்டின் மன்னன்
தெய்வத்திற்க்கு சமமானவன். மன்னனை கொன்றது மகா பாவமாகும். நாம் எல்லாம்
பிராமணர்கள். பொறுமையும் சாந்தியும் ஏற்று வாழ்வதனால் மக்களால் மதிக்கப்பட்டு
வாழ்கிறோம். சாந்த குணம் பெற்ற பிராமணர்கள் தெய்வத்தன்மையுடன் பிரகாசிப்பார்கள்.
ஸ்ரீ விஷ்ணு பகவான், மன்னிக்கும் மனப்பான்மை கொண்ட பொறுமைசாலி
பிராமணர்களையே அதிகம் விரும்புவார். மகனே ராஜாவை கொன்ற பாவம் மிகப்பெரிய பாவம். நீ
புனித திருத்தல யாத்திரை செய்து புனித நீராடி அந்த பாவத்தை போக்கி கொள்வாய்.
தந்தையின் சொல் கேட்டு பரசுராமர் அப்படியே ஆகட்டும் என்று கூறி தீர்த்த யாத்திரை
செய்ய புறப்பட்டார். பரசுராமர் புனித
திருத்தல யாத்திரை செய்து விட்டு ஒரு வருடம் கழித்து ஆசிரமம் திரும்பினார்.
ஒரு நாள்
பரசுராமரின் தாய் ரேணுகாதேவி பூஜைக்காக புனித நீர் எடுத்து வர கங்கை நதிக்கு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி
சற்றே அவரை நிலை குலைய வைத்தது.அங்கு கந்தர்வராஜன் சித்ரரதன் என்பவன் தாமரை மலர் மாலை
அணிந்து அப்சரஸ்களுடன் ஜலக்கிரீடை செய்து கொண்டு இருந்தான். தண்ணீர் எடுக்க குடத்துடன்
சென்ற ரேணுகாதேவி கந்தர்வராஜனின் ஒளி மிக்க தெய்வ தேஜசை கண்டு ஒரு கணம் ஸ்தம்பித்து
நின்றாள். பூஜைக்கு தாமதமாவதை நினைத்து தன் நிலை உணர்ந்து வெகு சீக்கிரமாக குடத்தில்
நீர் எடுத்து ஆசிரமத்திற்க்கு வந்து ஜமதக்னியின் முன் கைகூப்பி அஞ்சி நடுங்கி நின்றாள்.
ஜமாதக்னி முனிவர் தன் மனைவியின் சஞ்சலித்து விட்ட மனதை அறிந்து கொண்டார். அவர் கோபமாக
கூறினார். “புதல்வர்களே இந்த பாவப்பட்டவளை வெட்டுங்கள்.” என்றார். பரசுராமரின் அண்ணான்மார்கள்
ஏதுமறியாமல் திகைத்து நிற்க, பரசுராமர் தாயை கொல்வதற்காக கோடாரியை ஓங்க அண்ணன்மார்கள்
நடுவில் வந்தார்கள். ஆனால் பரசுராமர் தந்தையின் ஆணைப்படி அண்ணான்மார்களோடு சேர்த்து
தாயையும் வெட்டிக்கொன்றார். உடனே தமக்கு கீழ்படிந்த பரசுராமரை கண்டு மகிழ்ந்து போன
ஜமதக்னி கூறினார். “மகனே நீ விரும்புவதை கேள் தருகிறேன்” என்றார். (தொடரும்)