Friday, 5 April 2013

அஜாமிளன் 2

அவர்கள் விஷ்ணுவின் சேவகர்களை பார்த்து யார் நீங்கள்? தெய்வ புருஷர்கள் போல இருக்கிறீர்கள்! எங்களை ஏன் தடுக்கிறீர்கள்?இந்த பாவிக்காக பரிந்து கொண்டு எதையும் பேசமுடியாது என்றால் இவன் பஞ்சமா பாதகங்களை வாழ்நாள் முழுவதும் செய்திருக்கிறான்.யமதர்ம ராஜாவின் ஆணையை மீற நீங்கள் யார்?தன் பேரொளியால் இருட்டை போக்கி எங்கும் பிரகாசமாக்கி கொண்டு ஏன் வந்தீர்கள்?
           விஷ்ணு பகவானின் தூதர்கள் சிரித்து விட்டு மேகம் இடியோசை குரலில் பேசினார்கள்.—யம தூதர்களே நீங்கள் உண்மையிலேயே யமதர்மராஜாவின் ஆணைப்படி நடக்கிறீர்கள் என்றால் தர்மத்தின் சொரூபம் என்ன?அதன் தத்துவம் என்ன?தண்டனை யாருக்கு கொடுக்க வேண்டும்? பாவத்திற்க்கு பிராயசித்தம் செய்து விட்டவனுக்குமா தண்டனை தரப்படும்?இதற்குமுதலில் பதில் சொல்லிவிட்டு பிறகு இந்த ஆத்மாவை எடுத்து செல்லுங்கள் என்றனர்.
          யமதூதர்கள் பதில் அளித்தார்கள்-வேதங்களால் விதிக்கப்பட்ட கர்மங்களை செய்வதே தர்மம் என்றும் விதிக்கப்படாத தடுக்கப்பட்ட கர்மங்களை அதர்மம் என்றும் நிச்சயிக்கப்பட்டுள்ளன.எல்லாம் வல்ல இறைவனே வேத சொரூபமானவர்.வேதங்களே அவரது மூச்சு. தன்னோளி பெற்ற ஞானம்.அவரால் படைக்கப்பட்ட சாத்வீக ராஜச தாமச குணங்களை கொண்டு பொருள்களும் பிராணி வர்க்கங்களும் அவரை ஆதாரமாக கொண்டு உள்ளன.குணங்கள் காரியங்கள் ரூபம் அனைத்தும் வேதங்களால் வகுக்கப்படுகின்றன.இவ்வுலகத்தில் ஜென்மமெடுத்த ஜீவனால் மனதின் எண்ணங்களோடு செய்யப்படும் கர்மங்களுக்கு சாட்சியாக சூரியன்,அக்னி,ஆகாயம்,வாயு,புலன்கள்,சந்திரன்,சந்தியாகாலம்,இரவு,பகல்,திசைகள்,ஜலம்,பூமி,காலம்,தர்மம் இவையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றன.இவைகளால் அதர்மம் நிச்சயிக்கப்படுகிறது.அதற்கு தகுந்தாற்போல் தண்டனை நிச்சயிக்கப்படுகிறது.தேவ புருசர்களே ஒரு பிராணி அல்லது ஜீவன் எந்த கர்மத்தை செய்தாலும் அது அவரது குணத்தை அனுசரித்தே இருக்கும்.அதனால் எல்லோராலும் பாவமும் புண்ணியமும் செய்யப்படுகின்றன.தேகம் தரித்த எந்த ஜீவனும் கர்மம் செய்யாமல் இருக்க முடியாது.எவ்வளவு பாவமும் புண்ணியமும் செய்கிறானோ அதற்கு தக்கவாறு பரலோகத்தில் அந்த பலனை பெறுவான்.
சாத்வீகம் ,ராஜசம்,தாமஸம்,இந்த மூன்று குண பேதங்களால் இந்த லோகத்தில் மூன்று விதமான ஜீவன்கள் உள்ளன.ஒன்று புண்ணியம் செய்பவர்கள்,பாபாத்மாக்கள்,பாவம் புண்ணியம் இரண்டும் செய்பவர்கள்.அதற்க்கு தகுந்தாற்போல சுகமாகவும் துக்கமாகவும் சுகம் துக்கம் இரண்டும் கலந்து இருக்கிறார்கள்.பரலோகத்தில் சுக துக்கங்களை கூடுதலாக, குறைவாக பெற்றிருப்பார்கள்.எங்கள் ஸ்வாமி யமதர்மராஜா எல்லாம் அறிந்தவர்.பிறப்பற்றவர்.அவர் அனைவரது இதயங்களில் வீற்று இருக்கிறார்.சாட்சியாக பூர்வ கர்ம வினைகளையும் அறிவார்.எதிர்கால கர்ம வினைகளும் அறிவார்.
          தூங்கிக்கொண்டு இருக்கும் மனிதன் சொப்பனத்தில் இருக்கப்படும் சரீரத்தை மட்டும் உணர்ந்து அதை சத்தியமாக நினைக்கிறான்.விழித்த நிலையில் இருக்கும் சரீரத்தை மறந்து விடுகிறான்.   
அதுபோலவே அவன் இந்த ஜென்மத்தில் பூர்வ ஜென்ம ஞாபகங்களை மறந்து விடுகிறான்.தற்காலத்தில் பெற்ற சரீரத்தை தவிர முன் ஜென்ம விவரங்களையும் இனி நடக்கபோக்கும் விஷயங்களையும் ஜென்மங்களையும் அறிய மாட்டான்.தெய்வங்களே! ஜீவன் என்பவன் ஐந்து ஞானேந்திரியங்களுடன்(கண்,காது,மூக்கு,ரசனை,ஸ்பரிசம்)ஐந்து கர்மேந்திரியங்களுடன்(கை கால வாக்கு பாயு உபஸ்தம்)மனம் புத்தி நான் என்ற தன்மையுடன் (அகங்காரம்) கர்மங்களை செய்கிறான் அல்லது விதிக்கப்பட்ட சுக துக்கங்களை அனுபவிக்கின்றான்.சூட்சும சரீரம் மேற்சொன்ன புலன்ங்களோடு சேர்ந்தும் இருக்கும் (தொடரும்)  

Thursday, 21 March 2013

அஜாமிளன்

 
கான்யகுப்ஜ தேசத்தில் ஒழுக்கசீலமுள்ள ஒரு பிராமணன் இருந்தான்.சாஸ்திரங்கள் படித்து நற்குணங்கள் பெற்றிருந்தான்.மந்திரங்கள் படித்து சத்தியம் பேசும் நல்லவனாக குரு,அதிதி, அக்னி,பெரியோர்கள்,மாதா,பிதா ஆகியோரை சேவிப்பவனாக இருந்தான்.பரோபகார சிந்தனை பெற்றிருப்பான்.அதிகம் பேசமாட்டான்.இப்படிபட்டவன் பாதை தவறினான்.
ஒரு நாள் தந்தையின் ஆணைப்படி பூஜைக்காக தர்பையை பறித்து வர காட்டிற்க்கு சென்று இருந்தான்.அச்சமயம் ஒரு காட்சியை கண்டான்.ஒருவன் கள் குடித்து விட்டு ஒருபெண்ணுடன் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.அந்த பெண்ணும் குடித்து விட்டிருந்தாள்.அவள் அறைகுறை ஆடை அணிந்து ஆடிக்கொண்டிருந்தாள்.தினமும் மலர்கள் பறிக்க போகும்போது இந்த காட்சியை பார்த்துக்கொண்டே போவான்.ஒருநாள் திடீரென அந்த பெண் அஜாமிளனோடு சினேகிதமானால்.சில நாட்கள் கழிந்த பின் அந்த சிநேகிதம் பலப்பட்டது.
          அஜாமிளன் அந்த பெண்ணின் சந்தோசத்திற்காக ஆடை ஆபரணங்களை கொண்டு வந்து தந்தான்.நல்லவளான தன் சொந்த மனைவியை மறந்தான்.தன் இல்லத்தில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை அவளுக்கு பரிசாக அளித்தான்.தன் இல்லத்தில்  தந்தையோடு செய்யும் தெய்வவழிபாடுகளையும்,வேதபாராயணங்களையும் மறந்தான்.வைதீக கர்மங்களை துறந்தான்.தந்தையின் சொத்துக்களை அழித்தான்.மொத்தத்தில் அவளுக்கு அடிமையாகி தன் வீட்டிற்க்கு திரும்பாமல் அவளுடன் வாழ்க்கை நடத்த ஆரம்பித்தான்.அதனால் குழந்தைகள் பிறந்து குடும்பம் பெரிதானது.பிழைப்புக்கு காசு,பணம் இல்லாமல் போகவே அவன் திருட ஆரம்பித்தான்.தீய வழியில் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தான்.வழிப்போக்கர்களிடமும் யாத்ரீகர்களிடமும் கொள்ளை அடித்தான்.அல்லது பிறரிடம் கடன் வாங்கி ஏமாற்றுவான், சூதாடுவான்.இவ்வாறு தன் ஆயுளின் பெரும்பகுதி கடந்து விட்டது.அவன் 10 பிள்ளைகள் பெற்றான்.பத்தாவது மகன் மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தான்.எதற்கெடுத்தாலும் நாராயணா!நாராயணா! என்றுபெயரை சொல்லி கூப்பிடுவான். அவன் சாப்பிட்டால் இவனும் சாப்பிடுவான்.அவன் நீர் குடித்தால் இவனும் நீர் குடிப்பான்.அந்த சின்ன மகன் மீது உயிரயே வைத்திருந்தான்.தனது 88வது வயதில் காலன் தம்மை கொண்டு போக வந்ததை அறியாமல் இருந்தான்.
          
நோய்வாய் பட்டு மரணப்படுக்கையில் கிடக்கும்போது பாசக்கயிற்றை போட்டு இவன் சூட்சும உடம்பை இழுத்த சமயம் மரண அவஸ்தையில் அவன் சின்ன மகனை நினைத்து நாராயணா,நாராயணா என்று கரகரத்த குரலில் கத்தினான்.மரணத்தருவாயில் எவரோ நமது பகவானின் பெயரை சொல்லி அழைக்கிறார்கள் என்று நினைத்து விஷ்ணு பகவானின் நான்கு பார்ஷத சேவகர்கள் விஷ்ணுவை போலவே நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் தரித்திருப்பவர்கள் வேகமாக அஜாமிளன் படுத்திருக்கும் இடத்திற்க்கு ஓடி வந்தனர்.அங்கு பயங்கர கொடூர உருவம் கொண்ட யம கிங்கரர்கள் அஜாமிளனை நரகத்திற்க்கு இழுத்து போக முயன்று கொண்டிருந்தனர்.(தொடரும்)    

Saturday, 16 February 2013

கற்புக்கரசி சுகன்யா 2

சுகன்யா பதற்றமடைந்து செய்வதறியாது தவித்தாள்.இவர்களில் யார் என் கணவர் என்று அறியாமல் அஸ்வினி குமாரர்களையே சரணடைந்தாள்.தன் கணவர்  யார் என்று அடையாளம் காட்டச்சொல்லி வேண்டினாள்.அவள் கற்பைகண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்து அஸ்வினி குமாரர்கள் அவள் கணவர் சியவனரிஷியை (தேவகுமாரராக மாறிய)அடையாளம் காட்டிவிட்டு வானுலகம் சென்று மறைந்தார்கள்.
          சிலகாலம் கழிந்த பின் சுகன்யாவின் தந்தை தாம் செய்யப்போகும் யாகத்தை தலைமைதாங்கி நடத்திக்கொடுப்பதற்க்கு சியவனரிஷியின் ஆசிரமத்திற்க்கு வருகை தந்தார்.அச்சமயம் தம் மகள் பேரொளி படைத்த ஒரு வாலிபனோடு சிரித்து பேசிக்கொண்டிருப்பதை கண்டார்.அதனால் வருத்தமும் கோபமும் அடைந்தவர்,” உன்னை மகள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன்.உலகத்தவர் வணங்கும் சியவன ரிஷியை கிழவன்,எதற்கும் பிரயோஜனப்படாதவன்,என்று துறந்து விட்டு இந்த வாலிபனுடன் இருக்கிறாய்? நீ உயர் குடியில் (க்ஷத்திரிய)ராஜாவின் மகளாக இருந்தும் கற்புநெறி தவறிவிட்டாய். நீ தந்தையின் வம்சத்தையும்,கணவரின் வம்சத்தையும் நரகத்திற்க்கு கொண்டு போய் சேர்க்க வழி வகுத்துவிட்டாய்”அதற்கு சுகன்யா “தந்தையே நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்.இவர் உங்கள் மருமகன் சியவனரிஷி தான்” என்று கூறி வாலிப பருவம் கிடைத்த சங்கதியை விரிவாக கூறினாள்.அதனால் சந்தோஷமடைந்த சர்யாதி மகளை கட்டி அணைத்துக்கொண்டார்.
          சர்யாதி மன்னரின் யாகம் பிரமாதமாக தொடங்கியது.யாகத்தை நடத்தி வைக்கும் சியவனரிஷி மந்திரங்களை உச்சரித்து உரிய நேரத்தில் தாம் வாக்கு தந்தபடி அஸ்வினி குமாரர்களுக்கு சோமபானம் கிடைக்க செய்தார்.அதனால் கோபமடைந்த இந்திரன் வஜ்ராயுதமெடுத்து மன்னர் சர்யாதியை தாக்க வந்தான்.சியவனரிஷி தன் தபோபலத்தால் இந்திரனின் கையை ஸ்தம்பிக்க செய்து விட்டார்.வஜ்ராயுதமெடுத்து தாக்க வந்த கை அப்படியே செயலற்று நின்றது. அதன் பின் தேவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சியவனரிஷியை சமாதானப்படுத்தினார்கள்.,இனி யாகங்களில் சோமபான உரிமையை அஸ்வினி குமாரர்கள் பெறுவார்கள் என்று வாக்களித்தனர்.இந்திரனின் ஸ்தம்பித்த கை சரியானது.சர்யாதி தாம் செய்த சோமயாகத்தை சுபமாக முடித்தார்.
  

Friday, 15 February 2013

கற்புக்கரசி சுகன்யா

 
மனுவின் புதல்வர் சர்யாதி என்றொரு அரசர் நல்லாட்சி செய்து வந்தார்.அவர் வேதங்களை படித்து கரை கண்டிருந்தார்.அங்கிரஸ கோத்திர ரிஷிகளின் யாகத்தில் இரண்டாம் நாள் செய்ய வேண்டிய காரியங்களையும் மந்திரங்களையும் சொல்லித்தந்தார்.
         
 ஒரு நாள் சியவன ரிஷி ஆசிரமம் இருந்த காட்டிற்க்கு சென்று இருந்தார்.கூடவே தன் படைகளுடனும் மகள் அரசிளங்குமரியான சுகன்யாவும் விருப்பமுடன் வர இயற்கை எழில் ரசித்தபடி காட்டில் தாங்கினார்.சுகன்யா மரங்களையும் வனாந்திரத்தயும் ரசித்தபடி சியவன ஆசிரமம் வந்து சேர்ந்தாள்.அங்கு ஒரு கரயான் புற்று பெரிதாக இருந்தது.அதில் மின்மினி பூச்சி போல இரண்டு ஜோதி பிரகாசமுடன் தெரிந்தது.சுகன்யா குழந்தைதனமாக ஒரு குச்சி எடுத்து அந்த ஜோடிகளை குத்தினாள்.அதனால் அதிலிருந்து மிகையாக ரத்தம் வடிந்தது.அதன் விளைவால் படைவீரர்களின் சிறுநீரும்,மலமும் நின்று விட்டன.அரசன் பதற்றமடைந்து வினவினான்.இது என்ன கஷ்டகாலம்? உங்களில் யாராவது ஒருவர் சியவன ரிஷிக்கு குற்றமிழைத்தீரா?ரிஷியின் கோபத்திற்கு ஆளாகிவிட்டோம்.அச்சமயம் சுகன்யா நடந்ததை கூறினாள்.”தந்தையே நான்தான் கறையான் புற்றிலிருந்த ஜோதியை முனிவரின் கண் என்று தெரியாமல் குத்தி விட்டேன்.”
          அரசர் சியவன ரிஷியின் சாபத்திற்கு பயந்து ரிஷியை பணிந்து மன்னிப்பு கேட்டு (கண் தெரியாத) ரிஷிக்கு தன் மகளை மணம் முடித்து கொடுத்து தன்னயும் தன் நாட்டையும் காத்துக்கொண்டார்.
           சர்யாதி நாடு திரும்பியதும் சுகன்யா சியவன ரிஷிக்கு குறிப்பறிந்து சேவை செய்தாள்.அவர் மணம் கோணாமல் சிந்தை அறிந்து சேவை செய்தாள்.சில காலம் சென்றவுடன் சியவன ரிஷி ஆசிரமத்திற்க்கு தேவ மருத்துவார்களான  அஸ்வினிக்குமாரர்கள் இருவர் வந்தனர்.அவர்களை கண்டு  சியவனரிஷி கூறினார்.”நீங்கள் இருவரும் எதையும் சாதிக்க வல்லவர்கள்.என்னை பெண்கள் மனம் கவரும் கட்டழகனாக,வாலிபனாக மாற்றுங்கள்.யாகங்களில் உங்களுக்கு சோமரஸ பானம் அனுமதியில்லை என்பதை நான் அறிவேன்.இனிமேல் தேவர்,மானுடர்,ரிஷிகள் செய்யும் எல்லா யாகங்களிலும் சோமரஸ பானத்திற்க்கு தகுதி உள்ளவர்களாக செய்கிறேன்.அந்த உரிமையை உங்களுக்கு கிடைக்க செய்கிறேன்.” என்றார்.
          அஸ்வினி குமாரர்களும் அதற்க்கு சரி என்று ஒப்புக்கொண்டனர்.தொண்டு கிழவராக இருக்கும் சியவனரிஷியை அழைத்து வந்து அவர் கையை பிடித்து அஸ்வினி குமாரர்களும் சேர்ந்து சித்தர்கள் ஏற்படுத்திய ஒரு குளத்தில் மூழ்கினார்கள்.சியவனரும் அஸ்வினி குமாரர்களும் சேர்ந்து சித்தர் குளத்தில் மூழ்கி எழுந்தனர்.அச்சமயம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.மூவரும் ஒன்று போல பட்டாடை உடுத்தி பொன்னாபரணங்கள் அணிந்து ரத்தின கிரீடம் ஜொலிக்க தாமரை மலர் மாலையும் அணிந்து மூன்று தேவ புருஷர்கள் போல அதிசுந்தர புருசர்களாக வெளிவந்தனர்.  ஆனால் முக ஜாடையிலும் ஆடை அலங்காரங்களிலும் ஒன்று போல இருந்தார்கள். திடகாத்திர அங்கங்களுடன் ,சூரியதேஜசுடனும் பிரகாசமாக இருந்தார்கள்.
                                   (தொடரும்)   
  

Thursday, 31 January 2013

கங்கைபூமிக்கு வந்த கதை 2


 
சகர மன்னர் அந்த குதிரையை வைத்து யாகத்தை செய்து முடித்தார்.
அதன் பின் பேரன் அம்ஸுமானை அரசனாக்கி விட்டு கானகம் சென்று தவம் செய்து இறைவனடி சேர்ந்தார்.அம்ஸுமான் சில காலம் ஆட்சி புரிந்தார்.அதன் பின் தன் மகன் திலீபனுக்கு முடிசூட்டிவிட்டு காடு சென்று கங்கையை வரவழைக்க தவமிருந்தான்.தன் லட்சியம் நிறைவேறாமல் காலம் கடந்த பின் இறந்து போனான்.அம்ஸுமான் மகன் திலீபன் தன் மகன் பகீரதனை அரசனாக்கி விட்டு தந்தையை போலவே கங்கையை கொண்டுவரும் முயற்சியில் இறங்கினான்.கடுந்தவம் புரிந்து கொண்டிருந்தபோது அவன் ஆயுலும் முடிந்துவிட்டது.பகீரதன் வயோதிகம் வரும் முன் நேராக காடு சென்று மிகக்கடும் தவம் செய்தான்.
          அவன் தவத்தால் மகிழ்ந்து கங்காதேவி பிரத்யட்சமானாள்,”உனக்கு வேண்டிய வரத்தை கேள்” என்றாள். “தேவி நீங்கள் பூலோகத்திற்கு வந்து என் மூதாதயர்களை கடைத்தேற்ற வேண்டும்” என்றார்.அதற்க்கு தேவி கூறினாள்.-“அப்பனே நான் வருவதாக இருந்தால் நான் வானகத்திலிருந்து பூமியை நோக்கி பாய்ந்து வரும்போது என்னை எவராலும் தாங்க இயலாது.மேலும் ஒரு விஷயம்.நான் பூமியில் பெருக்கெடுத்து ஓடும்போது பாவிகளும் தூராத்மாக்களும் என் நீரில் மூழ்கி தம் பாவங்களை கழுவிக்கொள்வார்கள்.அந்த பாவங்களை நான் எங்கே போய் தொலைப்பேன் “என்றாள்.
          பகீரத மன்னன் பதில் கூறினார்.”தேவி வானகத்திலுருந்து
நீங்கள் பாய்ந்து வரும்போது உங்களை தாங்கிக்கொள்ள எல்லாம் வல்ல சிவபெருமான் இருக்கிறார்.நீங்கள் கவலைப்பட வேண்டாம்.கங்கை நீர் அசுத்தமாகாது.ஏனெனில் இக பர லோகங்களில் சுக போகங்களை துறந்த பற்றற்ற தர்மாத்மாக்களும்,பிரம்மத்தை அறிந்த ஞானிகளும் பரோபகாரம் செய்யும் நல்லவர்களும், பகவானின் தூய பக்தர்களும் கங்கை நதியில் நீராடினால் அந்த பாவப்பட்ட நீர் தூய்மை ஆகிவிடும்.ஏனெனில் இவர்கள் இதயத்தில் எங்கும் நிறைந்த நாராயணன் குடிகொண்டுள்ளார்” என்று பகீரத ராஜா கூற கங்கை பூமிக்கு வர சம்மதித்தாள்.பகீரதன் நான் இதோ சிவபெருமானை நினைத்து தவமிருந்தார்.ஆஷுதோஷ் என்று புகழ் பெற்ற சிவபெருமான் ஒரு வருடத்திற்குள் பிரத்யட்சமாகிவிட்டார்.பகீரதன் தாங்கள் என் மூதாதையர் உய்வதற்காக கங்காதேவியை தாங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்றார்.
         
 
கங்கை நீர் அசுர வேகம் கொண்டு வானகத்திலிருந்து பாய்ந்து வந்து சிவபெருமானின் சிரசில் விழுந்தது.கங்கையின் கர்வத்தை போக்க சிவபெருமான் கங்கை நீரை அடக்க தன் ஜடா முடியை எடுத்து இறுக்கமாக கட்டிக்கொண்டார்.ஜடாமுடியில் கங்கை வெளியேற முடியாமல் உள்ளே சுற்றி திரிந்தது.பகீரத மன்னன் சிவபெருமானை துதி செய்தான்.சிறு தாரையாக வெளியில் விட கேட்டுக்கொண்டான்.சிவபெருமான் அவ்வாறே செய்தார்.
          பகீரத மன்னன் ஒரு தேரில் ஏறிக்கொண்டான்.மன்னர் தேரில் வழி காட்ட கங்கை நீர் பின்னால் பிரவாகமெடுத்து வந்தது.நாடு,நகரம்,காடு,கிராமம்,அனைத்தையும் புனிதமாக்கிக்கொண்டு வந்தது. வழியில் ஜஹ்னு என்ற பேரரசன் யாகம் செய்து கொண்டு இருந்தான்.கங்கை அவ்வழியாக வந்தபோது யாகசாலைகள்,யாகமும்,வழிபாடு தலத்தையும் கங்கை நீரால் மூல்கடித்து அழித்தது.அதனால் கோபமடைந்த ஜஹ்னு  தன் யோகசக்தியால் கங்கை நீரை ஒரு சொட்டாக்கி குடித்து விட்டான்.இதை கண்ட பகீரத மன்னன் அவரை சமாதானப்படுத்தி விஷயத்தை கூறினார்.அரசன்  ஜஹ்னு சமாதானமடைந்து கங்கை நீரை காது வழியாக வெளியில் விட்டான்.பகீரதன் தேரில் பின்னால் சென்ற கங்கை நீர் பகீரதன் மூதாதயர் சாம்பலாக கிடந்த இடத்தில் நீரோட்டமாக பாய்ந்து சென்று அந்த சாம்பலை நீரில் மூழ்கடித்தது.உடனே சகர புத்திரர்கள் தேவஉரு பெற்று உயிர்த்தெழுந்து தேவலோகம் (வானுலகம்)சென்றடைந்தனர்.பகீரதன் நாடு அயோத்தியா திரும்பி நல்லாட்சி புரிந்தான்
 

Tuesday, 29 January 2013

கங்கை பூமிக்கு வந்த கதை

 
முன்னொரு காலத்தில் பாஹூகன்  என்ற அரசன் அயோத்யா நாட்டில் ஆட்சி செய்துகொண்டிருந்தான்.ஒரு சமயம் அண்டை நாட்டு பகைவர்களால் தோற்கடிக்கப்பட்டு காட்டிற்க்கு வந்தான்.காட்டில் அவன் மனைவியுடன் இருந்த சில நாட்கள் கழித்து இறந்து விட்டான். அப்போது அவன் மனைவி கர்ப்பமாக இருந்தாள். அவள் ஒளர்வரிஷி ஆசிரமத்தில் ஒரு மகனை பெற்றாள். ஒளர்வரிஷி அவனுக்கு சகரன் என்று பெயர் வைத்து போர் கலைகள் அனைத்தையும்கற்று கொடுத்தார்.சகரன் தந்தை ஆட்சி செய்த நாட்டிற்க்கு சென்று பகைவர்களை வென்று அரசனானார்.பாரதத்தை தாக்க வந்த தாலஜங்கர் சக்,யவனர் பர்பர முதலிய அந்நிய தேசத்து பகைவர்களை வென்று சகரன் சக்கரவர்த்தி ஆகிவிட்டார்.
          ஒருமுறை சகரன் அச்வமேத யாகத்தை தொடங்கினார்.அவனுக்கு சுமதி,கேசினி என்று இரு மனைவியர் இருந்தனர்.அச்வமேத யாகம் நெடுநாள் நீடித்தது.சகரன் நூறு யாகம் செய்து விட்டால் இந்திர பதவி அடைந்து விடுவான் என்ற பயத்தில் அச்வமேத யாக குதிரையை இந்திரன் திருடிச்சென்று விட்டான்.
           சகர ராஜா மூத்த மனைவி புத்திரர்களை அனுப்பி யாகக்குதிரையை கண்டுபிடித்து கொண்டுவர சொன்னார். சகரரின் அறுபதாயிரம் புதல்வர்களும் பூமியெங்கும் சென்று தேடினார்கள்.இறுதியில் பூமியை தோண்ட ஆரம்பித்தார்கள்.பூமியின் அதள பாதாளத்தில் தோண்டி விட்டார்கள்.இறுதியில் கபில முனிவரின் ஆசிரமத்தை கண்டனர்.கபில முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார்.அவர் பக்கத்தில் குதிரை மேய்ந்து கொண்டிருந்தது.சகர புத்திரர்கள் கூறினார்கள்.இதோ பார் குதிரையை திருடிவிட்டு ஏதும் அறியாதவர் போல கண் மூடி பாசாங்கு செய்து கொண்டிருக்கிறார்.இவரை கொன்றுவிட்டு குதிரையை கொண்டு செல்வோம் என்று கோடாரி கடப்பாறைகளால் அவரை கொல்ல வந்தனர். கபில முனிவர் ஒன்றும் அறியாது கண்களை திறந்தார்.அக்கணமே அனைவரும் எரிந்து சாம்பலானார்கள்.கபில முனிவர் பற்று பகையற்றவர்.ஆதலால் சகர புத்திரர்கள் தம் தீய எண்ணங்களால் எரிந்து விட்டனர்.
          குதிரையை தேடிப்போன புதல்வர்கள் திரும்பவில்லை என்று அறிந்த இளய மனைவியின் மகன் அசமஞ்ஜசன் மகன் அம்ஸுமானை குதிரையயும் அதை தேடபோன தன் புத்திரர்களையும் கண்டுபிடித்து அழைத்துவர அனுப்பினான். அசமஞ்ஜசன் பூர்வ ஜன்மத்தில் ஒரு சித்தன்.அவன் புத்தி சுவாதீனமில்லாமல் நடந்துகொள்வான்.அவன் ஒரு சித்த யோகி என்று அறியாது அவன் மகன் அம்ஸுமானை அனுப்பினான்.அவன் காடு மலை எல்லாம் தேடினான்.அவன் தந்தை மார்கள் பூமியை அதள பாதாளமாக தோண்டிவிட்டிருந்தனர்.அதில் மலை பெய்து கடலாக மாறிவிட்டதை கண்டான்.அதில் பயணம் செய்து இறுதியில் கபில முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான்.அங்கு குதிரை இருப்பதையும் பக்கத்தில் பெரிய சாம்பல் குவியலயும் கண்டான்.எல்லாவற்றயும் புரிந்து கொண்டவன் கபில முனிவரை துதி செய்தான்.
          “பகவானே உம்மை வணங்குகிறேன்:படைக்கும் கடவுள் பிரம்மாவாலும் மற்ற தேவர்களாலும் தாங்கள் சத்திய சொரூபமாக அறியப்படவில்லை.தாங்கள் சித்தர்களுக்கு யோகம் பயிலும் முறையை உபதேசித்துள்ளீர்கள்.சாங்கிய யோகம் என்ற யோக நூலை தந்து மோட்சம் அடைவதற்க்கு வழிகாட்டியிருக்கிறீர்கள்.விஷ்ணு பகவானின் அம்சாவதாரமான தங்கள் கோபத்தால் என் தந்தைகள் மாண்டு போகவில்லை.அவர்களது தவறான எண்ணமே அவர்களை பஸ்மம் செய்துவிட்டது” அம்ஸுமான் இவ்வாறு வேண்டிக்கொண்டதும் கபில முனிவர் கூறினார்.”எனக்கு எவரிடமும் கோபமில்லை,உன் தாத்தாவின் யாகக்குதிரையை கொண்டுசெல்வாயாக. கங்கை நீர் பட்டாலன்றி உன் சிறிய தந்தைகள் முக்தியடய மாட்டார்கள்.” கபிலர் இவ்வாறு கூறியதும் அம்ஸுமான் அவரை வலம் வந்து வணங்கி விட்டு குதிரையை எடுத்து சென்றான் (தொடரும்)

Friday, 11 January 2013

வாமன அவதாரம் தொடர்ச்சி 8

 
பிரகலாதன் கூறினார்: “விசுமனைத்தும் வணங்கும் பிரம்மதேவரால் பூஜிக்கப்படும் தாங்கள் பலி ஆட்சி செய்யும் சுதல லோகத்தில் கோட்டை காவல் தெய்வமாக இருப்பது பெரும் ஆச்சரியமான விஷயம்.ஏனெனில் அசுர ராக்ஷசர்கள் சுபாவத்திலேயே துஷ்டர்கள்.தர்ம நியாயத்தை அனுசரித்து இருக்கமாட்டார்கள். இவர்கள் மீது அனுக்கிரகம் செய்து அவர்கள் கோட்டைக்கு காவல்காரராக போய் விட்டீர்கள். பக்தர்களுக்கு எளிமையானவர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.”
பகவான் கூறினார்: “அப்பனே பிரகலாதா நீ உன் பேரனோடும் தன் இன பந்துக்களோடும் சுகமாக இருப்பாய்.அங்கு கதை வைத்து நான் காவல் இருப்பதை தரிசனம் செய்வாய்.எனது அருளால் உனது கர்ம பலன்கள் நாசப்பட்டு விடும்”.என்று கூறிவிட்டு சுக்கிராசரியாரை நோக்கி கூறினார்.
“ஆச்சாரியரே தாங்கள் சிஷ்யன் பலிக்காக யாகம் செய்து கொண்டு இருந்தீர்கள்.இனி அதில் குற்றம் குறை இருந்தால் அதை பூர்த்தி செய்து தாருங்கள்.பிராமணர்களின் அருளால் எந்த குறையும் தீர்ந்து விடும்.”
சுக்கிராசரியார் கூறினார்:” பகவானே தாங்கள் பார்வைபட்டவுடன் அங்கு குற்றம் ஏது?,குறை ஏது?தங்கள் அருளால் எல்லாம் சுபமாக முடிந்தது.என் சிஷ்யனுக்கு சுதலலோக ராஜ்யம் கிடைத்துவிட்டது. இதோ இந்த யாகத்தை பூர்த்தி செய்து விடுகிறேன்.என்று கூறி பலி ராஜாவுடன் சேர்ந்து யாகத்தை முடித்து கொடுத்தார்.