மத்ஸ்யம்
என்றால் மீன். மத்ஸ்யாசனம் போட்டு தண்ணீரில்(மல்லாக்க) நீந்தலாம். பத்மாசனத்தில்
கிடைக்கும் பலன்கள் அனைத்தும் இந்த ஆசனத்தில் கிடைக்கும். கழுத்து பகுதியில்
கொழுப்பு சேராமல் இருக்கும். மார்பு நுரையீரல் பலப்படும். ஜலதோஷம்,மூச்சிரைப்பு, டான்சில் எல்லாம் இருக்காது. இந்த
ஆசனத்தில் கழுத்து அழுத்தப்படுவதால் தாயிராட்,பைராதைராய்ட் வராமல் தடுக்கும்.
கேன்சரும் தடுக்கப்படும். அனாவசிய சுரப்பிகள் சுரக்காமல் உடலில் அசுத்தம் சேராமல்
இருக்கும். வயிற்றுக்கோளாறுகள் நீங்கும். சிறுகுடல், பெருங்குடல் வியாதிகள் குணமாகும்.
ஆசனவாய் குழாய் நன்கு செயல்படுவதால் மலச்சிக்கல் நீங்கும். அபான வாயு சீராகும்.
செய்முறை:
தூய
காற்றோட்டமான இடத்தில் கீழே விரிப்பு விரித்து அமரவேண்டும். வலது பாதம் இடது
தொடையிலும், இடது பாதம் வலது தொடை மீதும்
வைக்கவேண்டும். நன்கு ஒட்டினாற்போல் இருக்கவேண்டும். இரண்டு பாதங்களின்
குதிகால்கள் நாபியின் நேராக அடிவயிற்றை ஒட்டி இருக்கவேண்டும். பின் மெதுவாக முதுகை
கீழே வைத்து படுக்கவேண்டும். படக்கென்று படுக்க கூடாது. இரண்டு கைகளையும்
கட்டிக்கொண்டு தலைக்கு கீழே வைத்துக்கொள்க. தலையிலும் முழங்காலிலும் தேகத்தின்
முழுப்பாரம் இருக்க தேகத்தின் நடுப்பகுதியை மேலே உயர்த்திக்கொள்க. இடுப்புப்பகுதி
பூமியை தொடக்கூடாது. வயிற்றையும் மேல்நோக்கி எழச்செய்யவேண்டும்.
மத்ஸ்யாசனத்தை தினமும் ஒன்றிலிருந்து
மூன்று நிமிடம் வரை செய்யலாம். மெதுவாக நேரத்தை கூட்டிக்கொண்டு போகலாம். பின்பு
பத்து பதினைந்து நிமிடம் வரை செய்யலாம். பத்து பதினைந்து நிமிடம் வரை செய்தால்
நோய் குணமாவதற்கு நல்ல பலன் கிடைக்கும். இதை சர்வாங்காசனத்திற்கு பின் செய்தால்
மிகவும் நல்லது. அல்லது ஹலாசனமும் கர்ணபீடாசனமும் செய்பவர்கள் மத்ஸ்யாசனம் அவசியம்
செய்யலாம். சிலர் இரண்டு கைகளையும்
தலைக்கு கீழ் வைத்துக்கொள்ளாமல் இரண்டு கைகளால் கால் பெருவிரல்களை
பிடித்துக்கொள்வார்கள். மத்ஸ்யாசனத்தில் இதுவும் ஒரு வகையாகும். இந்த ஆசனத்தினால்
பூஜங்களிலிருந்து கைகள் வரை மிகவும் உறுதியாகும். மத்ஸ்யாசனத்திற்கு பின்பு சவாசனம்
அவசியம் செய்ய வேண்டும். சவாசனத்தில் உடல் அங்கங்களை தளர்வாக விட்டு கண்களை மூடி
மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும். இதனால் இறுக்கம் போகும்.
தடிமனான சரீரம் உள்ளவர்கள் பத்மாசனம்
போட முடியாது. வெறும் சம்மணமிட்டு இந்த ஆசனத்தை பழக வேண்டும். ஒருமாதம் நன்கு
பழகியபின் பத்மாசனம் போடவரும். ஆரம்பத்தில் இதை பதினைந்து நொடிகள் செய்யலாம்.
பலநாள் பயிற்சிக்கு பின் பத்து நிமிடம்
செய்யலாம். இந்த ஆசனத்தில் சுவாசம் இயல்பாக போகவேண்டும். பிராணாயாமம் தேவையில்லை.
தொடரும்