Monday, 21 July 2014

சர்வாங்காசனம்


சர்வாங்காசனம் தேகமெங்கும் உறுதியாக்குகிறது.இதில் முழு தேகத்தையும் மேல்நோக்கி வைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தில் மூளை,கழுத்து, இதயம் நலம் பெறுகின்றன. இதயம் சீராக இயங்குகிறது. அதாவது கால் பாதத்திலிருந்து ரத்த ஓட்டத்தை தலை வரை அனுப்பும் பழுவான வேலை குறைந்து இதயம் சுலபமாக துடிக்கிறது. அதனால் ஓய்வும் கிடைக்கிறது.
         இந்த ஆசனத்தால் நரைமுடி கறுப்பாகும். ஆறுமாதம் அப்யாசம்செய்தால் நிச்சயம் நரைமுடி கறுப்பாகும். கண் பார்வை தெளிவாகும். உடல் நடுக்கம், தலைவலி, ரத்த சோகை குணமாகும். ஞாபக சக்தி விருத்தியாகும். இந்த ஆசனத்தால் கழுத்தில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.அதில் சுத்த ரத்த ஓட்டம் நன்கு ஏற்படும். கழுத்து நரம்புகள் பலப்படும்.
          இந்த ஆசனத்தால் முதுகுத்தண்டு இறுக்கம் இல்லாமல் திட்டமாகும். சோர்வு நீங்கும்.மாபெரும் காரியங்களை செயலாற்ற திறமை உண்டாகும். முதுமையில் வரும் பலவீனம், சொப்பன தோஷம்,வீரிய தோஷம் எல்லாம் நீங்கும். பெண்களுக்கு கர்பப்பை கோளாறுகள் நீங்கும். ரத்த சுத்தி ஏற்படும். தோல் வியாதியும் குணமாகும். சிரசாசனத்திற்கு அடுத்தபடியாக இதன் பலன் கிடைக்கும். இதை முறையாக அப்யாசம் செய்தால் வயிற்று கோளாறுகள், ஈரல் நோய்கள் குணமாகும். மேலும் தொண்டைவலி(டான்சில்)கண்நோய், மலச்சிக்கல், தலைவலி, உடல் பலவீனம் எல்லாம் சரியாகும்.
ஆசனம் செய்யும் விதி:
கீழே ஜமுக்காளம் அல்லது கம்பளி போர்வையை விரித்துக்கொள்ளவேண்டும். அதில் நேராக படுக்கவேண்டும். இரண்டு பாதங்களை சேர்த்து வைத்துக்கொள்க. மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் தூக்கவேண்டும். மெல்ல மெல்ல மேல் தூக்கி இடுப்பில் தொண்ணூறு டிகிரி கொண்டு போக வேண்டும். நான்கு, ஐந்து வினாடிகள் மூச்சை அடக்கிய பின் இரண்டு கைகளால் இடுப்பை பிடித்து உடம்பை மேல்நோக்கி வைக்க வேண்டும். அச்சமயம் நெஞ்சுப்பகுதி முகவாய்க்கட்டையை ஸ்பரிசிக்க வேண்டும்.
          மேற்ச்சொன்ன நிலையில் மூச்சை அடக்கிக்கொண்டு இருபது நொடிகள் ஸ்திரமாக இருக்க வேண்டும். அச்சமயம் கழுத்திலிருந்து கால்கள் வரை நேர்கோடாக இருக்க வேண்டும்.  தேகத்தின் முழு பாரமும் கழுத்து தோள்பட்டை, கைகள் இவற்றில் இருக்க வேண்டும். பார்வை மூக்கு நுனியில் அல்லது பாதங்களின் பெருவிரலில் இருக்க வேண்டும். அச்சமயம் தேகமும் மனமும் ஆரோக்கியம், பலம் பெற்றிருப்பதாக நினைக்க வேண்டும். அதன் பின் மூச்சை விட்டுக்கொண்டு மெதுவாக கால்களை கீழே கொண்டு வந்து இடுப்பை பூமியில் வைத்து முன்பு போல இடுப்பிலிருந்து கால்களை தொண்ணூறு டிகிரிக்கு கொண்டு போக வேண்டும். கைகள் இரண்டையும் நீட்டி பூமியில் வைக்க வேண்டும்.மூன்று வினாடி அதே நிலையில் இருந்து கால்களை மெதுவாக பூமியில் நீட்டி வைக்க வேண்டும்.
          இந்த ஆசனம் செய்தவுடன் வேகமாக கால்களை கீழே கொண்டு வரக்கூடாது.அதனால் சுளுக்கு பிடிக்கும் அபாயம் உள்ளது. மெதுவாக கால்களையும்  உடம்பையும் மேல் நோக்கி தூக்க வேண்டும். அதே போல கீழே வைக்க வேண்டும். இந்த ஆசனத்தை மூன்று முறை செய்யலாம். இந்த ஆசனத்துடன் ஹலாசனமும் கர்ணபீடாசனமும் செய்ய விருப்பம் உள்ளவர்கள் சர்வாங்காசனத்தை ஒருமுறை மட்டும் செய்தால் போதும்.
          இந்த ஆசனத்தை ஒரு நிமிடத்திலிருந்து அதிகமாக செய்ய விருப்பம் உள்ளவர்கள் பிரணாயாமத்துடன் செய்ய தேவையில்லை. வேறு எந்த ஆசனத்தையும் செய்ய விரும்பாதவர்கள் இதை அரைமணி நேரம் வரை கூட செய்யலாம். ஆனால் ஆரம்பித்தவுடன் அதிக நேரம் செய்ய வேண்டாம். இருபது நொடியிலிருந்து ஆரம்பித்து இருபது நொடிகளாக கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும்.
          இந்த ஆசனம் செய்யும்போது கைகளை பூமியில் நீட்டிக்கூட வைத்துக்கொள்ளலாம். ஆனால் நெஞ்சோடு கழுத்து ஒட்டி இடுப்பு அதே நிலையில் தூக்கி இருக்க வேண்டும். இந்த நிலையை நன்கு பழக்கப்பட்டவர்களே செய்ய முடியும்.
                     சர்வாங்காசனத்தை செய்து கொண்டிருக்கும் போது நன்கு பழக்கப்பட்டபின் ஒவ்வொரு காலையும் மாறி மாறி முன்னால் நீட்டி மேல் கொண்டு போய் பயிற்சியும் செய்வார்கள். அல்லது இரண்டு கால்களையும் மாறி மாறி தலைக்கு பின்னால் கொண்டு போய் பூமியில் வைத்து அதன் பின் மேல்நோக்கி வைப்பார்கள்.
                        சர்வாங்காசனத்தை கர்ணபீடாசனம் போல செய்வார்கள். அதாவது வலது முழங்கால் வலது காதை ஸ்பரிசித்து பாதத்தை பூமியில் வைப்பார்கள். இந்த நிலை கர்ணபீடாசனம் போல வரும்.

          இந்த  சர்வாங்காசனத்தை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் பலவீன இதயம் உள்ளவர்களும் செய்யக்கூடாது. இந்த ஆசனம் செய்து முடித்தபின் அவசியம் சவாசனம் செய்யவேண்டும். அப்போது தான் நல்ல பலன் கிடைக்கும். 

No comments:

Post a Comment