நரசிம்மாவதாரம்
லோகங்களின் அதிபதி! பிரம்மதேவரே ஹிரணியகசிபுவின் தவத்தீ ஜ்வாலையால்
தகித்துக்கொண்டு இருக்கிறோம்.நீங்கள் படைத்த உயிர் வர்க்கம் சாம்பலாவதற்க்கு முன் ஏதாவது
செய்யுங்கள்.தாங்கள் எல்லாம் அறிந்தவர்.இருந்தும் ஹிரணியகசிபுவின் அபிப்பிராயத்தை தெரியப்படுத்துகிறோம்.
பகவானே அவனது
லட்சியம் என்னவென்றால் தாங்கள் பெரும் தவத்தாலும் யோகசக்தியாலும் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து
எல்லா லோகங்களுக்கும் மேலான சத்திய லோகத்தில் வீற்று இருக்கிறீர்கள்.அது போல தானும்
உலகங்களையும் ஜீவராசிகளையும் தன் வயப்படுத்தி உங்களது மேலான இடத்தை கைப்பற்ற நினைக்கிறான்.எனது
லட்சியம் நிறைவேறும் வரை ஓய மாட்டேன்,எத்தனை ஜன்மம் எடுத்தால் என்ன?காலத்திற்க்கு ஒரு முடிவில்லை.இந்த
ஆத்மாவும் நாசப்பட்டு போவதில்லை,யுகங்கள் கழிந்தாலும் என்றோ ஒருநாள் என் லட்சியம் நிறைவேறும்.
பாவ புண்ணிய
கர்மங்களின் சட்ட திட்டங்களை மாற்றி அமைப்பேன்.எப்போதும் இல்லாத நியதியை கொண்டு வரப்போகிறேன்.வைகுண்டாதி
லோகங்களுக்கு ஒருநாள் அழிவு ஏற்படத்தான் போகிறது.இவ்வாறு நினைத்துக்கொண்டு இருக்கிறான்.பிரபுவே
தாங்கள் விதித்த விதிகள் அவன் கைக்கு போய்விட்டால் நல்லவர்களும் தேவர்களான நாங்களும்
தொலைந்தோம்.
தேவர்கள் இவ்வாறு
வேண்டிக்கொண்டதும் பிருகு தட்ச பிரஜாபதி முதலிய பரிவாரங்களுடன் பிரம்மதேவர் அன்னவாகனத்தில்
ஹிரணியகசிபுவின் தவமியற்றும் ஆசிரமத்திற்க்கு சென்றார்.அங்கு அவர் கண்ட காட்சி ஹிரணியகசிபுவை
கரையான் புற்றும், புற்களும் மூங்கில் புதர்களுமாக மறைத்திருந்தன.அங்கிருந்த
எறும்புகளும் பூச்சிகளும் மாமிச மேதை,மஜ்ஜை எல்லாவற்றையும் கபளீகரம் செய்து
விட்டிருந்தன.மேகங்களால் மூடப்பட்ட சூரியன் போல புதர்களாலும் புற்று மண்ணாலும் மூடப்பட்டும்
தவத்தின் தேஜஸால் உலகங்களை தகித்துக்கொண்டு இருந்தான்.
அவனை கண்டு
பிரம்மதேவர் கூறினார்.”அப்பனே ஹிரணியகசிபு உனக்கு மங்களம் உண்டாகட்டும்.கச்யப முனிவர்
மகனே உன் தவம் சித்தி பெற்றுவிட்டது.தவத்தை விட்டு எழுந்து வா.தயக்கமின்றி என்ன வரம்
வேண்டுமோ அதை கேள்.என்னே உனது மனோ பலம்!அற்புதமான மனோதிடம் கொண்டவன் நீ.எறும்பு முதலிய
ஜந்துக்கள் உன் தேகத்தை தின்று விட்டன.அவ்வாறு இருந்தும் எலும்புக்கூட்டில் நீ பிராணனை
தக்கவைத்துக்கொண்டு இருக்கிறாய்.இது பேரதிசியம்!இப்படிப்பட்ட கடும் தவத்தை எந்த ரிஷியும்
செய்தது இல்லை.இனிமேல் எவரும் செய்யப்போவதும் இல்லை. தேவர்களின் நூறு வருடம் வரை (மனிதர்களின்
ஒரு வருட காலம் தேவர்களின் ஒரு நாள் ஆகும். அந்த கணக்குப்படி 36500 வருடம் வரை ) நீர்
அருந்தாமல் எவரால் உயிர் வாழ முடியும்? ஹிரணியகசிபு நீ மிக அரிதான செயலை தான்
செய்திருக்கிறாய்.உன் தவத்தால் யாம் உன் வசப்பட்டு விட்டோம்.அசுர சிரோமணி, நீ எதை வேண்டுமானாலும் கேள்.உன் விருப்பப்படி
எல்லாவற்றையும் தருவோம்,என் தரிசனம் வீண் போகாது”.
இவ்வாறு கூறிவிட்டு
பிரம்மதேவர் எலும்புக்கூடாக இருந்த சரீரத்தில் தன் கமண்டலத்தில் இருந்து தெய்வீக நீரை
தெளித்தார்.விறகு சுள்ளிகளுக்குள் புகைந்துகொண்டிருத்த நெருப்பு திடீரென பிரகாசமாக
வெளிப்படுவது போல புற்று மண் மூங்கில் புதருக்குள் இருந்து ஹிரணியகசிபு பேரொளியுடன்
தோன்றினான்.அச்சமயம் திடகாத்திர சரீரத்துடன் வாலிபனாக வந்தான்.அவனது அங்கங்கள் புது
பொலிவுடன் காணப்பட்டன.மனம் தெளிவு பெற்று புலன்களில் புதிய சக்தி சஞ்சரிக்க குரல் கம்பீரமாக இருந்தது.வஜ்ரம்
போல திட சரீரம் உருக்கிய பொன் போல பிரகாசித்துக்கொண்டு இருந்தது.அவன் ஆகாயத்தில் அன்ன
வாகனத்தில் தேவர்கள் புடை சூழ பிரம்மா இருப்பதை கண்டு அவரை சாஷ்டாங்கமாக பூமியில் விழுந்து
வணங்கினான்.(தொடரும்)