நரசிம்மாவதாரம்9
பரமாத்மாவின் காலத்தின் சக்தியால் எவ்வாறு மரங்களில்
மலர்கள் பூக்கின்றன. காய்க்கின்றன,பழமாக பழுத்தபின் தாமாக
விழுகின்றன. அது போல எல்லா ஜீவராசிகளும் பிறந்து வாழ்ந்து மடிகின்றன. ஆனால்
அவர்களின் ஆத்மா அழிவற்றது. மாறுதலாடயாதது. மாயையில் ஒட்டாது. பகவானின் அம்சமான
ஆத்மா பற்றுக்களை துறந்து பரமனில் இரண்டற கலக்க வேண்டும். அதற்கு தமக்குள்
இருக்கும் பரமாத்மாவை உணரவேண்டும். எவ்வாறு தங்கம் எடுப்பவர்கள் கல், மண் ஆகியவற்றை பிரித்து தங்கத்தை
மட்டும் எடுக்கிறார்களோ அவ்வாறு நிலையற்ற அழிந்து போகக்கூடிய விஷயங்களில் இருந்து
அந்த ஆத்ம ஜோதியை கண்டுபிடிக்கவேண்டும். சர்வசாட்சியாக இருக்கும் பரமனை உணர
வேண்டும். முதலில் பகவானை காண எளிய முறைகளை பின்பற்ற வேண்டும்.அவர்
திருவிளையாடல்களை கேட்கலாம்.திருநாமங்களை ஜபிக்கவேண்டும்.
தமக்கு பிடித்தமானவற்றை கொண்டுவந்து அவருக்கு படைத்து மலர்,வஸ்திர ஆபரணங்கள் சாற்றி பூஜிக்க
வேண்டும். இந்த முறை மிகவும் எளிமையானது. பக்தி பெருக்கில் மனமுருகி தொழுதால் கர்ம
வினைகள் அனைத்தும் ஒழிந்து விடும்.புண்ணியங்கள் செய்து மற்ற
லோகங்களுக்கு(இறப்புக்கு பின்) சென்றால் மீண்டும் இப்பூவுலகிற்கு திரும்பி வர நேரிடும். ஆனால் பகவானின்
திருவடிகளை அடைந்து விட்டால் பிறப்பேது? சோகம் ஏது?
சற்று
யோசித்து பாருங்கள். அரண்மனை வாசம் ,மனைவி, மக்கள், தனச்செல்வங்கள், வாகனங்கள், வேலையாட்கள், படைகள், மந்திரிகள், நண்பர்கள், சுற்றத்தார்கள், அறம் ,பொருள் ,இன்பம் இவற்றால் நமக்கு கிடைப்பது
என்ன? எல்லா விஷயங்களும் துக்கத்தில் முடிவடைகின்றன.
எந்த
ஜாதியில் எந்த இனத்தில் சேர்ந்தவராக இருந்தாலும் அன்பும் பக்தியும் இருந்தால்
பகவானை வசப்படுத்த முடியும். பிராமணராக இருக்கவேண்டும்,ரிஷியாக இருக்கவேண்டும் என்று
அவசியமில்லை. மேலும் அகத்தூய்மை, மனத்தூய்மை, சரீரத்தூய்மை, நல்லொழுக்கம் இவையெல்லாம்
இல்லாவிட்டாலும் எல்லாம் வல்ல சர்வ சக்திமான் அனைத்துயிர்களிலும் வீற்றிருக்கும்
சர்வாத்மா மீது பேரன்பு கொண்டு பக்தி செலுத்தினால் மேற்சொன்ன தூய்மை, ஒழுக்கமெல்லாம் தாமாகவே வந்து
விடும்.
பிரகலாதனின் கூற்றை கேட்டு சக மாணவ தோழர்கள் பிரகலாதன் கூறுவது சரிதான்
என்று யோசித்தனர். தர்க்கரீதியாகவும் யோசித்து பரஸ்பரம் பேசிக்கொண்டார்கள்.
பிரகலாதன் சொல்வது எப்படி சரியாக படுகிறதென்றால் இந்த தேவர்கள் அனைவரும் எப்போதும்
விஷ்ணு பகவானை பூஜித்துக்கொண்டு அவர் நிழலில் இருந்து அவரையே துணையாகக்கொண்டு
சகலவித மேன்மைகளையும் அடைகிறார்கள். அசுரர்களோடு போரிட்டுஅவர்களே ஜெயிக்கிறார்கள்.
இப்போது அசுரர்களை எப்படி ஒழிக்கவேண்டும் என்ற உபாயத்தை கேட்டுக்கொண்டு
இருப்பார்கள். பிரகலாதன் சொன்னது போல ஏன் நாமும் அவரை தொழுதுகொண்டு, பூஜித்துக்கொண்டு அவரை துணையாக
வைத்துக்கொண்டு இருக்க கூடாது? அவ்வாறு செய்தால் விஷ்ணுவின் துணைகொண்ட தேவர்களால்
நம்மை ஒன்றும் செய்ய முடியாது. என்று விஷ்ணு பக்தர்களாகி விட்டனர்.
வெளியூரிலிருந்து வந்த குருஸ்வாமிகள் குருகுலம் முற்றிலும் மாறிவிட்டதை
கண்டனர். குருவின் அறம் பொருள் இன்பம் முதலிய கல்வியை ஏற்காமல் பஜனை செய்துகொண்டு
இருந்தனர். குருமார்கள் மிகவும் பதட்டமடைந்தனர். இப்படியே விட்டால் இவன் அசுர
குலத்தையே கெடுத்து விடுவான். அரசர் நம்மை தண்டித்து விடுவார். என்று நினைத்து
உடனே ஹிரணியகசிபுவிடம் சென்று தகவலை தெரிவித்தனர். தமக்கு பிடிக்காத
பொறுக்கமுடியாத இச்செய்தி கேட்ட ஹிரணியகசிபுவின் ஆத்திரம் எல்லை மீறியது. அவன்
சரீரம் வெட வெடத்தது. இனிமேல் இவனை விட்டு வைக்க கூடாது. கொன்று விட வேண்டும்.
என்று நினைத்தான். மனதையும் புலன்களையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பவன் கைகள்
கூப்பி தந்தையின் முன் நின்றிருந்தான். ஹிரணியகசிபு அடிபட்ட பாம்பு போல சீறினான். பிரகலாதனை நோக்கி
கடுமையாக பேசினான். முட்டாளே நீ எல்லை மீறி விட்டாய். நீ இந்த நிலைமையில்
கெட்டுப்போனது போதாது என்று நமது மொத்த அசுரகுலத்தையும் அசுரகுல பிஞ்சுக்குழந்தைகளையும்
உன் கொள்கைக்கு மாற்றிவிட துணிந்து விட்டாய். உனது திமிர் அதிகமாகிவிட்டது. நான்
சற்றே கண் அசைத்தால் போதும்.தேவர்களும் லோகபாலகர்களும் அஞ்சி நடு நடுங்குவார்கள்.
அவ்வாறு இருக்க எந்த பலத்தை அல்லது தைரியத்தை வைத்து எனக்கு எதிராக செயல்படுகிறாய்? ஹிரணியகசிபு இவ்வாறு கேட்டவுடன்
பிரகலாதன் பதிலுரைத்தான்.
“அசுரராஜாவே!
பிரம்மாவிலிருந்து புல் பூண்டு வரை ஜீவராசிகள் எந்த பெரியோன் வசம் உள்ளனவோ
உங்களையும் என்னையும் சேர்த்து உலகில் இருக்கும் பலவான்களுக்கும் பலவானாக எவர்
உள்ளாரோ எவர் சர்வசக்தி படைத்த காலனாக இருக்கிறாரோ அவரே அனைத்து பிராணிகளுக்கும்
மனோ பல தேக பலமாக புலன்கள் பலமாக உள்ளார். அவரே படைத்து காத்து பின்பு
அழிக்கிறார். தந்தையே தங்கள் மனதை கட்டுப்படுத்துங்கள். அசுர குணத்தை துறந்து
விடுங்கள். புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தாதவன் பத்து திக்குகளையும்
ஜெயித்து என்ன பயன்? மனதை
கட்டுப்படுத்திய ஞானிக்கு எல்லா பிராணிகளும் சமமாக தெரிவார்கள்.ஹிரணியகசிபு மிகவும்
கோபமாக பேசினான். – அறிவு கெட்டவனே போதும் உபதேசங்களை நிறுத்து. என்னை விட வீரன் சக்திபடைத்தவனும்
இருக்கிறானா என்று பார்த்து விடுகிறேன். சர்வசக்திமான் எங்கும் நிறைந்தவன் என்று கூறுகிறாயே
அவன் இதோ இந்த தூணில் இருக்கிறானா? உன் தலையை வெட்டி வீழ்த்துகிறேன் பார்.
நீ நம்பிக்கொண்டிருக்கும் அந்த ஹரி வந்து உன்னை ரட்சிக்கட்டும் பார்க்கிறேன். கோபத்தை
கட்டுப்படுத்தமுடியாமல் கையில் வாள் எடுத்து சிம்மாசனத்திலிருந்து குதித்தான். தூனை
முஷ்டியால் குத்தினான். அச்சமயம் தூணிலிருந்து பயங்கர சப்தம் வந்தது.
பிரமாண்டமே
வெடித்து விடுவது போல வந்த சப்தம் பிரம்ம லோகம் வரை கேட்டது. லோகபாலகர்கள் லோகம் வரை
அதிர்ந்தது. பிரளயம் ஏற்பட்டு அழியப்போகின்றன என்று அஞ்சி நடுங்கினர். அசுர தளபதிகள்
நெஞ்சை நடுங்க வைக்கும் சப்தம் வானை பிளந்தது.
பகவான் எங்கும்
நிறைந்தவர் என்று பிரகலாதன் சொன்னதை சத்தியமாக்க பகவான் திருஉள்ளம் கொண்டார். அந்த
பெரும் சப்தத்துடன் தூண் இரண்டாக பிளந்தது. அதிலிருந்து பேரொளியுடன் ஒரு விசித்திர
பயங்கர உருவம் வெளி வந்தது.
நெஞ்சுக்கு மேலே சிங்கமாகவும் நெஞ்சுக்கு கீழே மனித உருவம் பெற்றிருந்தது.
ஹிரணியகசிபு சப்தம் வந்த திசையை நோக்கினான். கண்களை கூசும் பேரொளி தான் முதலில் தெரிந்தது.
பின்பு நரசிம்ம ரூபத்தை பார்த்தான். முதலில் நிச்சயம் செய்யமுடியாமல் பிரமித்து நின்றான்.
இதென்ன சிங்கமாகவும் இல்லாமல் மனித உருவமாகவும் இல்லாமல் கேள்விப்படாத விலங்கினமாக
இருக்கிறதே என்று குழம்பிக்கொண்டு இருக்கும்போது கொலை வெறியுடன் நரசிம்ம பகவான் அவன்
எதிரில் நின்றார். (தொடரும்)