Tuesday, 2 December 2014

தனுராசனம்


வில்லை போல் வளைப்பதே தனுராசனம் எனப்படுகிறது. இது அதிக பலன் தரும் ஆசனங்களில் ஒன்று. இதில் கழுத்து, தலை,மார்பு இவற்றை மேல் தூக்குவது போல இடுப்பிலிருந்து கீழ் அங்கங்களும் மேல் தூக்கப்படுகிறது. இதனால் கழுத்து பலமாகிறது. தொண்டை நோய் குணமாகிறது,மார்பு விரிவாகிறது. தசைகள் பலப்படுகின்றன. நுரையீரல் ஆரோக்கியமும் உறுதியும் ஆகின்றன. முதுக்குத்தண்டு பின்னால் வளைவதால் அதில் இறுக்கம் மறைகிறது. முதுக்குத்தண்டு எலும்புகளும் நரம்பு மண்டலங்களும் நன்கு செயல்படுகின்றது. இந்த ஆசனத்தினால் தோளிலிருந்து கைவரை தொடைகள் எல்லாம் இழுக்கப்படுகின்றன.
அதனால் சுத்த ரத்தம் பாய்ந்து ஆரோக்கியம் கிடைக்கிறது.
          தனூராசனத்தினால் ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்கின்றன. இதை செய்பவர்கள் பிரத்யாசமாக உணர்வார்கள். மாந்தம், ருசியின்மை, கேஸ்(அபான வாயு போகாமல் இருப்பது.) மலச்சிக்கல் எல்லாம் நாசப்பட்டு போகின்றன. இதனால் சரீரம் லேசாக உணரப்படும். இரைப்பை ஜீரணசக்தி அதிகமாகும். வயிற்றில் இருக்கும் கொழுப்பு, தொடியில் இருக்கும் தடிமன் எல்லாம் மறைந்து போகும். மொத்தத்தில் கொழுப்பு சத்து குறைந்து போகும். நல்ல சுரப்பிகள் வேலை செய்யும். ஆயுளும் அறிவும் வளரும். காமம் கட்டுப்படும். மேலும் கணயம் ஆரோக்கியம் ஆவதால் சர்க்கரை வியாதி குணமாகும். உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். சிறுநீர் உபாதைகள் நீங்கும். நரம்பு மண்டலம் பலமாகும். வாத நோய்கள் குணமாகும். பெண்களுக்கு கர்பப்பை உறுதியாகும். அதனால் இந்த ஆசனம் பாலகர், இளைஞர், முதியவர், பெண்கள் அனைவருக்கும் ஏற்றது.
          இந்த ஆசனத்தில் சர்ப்பாசனமும்,சலபாசனமும் கலந்திருப்பதால் அவ்விரு ஆசனங்களின் பலன்களும் கிடைக்கின்றன.
          ஆசனம் செய்யும் முறை:
          பூமியில் போர்வை விரித்து அதன் மேல் வயிறும் நெஞ்சும் படும்படி(குப்புற)கால்களை நீட்டி படுக்கவேண்டும். கைகள் இரண்டையும் முதுகுபக்கம் பின்னால் மடக்கி முழங்கால்களையும் பின்னுக்கு மடக்கி கைகளால் கால்களை பிடிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை இழுத்துக்கொண்டு கழுத்து, தலை, தொடை, முழங்கால் ஆகியவற்றை மேல்நோக்கி விறைத்து வைக்க வேண்டும். எவ்வளவு அதிகபட்சம் இருக்க வேண்டுமோ அவ்வளவு அப்படியே இருக்க வேண்டும். மூச்சை அடக்கும் வரை நடுப்பகுதி அடியில் இருக்க சரீரத்தின் முழுப்பாகமும் மேல்நோக்கி ஸ்திரமாக வைக்க வேண்டும். அச்சமயம் இரண்டு முழங்கைகளும் மடக்காமல் நேராக இருக்க வேண்டும். தலை மேல்நோக்கி இருக்க பார்வை எதிர்பக்கம் இருக்க வேண்டும். முழங்கால்களும் குதிகால்களும் சேர்ந்து இருக்க வேண்டும். அதன்பின் அடக்கிய சுவாசத்தை மெதுவாக விட்டுக்கொண்டு (படக்கென்று இல்லாமல்) மிக மெதுவாக கை,கால், தலைகளை பூமியில் வைக்க வேண்டும். அதன் பின் சவாசனம் போட்டுக்கொள்ளலாம்.
          மேற்சொன்னவாறு இந்த ஆசனத்தை ஒன்றிலிருத்து மூன்று நான்கு முறை பிரதி தினமும் செய்ய வேண்டும்.  அதற்கு மேலும் கூட்டிக்கொண்டே போகலாம். சிறிது சிறிதாக ஒவ்வொரு வாரமும் ஐந்து ஐந்து நொடிகளாக கூட்டிக்கொண்டுபோய் ஒரு நிமிடம் வரை மூச்சை அடக்கிக்கொண்டு ஆசனத்தில் ஸ்திரமாக இருந்து அப்யாசம் செய்ய வேண்டும். சரீரம் பெருத்திருப்பவர்கள் தொடை, முழங்கால், குதிகால் முதலியவற்றை சேர்த்து வைக்க முடியாது. அவ்வாறு இருக்கும்போது எளிதாக மடக்க வரும்வரை இரண்டு முழங்கால்களையும் ஒன்றரை அடி தூரத்தில் வைத்துக்கொண்டு அப்யாசம் செய்க. எளிதாக படிப்படியாக ஆகும்போது முழங்கால்களின் நடு தூரத்தை (குறைத்துக்கொண்டே வரலாம்).
          சுவாசத்தை அடக்க கடினமாக இருந்தால் இயல்பாக சுவாசிக்கலாம். தனுராசனம் எளிதாக போட ஆரம்பிக்கும்போது மூச்சை நிறுத்தி செய்யலாம். படபடப்பாக துடிக்கும் பலவீன இதயம் உள்ளவர்களும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்ய கூடாது. அதுபோல பெப்டிக் அல்சர் உள்ளவர்கள், ஹார்னியாவால் பீடிக்கப்படுபவர்களும் செய்யக்கூடாது. குடல் டி‌பி உள்ளவர்களும் கண்ட மாலை உள்ளவர்களும்(தொடைகட்டி) இதை செய்ய கூடாது. மேற்சொன்ன நோயாளிகளைதவிர மற்ற அனைவரும் செய்யலாம்.   தொடரும்)        

          

Monday, 1 December 2014

சர்ப்பாசனம்

     


          இந்த ஆசனத்தில் நாபியிலிருந்து மேல்பாகம் தூக்கப்படுவதால் படமெடுத்த பாம்பு போல இருக்கும். அதனால் இதை  சர்ப்பாசனம் என்று கூறுவார்கள். இதை பூஜாங்காசனம் என்றும் கூறுவார்கள். இந்த ஆசனத்தால் பசி அதிகம் உண்டாகும். முதுக்குத்தண்டு பலப்படும். இரைப்பை தசைகள் முதுகுத்தசைகள் அழுத்தப்படுவதால் அவை உறுதிபெற்று விடும். இடா நாடியும் பிங்கலா நாடியும் முதுகுத்தண்டின் இருபக்கமும்  போவதால் அதில் செயலாக்கம் உண்டாகும். இதனால் குண்டலினி சக்தி எழும். இது பிரமாச்சரியத்திற்க்கு உகந்த ஆசனமாகும். சுக்கிலாசயம் பலப்படும். பெண்களுக்கு இந்த ஆசனம் மிகவும் உகந்தது. கற்பபை உறுதியாகும். ஆரோக்கியமாக இருக்கும். மாதவிலக்கு சம்பந்த்தப்பட்ட கோளாறுகள் (சீரற்ற இரத்தப்போக்கு, அதிக இரத்தபோக்கு)எல்லாம் சரியாகிவிடும்.
          இந்த ஆசனம் சிறுநீரகத்திற்க்கும், குடலுக்கும் நல்ல பலன் தரும். கழுத்து, மார்பு, வயிறு, இடுப்பு, தோள்கள்,கைகள் ,தொடைகள்,கைவிரல்கள் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். கழுத்தில் கண்டமாலா என்ற நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
          செய்முறை:
                    கீழே ஜமுக்காளத்தை விரித்து அதில் குப்புறப்படுத்து இரண்டு கைகளையும் மார்பின் இருபக்கம் வைத்து பூமியில் ஊன்ற வேண்டும். சரீரத்தின் அனைத்து பகுதிகளும் தளர்வாக வைக்க வேண்டும். நெற்றியை பூமியில் வைத்த பின் இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து நீட்ட வேண்டும். பின்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நீட்ட வேண்டும். இதை படக்கென்று செய்யக்கூடாது. தலையை மேலே தூக்கும்போது மார்பு பூமியில் பதிந்திருக்க வேண்டும். அதன்பின் முதுகை பின்னால் வளைத்து மெதுவாக மார்பை மேலே தூக்க வேண்டும். நாபியிலிருந்த்து கால் வரை எல்லா பகுதியும் பூமியில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பத்து பதினைந்து நொடி வரை உள்ளே சுவாசத்தை அடக்கி வைத்திருக்கும் நிலையில் அப்படியே இருக்க வேண்டும். சுவாசத்தை விடும்போது மார்பும் தலையும் கீழே குனிய வேண்டும்.
          இந்த ஆசனம் மூன்றிலிருந்து எழுமுறை செய்யலாம். ஆரம்பத்தில் ஐந்து அல்லது பத்து நொடி அப்படியே இருக்கலாம். மெதுவாக அப்யாசம் செய்த பின் ஒரு நிமிடம் சுவாசத்தை அடக்கி அப்படியே இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை செய்ய முடிந்த வரை செய்து விட்டு கண்கள் மூடி சவாசனம் போட்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும்.
          சிலர் இந்த சர்பாசனத்தில் இரண்டு கைகளையும் பூமியில் ஊன்றாமல் இடுப்புக்கு கீழே வைத்து நாகப்படம் எடுப்பது போல தலையையும் மார்பையும் நிமிர்ந்து வைத்து செய்வார்கள். இது மிகவும் கடினமானது. இப்படி செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. காலையிலும் மாலையிலும் இந்த ஆசனத்தை ஐந்து நிமிடம் வரை செய்யலாம்