Sunday, 24 June 2012

மரணமில்லா பெருவாழ்வு தொடர்ச்சி 1

குற்றம் ஒன்றும் இல்லாத கோவிந்தன் என்று பாடப்படும் விஷ்ணு பகவானிடம் சகல வித மங்கலமயமான நற்குணங்களும் நித்யவாசம் செய்கின்றன.ஆனால் அவரோ என்னை விரும்பாதவர் போல இருக்கிறார்.அணிமாதி அஷ்ட சித்திகளும் அவரையே விரும்புகின்றன.எல்லாம் வல்ல இறைவனுக்குண்டான அஷ்ட ஐஸ்வர்யங்களும் கூடி இருக்கும் அவரோ பற்று பகயற்றவராக இருக்கிறார் என்று நினைத்து லக்ஷ்மி தேவி இவரே எனக்கு தகுந்த மணாளன் என்று மணமாலையை விஷ்ணு பகவான் கழுத்தில் சூட்டினாள்.  புன்னகயித்து நாணமுடன் காதல் கலந்த கடை கண்களால் ஸ்ரீனிவாசனை நோக்கி அவர் திருமார்பில் சென்று அமர்ந்தாள். உலக மக்கள் யாவரும் நலமும் வளமான வாழ்வும் பெற தன் அருள் பார்வையால் நோக்கினாள். உடனே தேவ துந்துபிகள் மிருதங்கள் முழங்கின.வீணா வேணுகான இசை ஒலித்தது.தேவர்கள் பூ மாரி பொழிய அப்சரஸ்கள் நடனமாட சப்தரிஷிகள் வேத மந்திர கோசம் ஒலிக்க லக்ஷ்மி தேவியின் கருணையும் அருளும் நிறைந்த பார்வை பட்டு எங்கும் அமைதியும் சந்தோசமும் பரவியது.கோபமும்,பேராசையும், பொறாமையும் குடி கொண்டுள்ள அசுரர்களை அலட்சியம் செய்தாள்.
            அதன் பின் அனைவரும் சேர்ந்து மீண்டும் கடலை கடைய ஆரம்பித்தார்கள்.திடீரென கடலில் இருந்து ஒரு தெய்வ புருஷன் தோன்றினான்.அகன்ற மார்புடன் வலிமை பொருந்திய தோள்கள் பெற்றிருந்தான்.தாமரை இதழ் போன்ற கண்கள் ஓரம் சிவந்து கழுத்து சங்கு போலிருந்தது.சியாமளா வன்னத்திருமேனியில் தெய்வ மலர் மாலை மணம் வீச மாணிக்க குண்டலங்கள் ஆட இளமை ததும்பும் கட்டழகுடன் சிங்க நடை போட்டு பட்டாடை ஆபரணங்கள் ஜொலிக்க உறுதியான நீண்ட கரங்கள் கொண்டு அமிர்த கலசம் ஏந்தி வந்தான்.இவனே விஷ்ணு பகவானின் அம்சமாக சித்த,ஆயுர்வேத மருத்துவத்தை உலகிற்கு தந்த தன்வந்திரி என்று புகழ் பெற்றவன்.யக்ஞங்களில் யாக பாகம் ஏற்பவன்.தன்வந்திரி அமிர்த கலசம் ஏந்தி வருவதை கண்டு அசுரர்கள் விரைந்து சென்று அமிர்த கலசத்தை தன்வந்திரியிடமிருந்து பலவந்தமாக பறித்துக்கொண்டனர்.முன்பே சமுத்திரத்தில் இருந்து கிடைத்த அனைத்து பொருட்களும் தமக்கே வந்து சேர வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.ஆனால் அப்படி நடக்கவில்லை.அசுரர்களிடம் அமிர்த கலசம் சிக்கி கொண்டவுடன், தேவர்கள் மிகவும் வருத்தமுற்றனர்.பகவானை சரண் அடைந்தனர்.பகவான் கூறினார்.கவலைப்பட வேண்டாம்.அவர்களுக்குள் ஒற்றுமை குலைந்து சண்டை சச்சரவுகள் நடக்கும்.அச்சமயம் நான் உங்களுக்கு துணை புரிந்து அமிர்தத்தை உங்களுக்கே கிடைக்க செய்கிறேன்.            பகவான் கூறியபடியே அமிர்த கலசத்தை அசுரர்கள் ஒருவருக்கொருவர் பிடுங்கி கொண்டார்கள்.இயலாமையால் சில அசுரர்கள் நியாயம் பேசினார்கள்.தேவர்களும் நமக்கு சமமாக தானே அமிர்தம் எடுக்க உழைத்தார்கள்.அவர்களுக்கும் இதில் உரிமை உண்டு என்றார்கள்.


நான்,நீ என்று சண்டை சச்சரவுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஓர் அழகான பெண் தோன்றினாள்அவளது ஒவ்வொரு அங்கங்களில் இருந்தும் பிரகாசமான ஒளி வீசி ஜொலித்துக்கொண்டு இருந்தது.புதிதாக இளமை பருவம் அடைந்த மங்கை போல பொன் வைர மாலை அணிந்து மயக்கும் கண் விழி அழகால் காந்தம் போல் அசுரர்களை கவர்ந்தாள்.அழகிய கேசத்தில் முல்லை மல்லிகை சரம் சூடி ஒரு தெய்வீக மணம் கமழ வளம் வந்தாள். இடை ஆபரணம் அணிந்த இடையில் மெலிந்த இடையில் மெல்லிசான பட்டு உடுத்தி கால் கொலுசு கொஞ்சுவது போல ஒலிக்க புருவங்கள் நெளிந்து காதல் பார்வையால் தன் வசப்படுத்திக்கொண்டு அசுரர்களை நோக்கி வந்தாள்.            சொந்த பந்தங்களை பொருட்படுத்தாமல் அமிர்த கலசத்தை பறித்துக்கொண்டு கொள்ளை கூட்டத்தார் போல சண்டையிட்டுக்கொண்டு இருந்த போது ஒளி வீசும் தேவதை போல ஒரு பெண் வந்து நிற்க கண்டனர்.மயக்கும் அழகில் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தனர்.சண்டையை நிறுத்திவிட்டு கூறினார்கள்.            உவமையற்ற சௌந்தர்யம் படைத்த பெண்ணே நீ யார்?ஒளி சிந்தும் உந்தன் மயக்கும் பேரழகை தேவர்,சித்தர்,கந்தர்வ,சாரண,அசுர பெண்களிடமும் நாங்கள் கண்டதில்லை.நீ யார் மகள்?எங்கிருந்து வந்தாய்?சுந்தரி நாங்கள் அனைவரும் கஷ்யப புத்திரர்கள்.அசுர ராக்ஷச சகோதரர்கள்.பங்காளிகள்.நாங்கள் மிகுந்த சிரமப்பட்டு கடலை கடைந்து இந்த அமிர்த கலசத்தை பெற்று இருக்கிறோம்.நீ நல்லவளாக நியாய தர்ம பிரகாரம் பாரபட்சமில்லாமல் பங்கிட்டு தருவாயா?உன்னிடம் அமிர்தக்கலசத்தை தருகிறோம்.அசுரர்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டதும் விஷ்ணு பகவான் அவதாரம் எடுத்த மோகினி வெகு அழகாக சிரித்தாள்.கடைக்கண் பார்வையால் அசுரர்களை நோக்கி கூறினாள். மகரிஷி கஷ்யபர் புதல்வர்கள் என்று கூறிக்கொள்கிறீர்கள்.அறிமுகம் இல்லாத முன் பின் தெரியாத பெண்ணை நம்பலாமா?விவேகம் உள்ள மனிதர்கள் தன் இஷ்டம் போல் திரியும் பெண்ணை நம்ப மாட்டார்கள்.என்னிடம் நியாயத்தை எதிர்பார்கிறீர்கள்.            மோகினி இவ்வாறு கூறியதும் அசுரர்களுக்கு மேலும் அவள் மீது நம்பிக்கை வளர்ந்தது.அவர்கள் மோகினியை நோக்கி கள்ளத்தனமாக சிரித்து விட்டு அமிர்த கலசத்தை அவளிடம் கொடுத்தார்கள்.மோகினி அமிர்தக்கலசத்தை பெற்றுக்கொண்டு புன்னகயித்து இனிமையாக கூறினாள்.நான் எது செய்தாலும் அதற்க்கு நீங்கள் உடன் பட வேண்டும் உசிதமாக இருந்தாலும் சரி,அனுசிதமாக இருந்தாலும் சரி எந்த எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது.நான் அனைவருக்கும் பங்கிட்டு கொடுப்பேன்.உங்களுக்கு சம்மதம் என்றால் இந்த காரியத்தை செய்கிறேன்.அவள் கூறிய வார்த்தைகளின் நுணுக்கத்தை அறியாது அசுரர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'சம்மதம் 'என்று கூறினார்கள்.            அதன் பின் தேவர் அசுரர்கள் அனைவரும் ஒரு நாள் உபவாசம் இருந்தனர்.முறைப்படி நீராடி விட்டு ஹோமம் வளர்த்து அக்னியில் ஹவிசை இட்டனர்.பிராமணர்களுக்கு பசு தானமும் அன்ன தானமும் செய்து விட்டு அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்ப புத்தாடை உடுத்தி அமிர்தம் பருக தர்பாசனத்தில் அமர்ந்து தயாரானார்கள்.நறுமணம் கமழும் மாலை அணிந்து தூப தீபங்களால் சுகந்த மனம் வீச சபா மண்டபத்தில் நுழைந்து அமர்ந்தனர்.          மெல்லிய பட்டு சேலை உடுத்தி பர தேவதை போல் மோகினி அமிர்தகலசம் ஏந்தி சபா மண்டபத்தில் தென்றல் போல் நுழைந்தாள். அசுரர்கள் அவளது பேரழகை ரசித்த வண்ணம் இருந்தனர்.தங்க கொலுசு ஜல்,ஜல் என்று ஒலிக்க தேவர்களையும் அசுரர்களையும் பிரித்து தனித் தனியே வரிசைகளில் அமர்த்தினாள். பிறவியிலேயே அசுர ராக்ஷசர்கள் கொடூர குணம் படைத்தவர்கள்.இவர்களுக்கு அமிர்தம் கொடுத்தால் பாம்புக்கு பால் வார்த்தது போல பதிலுக்கு விஷத்தை தான் உமிலுவார்கள் என்று நினைத்து பார்வையால் அசுரர்களை மயக்கி அழகாக புன்னகை பூத்து தேவர்கள் வரிசையில் அமிர்தம் ஊற்றிக்கொண்டு வந்தாள்.அசுரர்கள் மோகினியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதால் வார்த்தைக்கு கட்டுப்பட்டு பேசாமல் இருந்தனர்.மேலும் இந்த பெண்ணுடன் தகராறு செய்வது அவமானத்திற்கு உரிய விஷயம் ,அது அன்பை முறித்து விடும் என்று நினைத்து பேசாமல் இருந்தனர்.            அசுரருள் ராகு என்ற அசுரன் விஷ்ணு பகவானின் சூதை அறிந்து அவன் தேவன் போல வேடமணிந்து தேவர்கள் வரிசையில் அமர்ந்து கொண்டான்.மோகினியிடம் அமிர்தம் பெற்று குடித்துக்கொண்டு இருந்த சமயம் சூரியனும் சந்திரனும் அவன் அசுரன் என்று காண்பித்து விட்டனர்.உடனே விஷ்ணு பகவான் அவன் தலையை சக்ராயுதத்தால் துண்டித்தார்.அமிர்தம் குடித்து விட்டதால் இறக்காமல் தலையும் உடலும் இரண்டாக பிரிந்து விட்டன.

Sunday, 10 June 2012

மரணமில்லா பெருவாழ்வு தொடர்ச்சி

கூர்ம அவதாரம் எடுத்த பகவானுக்கு முதுகில் மந்திர மலை சுற்றுவது தன் முதுகில் சொரிவது போல இருந்தது. பகவானின் மகிமை அளவற்றது.வேதங்களும் உபநிஷதங்களும் அவர் மகிமைகளை வர்ணிக்க முடியாமல் திணறுகின்றன.வாசுகி நாகத்தை பிடித்து இழுக்கும் போது தேவர்களுக்குள் தெய்வ சக்தியாக அசுரருக்குள் அசுர சக்தியாக பகவான் செயல் பட்டார்.வாசுகி பாம்பை மயக்கமடைய செய்து அருள் புரிந்தார்.மந்திர மலை உச்சியில் தன் சக்தியால் மலையை அமுக்கினார்.பிரம்மா,சங்கரர் முதலிய தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்.திமிங்கலம்,மீன் முதலிய நீர் வாழ் பிராணிகள் நீரின் சுழற்சியால் மயக்க மடைந்தனர்.நாக ராஜா வாசுகி யின் ஆயிரம் கண்களில் இருந்தும் வாய்களில் இருந்தும் விஷம் கலந்த அக்னி சுவாச காற்று புகையாக கிளம்பியது.அதனால் காட்டு தீயில் கருகி போன சால மரங்கள் போல அசுரர்கள் காட்சியளித்தனர் .அந்த அக்னி காற்று தேவர்களையும் விடவில்லை.அவர்கள் ஆடை அணிகலன்கள் அனைத்தும் கருத்து போயின.அவர்கள் வெப்பத்தால் துவண்டனர்.பகவான் தேவர்கள் பக்கம் இருந்ததால் மலை தூறல் பட்டு சில் என்று கடல் காற்று வீசியது.தேவர்களும் அசுரர்களும் துவள்வதை கண்டு பகவான் தன் நான்கு திருக்கரங்கள் பிடித்து இழுத்து கடைந்தார். மஞ்சள் பட்டாடையும் அழகிய கேசமும் பறக்க குண்டலங்கள் ஆட ஆபரணங்கள் மின்ன அகல விசுவத்தையும் வென்ற நல்லவர்களுக்கு அபயம் அளிக்கும் நான்கு திருக்கரங்கள் கொண்டு பகவான் கடைந்தார்.அச்சமயம் கடல் வாழ் உயிரினங்கள் இங்கும் அங்கும் ஓடி கலக்கமடைந்தன.கடலை வேகமாக கடைந்தால் கடலில் இருந்து விஷம் பொங்கி வந்தது.விஷம் வேகமாக பரவ ஆரம்பித்தது.கடலிலும் பூமியிலும் ஆகாயத்திலும் உயிரினங்கள் தஞ்சமடைய வழியின்றி தவித்தன. இனி நம்மை காப்பவர் எவரோ? என்று கத்திக்கொண்டு ஓடினர்.பிரஜாபதிகளும் தேவர்களும் கைலாயத்தை நோக்கி ஓடினர்.அங்கு சிவபெருமான் பார்வதி தேவியுடன் தவக்கோலத்தில் இருந்தார்.அனைவரும் சிவனை நோக்கி துதி செய்தனர்.---பெருமானே மூவுலகங்களையும் இந்த நெருப்பாக சுடும் விஷம் தாக்க வருகிறது.ஜகத்குருவான நீங்கள் எம்மை காத்தருள வேண்டும்.எல்லாம் வல்ல இறைவன் நீங்கள்.தன்னொளி கொண்டவர்.தேவர்,மானிடர் ஆகிய அனைத்து உயிர்களுக்கும் உயிர் கொடுக்கும் ஈசன் பிரம்ம தத்துவமாக விளங்குகிறீர்கள்.அறக்கடவுள் ரிஷபத்தை வாகனமாக கொண்ட நீங்கள் பிரணவ வேத விசுவ ரூபமாக  நிற்கிறீர்கள், பகவானே தங்களின் எல்லையில்லா விசுவ ரூபத்தை பிரம்மா,இந்திரன் முதலிய தேவர்களாலும் வர்ணிக்க முடியாத பட்சத்தில் எங்களால் எப்படி முடியும்?தன ஆற்றலை மறைத்துக்கொண்டு மக்கள் நன்மைக்காக தாங்கள் பிரத்யேட்சமாக காட்சி அளிக்கிறீர்கள்.
            சிவபெருமான் கூறினார்: "தேவி பார்த்தாயா,மக்கள் அனைவரும் கஷ்டத்தில் வீழ்ந்து இருக்கின்றனர். பிரஜைகளை ரட்சிப்பது என் கடமை அல்லவா?சான்றோர் தன் உயிரை கொடுத்தாவது மக்கள் உயிரை காப்பாற்றுவார்கள்.அது அவர்களுடைய இயல்பு.சிவபெருமான் இவ்வாறு கூறியதும் அனைத்தும் அறிந்த பார்வதி தேவி புன்னகை பூத்து ஆமோதித்தாள்.கருணை கடலான சிவபெருமான் ஜீவலோகத்தை ரட்சிக்க கொடிய ஹாலா ஹல விஷத்தை ஒன்று திரட்டி கையில் எடுத்து விழுங்கி விட்டார்.விஷத்தை உண்டதால் கழுத்து நீல நிறமாகி விட்டது.அதுவும் சிவபெருமானின் அழகைகூட்டி காண்பித்தது.கீழே சிதறுண்ட விஷ துளிகளை தேள்,சர்ப்பம் போன்ற விஷ ஜந்துக்களும்,விஷ தாவரங்களும் தன்னுள் கிரகித்துக்கொண்டன.
             சிவபெருமான் விஷத்தை தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டதும் இதமான சுகந்த காற்று வீசியது.எங்கும் அமைதி நிலவியது.வெப்பம் தணிந்தது.தேவர்களும் அசுரர்களும் மீண்டும் பாற்கடலை கடைய ஆரம்பித்தார்கள்.முதன் முதலாக காமதேனு தோன்றியது.அக்னி ஹோத்திர காரியங்களுக்காக உபயோகப்படும் கோமாதா, யாகம் செய்வதற்காக பஞ்சகவ்யம் தந்து (நெய்,பால்,தயிர்,கோமயம் ,சாணம்)யாக பூஜை நடத்துபவருக்கு நற்கதி அளிக்கவல்லது. சத்தியலோகம் சேர்பிக்கும் காமதேனுவை பிரம்ம ரிஷிகள் தமக்கு வேண்டும் என்று ஏற்றுக்கொண்டனர்.அதன் பின் உச்சைசிரவா என்ற பறக்கும் குதிரை தோன்றியது.அசுர ராஜா பலி அதை ஏற்றுக்கொண்டார்.ஐராவதம் என்ற வெள்ளையானை தோன்றியது.அதை இந்திரன் ஏற்றுக்கொண்டார்.அதன்பின் கௌஸ்த்துபமணி என்ற பத்ம ராக மணி ரத்தினம் வந்தது.அதை விஷ்ணு பகவான் ஏற்றுக்கொண்டு கழுத்தில் அணிந்து கொண்டார்.அதன் பின் கற்பக விருட்சமும் அப்சரஸ்களும் தோன்றினர்.இவர்களுடன் லக்ஷ்மி தேவி வந்தார்.அவளுடைய சௌந்தர்யமும் இளமையும் அனைவரையும் மயங்க வைத்தது.அவள் திசையெங்கும் ஒளி வீசி நிற்பதை கண்டு தேவர்களும், முனிவர்களும்,அசுரர்களும் அவளை அடைய வேண்டும் என்று ஆசைபட்டனர்.இந்திரன் லக்ஷ்மி தேவி அமர்வதற்கு ஒரு சொர்ண சிம்மாசனம் கொண்டு வந்தார்.புனித நதிகள் எல்லாம் உருவம் தரித்து பொற்கலசங்களில் அபிஷேகம் செய்வதற்கு புனித தீர்த்த நீர் கொண்டு வந்தனர்.காமதேனு பஞ்ச கவ்யம் கொண்டு வந்தாள். பூமிதேவி ஒளஷத மூலிகைகளை புனித நீரில் சேர்த்தார்.வசந்த ரிது சித்திரை,வைகாசியில் பூக்கும் மலர்களை கொண்டு வந்தது.கந்தர்வர்கள் சங்கீதம் பாட அப்சரஸ்கள் நடனமாட மேகங்கள் உருவம் தரித்து மிருதங்கம்,துந்துபி,டமரு ஒலிக்கச்செய்து வீணா வேணு சங்கு நாதம் இசைக்க ரிஷி முனிவர்கள் அனைவரும் முறைப்படி பகவதி லக்ஷ்மி தேவிக்கு அபிஷேகம் செய்தனர்.லக்ஷ்மி தேவி தாமரை மலரை கையில் ஏந்தி சொர்ண சிம்மாசனத்தில் வீற்று இருந்தாள். திக்கஜஸ்கள் பொற்கலசங்கள் கொண்டு ஒளஷதங்கள் கலந்த நீரை ஊற்றி அபிஷேகம் செய்தன.பிரம்ம ரிஷிகள் வேத மந்திரத்தை ஓதினர்.சமுத்திர ராஜன் தேவிக்கு பட்டாடை சாத்தினான்.வருண பகவான் தேவிக்கு வைஜயந்தி மாலையை சூற்றினான்.பிரஜாபதி விசுவ கர்மா பொன் வைர வைடூர்ய ஆபரணங்கள் அணிவித்தான்.சரஸ்வதி தேவி முத்து மாலையும், பிரம்மா தாமரை மலரையும், நாக தேவதைகள் குண்டலங்களையும் தந்தனர்.பிராமணர்கள் ஸ்வஸ்தி மந்திரங்கள் பாட லக்ஷ்மி தேவி மணமாலையை கரங்களில் ஏந்தி புறப்பட்டாள். கொடி இடை ஆட சந்தனமும் கேசரமும் மணக்க பாத கொலுசு சதங்கை ஒலிக்க போர்க்கொடி போல் நடந்து வந்தாள். தனக்கு ஏற்ற மணாளனை தேடினாள். தேவ,கந்தர்வ,யக்ஷ,அசுர,சித்த,சாரணர்களில் தேடிக்கொண்டு வந்தாள்.அவள் மனதில் எண்ணினாள்:-- தவத்தில் சிறந்தவர் கோபத்தை அடக்கவில்லை.சிலரில் ஞானம் இருந்தும் வைராக்கிய ஆசையை ஜெயிக்கவில்லை.மகா மகிமை பொருந்தி இருந்தாலும் காமத்தை வென்றவன் இல்லை.ஐஸ்வர்ய செல்வமிருந்தும் பிறர் தயவை நாட வேண்டிய கட்டாயத்தில் இவர் உள்ளார்.அறத்தில் சிறந்தவர்களாக இருந்தும் இவர்களிடம் பிராணிகளிடம் அன்பும் கருணையும் இல்லை.இவரிடம் தியாகம் இருந்து என்ன பயன்?அது முக்திக்கு உதவியாக இல்லை.இவரிடம் வீரம் இருந்தும் ஆயுளுக்கு உத்திரவாதம் இல்லை.சில சாது மகாத்மாக்கள் பற்றற்று இருந்து சமாதியில் நிஷ்டையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.சில ரிஷிகள் நீண்ட ஆயுள் பெற்றிருந்து காண்பதற்கு அமங்கலமாக இருக்கிறார்கள்.சிலர் அழகாக மங்களகரமாக இருந்தாலும் அற்ப ஆயுள் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.சிலரிடம் இரண்டும் (ஆயுள்,அழகு)இருந்தும் குணம் கெட்டவர்களாக இருக்கிறார்கள் (தொடரும்)