Saturday, 2 November 2013

மன்னன் யயாதி4

  
       
யது முதுமையை மறுத்து விட்டது போல தேவயானியின் மற்றொரு மகன் துர்வசுவும் மறுத்து விட்டான். சர்மிஷ்டாவின் இரண்டு மூத்த மகன்களும் (த்ருஹ்யுவும், அனுவும்) முதுமையை ஏற்க மறுத்து விட்டார்கள். ஆனால் இளையவன் புரு முதுமையை ஏற்க முன்வந்தான். “ தந்தையே இந்த உயிர் நீங்கள் கொடுத்தது. தந்தையின் ஆசியை பெற்று மனிதன் உலகியல் க்ஷேமங்களையும், இறைவன் அருளையும் அடைவான். தந்தை செய்த நன்மைகளை பெற்று மீண்டும் ஒரு மகனால் நன்றிக்கடனாக இந்த ஜன்மத்தில் பெற்றவருக்கு எதையும் செலுத்த இயலாது. தந்தைக்கு எது தேவையோ அதை சொல்லாமல் செய்பவனே உத்தம புத்திரன். சொல்லிச்செய்பவன் மத்திம புத்திரன். ஆனால் தந்தை சொல் கேளாதவன் கீழ் மகன்.” இவ்வாறு கூறிவிட்டு தந்தையின் முதுமையை ஏற்றுக்கொண்டான்.
          யயாதி புதிய பலம் பெற்றவன், அரசு காரியங்களை செயலாற்றினான். அரசர்களை ஜெயித்து ஏழு தீவுகள் கொண்ட மேதினியை வெண் கொற்றக்கொடையின் கீழ் கொண்டுவந்து நல்லாட்சி புரிந்தான். மகனிடம் இளமை பெற்று வலிமை பெற்று அரச போகங்களை அனுபவித்தான். தேவயானியிடம் பிரியமாக நடந்து கொண்டான். பெரும் தட்சிணைகள் கொண்ட பல ராஜசூய யாகங்களை செய்தான். சர்வதேவ சொரூபனான அணுவிற்க்கு அணுவான சக்தி கொண்ட சர்வ வல்லமை பொருந்திய சர்வ வியாபியாக விளங்கும் ஸ்ரீமன் நாராயணனை மனதில் நிறுத்தி அவரை குறித்து பல யாகங்கள் செய்தான்.
          அரச போக வாழ்க்கை வாழ்ந்து யயாதி ஆயுளின் பெரும் பகுதி கழிந்து விட்டது. ஆயிரம் வருடங்கள் கழிந்த பின்பு மனம் முழுவதுமாக வைராக்கியம் அடையவில்லை என்பதை ஒரு நாள் உணர்ந்தான். ஆனால் ஆசை அடங்கவில்லை. அவன் தேவயானியிடம் கூறினான். “ஆசைகளுக்கு ஓர் எல்லையே இல்லை. தனம், தானியம், சொர்ண செல்வங்கள், மனைவி,மக்கள், ராஜ்யம் அனைத்தும் ஒருவன் பெற்றிருந்தாலும் அவற்றில் அவன் திருப்தி அடையாமல் இருக்கிறான். ஆசைத்தீயில் நெய் ஊற்றுவது போல ஆசைகளை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளும் போதும் அவை அடங்குவதே இல்லை. கிழப்பருவம் அடைந்த பின்பும் ஆசை இளமையுடன் இருக்கிறது. ஆசைத்தீயை வைராக்கியம் என்ற தண்ணீரை ஊற்றி அணைக்க வேண்டும். பற்றையும் பகையையும் துறக்க வேண்டும். சமநோக்கு உள்ளவனாக இருக்கவேண்டும். என்னை பார். இது நாள் வரை எல்லா விஷய சுகங்களை அனுபவித்த பின்பும் ஆசை அடங்கவில்லை. இனி நான் இந்த இளமையை புருவுக்கு தந்துவிட்டு முதுமையை ஏற்று காடு சென்று தவம் செய்யப்போகிறேன். குளிர்,வெப்பம்,சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமமாக பாவித்து வனத்தில் தவம் செய்யப்போகிறேன். இக லோக சுகங்களும், இன்பங்களும் பொய்யானவை. அது போலவே பரலோக இன்பங்களும், சந்தோசங்களும் நிலைத்து நிற்பவை அல்ல. ஏனெனில் இகலோக பரலோகங்களில் பிறவாமை என்ற மோட்சத்திற்க்கு வழியில்லை. ஆனால் இப்பூவுலகில் பிறந்த பின் தியானம் செய்து, தவம் செய்து ஆத்மஞானம் பெற்று விட்டால் இறைவனடி சேர்ந்து விடலாம்.”
          இவ்வாறு தேவயானியிடம் கூறிவிட்டு யயாதி ஞானிகளையும் வீழ்த்தும் புலனின்பங்களையும், பகையையும் துறந்தான். சர்மிஷ்டா மகன் புருவை அழைத்து தன்னிடம் இருந்த இளமையை அவனுக்கு தந்து விட்டு முதுமையை ஏற்றுக்கொண்டான். தென்கிழக்கு நாடுகளை த்ருஹ்யுவுக்கும்,தென்திசை நாடுகளை யதுவுக்கும்,மேற்கு திசை நாடுகளை துர்வசுவுக்கும் வடதிசை நாடுகளை அனுவுக்கும் தந்தான்.அண்ணன்களை சிற்றரசர்களாக்கி சகல பூ மண்டலத்திற்க்கும்,சம்பத்து சொத்துக்களுக்கும் உரிமையாளன் சர்மிஷ்டா மகன் புருவுக்கு (தந்தைக்கு இளமை கொடுத்ததால்) பேரரசு பதவியை அளித்து பட்டாபிஷேகம் செய்து வைத்தான்.
          அரசன் யயாதி இது நாள் வரை அரச போக சுகங்களுடன் வாழ்ந்தான். அவ்வாறு இருந்தும் சிறகு முளைத்த பறவைக்குஞ்சுகள் கூட்டை துறந்து பறந்து விடுவது போல இல்லறந்துறந்து வனம் சென்றான். கணப்பொழுதில் எல்லாவற்றையும் முற்றிலும் துறந்து பரமாத்மாவில் மனதை லயிக்க செய்தான். வனத்தில் சில காலம் தவமிருந்து பரமகதியை அடைந்தான்.
          தேவயானி கணவர் கூறிய சத்திய வசனங்களை கேட்டு ஆத்ம தத்துவ விஷயங்களை பற்றி சிந்தித்தாள். பந்த பாசத்திற்க்கு காரணமான மனைவி மக்களும் உற்றார் உறவினரும் காலத்தின் கதியால் தண்ணீர் பந்தலில் சேருவது போல சேருவார்கள். பின்பு பிரிந்து போவார்கள். ஈஸ்வரன் திருவுள்ளப்படி நடக்கும் நிகழ்ச்சிகளை எவராலும் மாற்ற முடியாது. என்ற தத்துவ விசாரம் செய்தாள். மாயா உலகை தோற்றுவித்து சகல உயிர்களிலும் அந்தராத்மாவாக உறையும் எல்லாம் வல்ல ஈசன் பேரமைதியின் இருப்பிடமாம் முடிவில்லா பரம்பொருளிடம் இரண்டறக்கலந்து தியான சமாதியில் உயிர் துறந்தாள். 

சிற்றரசனாக்கப்பட்ட தேவயானியின் மகன் யதுவிலிருந்து யாதவகுலம் தோன்றியது. ஸ்ரீ கிருஷ்ண பகவான் யாதவ குலத்தில் தோன்றினார்.

சர்மிஷ்டா மகன் பேரரசன் புருவிலிருந்து சந்திர வம்சம் தோன்றியது. சந்திரவம்ஸத்திலிருந்து கௌரவர்களும், பாண்டவர்களும் தோன்றினார்.   ***